
அதில் கவனமாகப் பெயர்களைக் குறிப்பிடுங்கள். சுதேசி அதிகாரிகளின் பெயர்களுக்கு முன்னால் ராய், ராவ், சாகிப், கான் சாயிப் என என்ன வர வேண்டுமென்று கவனமாகக் குறிப்பிடுங்கள்.

கையெழுத்திட்டுக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ரெசிடென்ட் ஹானிங்டன், கையெழுத்திடுவதைப் பாதியில் நிறுத்தினார். தன் எதிரில் நின்று கொண்டிருந்த அசிஸ்டென்ட் ரெசிடென்ட் வில்லியம்சை யோசனையுடன் பார்த்தார்.
“சீப் செக்ரட்டரியிடம் இருந்து கடந்த வாரம் ஒரு அறிவுறுத்தல் கடிதம் வந்ததே? அதைக் கவனத்தில் கொண்டு, ஹிஸ் ஹைனெஸ் மகாராஜாவின் பயணத் திட்டத்தினைச் சரிபார்த்தீர்களா?”
“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி. இரண்டு வாரங்களுக்கு முன்பாக சுதேசி சமஸ்தானத்தின் அரசர்களோ, அதிகாரிகளோ ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னருக்கும் சீப் செக்ரட்டரிக்கும் முறையாகத் தகவல் அனுப்பவில்லையென்றால், அவர்களின் பயணம் அரசுமுறைப் பயணமாகக் கருதப்பட மாட்டாது. அவர்கள் தங்குவதற்கும் பாதுகாப்புக்குமான அனைத்து ஏற்பாடுகளையும் அவரவர்களே செய்துகொள்ள வேண்டும். பிரிட்டிஷ் சர்க்கார் தரப்பில் வழங்கப்படும் அரசு மரியாதையும் வழங்கப்பட மாட்டாது என்று உறுதியாகத் தெரிவித்து மெட்ராஸ் பிரசிடென்சியின் சுதேசி அரசர்களான திருவிதாங்கூர், புதுக்கோட்டை, ஹைதராபாத், மைசூர் சமஸ்தானங்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முன்கூட்டியே தகவல் தந்தாலும் உதகமண்டலத்துக்கு வரும் சுதேசி அரசர்களின் பயணங்கள் அரசுமுறைப் பயணமாகக் கருதக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.”
“எந்தச் சமஸ்தானத்தின் திவான் கொடுத்த குடைச்சலோ? ஒரேயடியாகக் கடுமை காட்டிவிட்டார் சீப் செக்ரட்டரி. திவான்கள் மூச்சுக்கு முந்நூறு கடிதம் அனுப்பிக்கொண்டிருந்தால் அவர்களும் என்ன செய்வார்கள்?” என்று சொல்லிய ஹானிங்டன், நிறுத்திய இடத்தில் இருந்து கையெழுத்தைத் தொடர்ந்தார்.
“அய்யங்கார் கெட்டிக்காரர். எல்லாம் திட்டமிட்டுச் செய்துவிடுவார். திவானும் மகாராஜாவுடன் பயணத்தில் இருக்கிறாரா?”
“இல்லை யுவர் எக்ஸலென்ஸி. தங்களுடன் தனித்துப் பேசி, அவர் அவசரமாகச் செய்துகொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான காரியங்கள் உள்ளன.”
“என்னிடம் தனித்துப் பேசியா?”
“ஆம், தங்கசேரி குத்தகையும் அஞ்சாங்கோ குத்தகையும்...”
“தங்கசேரி என்றாலே தலைவலிதான். அய்யங்கார் சந்திக்க நேரம் கொடுத்து விடாதீர்கள். இப்போதுதான் பெரியாறு ஒப்பந்தம் முடித்திருக்கிறோம். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்.”
“இதில் புதிதாக விவாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லையே யுவர் எக்ஸலென்ஸி? ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்தம்தான். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து எழுதுவது வழக்கமான நடைமுறைதான்.”
“அதிலொன்றும் தாவா இல்லையா?”
“இல்லை யுவர் எக்ஸலென்ஸி...”
“அப்பாடா...” பெருமூச்சு விட்டப்படி எதிரில் இருந்த குட்டை மேசையின்மீது கால்களைத் தூக்கி வைத்தபடி வெளியில் பார்த்தார்.
“எதற்காகத் திடீரென்று வைஸ்ராயைப் பார்க்க கல்கத்தா கிளம்புகிறார் மகாராஜா?”
“பதவியேற்றவுடன் சுதேசி சமஸ்தானத்தின் அரசர்கள் வைஸ்ராயையும் பிரசிடென்சியின் கவர்னரையும் சந்திப்பது வழக்கம்தான். அவ்வகையில் வைஸ்ராயைச் சந்திக்க மகாராஜா செல்கிறார்.”

“எனக்கென்னமோ அது உண்மையான காரணமாகத் தோன்றவில்லை.”
