
வழிமுழுக்க இருந்த செடிகளில் மலர்ந்திருந்த பூக்களைப் பார்த்தபடி முன்னேறினார் ராமய்யங்கார்.
அடர் சிவப்பில் ஒளிர்ந்த பூக்கள் கண்களைக் கவர்ந்திழுத்தன. பூக்களுக்கு உகந்த வண்ணத்தைத் தேர்வு செய்யும் வாய்ப்பமைந்தால், நிச்சயம் திவான் ராமய்யங்கார் அடர் சிவப்பு நிறத்தைத்தான் தேர்வு செய்வார். ஆண்டாளின் நெற்றிக் குங்குமம்போல் ஒளிரும் பேறு வாய்க்கப்பெற்றவை சிவப்பு வண்ணம்தான். மஞ்சளும் வெண்மையும் ஊதாவும் பூக்களுக்கு அழகுதான் என்றாலும், சிவப்புப்போல் கண்களை நிறைக்கும் வண்ணம் வேறொன்றில்லை என்று நம்புகிறவர் ராமய்யங்கார்.

மகாராஜா மூலம் திருநாளின் அழைப்பு எந்த நாழிகையிலும் வருமென்று எதிர்பார்த்திருந்தார் ராமய்யங்கார். சங்கரன் தம்பியின் அதிகாரம் எல்லை மீறிச் சென்ற பிறகு, தான் திவானாகத் தொடர்வதில் பொருளில்லை என்று முடிவெடுத்த அடுத்த நாழிகையிலேயே தன்னுடைய பதவியில் நீடிக்க விருப்பமில்லையென்ற கடிதத்தை மகாராஜாவுக்கு அனுப்பிவிட்டு, மெட்ராஸ் கிளம்புவதற்கான ஆயத்தங்களைச் செய்தார். குறைவான உடைமைகளும் அதிகப் புத்தகங்களுமாக இருந்த தன்னுடைய பங்களாவை ஒழுங்கு செய்துகொண்டிருந்தாலும், மகாராஜாவின் அழைப்பு வாசலிலேயே காத்திருப்பதுபோல் மனம் பதற்றத்தை உண்டாக்கியது. சங்கரன் தம்பியைத் தவிர, அரண்மனை அதிகாரிகளும் சமஸ்தானத்தின் அதிகாரிகளும் திவான் ராமய்யங்காரின் சொல்லுக்கு மறுசொல் பேசுவது கிடையாது. திவானின் முடிவுக்கு மகாராஜா மனம் வருந்துவார், பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் தன் முடிவினால் பெரும் சங்கடத்துக்கு ஆளாவார் என்பது திவானுக்கு நன்றாகவே தெரியும். சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமலிருந்தே பழகிவிட்ட ராமய்யங்காரால், மகாராஜாவின் வருத்தத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
தன்னுடைய கடுதாசி சென்ற சமயத்தில்தான் மகாராஜா அஞ்சுதெங்கிலிருந்து திரும்பி வந்திருக்கிறார். திவான் அலுவலகத்திலிருந்து சென்றிருந்த கடுதாசியைச் சமயம் பார்த்து மகாராஜாவிடம் கொடுத்திருக்கிறார்கள். வாங்கிப் படித்துப் பார்த்த மகாராஜா கடுதாசியைப் படித்த இடத்திலேயே வைத்துவிட்டு, உள்ளுக்குள் சென்றுவிட்டாராம். திவானைக் கையோடு அழைத்து வரச் சொல்லுவார் என்று நினைத்து, சேதிக்காரனைக்கூட வாசலிலேயே நிறுத்தி வைத்திருந்திருக்கிறார்கள். திவானுக்கும் மகாராஜா அழைப்பார் என்ற நம்பிக்கையிருந்தாலும், சமீப காலங்களில் அவர் ஸ்திரமான மனநிலையில் இல்லாததை உணர்ந்திருந்ததில், அவரின் நடவடிக்கையைக் கணிக்க முடியவில்லை. இரண்டு நாளாக அழைப்பு வராத நிலையில், நாளை தானாகச் சென்று உத்தரவு பெற்றுப் புறப்பட வேண்டியதுதான் என்று ராமய்யங்கார் நினைத்திருந்த வேளையில், இன்று அதிகாலையிலேயே அழைப்பு வந்துவிட்டது. மகாராஜாவின் அரண்மனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் ராமய்யங்கார்.

