
நள்ளிரவு வரை மெழுகொளியின் மிதமான வெளிச்சத்தில் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார் பென்னி.
மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னருக்கும் போர்ட் ஆப் ரெவன்யூவுக்கும் கடிதங்கள் எழுதி, அவசரத் தபாலில் சேர்த்தபிறகுதான் கொடைக்கானலை விட்டுக் கிளம்பினார் பென்னி குக்.
எப்போதும் தன் மேசையின்மேல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் வழவழப்பு கொண்ட இளநீல வண்ணத்தாளினை அளவாகத்தான் பயன்படுத்துவார் பென்னி. விலை அதிகம் என்பது மட்டும் காரணமல்ல; எழுதுவதோ, பேசுவதோ முக்கியமல்ல, செயல் ஒன்றே பென்னியின் விருப்பம். பிரிட்டிஷ் அதிகாரிகள், இன்ஜினீயர்கள், கவர்னர்கள், வைஸ்ராய்களின் பெரும்பொழுது கடிதங்கள் எழுதுவதில் கழியும். நள்ளிரவிலும் எழுதிக்கொண்டிருப்பார்கள். கடிதம் எழுதுவதற்குப் பிரத்யேகமான உதவியாளர்கள் இருந்தாலும் பிரிட்டிஷார் பலர் தங்கள் கைப்பட எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள். அவரவருக்கு விருப்பமான தாள்களை இங்கிலாந்திலிருந்து வரும் கப்பல்களில் வரவழைத்துக் கொள்வார்கள். பட்டை நுனி, கூர்மையான நுனி கொண்ட பேனாக்களிலும் ஒருவரின் தேர்வுபோல் பிறிதொருவரின் தேர்வு இருப்பதில்லை.
மெட்ராஸ் பிரசிடென்சியின் புதிய கவர்னராகப் பொறுப்பேற்றிருக்கும் கன்னிமாரா, தன் நாளின் ஒவ்வொரு சம்பவத்தையும் பதிவு செய்து வருகிறாராம். அவருடன் நிரந்தரமாக நான்கு நண்பர்கள் இருக்கிறார்களாம். நாளின் முதல் தேநீர் தொடங்கி, நல்லுறக்கம் சொல்லிக்கொள்வதுவரை எழுதி வைக்கிறார்களாம். நண்பர்கள் எழுதிக் கொடுக்க, கவர்னர் அலுவலகத்தின் இரண்டு தட்டச்சர்களுக்கு முழுநாள் வேலையாக இருக்கிறதாம். கிராண்ட் டப் அவருடைய உத்தரவுகளை அவரே அரை நாளில் மாற்றிவிடுவார். கவர்னரின் ஏற்ற இறக்கம் நிரம்பிய குணமறிந்தவர்கள், உத்தரவு கிடைக்கப்பெற்றாலும் மறு உத்தரவு வருகிறதோ என்று ஒன்றிரண்டு நாள்கள் காத்திருப்பார்கள். புதிய கவர்னர் கன்னிமாராவின் மெலிந்த தேகத்தினை மீறி, அவருடைய வேகம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஹர் எக்ஸலென்ஸி, கவர்னரின் அறைக்குள் நுழைந்த ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் உள்ளே கேட்கும் ‘காச்மூச்’ சத்தத்தைத்தான் பொறுக்க முடியவில்லை என்று கவர்னர் அலுவலகத்தில் பேச்சுக் கிளம்பியிருக்கிறது. நிஜங்களைவிட நிழல்களை உருவாக்குவது மனிதர்களுக்கு சுவாரசியமான விளையாட்டல்லவா?
நள்ளிரவு வரை மெழுகொளியின் மிதமான வெளிச்சத்தில் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார் பென்னி. தன்னுடைய சொற்களில் கடுமை தொனிக்கிறதோ? போர்ட் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் முடிவுகளை முன் வைக்கிறோமோ என்றெல்லாம் எண்ணங்கள் அலைபாய்ந்தன. எழுதிய வாசகங்களை நினைவு கூர்ந்தார்.