“இருக்கலாம் யுவர் எக்ஸலென்ஸி. மகாராஜா முகம் வாடித்தான் இருக்கிறாராம். தர்பாருக்கு வரும் நேரங்களில்தான் அவர் முகம் இயல்பாக இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். மற்ற நேரங்களில் தீவிர சிந்தனையில் இருக்கிறாராம்.”
“கார்த்தியாயினிடம் இருந்து தப்பித்துச் செல்கிறாரோ என்னவோ? கார்த்தியாயினியை அஞ்சாங்கோ கோட்டையில் விட்டுச் செல்லலாம். இவர் மனசு நூறு கார்த்தியாயினியைப் பிரதி செய்து உடன் அழைத்துச் செல்லுமே? எப்படித் தப்பிக்க முடியும்?” தன் கண்டுபிடிப்புக்குத் தானே சிரித்து வைத்தார் ஹானிங்டன்.
அசிஸ்டென்டும் சிரித்தார்.
“திவானின் கடிதத்தையும் உடன் சேர்த்து அனுப்பி வையுங்கள். மெட்ராஸ் பிரசிடென்சியின் தெற்கு எல்லையான திருநெல்வேலி எல்லையில் இருந்து வரவேற்று, வடக்கு எல்லையான கஞ்சம் டிஸ்ட்ரிக்ட்டைக் கடக்கும்வரை பிரசிடென்சியின் ஆள்கள் மகாராஜாவுடன் இருக்க வேண்டும். திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், தென்னாற்காடு, செங்கல்பட்டு, மெட்ராஸ் கலெக்டர்களுக்குத் தகவல் அனுப்பிவிடுங்கள். பாண்டிச்சேரியின் பிரிட்டிஷ் தூதரக ஏஜென்ட், சவுத் இந்தியன் ரயில்வே, மெட்ராஸ் ரயில்வே மேலாளர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எல்லாருக்கும் சரியான நேரத்தில் கடிதம் சென்று சேர்வதை உறுதி செய்துவிடுங்கள். ஆயில்யம் திருநாள் மகாராஜா மதுரை சென்றபோது, மதுரை கலெக்டர் வரவேற்க ரயில் நிலையம் வரவில்லையென்று, நடைமேடையில் இறங்கிய மகாராஜா, அதே ரயிலில் ஏறிவிட்டாராம். மதுரை கலெக்டர் சீப் செக்ரட்டரிக்கு விளக்கம் கொடுத்து, விளக்கம் ஏற்கப்படும் முன்பே அவரை இங்கிலாந்துப் பேரரசி திரும்ப அழைத்துக்கொண்டார்கள். எனவே, சரியான ஏற்பாடு இருக்கட்டும்.”
“நம் அலுவலகத்தில் இருந்தே ஒவ்வொரு துறையின் செக்ரட்டரிக்கும் கடிதம் எழுதிவிடச் சொல்கிறேன் யுவர் எக்ஸலென்ஸி.”
“நாம் நேரடியாகக் கலெக்டர்களுக்கு எழுதிவிட முடியாது. யார் யாருக்குக் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற பட்டியலை பொலிட்டிகல் டிபார்ட்மென்ட்டின் செக்ரட்டரிக்கு அனுப்புங்கள் போதும்.”
“அதில் கவனமாகப் பெயர்களைக் குறிப்பிடுங்கள். சுதேசி அதிகாரிகளின் பெயர்களுக்கு முன்னால் ராய், ராவ், சாகிப், கான் சாயிப் என என்ன வர வேண்டுமென்று கவனமாகக் குறிப்பிடுங்கள். முகம்மதிய அதிகாரிக்கு ராவ் சாகிப் என்று எழுதியனுப்பினார்களாம். ஒரு கடிதம் எழுத எத்தனை நடைமுறைகள்? மரியாதையாகச் சொல்லும் ராவ் சாகிப் கான் சாகிப்புக்குப் பின்னால் அவர்கள் போடலாமா? பெயருக்குப் பின்னால்தான் அவர்கள் போட வேண்டுமா? இந்துக்களுக்கு மரியாதை விளிப்பு என்ன, முகம்மதியர்களுக்கு மரியாதை விளிப்பு என்ன... ப்ப்பா... தகவல் சொல்வதற்குத்தான் கடிதம். கடிதம் எப்படி எழுத வேண்டுமென்று சொல்லித் தர சீப் செக்ரட்டரி ஆபீசில் இருந்து எத்தனை கடிதம்? சீப் செக்ரட்டரி ஆபீசில் உள்ள அளவுகடந்த ஆள்களைக் குறைத்தால் போதும், நமக்கு வரும் தலைவலி பாதியாகக் குறையும்.”
என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றார் வில்லியம்.
