
கல்லுக்கு இருள் ஏற்றும் தீர்க்கமும் உறுதியும் அபாரமானது. அகன்று நீண்ட கருங்கல்லாலான கருவறை, குன்றின் முகப்பைத் தொடும் முன்னே கண்ணில் பட்டது.
கொடைக்கானலில் இருக்கின்ற நாள்களில் பழனி மலையின் காடு, குன்று, பள்ளத்தாக்குகளில் பயணிப்பது பென்னிக்குப் பிடித்தமானது. மலையென்பதற்குள் எத்தனை அடுக்குகள்? காடுகள், நீரோடைகள், நதிகள், பள்ளத்தாக்குகள், சோலைகள் என்று மலை ஒவ்வொரு பர்லாங்குக்கும் ஒரு முகம் காட்டி நிற்பதை ரசிப்பதில் பென்னிக்குச் சலிப்பேற்படாது.
ஜார்ஜியானாவும் குழந்தைகளும் உடனிருந்தால் நீரோடை ஒன்றின் அருகமர்ந்து காட்டின் அமைதியில் திளைப்பார். ஜார்ஜியானாவும் பென்னியின் ரசனையோடு எளிதில் கலந்துவிடுபவர். இருவருக்குமே காடு பிடிக்கும். காட்டின் பேரமைதியும் சவால்களும் நிரம்பப் பிடிக்கும்.

நாளின் நிகழ்வுகளெல்லாம் திரண்டு கனம்கூடிய வேளையில், பொழுது காட்டுக்குள் அமிழ்ந்துகொண்டிருந்தது. வெளிச்சத்தின் அடர்த்தியை இருள் தன் நீண்டு கொழுத்த நாவினால் மெல்ல சுவைத்தது. அந்தியில் காடு திரைச்சீலையொன்றை முன்னிறுத்தி, பகலின் அலங்காரம் கலைத்து, இரவின் அலங்காரம் சூடியது. விடியலைத் தம் அலகினால் தீற்றி வெளிச்சமேற்றிய பறவைகள், அந்தியில் மரக்கிளைகளுக்குள் தஞ்சமடைந்தன. சூரிய வெப்பமேந்த விரிந்த இலைகள், இயல்புக்குத் திரும்பின. வெண்ணிறப் பூக்கள் மலரத் தொடங்க, வண்ணப் பூக்கள் இதழ் மூடின. காட்டை மென்மையாக ஆலிங்கனம் செய்யும் அந்தியைப் பார்த்தபடி முன்னேறினார் பென்னி.
வில்பட்டியை நோக்கிக் குதிரை ஓடியது. பழகிய பாதை. குதிரையின் குளம்படிகள் தயக்கமின்றி விரைந்தன. வில்பட்டியில் இருந்துதான் கொடைக்கானல் விரிகிறது. வில்பட்டியில் மட்டும்தான் உள்ளூர் மக்கள் குடியிருக்கிறார்கள். கொடைக்கானல் ஐரோப்பியர்களால் நிரம்பியிருக்கிறது. கொடைக்கானல் வருகிற நேரங்களிலெல்லாம் வில்பட்டி வழியாகப் பழனிமலை சென்று வருவார் பென்னி.
வழக்கமாக அந்தியில் ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு கூடடைய விரையும் வில்பட்டி மக்கள் ஒருவரும் இன்று கண்ணில் படவில்லை. பழனி மலைப்பாதையைப் பார்த்தார். தூரத்தில் வண்ணப்புள்ளிகளாக மக்கள் ஒரு நீள்கோடு போல் தெரிந்தார்கள். பழனிமலைக் கோயில் திருவிழாவாக இருக்கலாம். பழனிமலை முருகன்தான் இங்குள்ள மக்களுக்கு விருப்பமான கடவுள். வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லையென்றாலும், ஊருக்கே நோய்நொடி வந்தாலும், முருகனிடம்தான் வேண்டிக் கொள்வார்கள்.
ஒருமுறை வயதான ஒருவர், மூங்கில் குழாயில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு, நடக்க முடியாமல் பழனி மலையின் குன்றுகளை நிதானமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார். மூச்சிரைத்தாலும் அவரின் உதடுகள் இடைவிடாமல் பிரார்த்தனையில் இருந்தன. அவருக்கு என்ன துன்பமோ என்று குதிரையை நிறுத்தி, பேச்சுக் கொடுத்தபோது ஒன்றும் சொல்லாமல் புல்வெளியில் அமர்ந்தார். பென்னியும் குதிரையை விட்டிறங்கி அவரருகில் உட்கார்ந்தார். பென்னியைக் கவனிக்காமல், தனக்குள் பேசிக் கொள்வதைப்போல் முதியவர் பேசிக் கொண்டிருந்தார். ‘ஒவ்வொரு எலைக்கும் காய் இறங்கியிருக்கு. எலையா காயான்னு தெரியாத அளவு காய் காய்ச்சிருக்கு. மரத்துக்கே பாரமா காய் எறங்குறது ஊருக்குத் துர்நிமித்தம். அந்தக் கோவக்கார கோவணாண்டிகிட்டதான் என்னன்னு கேக்கணும்’ என்று முதியவர் முணுமுணுத்ததைப் பென்னி புரிந்துகொண்டார்.