“.....மதுரை கலெக்டரின் ஒப்புதலுக்கும் அனுமதிக்கும் பிறகுதான் பெரியாறு திட்டத்தின் இன்ஜினீயர்கள் வேலைகளைச் செய்ய முடியும் என்றால், அணை கட்டி முடிக்க முடியும் என என்னுடைய திட்டத்தில் குறிப்பிட்டுள்ள 900 பணி நாள்கள் (எட்டு ஆண்டுகள்) நிச்சயம் போதாது. மேல்க்காட்டில் வருஷத்திற்கு 100, 110 நாள்கள் வேலை செய்ய முடிந்தாலே அந்த வருஷம் இயற்கை எங்களுக்கு அனுகூலமாக இருந்தது என்று பொருள். பெரியாறு திட்டத்திற்கான ஆய்விலும், சர்வே செய்வதிலும், திட்டம் தயாரிப்பதிலும் இரண்டு பத்தாண்டுகளாக ஈடுபட்டிருக்கிறேன். நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு இப்போது திட்டத்திற்கான ஒப்புதல் கிடைத்து, வேலையும் தொடங்க இருக்கிறது. மற்ற இடங்களில் அணை கட்டுவது போலல்ல மனிதர்கள் வாழ முடியாத அடர் வனத்தில் அணை கட்டுவது. அணை கட்டும் இடத்திலும் சுரங்கம் அமைக்கும் இடத்திலும் மட்டும்தான் என்னால் முழுமையான கவனம் செலுத்த முடியும். மேல்மலையில் ஒவ்வொரு நாளும் நாங்கள் இயற்கையுடன் போராடிக் கொண்டிருக்க வேண்டிய சூழலில் உள்ளோம்.

மலைமேல் அணை கட்டிய பிறகு, பாசனத்திற்காகக் கீழே கொண்டுவரும் நீரை மேலூரின் கண்மாய்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். பெரியாற்று நீர் செல்ல வேண்டிய அணைகள், கால்வாய்களைச் சரிசெய்வதற் காகவும், பேரணையில் இருந்து புதிய கால்வாய்களை அமைக்கவும் பெரியாறு திட்டத்திற்கென்று மதுரையில் ஒரு பிரிவு தொடங்கப்பட வேண்டும். அதற்கென்று ஒரு எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினீயர் நியமிக்கப்பட்டால் நல்லது. தனியாக எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினீயர் பணியிடம் உருவாக்கி, நியமிப்பது செலவு கூடுமென்று நினைத்தால், மதுரையின் எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினீயர் ஒருவரைப் பெரியாறு திட்டத்திற்கென்று விடுவிக்கலாம்.
பேரணையில் இருந்து மேலூர் வரை கால்வாய் அமைக்க, சர்க்கார் நிலம் போக, தனியாரிடம் இருந்தும் நிலங்களை வாங்க வேண்டியுள்ளது. நிலத்தின் மதிப்பை நிர்ணயித்தல், நிலத்திற்கான மாற்று நிலம் அல்லது நிலத்திற்கு ஈடான பணம் கொடுத்தல் உள்ளிட்ட வேலைகளை விரைந்து செய்தால் மட்டுமே நிர்ணயித்துள்ள காலத்திற்குள் அணையின் வேலைகளைச் செய்து முடிக்க முடியும். வருவாய்த் துறை நிலம் கையகப்படுத்தும் வேலைகளுக்கு மதுரை கலெக்டரின் அனுமதிக்காகக் காத்துக்கொண்டிருக்க முடியாது. நிலம் கையகப்படுத்தும் வேலையை விரைந்து செய்து முடிக்க மேலூர் தாலுகாவின் தாசில்தாருக்கோ, டெபுடி கலெக்டருக்கோ, கலெக்டருக்கான முழுமையான அதிகாரத்தைக் கொடுக்க வேண்டுமாய்ப் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
பெரியாறு அணைத் திட்டம் வழக்கமான திட்டமல்ல என்பதை போர்ட் ஆப் ரெவன்யூவின் உறுப்பினர்கள் நன்கறிவீர்கள். தங்களுக்கு அனுப்பும் இதே கோரிக்கையை மெட்ராஸ் பிரசிடென்சியின் மேன்மை தாங்கிய கவர்னருக்கும், பிரிட்டிஷ் இந்திய செக்ரட்டரிக்கும் அனுப்பியுள்ளேன்.
தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்,
(ஜெ.பென்னிகுக், லெப்டினென்ட் கர்னல், ஆர். ஈ. சூப்பிரன்டெண்டிங் இன்ஜினீயர், பெரியாறு திட்டம். )
கவர்னருக்கு மேலான அதிகாரம் நிரம்பிய போர்ட் ஆப் ரெவன்யூக்கு, தன்னுடைய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஆலோசனைகளை முன்வைத்திருப்பது உகந்ததா என்ற யோசனையைப் புறந்தள்ள முனைந்தார். அவரைப் பொறுத்தவரை வேலை சுணக்கமின்றி நடக்க வேண்டும். எதிர்ப்புணர்வு காட்டும் யாரையும் அருகில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. பெரியாறு அணைத் திட்டம், குளிர்ந்த நீரில் தீப்பற்ற வைக்கும் முயற்சிபோல் பென்னியின் மனத்திற்குள் தத்தளிப்பைக் கொடுத்துக்கொண்டிருந்தது.