“சரி, நீங்கள் சென்று மகாராஜாவுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதைகள் என்னென்ன என்று திவானுக்குக் கடிதம் எழுதி, விவரமாகப் பதில் கடிதம் உடனடியாக நேரில் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்கள். அரை மணி நேரம் சர்க்கார் வேலை பார்த்தால், மூளை சூடாகிறது. மண்டைச் சூட்டைத் தணிக்க இரண்டு மணி நேரம் மரங்களின் பசுமையைப் பார்த்தால்தான் இயல்புக்குத் திரும்ப முடியும். ஷாம்ப்பெயின் கொண்டு வரச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்” என்று கண்மூடி அமர்ந்தார் ஹானிங்டன்.
ஆனந்த விலாசத்தின் பின்புறம் இடுங்கின அறையொன்றில், காலிடுக்கில் கங்கு மிதித்திருக்கிற தவிப்பில் அனத்தினார் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் காரியக்காரன் சங்கரன் தம்பி. தன்னுடைய அத்தனை முயற்சிகளையும் முறியடித்துப் பெரியாற்று ஒப்பந்தம் கையெழுத்தானதோடு, தங்கசேரியைச் சமஸ்தானத்திற்கு எடுத்துக்கொள்ளும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை மகாராஜா கவனத்தில் கொள்ளவில்லை என்பதில் உக்கிரமூர்த்தியாகியிருந்தார். கடந்த பத்தாண்டுகளாகச் சங்கரன் தம்பியின் ஒரே சொப்பனம் தங்கசேரிதான். திவான் மாதவ ராவின் காலத்திற்குப் பிறகு, மிளகு, ஏலம், கிராம்புவின் ஏகபோக விற்பனை உரிமையைத் திருவிதாங்கூர் சமஸ்தானம் தன்னிடமிருந்து விட்டுக்கொடுத்திருக்கிறது. அவரவர்கள் திறமைக்கு ஏற்ப விலை நிர்ணயிப்பதும், லாபம் சம்பாதிப்பதுமாக சமஸ்தானத்து அதிகாரிகளும், சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் காசு பார்த்தார்கள்.
ராமய்யங்கார் சமஸ்தானத்தின் திவானாகப் பதவியேற்றவுடன், நிர்வாகம் சார்ந்த குளறுபடிகளைச் சரிசெய்கிறேன் பேர்வழி என்று அவருடைய நாட்டாமையை நிலைநாட்டப் பார்த்தார். கஜானாவில் அணாக் காசு இருந்தால்தானே அவர் நினைத்ததைச் செய்ய முடியும்? வெறும் தாளில் ரூபாய் என்று எழுதிக் காட்டினால் வயிறு நிறைந்துவிடுமா என்ன? சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே சமஸ்தானம் தடுமாறியது. ஆப்காரி (கள், அபின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள்) வருமானத்தில்தான் சர்க்கார் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஏலம், மிளகு விற்பனையில் சர்க்கார் ஏகபோகத்தை அதிகரித்தவுடன், திருவிதாங்கூரின் எல்லையில் உள்ள பிரிட்டிஷ் சர்க்காரின் ஊர்களில் வீடுகளைப் பிடித்து, ஏலம், மிளகு மூட்டைகளைப் பதுக்கி வைத்துக்கொண்டார்கள். நல்ல விலை கிடைக்கும்போது விற்று லாபம் சம்பாதித்தார்கள். மலபார் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கசேரி கடத்தல் பொருள்களை விற்பதற்குத் தோதான இடம். சங்கரன் தம்பி, தன் செல்வாக்கு முழுவதையும் தங்கசேரியின் வர்த்தகத்தில் செலுத்தியிருந்தார். மலபார் மாவட்டம் பிரிட்டிஷ் சர்க்காருக்குச் சொந்தமானது. மெட்ராஸ் பிரசிடென்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த எழுபது, எண்பது வருஷமாக, திருவிதாங்கூர் சமஸ்தானம், பிரிட்டிஷ் சர்க்காரிடம் இருந்து வருஷக் குத்தகைக்குத் தங்கசேரியை எடுத்துக் கொண்டிருக்கிறது. முதலில் பன்னிரண்டு வருஷத்திற்குக் குத்தகை கொடுத்தார்கள். பிறகு வருஷத்திற்கு ஒருமுறை குத்தகையைப் புதுப்பித்தார்கள். இப்போது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை குத்தகையைப் புதுப்பிக்கிறார்கள். தங்கசேரி பிரிட்டிஷ் சர்க்காரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சட்ட விதிகள், போலீசு, நீதிமன்றம் எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டில். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் போன்று கடுமையான லெவியும் கிடையாது. சமஸ்தானத்திற்குச் சொந்தமான இடமாக வர்த்தகம் செய்யத் தோதான இடம். குற்றங்கள் நிகழ்ந்தால் திருவிதாங்கூர் போலீசோ, சர்க்காரோ தலையிட முடியாது. மலபார் போலீசும் நிர்வாகமும் பெரும்பாலும் தலையிட விரும்புவதில்லை.