வீடுகளில் உள்ள மரங்களில் இயல்புக்கு மாறாகப் பழம் பழுத்தாலும், காய் காய்த்தாலும், செடியில் பூப் பூத்தாலும் அந்த வருடம் வீட்டுக்கோ, ஊருக்கோ கெடுதி வரப்போகிறது என்பதை ஆழமாக நம்புகிற மக்கள். பெரும் நோய் வரப்போவதற்கு அறிகுறியாக வலியை முன்னெச்சரிக்கை யாகக் காட்டும் உடம்பைப்போல், இயற்கையும் தனக்கு நேரப்போகும் அசௌகரியத்தைக் குறியீடுகளாகக் காட்டுகிறது என்றுணர்ந்தவர்கள். தாவரங்கள் அதிகம் பூத்தலும் காய்த்தலும்கூட வலிக்கான அறிகுறிதானோ? பென்னியின் சிந்தனை குதிரையின் காலடிகளை முந்தியது.
சின்னக் குன்றின் மீதிருந்த முருகன் கோயில் எதிர்ப்பட்டது. அழகான கற்கோயில். இருளிறங்கும் நேரத்தில் கோயிலுக்குள் எரிந்துகொண்டிருக்கும் கல்விளக்குகளும் கோயிலுக்கு வெளியில் லாந்தரின் நின்றெரியும் ஒளியும் வெளிச்சக் கீற்றாய்க் கைநீட்டி அழைத்தன. பென்னி குதிரையை விட்டு இறங்கினார். கோயிலுக்குள் யாரும் இருப்பார்களா என்ற ஐயம் தோன்றியது. தீபம் ஏற்றப்பட்டிருந்ததில் நிச்சயம் பூசாரி இருப்பார் என்று தோன்றிய ஐயம் உடன் அழிந்தது.
கல்லுக்கு இருள் ஏற்றும் தீர்க்கமும் உறுதியும் அபாரமானது. அகன்று நீண்ட கருங்கல்லாலான கருவறை, குன்றின் முகப்பைத் தொடும் முன்னே கண்ணில் பட்டது. சுவாமி அருமையான அலங்காரத்தில் ஒளிர்ந்தார். சுவாமியின் அலங்காரம் காலமற்ற காலத்திற்குள் நுழையும் மாயத்தைத் தந்தது பென்னிக்கு. செண்பகமும் முல்லையும் காட்டுப்பூவும் கலந்த வாசம், நிகழ்காலத்தை நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்தது. பூவின் வாசத்தில் இருந்து எண்ணெய்த் திரி கருகும் வாசம் தனியாக நாசியில் நுழைந்தது. கருவறையில் இருப்பது முருகக் கடவுள் என்று பென்னிக்குத் தெரியும். லோகனுடன் முன்பொரு நாள் வந்தபோது பூசாரி சொல்லியிருக்கிறார். கறுத்த சிலையின் கையில் வேல் மின்னியது. இந்துமதக் கடவுள்கள் பெரும்பாலும் ஆயுதங்களுடன்தான் இருக்கிறார்கள். போர்க்குணம் கொண்ட, தீமையை அழிக்கும் கடவுள்கள். பென்னி கருவறை முன்பு நின்று சிலையை உற்றுப் பார்த்தார். சிலையின் இதழ்க் கடையில் மிளிர்ந்த புன்னகையைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. வயிறு குழைந்து, மனத்தில் கனம் கூடி இதயம் சுவாசிக்கத் திணறியது. பார்வையைச் சிலையில் இருந்து விலக்கியவர், திடுக்கிட்டார். தன்னைச் சுற்றி இருள் இரும்புத் திரைச் சீலையைப்போல் காலூன்றி நின்றிருந்ததைப் பார்த்து அதிசயித்தார். சிலையைப் பார்த்த சில நிமிடங்களுக்குள்ளாகவா பொழுது இவ்வளவு மாயம் செய்துவிட்டது என்று இனிப்பது போன்ற சந்தோஷத்துக்குள்ளானார். எண்ணம் இனிப்பதை உணரும் தருணத்தின் உவப்பு களிகூட்டியது. மதுரத்தில் மூழ்கிய வண்டானார் பென்னி.
பூசாரியின் பெயர் சுப்பிரமணி என்று நினைவு. கோயிலை விட்டு நகர மாட்டாரே? எங்கிருக்கிறார் என்ற யோசனையில் மண்டபத்தைச் சுற்றி வந்தார். பெரிய கோயிலாகக் கட்டத் திட்டமிட்டிருக்கிறார்கள். தொடங்கிய கட்டுமானம் ஆங்காங்கு அரைகுறையாக நிற்கிறது. மண்டபத்தில் பாதித் தூண்களில் சிற்பங்கள், பாதித் தூண்கள் சிற்பங்களற்று இருந்தன. கட்டி முடிக்கப்படாத கோயிலின் பெரிய வளாகத்திற்குள் கருவறையை மட்டும் நிறைவுசெய்து தெய்வத்தைக் குடியேற்றியிருப்பார்கள்.