திருவிதாங்கூரின் ஒவ்வொரு வீடும் தனித்துவமானது. மெட்ராஸ் பிரசிடென்சியைப்போல் ஒழுங்கு செய்யப்பட்ட வீதிகளையும், வரிசை கட்டிய வீடுகளையும் திருவனந்தபுரத்தில் பார்க்க முடியாது. உயர்ந்தெழுந்த மதில்களுக்கு உள்ளே மரங்களாலான நேர்த்தியான இரண்டடுக்கு மாளிகை இருக்கும். மாளிகைக்கு அடுத்து பனையோலை, தென்னையோலையால் வேயப்பட்ட சின்னஞ்சிறிய குடில் வரும். மாளிகையோ குடிலோ ஒவ்வொரு வீடும், வாழையும் கமுகும் சுற்றி நிற்க, காப்பிச் செடிகள் மரங்களை அணைத்துப் பிடித்துச் செழித்திருக்கும் தோட்டத்திற்குள்தான் இருக்கும். ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் தொடர்பென்பது தேவை இருப்பின் மட்டும் நிகழ்வது. மெட்ராஸில் புறவாசலில், தெருவாசலில் என்று ஒரு நாளைக்கு ஐந்தாறு முறையாவது அக்கம்பக்கத்தார் ஒருவருக்கொருவர் பார்த்துப் பேசுவதும், இணக்கமற்ற காலங்களில் புறம் பேசுவதும் வழக்கம். திருவனந்தபுரத்தைவிடப் பரந்து விரிந்த நகரமென்றாலும், புறங்கழுத்தில் அடுத்த வீட்டுக்காரரின் மூச்சுக்காற்று படுமளவிற்குப் பக்கத்து வீடு வேண்டும் மெட்ராஸ் பிரசிடென்சிக்காரர்களுக்கு.
வழிமுழுக்க இருந்த செடிகளில் மலர்ந்திருந்த பூக்களைப் பார்த்தபடி முன்னேறினார் ராமய்யங்கார். மஞ்சள் வண்ணப் பூக்கள் கவனத்தை ஈர்க்குமென்றாலும் அடர் சிவப்பிலான பூக்கள் ஆன்மிக நிறைவு தருவதை ஒவ்வொரு முறையும் உணர்வார். பயணத்தின் ரசிப்பில் மரம், செடி, கொடியென நிலக்காட்சிகள் விரிந்தாலும், சின்னஞ்சிறிய வண்ணப்பூக்கள் தான் முதலிடத்தில் இருந்து கவனத்தை ஈர்க்கின்றன. செம்மண்ணும் பழுப்பு நிறமும் பரவி நிற்கும் திருவிதாங்கூரை பிரிட்டிஷார் அவர்கள் தேசத்தின் டெவான்ஷயர் என்கிறார்கள். ஹாம்ப்ஷயர், வில்ட்ஷயர் என்று ஊர்ப் பெயர்களோடு ஷயரைச் சேர்த்துக் கொள்வதுதான் பிரிட்டிஷார் வழக்கம். நம் ஊரில் தாலுக்கா, மாவட்டம் என்று சொல்வதுபோல்தான் ஷயரும்.

சின்னஞ்சிறிய குடிலின் வாயிலில் மூன்று பிள்ளைகள் மண்டியிட்ட நிலையில் ஆசிரியர் சொல்லுவதை உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். கண்களை இறுக மூடியிருந்தாலும் வீதியில் கேட்கும் குளம்படிச் சத்தத்தையும் நடைபயணிகளின் காலடிச் சத்தத்தையும் காதுகளையே கண்களாக்கிக் கேட்டுக்கொண்டிருப்பார்கள் என்றெண்ணினார். ராமய்யங்காருக்குப் பிள்ளைகளின் இளவயதுக் குறும்புகள் நினைவில் விகசிப்பைத் தந்தன.