சங்கரன் தம்பிக்கு இத்தனை வசதியான வர்த்தகத் தளம் சமஸ்தானத்தின் கைகளுக்கு வந்துவிட்டால் தங்கச்சுரங்கமே கிடைத்துவிடும் நம்பிக்கையில் இருந்தார். தாவரங்களை ஆராய்ச்சி செய்கிறேன் என்று பைத்தியமாக அலைந்துகொண்டிருக்கும் ரெசிடென்ட் கெடுத்துவிட்டதாக மனம் பொருமினார்.
திவான் ராமய்யங்கார் சமஸ்தானத்தின் மலையோரப் பகுதிகளிலும் கடற்கரையோரங்களிலும் நடக்கும் ஏலம், மிளகு கள்ள விற்பனையைக் கண்டறிந்து தடுப்பதற்குப் பல வழிகளை முயன்றுபார்த்துவிட்டார். எல்லாமே தோல்வியடைந்ததில் சங்கரன் தம்பிக்குத் துணிவு, உச்சிக்கொண்டை போல் தழைத்திருந்தது.
கையில் உள்ளங்கை அகல கல்விளக்கொன்றை ஏந்திப் பிடித்தபடி அவரின் மெய்க்காப்பாளன் குட்டன் நாயன் உள்ளே வந்தான். சங்கரன் தம்பி, பல்லைக் கடித்தார்.
“கை விளக்கோடு எந்தக் கள்ளனாவது வருவானாடே?”
“கள்ளனா... யாராக்கும்?” சுற்றும் முற்றும் பார்த்தான் நாயன்.
“ம்ம்ம்... உம் அச்சனாக்கும்...” முதுகில் ஓங்கி உதைத்தார் சங்கரன் தம்பி.
விளக்குடன் மடாரென்று கீழே விழப்போன நாயன், அருகில் இருந்த மிளகு மூட்டைகளின்மேல் சரிந்தான்.
“கறுப்பு ஐசுவரியம்டா... ஐசுவரியம்... தீண்டிடாதே...” சரிந்தவனை மீண்டும் காலால் உருட்டித் தள்ளினார்.
“எசமானுக்கு எதுக்கு இந்தக் குரோதம்?” குரல் கம்ம கேட்டான் நாயன்.
“குரோதம்தான்டா. அந்த அய்யங்காரையும் இப்படி உதைத்து உருட்டிவிட்டால் மனச்சாந்தி கிடைக்கும். தங்கசேரியைக் கோட்டை விட்டுட்டுமேடா... வயிறு காந்துது...”
குடுமியை அவிழ்த்து முடிந்த சங்கரன் தம்பி, கொஞ்சம் ஆசுவாசம் கொண்டு, மூலையில் கிடந்த உடைந்த நாற்காலியில் ஒரு காலை மடித்து வைத்து உட்கார்ந்தார்.
“அய்யங்கார் எப்படிடே மோப்பம் பிடிக்கிறார்? தங்கசேரி கையை விட்டுப் போச்சுன்னு தெரிஞ்சவுடனே, நான் மலைக்கு அந்தப் பக்கம் நாயர் நமக்குத் தோதான நாலைந்து பேரைக் காட்டு வழியில் மூட்டைகளோடு அனுப்பி வைக்கலாம்னு நினைச்சா, நாயர் படையின் ஒரு பகுதியை போடிநாயக்கனூர், தேவாரம் பக்கத்தில் நிற்க வச்சுட்டாராமே?”
கை முட்டியின் சிராய்ப்பைத் தடவியபடி எழுந்து நின்ற நாயன், சங்கரன் தம்பி முன் கைகட்டி நின்றான்.
“தம்புரானுக்குத் தாகத்துக்குத் தண்ணீ கொண்டாரணுமா?”
“சங்கரன் தம்பியோட தாகத்துக்கு, தங்கசேரிதான் வேணும். கொண்டார ஏலுமோ இந்தக் கடை நாயனுக்கு?”
தலைகுனிந்து பதிலற்று நின்ற நாயனின் முகம் இருட்டில் வசதியாகத் தன்னை மறைத்துக் கொண்டது.
“வருஷா வருஷம் ஏலம் எடுக்கிற நேரத்துல எல்லாம் இந்தத் திவான் புதுசு புதுசா யோசிக்கிறார். போன வருஷம், ரெசிடென்ட் கிட்ட நைச்சியமாப் பேசி, மெட்ராஸ் பிரசிடென்சியோட செக்ரட்டரிக்குக் கடிதம் எழுத வச்சிட்டாரு இல்ல?”
“நெனவிருக்கு தம்புரான்...”