மதுரையின் கலெக்டர் முதல்நாள் கூட்டம் நடத்தும்போது பென்னியையும் திட்டத்தின் இன்ஜினீயர்களையும் நடத்திய விதத்திலிருந்துதான் கடிதம் எழுதும் முடிவு வந்தது. நியாயமான கோரிக்கைகளுக்குப் பிரிட்டிஷ் சர்க்கார் அனுமதி கொடுக்கும் என்ற நம்பிக்கை பென்னிக்கு இருந்தது. பெரியாறு திட்டம் தொடர்ந்து சந்தித்த தடைகளினாலே, இப்போது கூடுதலான கருணையையும் சிறப்பு சலுகைகளையும் பெறத் தொடங்கிவிட்டது. இல்லையென்றால் பணம் ஒதுக்கீட்டிற்கு முன், வேலைகளைச் செய்ய ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்கள்.
கொடைக்கானலிலிருந்து லோகன், டெய்லர் இருவருடனும் பெரியகுளம் வழியாகக் கூடலூர் நோக்கிக் குதிரையில் பயணித்தார் பென்னி. மூவருக்குமே குதிரைப் பயணம் என்றால் உற்சாகம் வந்துவிடும்.
கொடைக்கானலிலிருந்து கூடலூர் வரை விரியும் வெவ்வேறு நிலக்காட்சிகள் அவர்களுக்கு எப்போதுமே வியப்பானவை. எழுபது, எண்பது மைல்களுக்குள் பேரெழிலும் பெரும் வறட்சியும் கொண்ட நிலப்பரப்புகள் மாறி மாறி வரும். நிலத்தின் வளம்தான் குடிகளின் வளம். வளமான நிலப்பகுதிகளைக் கடக்கும்போது குடிகளின் முகங்களும் பொலிவாக இருக்கும். வறண்ட நிலப்பகுதிகளில் குடிகள் வயிறு சுருங்கி, வற்றிய தோல்களும் குச்சி குச்சியான கைகால்களுமாக நீரற்ற வறண்ட தாவரம் போலவே நிற்பதைக் கவனிப்பார்கள்.
நிலங்களில் அறுவடை நடந்துகொண்டிருந்தது. பச்சை நெற்கதிர்களை மாடுகள் கொண்டு கதிரடித்துக்கொண்டிருந்தார்கள். சோளக் கதிர்களின் பால் மணத்தைக் காற்று சுமந்து வந்தது.
“பெரியாற்றுத் தண்ணீர் வந்துவிட்டால் இந்தப் பகுதியில் இரண்டு போகமும் நெல் விளைவிக்கலாம். ரயத்துகளுக்கு உணவுக்குப் பஞ்சம் என்ற பேச்சே இருக்காது.”
“ரயத்துகளுக்கு மட்டுமா லோகன்? மதுரா டிஸ்ட்ரிக்ட்ல இருக்க ஒவ்வொருத்தருக்கும்தான். உணவு கிடைச்சா போதுமே? மற்றதெல்லாம் கிடைக்கவில்லை என்றாலும் கவலையில்லை.”
“யெஸ் பென்னி. பிரிட்டிஷ் இந்தியாவின் குடிகளுக்குக் கஞ்சி கிடைப்பதுதான் வாழ்நாள் போராட்டமே. நம் தேசத்தவர்களைப்போல் இவர்களுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது? பிரிட்டிஷ்காரர்களாகிய நமக்கு வருஷத்திற்கு ஒரு மாதம், இரண்டு மாதம் புதுப் புது இடங்களுக்குச் செல்லவில்லையென்றால் தலைவெடிக்கும். ஆயுளுக்கும் அடுத்த ஊரைப் பார்க்காத அபூர்வ மனுஷர்களை பிரிட்டிஷ் இந்தியாவில் பார்க்கலாம்.”
டெய்லர் சொன்னவுடன் பென்னியும் லோகனும் உண்மைதான் என்பதுபோல் புன்னகைத்தார்கள்.
அவ்வப்போது கடந்து சென்ற ஒன்றிரண்டு மாட்டு வண்டிகளைத் தவிர்த்து ஆளரவமற்ற சாலை. கருங்கல் ஜல்லிகளைப் பரத்தி, செம்மண்ணால் நிரவப்பட்டிருந்தது. இருமருங்கும் மரங்கள் செழித்து நின்றன. இங்கிலாந்து உள்ளிட்ட பனி பொழியும் தேசங்களில் பனி, தாவரங்களைக் கருக்கும். இந்திய தேசத்தின் வெயில் தாவரங்கள் பனி பருகித் தழைக்கும். வருஷம் முழுக்க வெப்பம் குடிக்கும் தாவரங்களுக்கு மழையும் பனியும் அமிர்தம். செம்மண் புழுதியெழ மூன்று குதிரைகளும் விரைய, பின்னால் விலகும் பாதை மீண்டும் தனிமைக்குத் திரும்பியது.
“இந்தப் பகுதியில் சுண்ணாம்புக் கல் கிடைக்காதா பென்னி, விடுமுறை நேரத்தில் கூடலூர் அழைத்துச் செல்கிறீர்கள்?”
“நமக்கு விடுமுறை என்று ஒருநாள் இருக்கிறதா மிஸ்டர் டெய்லர்?”