வீட்டுத் தோட்டத்தில் தென்னைநார்களைப் பிரித்துக்கொண்டிருந்த இளைஞர்களைக் கடந்து சென்றவர், குதிரையின் நடை தொய்வதை உணர்ந்து முன்னால் பார்த்தார். கோட்டைக்கு முந்தைய வீதி. வீதியின் முன்னாலிருந்த நீண்டு உயர்ந்த சுவர். திவானின் கோச் வண்டி என்பதையுணர்ந்த வீரர்கள் கதவைத் திறந்தார்கள். ராமய்யங்கார் விரும்பாத நடைமுறைகளில் ஒன்று, திருவனந்தபுரத்தின் வீதிகளில் மலைபோல் எழுப்பப்பட்டிருக்கும் சுவர்கள். நம்பூதிரிகளும் நாயர்களும் வசிக்கும் இடங்களுக்குள் கீழ்சாதி ஆள்கள் நடமாடிடக் கூடாதென்று உயர்சாதியினர் நிறுத்தியிருக்கும் சுவர். கல்வியிலும் கலையிலும் ஆர்வம் கொண்டிருந்தாலும் சாதிய அனுஷ்டானங்களை ஒடுக்குதலுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் தேர்ந்தவர்கள் திருவிதாங்கூர்க்காரர்கள். மலையாள நம்பூதிரிகளுக்குக் கீழ்தான் பிறதேச பிராமணர்கள். ராமய்யங்கார் போல் மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்து திருவிதாங்கூரில் வாழ நேர்ந்துவிட்ட பிராமணர்கள் ஒரு மாற்றுக் குறைவுதான் நம்பூதிரிகளுக்கு. வீதியில் சுவரெழுப்பி வைத்திருக்கும் நடைமுறை அவருக்கே முகச்சுழிப்பை உண்டாக்கும். மறைந்த மகாராஜா விசாகம் திருநாளிடம் பலமுறை எடுத்துச் சொல்லியிருந்தார்.
விசாகம் திருநாளும், இப்போதுள்ள மகாராஜா மூலம் திருநாளும் கல்வியில் நாட்டம் கொண்டவர்கள், மக்களின் வளர்ச்சியில் விருப்பம் காட்டியவர்கள் என்றாலும், சாதிய நடைமுறைகளின் இறுக்கத்தைக் குலைத்திட முன்வரத் தயங்குபவர்கள். பத்மநாபரின் தீவிர பக்தர்களான அவர்களுக்கு மத அனுஷ்டானங்கள்தான் பிரதானம். நம்பூதிரிகள், நாயர்களின் மத ஆசாரங்களுக்குள் நுழைய மாட்டார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள சுதேசி சமஸ்தானத்தின் மகாராஜாக்களில் பட்டப்படிப்பு படித்திருக்கிற ஒரே மகாராஜா மூலம் திருநாள்தான். படிப்பையும் சீர்திருத்தத்தையும் தனியாகத்தான் வைத்திருப்பார்கள் மகாராஜாக்கள். மெட்ராஸ் பிரசிடென்சிக்கும் திருவிதாங்கூருக்கும் இடையில் ஆற்றுக் கால்வாய் அளவு வேறுபாடுகள் இருந்தாலும், திருவிதாங்கூரின் அழகு ராமய்யங்காருக்குப் பிடித்த ஒன்று. திருவிதாங்கூரிலிருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டதையெண்ணி, மனம் கனத்த வேளையில், மகாராஜாவின் ஆனந்த விலாசத்தின் முன் நின்றது திவானின் கோச் வண்டி.
லேசான இளைப்பு தெரிந்தது மகாராஜாவின் தேகத்தில். மனத்தின் சோர்வை மறைக்க நிறைய விளையாடுகிறாரோ என்னவோ? கிரிக்கெட், டென்னிஸ் விளையாடுவதென்றால் மகாராஜாவுக்கு நிறைந்த விருப்பம்.
“அய்யங்கார், கல்கத்தாவுக்கான பயணத் திட்டங்களை ரெசிடென்ட்டுக்கு அனுப்பிவிட்டீர்களா?”