“ஆமாம்... ஏலம் எடுக்கிற பருவம். இந்த நேரத்தில் மெட்ராஸ் பிரசிடென்சி வழியா ஏலத்தைக் கடத்துறதுக்கு வசதியா இருக்கு. அதனால நீங்க கம்பம், கூடலூர், போடிநாயக்கனூர், தேவாரம் பகுதியில உங்க போலீசு பந்தோபஸ்து போட்டீங்கன்னா, ஒருத்தர் அந்தப் பக்கம் வர மாட்டாங்க. மலையடிவாரமா பார்த்துத்தான் ஏலத்தைக் கொண்டு போறாங்க. காட்டு வழியா போமாட்டாங்க. பத்துப் பேர் காட்டுக்குள்ள போனா, வெளிய நாலைஞ்சு பேர்தான் வர்றாங்க. காட்டுக்குள்ள இருக்க மலேரியா ஜுரத்துல செத்துப்போயிடுறாங்க. அதனால ஏலம் கடத்தலைத் தடுக்கிறதுக்காக, எங்களுக்குப் போலீசு உதவி தேவைன்னு எழுதுனாரா இல்லையா?”
“தம்புரான் சொல்லுங்க...”
“உனக்கு ஒன்னும் தெரியாதாடே மூடா. நாயன்னா உடம்பு மட்டுமா? மூளையும்தானே வளரணும்?”
“இருக்கே தம்புரான்...” என்று பொதுவாய் ஒரு பதில் சொல்லப்போய் எதிராடலாக அமைந்தது.
“மூளை இருக்காடே, உனக்கு மூளை இருக்காடே...” சங்கரன் தம்பி கோபமாக மீண்டும் நாயனை அடிக்க எழுந்தார். உடைந்த நாற்காலி அவரைத் தள்ளிவிட, நாயனின் மேல் விழுந்தார். இருவரையும் மிளகு மூட்டை தாங்கியது.
“நல்லவேளை, ரெசிடென்ட் மாதிரி மெட்ராஸ் செக்ரட்டரி திவானுக்கு மயங்கவில்லை. அவர் திவான் கடிதத்தை போலீசு ஜெனரலுக்கு அனுப்பிட்டார்...” சொல்லிக்கொண்டே மூட்டையில் கையூன்றி எழுந்து நின்றார் சங்கரன் தம்பி.
வழக்கமாக எரிச்சலும் கோபமும் கொள்ளும் சங்கரன் தம்பி, இன்று அடியிலும் இறங்கியதோடு நிதானமின்றி இருப்பதற்கு நாயனுக்கு இப்போதுதான் காரணம் தெரிந்தது. கஞ்சா இலையின் நெடியேறியது நாயனின் மூக்கில்.
“போலீசுக்கு ஒரு மூளை இருக்கே, பத்மநாபா... அம்மையோட நீ களியாட்டம் நிகழ்த்துன பிறகு அவங்களைப் படைக்கிறாயோ என்னமோ, அவ்வளவு அறிவு. மெட்ராஸ் பிரசிடென்சியோட போலீசுக்காரரு சொல்லிட்டாராம், ஒரு தேசத்தோட போலீசு இன்னொரு தேசத்தோட விவகாரத்துக்குப் போகக் கூடாது. நம்மளோட சட்டதிட்டங்கள் வேற, அவங்களோடது வேற. இதைச் சொல்லிட்டு நிறுத்தலையாம்... சமஸ்தானத்தில் கடத்தலை நிறுத்தப் போய், நம்ம போலீசுக்கு ஆபத்து வந்துடக் கூடாது. தேவாரம், போடிநாயக்கனூர் எல்லாம் ஆளுங்கள விழுங்கற காட்டு ஜுரம் இருக்கு, அத்தோடு இது தப்பான முன்னுதாரணமாயிடும்னு சொல்லி மறுத்துட்டாராம். நாம தப்பிச்சோம்...” கறை படிந்த பல்லின் ஈறுதெரியச் சிரித்தார் சங்கரன் தம்பி.

சரியாகத் தாள் போடாத கதவு வழியாகப் பணியாள் உள்ளே வந்தான். சங்கரன் தம்பியும் நாயனும் திடுக்கிட்டார்கள்.
“எப்போ வந்து நின்னேடே? பேசுறதையெல்லாம் காதுல வாங்கிட்டு இப்போத்தான் வந்தது மாதிரி வந்து நிக்கிறயா? இந்தக் கொட்டாரத்த நிர்வாகம் பண்ணுறது நானு. ஆனா எனக்கென்ன மரியாத இருக்கு? கள்ளன் மாதிரி எலி பதுங்குற முட்டுக்கு வந்தாலும் வந்துடுறீங்க.” கோபப்படுவார் என்று பயந்து நடுங்கிக்கொண்டிருந்த பணியாள், சங்கரன் தம்பியின் சலிப்பைக் கேட்டவுடன் பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
“உள்ளே பேச்சுக் குரல் கேட்கும்போது நீ எப்படிடே உள்ளே வந்தே?” நினைத்துக் கொண்டார்போல் திடீரென்று குரல் எழுப்பினார்.
“திவான் சாகிப்...”