பென்னி வளாகத்தின் இருளுக்குள் நடந்தார். தனித்தனியாகப் பிரித்தறிய முடியாத நுண்மணங்கள் மிகுந்திருந்தன. காற்று, மரங்களின் தலையைப் பிடித்துச் சுழற்றாட்டியது. தூரத்தில் தெரிந்த குன்றுகளின்மேல் மேகம் இறங்கி ஆசுவாசமாக உட்கார்வது தெரிந்தது. வெண்மேகங்களின் நிறத்தை இருள் கருமையாக்குகிறதா? சுமை பொறுக்காமல் நீரைக் கொட்டிவிடும் தவிப்பில் வெண்மேகமே நீர்த் துளிகளைத் திரட்டிக் கருமை ஏற்றிக்கொள்கிறதா? பார்த்துக்கொண்டிருக்கும்போதே மேகக் கூட்டமொன்று மேலேழுந்து குதிரையின் உருக்கொண்டு பாய்ந்தோடியது. குதிரையில் ஆள் அமர்ந்திருக்கும் சாயலையும் பென்னி உணர்ந்தார்.
“தொர...” முதுகின் அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டுத் திரும்பினார் பென்னி.
பூசாரி சுப்பிரமணி நின்றிருந்தார்.
“கும்பிடுறேன் தொர... பொழுது அவியற நேரத்துல தொர வந்திருக்கீங்க. எப்பவும் வெள்ளன வருவீங்களே?”
பென்னிக்கு அதிர்ச்சி குறைய நேரமெடுத்தது. எதற்குத் திடுக்கிட்டது, இதென்ன சிறுபிள்ளைத்தனமென்று தோன்றினாலும், உள்ளுக்குள் அதிர்வு வந்தது உண்மையென்பதை நினைத்துப் புன்னகை எழுந்தது. தான் பலவீனமாக இருக்கிறோம் என்பதைத்தானே இந்தத் திடுக்கிடல் காட்டுகிறது என்றெண்ணினார்.
“எங்கிருந்தீங்க சுப்பிரமணி?” திடுக்கிடலை மறைத்துப் பேச்சைத் தொடர்ந்தார்.
“கோவணாண்டி வந்துட்டாரு... அவர்கூடதான் சொல் வளர்த்துக்கிட்டு இருந்தேன்” சுப்பிரமணி ஈறுதெரியச் சிரித்தார். இருளில் தனித்துத் தெரியாத கறுத்த தேகத்தில் வெள்ளைப் பற்கள் மட்டும் தனித்துத் தெரிந்தன.
“யார் வந்திருப்பது? எங்க இருக்காங்க?”
“பழனி மலை கோவணாண்டி தொர... அதோ அந்தப் பாறையில அட்டணக்கால் போட்டுக்கிட்டே மல்லாந்து படுத்துக்கிட்டு இருக்காரே? படுத்துக்கிட்டு அட்டணக்கால் போடுற ஆளப் பாத்திருக்கீங்களா?” பெருமையூற சிரித்தார்.
யாருமற்ற வெளியில் சுப்பிரமணி காட்டும் திசையில் ஒருவரையும் காணாமல் பென்னி திகைத்து நின்றார்.
“நீங்க வாங்க தொர... ராத்திரி முச்சூடும் அவர் கூடத்தானே வாய் வளர்த்துக்கிட்டு இருக்கப் போறேன்... நீங்க இப்படி ஒக்காருங்க.” அருகில் கிடந்த அகலக் கல்பலகையொன்றைத் தன் தோள் துண்டினால் தட்டிவிட்டு, பென்னியை உட்காரச் சொல்லி, அவர் முந்திக்கொண்டு உட்கார்ந்தார்.
“ஒக்காருங்க தொர... அவசர ஜோலி ஒன்னும் இல்லையே?”
“இல்லை சுப்பிரமணி...” என்று சொல்லிவிட்டு, பென்னி கல் பலகையில் உட்கார்ந்தார். ஆடையை மீறிய சில்லிப்பு. மேலும் அழுந்த உட்கார்ந்து சில்லிப்பை அனுபவித்தார்.
“ஊர்ல ஒரு குருவி, காக்கா இருக்காதே தொர...”
“ஆமாம், திருவிழாவா?”
“கோவக்கார சாமிக்குத்தான். சீரலைவாயில்ல சூரபதுமனை அழிக்கிறதுக்கு, அவர் அம்மா வேலெடுத்துக் கொடுக்கிறது இன்னைக்குத்தானே? ருத்திர மூர்த்தியா இருப்பாரு. அவர குளிர வைக்கத்தான் பாலும் தேனும் காவடி எடுத்துக்கிட்டுப் போறாங்க. வெல் அப்படின்னு அவன் சொல்லி விடுற ஆயுதம்தானே வேல்?” சுப்பிரமணி பேச்சின் இடையில் உத்தரவிடும் குரலில் அழுத்தமாகச் சொன்னார். பென்னிக்குக் கண்முன்னால் ஒரு வேல் கிளம்பிச் செல்லும் பிரமை எழுந்தது.