“யுவர் ஹைனெஸ், நானே நேரடியாகச் சென்று ஹிஸ் எக்ஸலென்ஸி ஹானிங்டனிடம் விவாதித்து, பயணத்திட்டத்தை ஒழுங்கு செய்துவிட்டேன்.”
மகாராஜா மூலம் திருநாளின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. ராமய்யங்கார் மகாராஜாவின் முகத்தைப் பார்த்தபடி இருந்தார். அய்யங்காருக்காக வைக்கப்பட்டிருந்த குவளையில் இருந்து வெளியேறிய காப்பியின் மணம் இதமாக இருந்தது. பலநேரம் காப்பி குடிப்பதைவிட அதன் மணமே போதுமென்று இருக்கும்.
“இந்தப் பயணம் போக முடியுமென்று எனக்கு நம்பிக்கை இல்லை.”
திவான் அதிர்ந்தார். எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. பிரிட்டிஷ் சர்க்காரும் அந்தந்த கலெக்டர்களுக்குத் தகவல் அனுப்பிவிட்டது. முக்கியமாக வைஸ்ராய்க்கும் கடிதம் சென்றுவிட்டதே?
“பயணத்தை ரத்து செய்து உடனடியாகத் தபால் அனுப்பி வையுங்கள்.”
“யுவர் ஹைனெஸ்...”
“ஆமாம் அய்யங்கார். வைஸ்ராயைச் சந்திப்பதுடன், பிரிட்டிஷ் பேரரசியின் பொன்விழாக் கொண்டாட்டத்திலும் பங்கேற்கும் எண்ணத்துடன்தான் பயணத்தைத் திட்டமிட்டேன். இங்கிலாந்தின் பேரரசியாக அரியணையில் அமர்ந்து ஐம்பதாண்டுகள் முடிந்ததோடு, ‘இந்தியாவின் பேரரசி’ என்ற பட்டம் சூடிப் பத்தாண்டுகள் முடிந்திருக்கிறது. இரண்டுக்குமாகச் சேர்த்து டெல்லியில் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கப்படவிருப்பதாக போபால் இளவரசர் தாக்கீது அனுப்பியிருக்கிறார். புனே, போபால் வழியாகக் கல்கத்தாவும் டெல்லியும் சென்று வரும் எண்ணத்தில்தான் பயணத்திற்குத் திட்டமிட்டேன். இப்போது கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.”
“சொந்த வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் எப்போதும் இருப்பதுதானே உலகியல் வழக்கு மகாராஜா, தாங்கள் அறியாதது ஒன்றுமில்லையே?”
“சொந்த வாழ்வு குறித்த கவலையில் இருந்து நான் முற்றிலும் வெளியில் வந்துவிட்டேன் அய்யங்கார். அந்தக் கவலையில் இருந்தால் உடனடியாகப் பயணம் கிளம்பியிருப்பேன். இப்போது என் கவலையெல்லாம் சமஸ்தானத்தைப் பற்றித்தான்.”
“சமஸ்தானத்தைப் பற்றி...”
“ஆம். உங்களுக்கும் மறந்திருக்காது அய்யங்கார். என் பிரேமைக்குரிய மாமா, விசாகம் திருநாள் உங்களைச் சமஸ்தானத்திற்கு அழைத்து வந்த காரணமே, நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதோடு, நிறைய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். நீங்கள் சமஸ்தானத்திற்கு வரும்போது சமஸ்தானத்தின் ஊழியர்களுக்கு இரண்டு, மூன்று மாத ஊதிய நிலுவை இருந்தது. நான் ஆட்சியில் அமர்ந்த ஓராண்டில், சமஸ்தானம், செலவு போக மீதமாகக் கருவூலத்தில் ஐந்து லட்சம் ரூபாய் கையிருப்பு வைத்திருக்கிறது. சாதாரண காரியமல்ல. எளிதாகவும் நடந்துவிடவில்லை. உங்களின் அபாரமான உழைப்பு இதற்குள் இருக்கிறது. அதே நிலம், அதே குடிகள், அதே பாசனம். ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை மாறி, கையிருப்பாக ஐந்து லட்சம் இருக்கிறதென்றால் உங்களின் நிர்வாகம்தான் முழுமுதற் காரணம். நீங்கள் கொண்டு வந்த நிலச் சீர்திருத்தங்கள் முக்கியமானவை. சர்க்காரிடம் இருந்த ஏகபோகங்களை ஒழித்ததன் மூலம், வணிகப்பொருள்களின் கடத்தலைக் குறைத்திருக்கிறீர்கள். மாமாவின் திடீர் மறைவிலும் என்னுடைய தனிப்பட்ட துக்கங்களாலும் நான் சில மாதங்களாக நிர்வாகத்தில் கவனமின்றி இருந்துவிட்டேன். நிலங்களையளந்து எல்லைகளைக் குறிக்கத் தொடங்கிய பணி எந்நிலையில் இருக்கிறது?”