“திவான் என்ன திவான்? ராஜாங்க காரியத்துக்குத்தான் திவான். இது என்னோட கொட்டாரமாக்கும். ஒருத்தன் என் முன்னாடி நிக்கணும்னாலும் கும்பிட்டுக்கிட்டுத்தான் நிக்கணும். நானா பாத்து என்னன்னு கேட்டாத்தான் வந்த காரியம் பறையணும். நீயா வந்துடுவியா?” சங்கரன் தம்பி அடிக்கப் பாய்ந்தார்.
“கொச்சு மோனாக்கும். விட்டுடுங்க தம்புரான்...”
“கொச்சு மோனுக்குப் பால் அன்னம் ஊட்டுறயா?” ஈயென்று இளித்துவிட்டு, “வந்த காரியம் பறையும்டே” என்று தணிந்தார்.
“மகாராஜா பிரயாணம் போறது சம்பந்தமா கடுதாசி அனுப்பணுமாம். பொழுது விடியற வரைக்கும் காத்திருக்க முடியாதாம். உங்கள கூப்பிட்டு வரச் சொன்னார் திவான். காரியக்காரனுக்குச் சொல்லி விடுவீங்களாம்.”
“கூப்பிட்டா வந்து நிக்க நான் ஒன்னும் திவானுக்குச் சேவகன் இல்ல. வர்றேன்னு பறையும். காத்திருக்கட்டும்.” திருப்தியான புன்னகையைத் தவழவிட்டு, மிளகு மூட்டை மேல் உட்கார்ந்தார்.
நாயனுக்கு வெளியில் செல்லத் தோன்றியது. திவான் வந்திருக்கும்போது தான் அங்கிருப்பதுதான் நல்லதென்று நினைத்தான்.
“போலாம்தானே தம்பிரான்...”
“போலாம்டே, என்ன அவசரம். பெரியவா வர்ற வரைக்கும் காத்திருக்கட்டுமே. இந்த அய்யங்கார் என்ன பண்ணுனார் தெரியுமா?”
“அதான் சொன்னீங்களே, ஏலம் எடுக்கிற நேரத்துல போலீசு பந்தோபஸ்து கேட்டாருன்னு?”
“அது போன பருவத்துக்குடே. இந்தப் பருவத்துக்கு ரெண்டு நாள் முன்ன, ரெசிடென்ட் மூலமா மெட்ராசுக்குக் கடுதாசி எழுதியிருக்காராம்.”
“என்னன்னு எழுதியிருக்கார் தம்புரான்?”
“போலீசத்தான் அனுப்பலை நீங்க. போன பருவத்துல கால்வாசி ஏல வர்த்தகம் கள்ளத்தனமாத்தான் நடந்தது. சர்க்காருக்கு வர வேண்டிய லெவிப் பணம் ஆறு சதவிகிதம் கொறஞ்சிடுச்சி. அஞ்சு மூடை வித்தவங்க ஒரு மூடைன்னு சொல்லி லெவி கட்டுறான். கேட்டா பூச்சி இறங்கிடுச்சி, மகசூல் குறைஞ்சிடுச்சின்னு சொல்றாங்க. பதுக்கி வச்ச மூட்டைகளை, பிரிட்டிஷ் சர்க்காரோட பகுதிக்குக் கொண்டுபோய் நல்ல விலைக்கு வித்துட்டாங்க. அதனால் எங்களோட நாயர் படையின் ஆளுகள கம்பம், கூடலூர், போடி நாயக்கனூர், தேவாரம் மலைப்பாதையில் நிக்க வைக்கப்போறேன். இந்தப் பகுதியெல்லாம் பிரிட்டிஷ் சர்க்காருக்குச் சொந்தமானது. நாயர் படை ஆளுக தங்கிக்கிறவும், போலீசு, காட்டிலாகா ஆபீசருங்க கெடுபிடியில இருந்து தப்பிக்கவும் பிரிட்டிஷ் சர்க்கார் உதவி செய்யணும். திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குப் பெருத்த வருவாய் இழப்பு வருது. சீப் செக்ரட்டரி மதுரையோட கலெக்டருக்கு உத்தரவு போடணும்னு எழுதியனுப்பிருக்காராம். மகாராஜாவுக்கு உறவின்முறை குடும்பத்துல பிறந்திருந்தாலும் இந்தச் சமஸ்தானத்துல சங்கரன் தம்பியோட அச்சன் மிளகு மூட்டைத் தூக்கிப் போட்டு சம்சாரிச்சு இருந்தார். அவரோட கொச்சு பிள்ளை சமஸ்தானத்தோட மேனேஜராயிருக்கேன்னா சும்மாவா? விட மாட்டேன். என்னோட இடத்தை நான் விட மாட்டேன். நாயர் ஆளுக நின்னால் ஏல விற்பனை நேரத்தில்தான் ஆபத்து. பெரியாறு அணை கட்டவிட்டா, நிரந்தரமா ஆபத்து. குத்தகை கையெழுத்து ஆனா என்ன? அணை கட்டுற வேலையை நிறுத்தணும். அணைதான் நிரந்தர ஆபத்து.”