“ராத்திரி முச்சூடும் அப்பன் ஆத்தா பேச்சைக் கேக்காத கோவக்கார சாமியைப் பாக்கத்தான் மக்க மனுஷா எல்லாம் போயிடுவாங்க. கோவக்காரனா இருந்தாலும் கொணமிருக்கே கொணம்... தங்கம். அவன் ஞானி தொர. அங்க அவனுக்கு நடக்கிற பூசை என்ன, அலங்காரம் என்ன, சவரட்சணை என்ன? ஆனா சிலைக்கு எல்லா நடக்கட்டும்னு விட்டுட்டு கிளம்பி இங்க வந்துடுவான். இந்த ஒத்தக் கெழவனால மேடு மலை ஏறி வர முடியாதேன்னு ஜனங்க போய்த் திரும்பி வர்ற வரைக்கும் எனக்குத் தொணையா இங்கதான் உக்காந்திருப்பான். கதை கதையா சொல்லுவான்.”
“யாரு சுப்பிரமணி... பழனி மலை முருகனா?”
“ஆமாம் தொர... வேற யாரு? நீங்க வர்றப்பகூட கேலியும் கிண்டலுமா அவன்கூடத்தானே பேச்சு.”
பென்னிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தேவனின் புனிதர்கள் நிகழ்த்தும் அற்புதங்கள்போல் சுப்பிரமணியும் சொல்கிறாரே என்று வியந்தார்.
“அவன் இவன்னு சொல்றீங்க சாமியை?”
“ஒடம்பு தொடச்சி, தண்ணிய ஊத்தி, சந்தனம் தேச்சுவிட்டுக் குளுப்பாட்டுற வரைக்கும் அவன் எங்கைப்புள்ள. மஞ்சளும் குங்குமமும் பூவும் வச்சி ராஜ அலங்காரமா ஜோடிப்பு பண்ணப்புறம், நான் அவர் கைப்புள்ள. ‘அப்பா முருகா ஒம் புள்ளையைக் காப்பாத்து’ன்னு மனசார என்னைய அவர் கைப்புள்ளையா ஒப்படைச்சிடுவேன். அப்பனாவும் புள்ளையாவும் மாற என்ன தொர வேணும்? சவம், இந்த மனசுதானே எல்லாம்?”
பென்னிக்கு மனம் நெகிழ்ந்தது. மக்களுக்குக் கடவுள் என்பது வழிபடுவதற்கு மட்டும் அல்ல என்று நினைத்து வியந்தார்.
“நீங்க ஏன் பழனி மலைக்குப் போகலை?”
“அங்க எதுக்குத் தொர போகணும்? என் அப்பனே அங்க வர்ற கூட்டத்தைப் பார்த்து மூச்சுத் தெணறித்தானே இங்க வந்து இந்தக் கிழட்டுப் பூசாரிகூட ஒக்காந்துக்கிறாரு? எப்போன்னாலும் கெளம்பி வந்துடுவாரு தொர. பார்க்க ஆடு மாடு மேய்க்கிற பசங்க மாதிரிதான் இருப்பாரு. அரையில ஒரே ஒரு கோவணந்தான் இருக்கும். கையில வேல எடுத்துக்கிட்டு வந்து பாறையில படுத்துட்டா அவ்ளோதான், லோகமே இங்க ஓய்வெடுக்கும்.”
“ராத்திரியில் தனியா இருந்திப்பீங்களா?”
“பாத்துக்கிடுங்க, நான் ஏன் தனியா இருக்கேன்? என் அப்பந்தான் தொணை இருக்காரு இல்ல?”
“வயசான காலத்தில் வேறு யாரையாவது பூசாரியா போட்டுட்டு நீங்க வீட்டில் இருக்கலாமில்ல?”
“தொர உங்களுக்கு ஒரு வாச் சொல் (வாய்ச் சொல்) சொன்னா புரியுமான்னு தெரியல. இருந்தாலும் சொல்றேன். வருத்தமில்லா செம, வருசமெல்லாம் வாடாப் பயிர்னு சொல்லுவோம்...”
“புரியலை சுப்பிரமணி?”
“வருத்தமில்லா செமன்னா, புள்ளைய செமக்கிற தாய் என்னைக்குமே தன் செமய நெனச்சுக் கலங்க மாட்டா, வருசமெல்லாம் வாடாப் பயிர்னா அறுகம்புல்லு. வாடா மனசும், வருத்தமில்லா செமயும்னு நெனச்சிக்கிட்டா அந்த அப்பனே நம்மள வழிகாட்டிக் கூட்டிக்கிட்டுப் போயிடுவான் தொர. நம்மள அவென் படைச்சிருக்கான்னா ஏதோ ஒரு காரணம் இருக்கு பாத்துக்கிடுங்க.”