“கொடைக்கானலிலிருந்து கூடலூர் போக வேண்டுமா என்று கேட்கிறேன்.”
“சின்ன ஆணி என்றாலும் மலை அடிவாரத்திலோ, சுற்றுவட்டாரத்திலோ கிடைக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். காரணம், பொருள்களை நாம் மூவாயிரம் அடி உயரத்திற்கு ஏற்ற வேண்டும். மலையேற்றுவதற்கே வழி தெரியவில்லை. இதில் இங்கிருந்து எழுபது, எண்பது மைல் சுண்ணாம்புக் கல்லை எப்படிக் கொண்டு போக முடியும்? கூடலூர், கூடலூரையொட்டிய பகுதிகளில் பார்ப்போம். மேல்மலையிலும் சில இடங்களில் சுண்ணாம்புக் கல் இருப்பதாகச் சொல்கிறார்கள். மதுரை கலெக்ட்ரேட் அசிஸ்டென்ட் ஒருவரையனுப்பி வைத்துவிட்டேன். நேற்றே அவர் சென்றுவிட்டார். நாம் போவதற்குள் அவர் விசாரித்து வைத்திருப்பார்.”
“நல்லதுதான் பென்னி...”
இடையில் அனுமந்தன்பட்டியில் சாப்பிட்டுவிட்டு, பிறகு ஓரிடத்திலும் நிறுத்தாமல் மாலையில் கூடலூர் சென்று சேர்ந்தார்கள்.
கலெக்ட்ரேட்டில் வேலை செய்யும் ரத்தினம் பிள்ளை, கூடலூரின் எல்லையில் பென்னியை எதிர்பார்த்துக் காத்திருந்தார். சம்பிரதாயங்கள் முடிந்து சுண்ணாம்புக் கல் இருக்கும் இடத்திற்குச் செல்லத் தயாரானார்கள். ரத்தினமும் மற்றவர்களும் முன்னே மாட்டு வண்டியில் செல்ல, பென்னியும் இன்ஜினீயர்களும் குதிரையில் தொடர்ந்தார்கள்.
கூடலூர் வந்தவுடன் பென்னிக்கு மொக்கை மாயனின் நினைவு வந்தது. அவருக்கும் செய்தியனுப்பியிருந்தால் வந்திருப்பார். அவர் மகன் பேயத்தேவன் உதவியாக உடன் இருந்திருப்பான் என்று நினைத்தார் பென்னி. வழி முழுக்க ஓலைக்குடிசைகள். கம்பமும் கூடலூரும் மதுரா டிஸ்ட்ரிக்ட்டில் ஓரளவுக்கு மழைவளம் கொண்ட பகுதிகள் என்றாலும், நிலையான மழைப்பொழிவு, நீர்வளம் இல்லாததால் மக்களின் வாழ்வு மேம்படவில்லை.
யோசனையுடன் சென்றுகொண்டிருந்த பென்னி, முன்னால் சென்ற ரத்தினம் பிள்ளை ஓரிடத்தில் நின்றுவிட்டதைப் பார்த்தார். அவர்கள் அருகில் சென்ற பென்னியும் மற்றவர்களும் குதிரையில் இருந்து இறங்கினார்கள்.
சிறு குன்றுபோல் கற்களும் பாறையுமாக அவ்விடமே துவர் கலந்த வெள்ளை நிறத்தில் இருந்தது. குன்றும் அடிவாரமும் சரளைக் கற்களாகக் கிடந்தன.
பென்னி குனிந்து ஒரு கல்லை எடுத்துப் பார்த்தார். கனமற்று இருந்த கல்லை அருகில் இருந்த கல்லின்மீது எறிந்தார். உடைந்து நொறுங்கிய துகள்களைக் கையில் எடுத்து அழுத்திப் பார்த்தார்.
“இந்தப் பகுதியில வெம்பா மண்ணுன்னு சொல்வாங்க துரை சாகிப். ஊரே இங்கிருந்துதான் கல்லெடுத்துப் போகும். நான் சுத்துவட்டாரத்தில் விசாரிச்சுட்டேன் துரை.”
“வேறு எங்கல்லாம் இருக்குன்னு கேட்டீங்களா?”
“கேட்டுட்டேன் துரை சாகிப். நாலு இடம் இருக்கு. எல்லாம் குறைந்தபட்சம் இரண்டு, மூணு மைல் சுத்துவட்டாரத்துக்குள்ளதான் இருக்கு. இன்னொரு விஷயமும் துரை சாகிப். மலைமேல் வண்ணாத்திப் பாறை பக்கத்திலும் இருக்காம். அங்க இருக்க பூசாரி அக்காவைக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லியிருக்கேன். விடியறதுக்குள்ள அவங்களும் வந்துடுவாங்க துரை சாகிப்.”