“தம்புரான் என்ன யோசிச்சீங்கன்னாலும் சரியாத்தான் இருக்கும்.”
“போடே... போய் குமாஸ்தாவைக் கூட்டிக்கிட்டு வா. அய்யங்கார் குடுமியை அவிழ்த்துவிட்டு ருத்ரதாண்டவம் ஆடிடப் போறார்.”
“உத்தரவு தம்பிரான்...” நாயன் வெளியேறினான்.
“ஹைனெஸ் திருவிதாங்கூர் மகாராஜா வரும் ஜனவரி மாதம், 2ஆம் நாள் காலை திருவனந்தபுரத்தில் கிளம்புகிறார். மேன்மைதாங்கிய இந்திய வைஸ்ராய் அவர்களையும், மேன்மைதாங்கிய மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் அவர்களையும் சந்திக்கும் வகையில் ஹைனெஸ்ஸின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் மகாராஜாவின் கல்கத்தா பயணத் திட்டத்தின் 15 பிரதிகள் இணைத்துள்ளேன்.
மகாராஜா ஒவ்வொரு இடத்தில் இருந்து புறப்படும், சென்றடையும் நேரங்கள், அந்தந்த ரயில் கம்பெனிகளின் நேரத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளப்படும். அவ்வாறு மாற்றியமைக்கப்படும் பயண நேரத்தை நான் உடனடியாக ரயில் கம்பெனிகளுக்குத் தெரிவித்துவிடுவேன்.
மகாராஜா செல்ல இருக்கிற ரயில்வே வழித்தடங்களில் போதுமான ஏற்பாடுகளைச் செய்ய திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு குழு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. மகாராஜா பயணம் செல்லவுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுக்குத் தகவல் கொடுத்து எங்கள் குழுவினருக்கு உதவ வேண்டும். மகாராஜா வரும் நேரத்தில் அவர் தங்குமிடத்தில் தேவைப்படும் உதவியாளர்கள், உணவு சமைப்பதற்கான சமையலர்கள், சமையலுக்குத் தேவையான பொருள்கள், மகாராஜா தங்குமிடத்தின் தேவைகளைக் கவனிக்க தாசில்தார் அளவிலான பதவியுள்ள அதிகாரி ஒருவர் முதலானவற்றை ஏற்பாடு செய்ய அறிவுறுத்த வேண்டுகிறேன்.
மகாராஜாவின் பயணக் காலம் முழுவதும் சிறு போலீசு குழு மகாராஜாவின் பாதுகாப்பிற்காக உடன் பயணிக்க வேண்டும். ராணுவத்தின் வழக்கமான அணிவகுப்பு மரியாதையும், துப்பாக்கிக் குண்டுகளும் முழங்க ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.”
திவான் ராமய்யங்கார் சொல்லச் சொல்லக் கடிதமெழுதுவதற்கென்றே நியமிக்கப்பட்டிருந்த சமஸ்தானத்தின் குமாஸ்தா, பறவையின் நுனி இறகினால் தீற்றிச் செல்லும் லாகவத்துடன் கடித வரிகளை மேலும் கீழும் நகர்த்திக் கொண்டிருந்தான்.
கால்களை லேசாக இழுத்தபடி வந்த சங்கரன் தம்பிக்கு, தன்னுடைய உத்தரவு வரும் முன் குமாஸ்தா வரவழைக்கப்பட்டதோடு, திவான் கடிதமும் எழுத வைத்துக்கொண்டிருக்கிறாரோ என்று எரிச்சல் எழுந்தது. கோபத்தைவிட ஆபத்து எரிச்சலும் வெறுப்பும்.
“யார்டே உன்னை வரச் சொன்னது?” குமாஸ்தாவை முறைத்துப் பார்த்துக் கோபமாகக் கேட்டார்.
சங்கரன் தம்பியின் குரலைக் கேட்டு அலறியடித்து எழுந்த குமாஸ்தாவின் கால் முட்டி குட்டையான எழுதுமேசையின் நுனியில் இடித்தது. இடித்துக்கொண்டதைப் பொருட்படுத்தாமல் குமாஸ்தா இன்னும் வேகமாக எழுந்ததில் மைக்குடுவை முன்னால் சாய்ந்து, எழுதிய கடிதத்தாளில் மை வழிந்தோடியது.