பென்னிக்கு கடந்த ஒரு மாதமாக மனசுக்குள் இருந்த கனத்தை, கூர்மையான சுத்தியலால் அடித்து நொறுக்கியது போன்ற விடுதலையுணர்வு. மதுரை கலெக்ட்ரேட்டில் மதுரை கலெக்டரின் அதிகார யுத்தத்தையும், ஏஜெண்டுகளால் தூண்டிவிடப்பட்டு புரிதலற்று விண்ணப்ப மனுக்கள் அனுப்பிக்கொண்டிருக்கும் மக்களையும் நினைத்து மனம் துவண்டுபோனது. நிதி ஒதுக்குவதற்கு முன்பு செய்ய நினைத்திருந்த வேலைகளை அப்படியப்படியே நிறுத்திவிட்டு, ஜார்ஜியானாவும் குழந்தைகளும் இருந்த கொடைக்கானலுக்கு வந்துவிட்டார். மற்ற இன்ஜினீயர்களிடம் தேக்கடியில் இருந்து அணை கட்டுமிடத்திற்குச் செல்வதற்கான ஒற்றையடிப் பாதை அமைக்கும் பணியைச் செய்யச் சொன்னார். திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் இருந்து இடம் விலைக்கு வாங்கிக்கொள்ளலாம் என்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஐந்து லட்சம் ரூபாயை, தயாரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று சீப் இன்ஜினீயருக்கும், செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸுக்கும் கடிதம் எழுதினார். பதில் வரும்வரை யாரையும் சந்திக்க வேண்டாம், எந்த வேலையையும் தொடர வேண்டாம் என்ற மனச் சோர்வில் இருந்தவருக்கு, பூசாரி சுப்பிரமணி கடைசியாகச் சொன்ன வார்த்தை, இதயத்தை உறையச் செய்திருந்த அவநம்பிக்கையையும் சோர்வையும் அடித்து விரட்டியது. ‘ஆம், பெரியாறு அணை கட்டி முடிப்பதற்காக மட்டுமே எனக்கு இந்தப் பிறவி’ என்று மனசுக்குள் உறுதியெடுத்துக்கொண்ட பென்னி, வானத்தை நிமிர்ந்து பார்த்தார். சற்றுமுன் கருஞ்சாம்பல் நிறத்தில் இருந்த ஒன்றிரண்டு மேகங்களும் முற்றிலும் காணாமற்போயிருந்தன. இருள் காட்டைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்திருந்தது. பென்னிக்கு மட்டும் தன்னைச் சுற்றி, விழியை மலர்த்தும் இதமான பேரொளி நிரம்பியிருக்கும் நிறைவில் பாறையில் அப்படியே சாய்ந்து படுத்தார்.

“வந்துட்டேன் சாமி. தொரகூட பேசிட்டு வர்றேன்” முருகக் கடவுளிடம் உத்தரவு வாங்கிக்கொள்வதுபோல் கிழக்குத் திசை நோக்கிப் பேசினார் சுப்பிரமணி. சூரியன் அஸ்தமித்தாலும் கிழக்கு, உதயத்தின் வாசல்தானே? எப்போதும் புலர்ந்திருக்கும் கிழக்கின் நிறைவு காட்டின் மணத்தில் கலந்தது.
“பப்பா...” லூசி ஓடிவந்து பென்னியைக் கட்டிக்கொண்டது.
“நோ டியர், பப்பா பேசிட்டு இருக்காங்க இல்லையா? மம்மா கிட்ட வந்துடு” ஜார்ஜியானா லூசியை அழைத்தாள். லூசி மறுத்தவுடன், “சாரி, சாரி” என்று சொல்லி, பென்னியின் அருகில் வந்து லூசியைத் தூக்கியணைத்து வேகமாக அவ்விடத்தைக் கடந்தாள்.
“பரவாயில்லை ஜார்ஜி...” பென்னி சொன்னாலும் ஜார்ஜியானா சிரித்துக்கொண்டு, “நீங்கள் தொடரலாம்” என்று சொல்லி அறைக்குள் சென்றாள். தன்னையும் தூக்கிக்கொண்டு சென்றுவிடப் போகிறார்கள் என அவர்களின் செல்லப் பூனை ப்ளாக்கி, பென்னியின் கால்களுக்கிடையில் நுழைந்துகொண்டது.
தன் முன்னால் கைகட்டி நின்றிருந்தவர்களைப் பார்த்தார் பென்னி. உட்காரச் சொல்லியும் மறுத்துவிட்டு நிற்கிறார்கள். மரியாதை என்பதற்கு இந்தத் தேசத்தில் எத்தனை பொருள்... காசு கொடுத்து வேலை வாங்குபவர்கள் முன்னால் தங்களின் முழு வாழ்க்கையையும் பணயம் வைக்கிறார்களே?