“நல்லது பிள்ளை. வரட்டும். சுண்ணாம்பைக் கண்ணால் பார்த்துட்டு முடிவு செய்ய முடியாது. காலகாலத்திற்கும் உறுதியா இருக்க வேண்டிய அணை. சுண்ணாம்பின் வலிமையைச் சோதித்துப் பார்க்க வேண்டும். சுண்ணாம்பைச் சுட்டுட்டு எனக்குத் தகவல் சொல்லுங்க. நான் இன்னும் இரண்டு நாளும் இங்கதான் இருப்பேன். சுட்டு, சூடு ஆறுவதற்கு முன்னால் எனக்குத் தகவல் வந்துவிட வேண்டும். புரிந்ததா?” என்று சொல்லிவிட்டு,
“மிஸ்டர் பிள்ளை, நீங்கள்தான் சுண்ணாம்பைச் சோதித்துச் சொல்ல வேண்டிய ஆள், எங்க பின்னாடி வந்துகிட்டு இருக்காதீங்க. எங்களுக்குச் சாப்பாடு ஏற்பாடு செய்தேன், டீ கொடுத்தேன்னு சொல்லக்கூடாது. எங்களுடைய தேவைகளை நாங்களே பார்த்துக்கொள்வோம். உங்கள் பொறுப்பு, சுண்ணாம்பைச் சோதித்துச் சொல்ல வேண்டும்” என்று மீண்டும் பிள்ளைக்கு உத்தரவிட்ட பென்னி, இன்ஜினீயர்களுடன் கிளம்பினார்.
சிறிய குன்றான அவ்விடத்தில் இருந்து பார்க்கும்போது, சின்னச் சின்னக் குடிசைகளின் வழியாக வெண்புகை வெளியேறியதைப் பார்த்துத் திகைத்தார். குடிசைகள் புகைவதுபோல் தோன்றவே அருகில் நின்றிருந்த ஊர் சிப்பந்தியிடம் என்ன விஷயம் என்று விசாரித்தார்.
“இதென்ன சாயிப் தொர இப்படிக் கேக்குறாரு? ஒருபொழுதுக்குத்தானே அடுப்பு மூட்டுறது? காட்டு மேட்டுக்குப் போன பொம்பளைக இப்பத்தான் தண்ணி மோந்துக்கிட்டு வந்து கஞ்சி காய்ச்ச அடுப்பப் பத்த வச்சிருப்பாங்க. நாள இந்நேரம் வரைக்கும் இந்தக் கஞ்சியிலதான் தண்ணிய ஊத்தி ஊத்திக் கரைச்சிக் குடிக்கிறது. வயித்துல எரியிற நெருப்ப அணைக்கப் பார்க்கணும். அடுப்புல கெடக்கிற நெருப்புக் கங்க அணையாமப் பார்த்துக்கணும். எப்புடி?” தன் சகாவுடன் பேசும் இயல்பில் உரத்துப் பேசிவிட்ட சிப்பந்தி, பென்னியின் முகத்தைப் பார்த்தவுடன், குரலைத் தொண்டைக்குழிக்குள் அடக்கினார்.
“ஒரே வேளைதான் சாப்பாடு செய்வதா?”
சுற்றி நின்றவர்கள் அமைதியாக இருக்க, “சம்சாரிக அடுப்பப் பார்த்துக்கிட்டு இருந்தா காடு கழனிகள யார் பார்ப்பாங்க துரை சாகிப்?” என்றார் பிள்ளை. பென்னியின் மனத்தில் வெளியில் இறங்கிய இருளைப் போலவே துயரமும் வேர் பிடித்தது.
தங்குமிடத்திற்குச் செல்ல நினைத்தவர், குதிரையை ஊருக்குள் செலுத்தினார்.
உட்கார்ந்தால்தான் உள்ளே நுழைய முடியும் என்ற அளவிற்கு இருந்த குடிசைகளின் நுழைவாயில், பூச்சு காணாத சுவர்கள், அழுக்கடைந்த உடைகளுடன் தெருவில் புரண்டோடி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள், தலையில் இரண்டு, இடுப்பில் இரண்டு, கையில் இரண்டு என்று குறைந்தது ஐந்தாறு மண்குடங்களில் நீர் சுமந்து வரும் பெண்கள், தோளில் துண்டும், அரையில் கோவணமுமாக ஆடு மாடுகளை மேய்ச்சலில் இருந்து திருப்பிக்கொண்டு வரும் ஆண்கள் என நூற்றாண்டுகளாக மாறாத துயரச் சித்திரத்தின் அழுக்கடைந்த காட்சியாக ஊர் கண்முன்னால் விரிந்தது. பென்னியின் பின்னால் லோகனும் டெய்லரும் தொடர்ந்தனர்.