திவான், சங்கரன் தம்பியைப் பார்த்தார். சங்கரன் தம்பியின் கீழ்மையான குணங்களை ராமய்யங்கார் நன்கறிந்தவர். பெரும்பாலும் அவரை நேருக்கு நேர் சந்திக்கும் சூழலைத் தவிர்த்துவிடுவார். காலையில் மகாராஜாவைச் சந்திக்க தர்பார் அரங்கத்துக்கு வருவார். அன்றன்று விவாதிக்க வேண்டிய முக்கியமான சேதிகளைக் குறித்து வைத்து, மகாராஜாவிடம் பேசி, குறிப்புகள் எடுத்துக்கொள்வார். பிறகு அவரின் அலுவலகம் தவிர, அரண்மனையில் வேறெங்கும் செல்வதில்லை. சங்கரன் தம்பி, அரண்மனையின் வரவுசெலவுக் கணக்கைக் கொடுத்துவிடும்போது பார்ப்பார். முதல் நாள் காலையில் எழுதப்பட்டிருக்கும் செலவுக் கணக்கு, அடுத்த நாள் மாலை மீண்டும் எழுதப்பட்டிருக்கும். வாங்கிய பணமும் செலவும் சமன்செய்யப்பட்டிருக்காது. ராமய்யங்கார் குறித்து வைத்து, தன்னுடைய உதவியாளரிடம் சொல்லிவிடுவார். எல்லாம் சங்கரன் தம்பியின் சுருட்டல் வேலைதான் என்று தெரிந்தாலும், சமஸ்தானத்தில் சங்கரன் தம்பி இல்லையென்றாலும் யாரோ ஒரு பெருச்சாளி இருக்கத்தான் செய்யும் என்ற யதார்த்தம் தெரிந்தவர். யாரோ இருப்பதற்கு இவராகத்தான் இருந்துவிட்டுப்போகிறார் என்று பெரிதுபடுத்துவதில்லை.
தம்புராட்டிகளிடம் சங்கரன் தம்பிக்குச் செல்வாக்கு அதிகம். பெரும்பாலான நேரம் அவர்களிடம் வெளியுலகக் கதைகளைக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியைச் செய்வதால், தம்புராட்டிகளின் தரவாடுக்கு சங்கரன் தம்பி வரவில்லையென்றால் ஆள் தேடி வந்துவிடும்.
பேரியாறு அணைத் திட்டத்தில் சங்கரன் தம்பி எதற்காகக் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறார் என்று புரிந்துகொள்ள ராமய்யங்கார் பலமுறை முயன்றும் கண்டறிய முடியவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் மகாராஜாவிடம் சங்கரன் தம்பி, “நடுக்காட்டில் அணை கட்ட முடியாது தம்புரான். அஞ்சாறு லட்சத்திற்கு இடத்தை விலைக்குக் கொடுத்திருக்கலாம். அணை கட்ட முடியலைன்னா இடத்தைத் திரும்பக் கொடுக்க மாட்டோம்னு சொல்லியிருக்கலாம். அஞ்சு லட்சம் போச்சு” என்றாராம். கல்மிஷங்கள் நிரம்பியவரிடம் எச்சரிக்கையாக இருக்க நினைத்தும் இப்போது அவராக வந்து, வம்புக்கு நிற்பதைப் புரிந்துகொண்டார்.
“மகாராஜாவின் பயணத்திட்டத்தை ரெசிடென்ட் உடனடியாக அனுப்பச் சொன்னார். நான்தான் குமாஸ்தாவை வரச் சொன்னேன்.” திவான் சங்கரனைப் பொருட்படுத்தி, பதில் சொன்னார்.
“திவான் ஆபீசா இது? மகாராஜாவின் அரண்மனை. நான்தானே இதற்குக் காரியக்காரன்?”
ராமய்யங்காருக்கு அவமானமாக இருந்தது. அரண்மனையின் காரியக்காரன் தன்னை எதிர்த்து, குமாஸ்தா முன்னால் பேசியது சுருக்கென்றது.
திவான் விறுவிறுவென்று வெளியேறினார்.
“கிளம்பும்... குத்தகை ஒப்பந்தம் கையெழுத்து வாங்க, பிரிட்டிஷ் சர்க்காரோட கையாளாகத்தான் நீர் சமஸ்தானத்துக்குள் வந்தீர் என்று தம்புரானுக்கு நான் நல்லாச் சொல்லி வச்சிருக்கேன்.”
திவானின் கோச் வண்டி கிளம்பிவிட்டதை, குதிரையின் குளம்படிச் சத்தம் சொல்லியது.
திவான் பங்களாவிற்கு வந்த ராமய்யங்கார், தன் ஹுசூர் கச்சேரிக்குள் (அலுவலகத்திற்குள்) நுழைந்தார்.
“மேன்மை தாங்கிய மகாராஜாவுக்கு, வணக்கம். தங்களுக்குச் சிறந்த சேவகனாகப் பணி செய்யும் பெருமையை, இந்த நாழிகை வரை பெற்றமைக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். பெருமைமிகு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகத் தொடர இயலாமைக்கு வருந்துகிறேன்” என்று எழுதி, ராமய்யங்கார் எனக் கையெழுத்திட்டார்.
- பாயும்