லோகன் காலையிலேயே வந்திருந்தார். பென்னியின் வீட்டிலிருந்து பத்து நிமிட நடைதூரத்தில் லோகனின் வீடிருந்தது. பென்னிக்கு லோகன் வந்துவிட்டால் நாளுக்குச் சிறகு முளைத்த வேகம் வந்துவிடும். கொடை கிளப்புக்குச் செல்வதும், கொடை மலையின் குன்றுகளில் ஏறி இறங்குவதும், குதிரையில் சவாரி செல்வதும், கொடை ஏரியைச் சுற்றி உலாப் போவதுமாக இருவராலும் ஒத்த ரசனையுடன் பயணிக்க முடியும். காலை கிளம்பினால் இரவுதான் வீடு திரும்புவார்கள். லோகனுக்கும் பென்னிக்கும் பதின்மூன்று ஆண்டுகள் வயது வித்தியாசம். வயதினால் உண்டாகும் சிந்தனையின் வேறுபாடுகள் இருவரிடமும் எழுந்ததில்லை.
லோகனுக்கு வேகம் அதிகம். பென்னிக்குப் பொறுமை அதிகம். லோகனுக்குக் குதிரையில் உட்கார்ந்த கணத்தில் மின்னலென தூரத்தைக் கடக்க வேண்டும். பென்னிக்கு கடக்கும் தூரம் முக்கியமல்ல. எப்படிக் கடக்கிறோம் என்பதை அனுபவிக்க நினைப்பார். சின்னச் சின்னக் குணவேறுபாடுகள் இருவருக்கும் குறுக்கில் நிற்காமல், இணைந்த குதிரைகளாக ஓடச் செய்வதில் இருவரும் விரும்பும் நல்ல நட்பு பின்புலமாக இருக்கிறது.
அம்மையநாயக்கனூரில் மாட்டு வண்டிகள் வைத்திருக்கும் மேஸ்திரிகளை அழைத்து வரச் சொல்லியிருந்தார் பென்னி. அம்மைய நாயக்கனூரில்தான் மெட்ராஸில் இருந்து ரயிலில் வருபவர்கள் வந்திறங்குவார்கள். அங்கிருந்து கொடை மலைக்கு மேலே வரவேண்டுமென்றால் பல்லக்கு, ஜட்கா, வில்வண்டி, மாட்டு வண்டி, நாற்காலிப் பல்லக்கு என ஏதேனும் ஒன்றில்தான் வந்தாக வேண்டும். கால்பலம் உள்ளவர்கள் நடந்தே மலையேறலாம். வழியில் விலங்குகள் பயம், கள்ளர்கள் பயத்தினால் பெரும்பாலும் மாட்டு வண்டிகளில் வந்துவிடுவார்கள். காடறிந்தவர்களுக்கு, அவர்கள் ஏறுமிடமெல்லாம் பாதையென காடு, பாதை பிரித்துக் காட்டும்.
பென்னி, அம்மையநாயக்கனூர் வண்டிக்காரர்களை அழைத்து வரச் சொன்னதன் காரணம், இங்குள்ளவர்களுக்கு மலையேறிப் பழக்கம் இருக்கும். உச்சிகளிலும் குன்றுகளிலும் பள்ளங்களிலும் இவர்களின் மாடுகள் சுமையுடன் ஏறி இறங்கும் பழக்கம் கொண்டுள்ளன என்ற காரணத்தினால் அழைத்து வரச் சொல்லியிருந்தார். மனத்தில் இருந்த சோர்வையும் தயக்கத்தையும் பழனி மலை முருகனின் மகனும் அப்பனுமாக இருக்கிற சுப்பிரமணி நேற்று துடைத்தெறிந்து விட்டார்.
“ஐந்தே ஐந்து வண்டிக்காரர்கள்தானா லோகன்?”
“நிறைய வண்டியோட்டிகள் இருக்காங்க பென்னி. அவங்க எல்லாமே கூலிக்காரங்க. முதலாளிங்க மாடும் வண்டியும் வாங்கிக் கொடுத்து, கூலிக்காரர்களிடம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஒரு சவாரிக்கு இரண்டனா, மூன்றணாதான் இவர்களுக்குக் கிடைக்குமாம். மற்றது எல்லாம் வண்டி மாடு வாங்கித் தந்திருக்கிற முதலாளிகளுக்குத்தான் போகுமாம்.”
“அம்மையநாயக்கனூர்ல இருந்து கொடைக்கு வர்றதுக்கு ஒரு ரூபா கேட்கிறாங்க. ஆனா அவங்களுக்கு வெறும் இரண்டணாதானா கிடைக்கும்?”
“ஆமாம், மாடு, வண்டி, தீவனம், முதலீடு எல்லாத்துக்கும் கணக்கு வைத்திருப்பாங்களே முதலாளிகள்?”
“அப்போ முதலாளிகளையே கூப்பிட்டுவிட வேண்டியதுதானே? நம் தேவை என்னவென்று சொன்னால் அவர்கள் செய்துதரப்போகிறார்கள்?”
பென்னியின் அருகில் குனிந்த லோகன் மெதுவான குரலில் சொன்னார்.
“பென்னி, இன்ஜினீயரா இருக்கிறது மட்டும் போதாது. இந்தத் தேசத்தையும் புரிஞ்சிக்கணும்.”