பறவைகள் கூடு திரும்பி, நாளின் கதையைச் சலசலத்துக்கொண்டிருந்த முதிர்ந்த அரச மரத்தின் கீழிருந்த கருங்கல்லின் மீது குத்தங்கால் வைத்து உட்கார்ந்திருந்தார் வயதைத் தன் முதுகில் சுமந்திருந்த சம்சாரி. கண்முன் பொழுது அந்திக்குள் நுழைவதோ, பறவைகளின் பேச்சொலியோ, குதிரையில் வந்திறங்கித் தன் முன்நிற்கும் மூன்று வெள்ளைக்காரர்களோ அவரின் கவனத்தைக் கவரவில்லை. அவர் கண்களில் காலம் பின்னோக்கி உறைந்திருந்தது. அவர் நினைவுகளில் இருந்த மனிதர்கள் எங்கெங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்தார்கள். நிகழ்காலத்தின் நினைவுகள் அறுபட்டு, கடந்த காலத்தின் ஈரத்தில் துளிர்க்கக் கற்றுக்கொண்ட அதிசயத் தாவரமாய் இருந்தார் பெரியவர்.
ஊருக்கு நடுவில் இருந்த அரச மரத்தடிக்கு வந்த பென்னி, குதிரையை விட்டிறங்கி, கருங்கல்பலகையில் பெரியவரின் அருகில் உட்கார்ந்தார். லோகனும் டெய்லரும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்தார்கள்.
தன்னருகில் கேட்ட சலனத்தில் திரும்பிப் பார்த்த பெரியவர் ஒன்றும் சொல்லாமல், சுருக்குப் பையிலிருந்து எடுத்திருந்த வெற்றிலையின் நுனியையும் காம்பையும் கிள்ளித் தூர எறிந்தார். அவர் எறிந்த இடத்தைப் பார்த்தார் பென்னி. பத்திருபது வெற்றிலைக் காம்புகள் கிடந்தன. வெற்றிலையின் நடு நரம்பை நுனி விரலால் வலிக்காமல் கிள்ளியெறிந்து, சுண்ணாம்பைத் தடவி, நான்காக மடித்து வாய்க்குள் நுழைத்தார்.
பெரியவரையும் ஊரையும் மாறி மாறிப் பார்த்தார் பென்னி. அவர் எதற்கு ஊருக்குள் வந்திருக்கிறார் என்று புரியாமல் பென்னியைப் பார்த்து அமர்ந்திருந்தார்கள் லோகனும் டெய்லரும்.
வெற்றிலையின் சாறு உள்ளிறங்க, பேச்சு வெளியில் வந்தது.
“அப்ப எனக்கு நாப்பது வயசு காணும்...” தானாகப் பேச ஆரம்பித்த பெரியவரை லோகன் வியந்து பார்த்தார்.
“இப்போ என்ன வயசு?” டெய்லர் கேலியாகக் கேட்டார்.
“இந்த மரத்துக்குக் கொஞ்சம்தான் இளைப்பு நானு. நான் பாக்கயில நாலஞ்சு வருச கன்னு இது. நான் என் வீட்ல 26 கொள்ளிச் சட்டிய பாத்திருக்கேன். இந்த மரம் எத்தன பாத்திருக்கோ? வாயத் தொறந்து பேசுச்சுன்னாதானே தெரியும்?”
பெரியவர் கடந்த காலத்தின் மௌனத்தில் இருந்து நிகழுக்கு வந்துவிட்டதைப் பென்னி உணர்ந்தார்.
“ஒங்கள மாதிரிதான் வெள்ளக்காரங்க, ஒரு நா வெள்ளன வந்தாங்க. ஆளு படை அம்புன்னு வந்து நின்னதும் ஊரே அல்லோகலப்பட்டுச்சி. என்னமோ ஏதோன்னு. அந்தா தூரத்துல பாருங்க, ஒரு பாழடைஞ்சுபோன கோட்டை தெரியுதா?” பெரியவர் காட்டிய திசையில் பொழுதின் கருக்கலில் ஒன்றும் தெரியவில்லை.
“ஓ அதுவா..!” லோகன், பெரியவருக்குப் பதில் சொன்னார்.
“கேட்டுக்கே வாங்க. ம் கொட்டுனா போதும். பேச்சுக் குடுத்தா சொல்ல வந்தது மறந்து போயிடும்.”
“சரி சொல்லுங்க...”
“அப்போ கோட்ட இடியல. ஊரு சனம் ஒருத்தரு போமாட்டோம் கோட்ட கிட்ட. ரெண்டு காரணம். கோட்டைக்குள்ள போறதுக்கு எங்கனயும் வழியில்ல. ரெண்டாவது, போனமுன்னு நெனைச்சிட்டுப் போறவங்களுக்கு எப்படியோ ஒரு வழி தெறக்குது. ஆனா திரும்பி சவமாத்தான் வருவாங்க. இதனால ஊரு சனம் ஒருத்தரு போமாட்டோம்.”
பொழுது சாயும் நேரத்தில் எதற்கிந்த திகில் கதை என்பதுபோல் பார்த்தார் லோகன்.