பென்னி லோகனைப் பார்த்தார். ‘புரிந்துகொள்ளாமல் என்ன செய்துவிட்டேன்?’ என்ற கேள்வியிருந்தது அவரின் பார்வையில்.
“ஏப்பா, நல்லாக் கேட்டுக்கோங்க. உங்களால தேக்கடிக்கு அம்பது நூறு ஜோடி மாடுகளோடு வண்டிய அனுப்ப முடியுமா?”
வண்டியோட்டிகள் ஒருவரையொருவர் பார்த்தனர்.
“உங்க மாடுக சுமையோடு மலைமேல் ஏறும்தானே?”
“சுமையை இழுக்கத்தானே தொர நல்ல ஜாதி மாடா பார்த்து வாங்குறோம்?”
“தேக்கடிக்கு மேல நீரணை கட்டப் போறோம். அதோ எதிர்ல தெரியுது பாருங்க அந்த மேல்மலையிலதான். கம்பத்திலயும் கூடலூர்லயும் வண்டி மாடுங்க இருக்கு. என்னன்னா அவங்க மாடு மேய்க்க மேல்மலைக்குப் போவாங்களே தவிர, மலைமேல வண்டியோட்டி அவங்களுக்குப் பழக்கமில்லை. எனக்குக் கூடலூர்ல இருந்து சுண்ணாம்பு ஏத்திக்கிட்டு மேல கொண்டாந்து கொடுக்கணும். வண்டிக்குத் தனிக் கூலி. மாட்டுக்கு இரண்டு சுமை கூலி, உங்களுக்குத் தனிக் கூலி கொடுக்கிறேன். ஆனால் எவ்வளவு கஷ்டம்னாலும் வேலையைப் பாதியில் நிறுத்திட்டு வந்துவிடக் கூடாது. அந்த உத்திரவாதம் மட்டும் தரணும் நீங்க.”
வண்டியோட்டிகள் ஒருவரையொருவர் பார்த்தனர். அவர்களின் கண்களில் தனித் தனிக் கூலி என்ற சொல், கங்காய்க் கனன்றது.
“நாங்க வர்றோம் தொர. எங்க மொதலாளிங்க கிட்ட ஒரு சொல்லு சொல்லிட்டாப் பொல்லாப்பு வராது” இடுப்பில் முழந்துண்டுடன் இருந்த மத்திம வயது ஆள் பேசினார்.
“உம் பேர் என்ன?” பென்னி கேட்டார்.
“பேரா...?” இப்படியொரு கேள்வியை எதிர்பாராத அதிர்ச்சி அவரின் இழுவையில் எதிரொலித்தது.
“டேய்ய்ய்... இதான் எம் பேராவே நாவத்துல இருக்கு.”
“டேய்னா?”
“அவரோட முதலாளியும் வண்டியில் பயணம் செய்கிறவர்களும் கூப்பிடுறாங்களே அதைச் சொல்கிறார்.”
“ஓ... ஜீசஸ்.” பென்னியின் முகம் வேதனையில் சுருங்கியது.
“வேறு யாரும் உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிட மாட்டாங்களா?”
“பேர் என்னங்க பேர் தொர? என்னோட தொரைக்கு நா என்ன பேர் வச்சிருக்கேன்? ட்ரியோன்னா காதைத் தூக்கிக்கும் என்னன்னு கேக்க.”
“உங்க துரையா?”
“ஆமாம், அவர்தானே இந்தக் கும்பியக் காய விடாம கஞ்சி ஊத்துறாரு?”
“மாட்டைச் சொல்லுறீங்களா?” பென்னிக்குச் சிரிப்பு வந்தது.
“சாமி தொர அது.”
“நல்லது, உங்க சாமியெல்லாம் அணை கட்ட வரணும். என்ன செய்யலாம்னு சொல்லுங்க?” லோகன் கேட்டார்.
“வாயில்லா எங்க சாமிங்களுக்கும் எங்களுக்கும் பேதமில்ல தொர. மேஸ்திரி கிட்ட கேளுங்க.”
“மேஸ்திரி யாரும் வந்திருக்கீங்களாப்பா?”
முகத்திலேயே நெல்லுச்சோறு சாப்பிடுவதன் பூரிப்பு நிரம்பிய மேஸ்திரி முன்னுக்கு வந்து நின்றான். நான்கரை அடி உயரமிருந்தால் அதிகம். முழங்கை வரை இறங்கிய மஞ்சள் சட்டை. பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்த வெள்ளை வேட்டி. இலைப்பெட்டியின் (வெற்றிலைப் பெட்டி) மையத்தில் ஒரே ஒரு இலையுடன் கொடி வரையப்பட்டிருந்த தாழ்ப்பாளின் நுனி முழுக்க சுண்ணாம்புத் தடம். வெற்றிலை போடுபவர்கள் தனியாகத் தங்கள் பழக்கத்தைச் சொல்லிக்கொள்ளத் தேவையில்லை.
“மேஸ்திரி பேர் என்ன?”
“ஆளுடைய பிள்ளை.”
“உங்ககிட்ட எத்தனை வண்டி மாடுகள் இருக்கு?” லோகன்
“நான் நான்கு மொதலாளிகளோட கொட்டகையைப் பார்த்துக்கிறேன் துரை. ஒரு மொதலாளி கொட்டகையில கொறஞ்சது இருபது, முப்பது ஜோடிக இருக்கும். அப்படிப் பார்த்தா நெருக்கி நூறு தேத்தலாம்.” பதில் சொல்லும்போது ஆளுடைய பிள்ளையின் உடலில் தெரிந்த பணிவில் போலித்தனம் எலுமிச்சையளவு இருந்ததை லோகன் கவனித்தார்.
“அப்போ இவர் ஒருத்தரே போதுமே?”

“அவசரப்படாதே லோகன். மேலே போயிட்டு அந்த வண்டி உடனே கீழே வந்துடுமா? ஒரே நாளில் எட்டு மைல் போய் பொருளை இறக்கிட்டு வர முடியாது. வழியில் மண் சரிந்தாலோ, பாதை இல்லையென்றாலோ ஒரு நாள், இரண்டு நாள்கூட ஆகும், மேலே போய்விட்டு வருவதற்கு. அதுவரை கீழே காத்திருக்க முடியாது. அதனால் மேலே இருந்து கீழே வண்டிகள் கிளம்பும் நேரத்தில் கீழே இருந்தும் வண்டிகள் கிளம்ப வேண்டும். வழியில் ஓரிடத்தில் தங்குவதற்குக் கூரை போட்டு, கொஞ்சம் வண்டிகள் எப்போதும் இருக்க வேண்டும். அதனால் இன்னும் நூறு, இருநூறு வண்டிக்காரர்கள் தேவைப்படும்.”
உள்ளே மறைந்திருக்கும் உண்மையைத் திருகி வெளியில் கொண்டுவர முயல்வதுபோல், மேஸ்திரி கழுத்தினை ஒரு சுழற்றுச் சுழற்றினான்.
“என்ன சொல்லணும் என்றாலும் சொல்லலாம் பிள்ளை.”
“அது வந்து தொர...”
“நீட்டி முழக்காமல் சொல்லுங்க” லோகன் சத்தமாகச் சொன்னார்.
“நீங்க வேலைக்குக் கூப்பிடுறது மாடு களவாடுறதுல தேர்ந்த கள்ளனுங்க இருக்கிற தேசம். பஞ்சக்காலத்துல கள்ளனுங்களோட சேர்ந்து மத்தவங்களும் மாடு பிடிக்க வந்துட்டாங்க. மாடுகளை அச்சமத்துக் கூப்பிட்டுக்கிட்டு வர முடியாது. உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி, மானூத்து, சின்னமனூர், பாளையம்னு எந்த வழியில் வந்தாலும் என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. புனையில பூட்டின கயிறு பூட்டினபடியே இருக்கும். மாட்டைப் பத்திக்கிட்டுப் போயிட்டு இருப்பாங்க. அதனால் மொதலாளிக ரொம்ப அச்சப்படுவாங்க. இருக்கிற இடத்தில் பாதுகாப்புத் தேடுறதே பெரிய வேலை. இதுல மாடுகள கள்ள நாட்டுக்கு அனுப்புறதுன்னா நாமளே மாட்டை மாலை போட்டுக் களப்பலிக்கு அனுப்பற மாதிரின்னு தயங்குவாங்க.”
“கூலி ரெண்டு மடங்கு கொடுக்கிறோமே பிள்ளை?”
“முதலுக்கே மோசம்னு ஆன பிறகு கூலியைப் பத்தி யோசிக்க முடியுமா தொரை?”
ஆளுடைய பிள்ளை பேசியதைக் கேட்டவுடன், பென்னியின் முகம் சோர்ந்தது.
“என்ன சொல்ல வர்றீங்க?” லோகன் சத்தமாகக் கேட்டதில் ஜார்ஜியானா கையில் எடித்துடன் ஓடிவந்தாள். ப்ளாக்கி விழித்துப் பார்த்துவிட்டு, மீண்டும் கண்களை மூடிக்கொண்டது.
“மன்னிக்கணும் தொரை. மாட்டையோ வண்டிங்களையோ மொதலாளிங்க கள்ள நாட்டுப் பக்கம் அனுப்ப மாட்டாங்க. தொரை சமூகம் இந்த எளியவனைக் கோவிக்கக் கூடாது, கோவிக்கக் கூடாது...” இரு கைகளைக் குவித்துக் கும்பிட்டபடி ஆளுடைய பிள்ளை பின்னாலேயே நகர்ந்தார். அவரின் கண் சமிக்ஞை புரிந்துகொண்ட வண்டியோட்டிகள் உடன் நகர்ந்தனர்.
எந்த ஆரத்தில் நின்றாலும் மையத்திற்குச் சறுக்கிக் கொண்டு நிறுத்தும் சக்கரத்தின் மாயத்தில் சிக்கிக்கொண்ட பிரமை எழுந்தது பென்னிக்கு.
- பாயும்