“வந்த வெள்ளக்கார தொர போலீசாம். எங்க காலத்துல போலீச எங்க பார்த்தோம். கள்ளருங்க தான் காவக்காரங்க. காவக்கூலி குடுத்துட்டா போதும். ஒரு நெல்லு மணி ஊர் எல்லையைத் தாண்டாது. இப்போ முட்டிக்கால் வரைக்கும் கொழாய் மாதிரி ஒரு சாக்குத் துணிய மாட்டிக்கிட்டு போலீசுன்னு வர்றாங்க. அன்னிக்கு அந்தப் போலீசு தொர நெறைய அதிகாரிங்கள கூப்பிட்டுக்கிட்டு அந்தக் கோட்டைக்குப் போனாரு. பாண்டிய ராசா கட்டுனதுன்னு சொல்றாங்க. புவனேந்திர ராசா (பூஞ்சாறு அரசர்) கட்டுனதுன்னு சொல்றாங்க. கட்டும்போது நின்னு பார்த்தவங்க ஒருத்தரும் உசுரோட இல்லையில்ல? சொல் கேள்விதானே. கோட்டைன்னா சனங்க இருந்த கோட்ட இல்ல. துலுக்கனுங்க சண்டை போட வர்றாங்கன்ன உடனே அரமணையில இருந்த காசு பணம் நகை நட்டெல்லாம் பெரிய பெரிய மரப்பெட்டியில போட்டு பத்துக் கூண்டு வண்டியில மருதையில இருந்து இங்க எடுத்தாந்தங்களாம். அப்ப இங்கல்லாம் மக்க மனுசா ஒருத்தர் கெடையாதாம். மரப்பெட்டின்னா எத்தாத்தண்டி? ஒரு ஆள நிக்க வச்சு கொண்டி போடலாமாம். உள்ள பத்தாளு ஒக்காரலாம், அஞ்சாளு படுக்கலாமாம், அத்தாத்தண்டி பொட்டிங்கள அப்படியப்படியே வச்சு, சுத்தி சுண்ணாம்பால சுவத்தை எழுப்பி, வாசலையே கெட்டாம விட்டுட்டாங்களாம். கோட்டைக்குள்ள புதையலு இருக்குன்னு வம்சம் வம்சமா சொல்லிக்கிட்டு இருந்தாலும் ஒருத்தருக்கும் கிட்டபோய்ப் பாக்குறதுக்கு ரத்தத்துல தெனவு இல்ல. ஐந்நூறு, அறுநூறு வருஷமா கோட்ட அணுகுலையாம நிக்குது. ரகசியம் காத்துக்கிட்டு இருக்க கோட்டையை உடைக்க வந்த போலீசுக்காரரு, கூட வந்த தோட்டி, தலையாரிங்கள கூப்பிட்டு கோட்டையை இடிங்க இடிங்கன்னு சொன்னாரு. ஊரு சனமே மூச்ச அடக்கிக்கிட்டு நின்னுச்சு.”
பெரியவரின் கண்களில் ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய சம்பவம் இப்போது நிகழ்வதைப் பார்த்தார் பென்னி. கொஞ்சம் சுண்ணாம்பைக் கிள்ளியெடுத்து வெற்றிலையில் தடவினார் பெரியவர்.
“இந்தச் சுண்ணாம்பு எங்க இருந்து வாங்குவீங்க பெரியவரே?” லோகன்
“அந்தா... ஊர் பொறம்போக்குல கெடக்கே வெம்பா மண்ணு. மொத்தம் சுண்ணாம்புதானே? அந்தச் சுண்ணாம்பெடுத்துத்தான் பாண்டிய ராசா அவரோட பொதயலை மறைச்சு வைக்க அந்தக் கோட்டையைக் கட்டுனாராம். சுண்ணாம்புன்னா என்னாங்கிறீங்க? பத்து நூறு பேர் சேர்ந்து நின்னு இடிச்சாலும், என்னான்னு கேட்டுட்டு நிக்கும். போலீசு தொர தலையால தண்ணி குடிச்சிப் பார்த்தாரே? கடப்பாறையும் இரும்புக் கொழாயும் வச்சி இடி இடின்னு இடிச்சாங்க. அசைஞ்சு கொடுக்கலையே? போலீசுக்காரருக்கு கோவமா வந்துச்சி. அசப்புல இவர மாதிரியேதான்...” என்று டெய்லரைக் காட்டினார்.
“என்ன மாதிரியா?”
“ஆமாம். கொஞ்ச வயசுதான். கோட்டைக்குள்ள போக எப்படியும் வழி பாத்தே ஆவணும்னு சுத்திச் சுத்தி வந்தாரு. ஒரு எடம் பாக்கியில்லாம தட்டித் தட்டிப் பார்த்தாரு. தட்டிக்கிட்டே வந்தவருக்கு ஒரு எடத்துல பொசுக்குன்னு கதவு தெறந்துகிடுச்சி...”

“ஓ... அப்புறம்...” லோகனுக்குச் சுவாரசியம் கூடியது.
“அப்புறம் என்ன? நாலஞ்சு ஆளுகள கூட்டிக்கிட்டு போலீசு தொர உள்ள போனாரு. கைவெளக்கு, லாந்தரு, அழுத்துனா எறியுமாமே என்னமோ பேர் சொன்னாங்க, அந்த வெளக்கையும் எடுத்துக்கிட்டு உள்ள போயிருக்காங்க. ஒருத்தரு நிக்கிறது இன்னொருத்தருக்குத் தெரியல. கும்மிருட்டு. வட்டமான கோட்டையாச்சா... ஆரம்பிச்ச எடத்துக்கே வந்து நிக்குதாம். உள்ள இருந்து இன்னொரு எடத்துக்குப் போவ முடியலையாம். மெதுவா படிக்கட்டு ஒண்ணு கால்ல தட்டுப்பட்டு மேல போயிருக்காங்க. போவப் போவ இருட்டு கூடிக்கிட்டே இருந்திருக்கு.”
“பேய்க் கதை சொல்லிக்கிட்டு இருக்கீங்களே பெரியவரே... என்னாச்சுன்னு சொல்லுங்க” டெய்லர்.
“கதை இல்ல தொர. நடந்தது. என் கண் முன்னாடி பார்த்தது...”
“சரி சொல்லுங்க.”
“மேலே போனவுடனே உள்ள இருந்து செவத்தை உடைங்கன்னு உத்தரவு போடுறாரு போலீசு தொர. கத்தியும் கடப்பாறையும் போடுறாங்க. போடுற கடப்பாறை குதிச்சிக்கிட்டு திரும்பி வருதே தவிர, செவத்துல ஒக்காரல. கூட போனவங்களுக்குக் கைகால் ஓய்ஞ்சுபோச்சு...”
“அப்புறம் எப்படி இடிஞ்சுது கோட்ட?”
“சொல்லிக்கிட்டு இருக்கேனே தொர?” பெரும் சம்பவத்தை விவரிக்கப் போகும் தோரணையில் இன்னும் இரண்டு வெற்றிலைகளை உள்ளே தள்ளினார்.
“கடப்பாறையோட உள்ள நிக்க முடியலன்னு ஒவ்வொருத்தரா வெளிய வந்தாங்க. வந்தவங்க பேயறஞ்ச மாதிரி நின்னுருக்காங்க. கொஞ்ச நேரஞ்செண்டுதான் எல்லாம் ‘அம்மா... ஐயோ’ன்னு கத்துனாங்க. என்னன்னு பாத்தா போலீசுக்கார தொரைய காணல.”
“ஐயோ..!” அலறினார் லோகன். பென்னிக்கும் திடுக்கிட்டது.
“கூட்டமே அடிச்சுப் பிடிச்சு உள்ள போனுச்சு. பாத்தா செவத்தோட செவரா தொர ஒட்டிக்கிட்டு இருந்திருக்காரு. வெளக்கைப் பிடிச்சுப் பார்த்துத் தொரையத் தூக்கியிருக்காங்க. என்ன பிரயோஜனம், மூச்சு இல்லையே? மூச்சு இல்லாத தேகம் சவந்தானே?”
மூவருக்கும் துக்கம் வந்தது.
“எப்படிச் செத்தாரு?”
“இந்தா ஜில்லாக் கலெக்டரே அவர் பேயடிச்சு செத்துட்டாருன்னுதான் மேல எழுதியனுப்பினாராம். வெள்ளைக்கார தொரைங்க ஒவ்வொருத்தர பத்தியும் கப்பல்ல கடுதாசி எழுதிப் போடணுமாமே? பேயடிச்சுதான் செத்துட்டாருன்ன உடனே, கலெக்டரு கோட்டையை இடிக்கச் சொன்னாரு.”
மௌனமாக அமர்ந்திருந்தனர் மூவரும்.
“நாட்டு வெடிக்கு போப்பேன்னு நின்னுச்சு கோட்ட. எங்கிருந்தோ ஆளக் கூட்டிக்கிட்டு வந்து பெரிய வெடி வச்சு இடிச்சாங்க. எங்க இடிஞ்சுது. அந்தா பாருங்க... கூர தான் சரிஞ்சுது. இந்தச் சுண்ணாம்பும் மண்ணும் கெட்டியாச்சே. சும்மாவா சொல்லுவாங்க, `அந்தத் தரை மண்ணெடுத்து அங்கே கட்டு வீட்டை’ன்னு.”
ஜீசஸ் வெற்றிலை போட்டுக் கொண்டு தனக்கு வழிகாட்ட இந்த மரத்தடியில் உட்கார்ந்திருந்தாரோ என்று பென்னி திகைத்து நின்றார்.
- பாயும்