மகாராஜாவின் மனநிலையைப் புரிந்துகொள்ள முயன்றார் திவான்.
“தென் திருவிதாங்கூர்ப் பகுதி நிலுவையில் இருக்கிறது மகாராஜா.”
“தென் திருவிதாங்கூர்தான் சமஸ்தானத்திலேயே வறட்சியான பகுதி. தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் முதலிய பகுதிகளும் செங்கோட்டையும் ஆறுகளால் பயனடையும் பகுதிகளல்ல. மழை வந்தால் மட்டுமே அங்குள்ள நிலங்களுக்கு விளைச்சல். ராணி பார்வதி பாய் வறட்சியான பகுதியென்று புரிந்துகொண்டதால்தான் புத்தனாற்றுக் கால்வாயை வெட்டுவித்தார். அந்தக் கால்வாயும் தூர்வாரிப் பராமரிப்பின்றிச் சென்றதை மாமா விசாகம் சரிசெய்யத் தொடங்கியிருந்தார். உன்னத காரியங்களெல்லாம் உன்னத மனிதர்களின் மறைவோடு மறந்தும்போகிறது...” குரலில் நெகிழ்வு கூடியிருந்தது மகாராஜாவுக்கு. சிறிது இடைவெளி விட்டு, “புத்தனாற்றுக் கால்வாயைச் சரி செய்வோம். இன்னும் அளக்கப்படாத நிலங்களையளந்து, பாசன வசதிகளைக் கூட்டினால் மட்டுமே தென்பகுதி நம் சமஸ்தானத்தின் மற்ற தாலுக்காக்களைப் போல் வளமாகும். உடனடியாகப் பணிகளைத் தொடங்கலாம் அய்யங்கார். நானும் உங்களுடன் தோவாளை, செங்கோட்டைப் பகுதிகளுக்கு வருகிறேன்.”
“உத்தரவு மகாராஜா. சமஸ்தானத்தின் தென்பகுதியில் வற்றாத ஜீவ நதிகள் இல்லை. மழையை நம்பிய பூமி என்பதால் வறட்சி தவிர்க்க முடியவில்லை.”
“பேரியாற்றின் போக்கை பிரிட்டிஷ் சர்க்கார் திசை திருப்புவதுபோல் நாமும் ஏதாவதொரு நதியின் போக்கை திசை திருப்ப இயலுமா என்று பாருங்கள்.”
“பேரியாற்றின் திசை திருப்பும் யோசனை ஏறக்குறைய நூறாண்டுகள் கழித்து இப்போதுதான் காரியசித்தியாகியிருக்கிறது. இயற்கை என்ன செய்யக் காத்திருக்கிறதோ?”
“திட்டம் கைவிடப்பட்டாலோ, அணை கட்ட முடியாமல் போனாலோ உடனடியாக நிலத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டுமென்று ஒரு நிபந்தனை சேர்க்கச் சொல்லியிருந்தோமே? ஒப்பந்தத்தில் படித்த நினைவில்லையே?”
“அந்த ஷரத்தைச் சேர்க்கவில்லை மகாராஜா. ரெசிடென்ட் ஏற்க மறுத்துவிட்டார். அணை கட்ட முடியாமல் போகாது; கட்டியே தீருவோம் என்று மறுத்துவிட்டார்.”
“நம் பக்கத்திலும் பேச்சுவார்த்தையை இழுத்துவிட்டோம். பிரிட்டிஷ் சர்க்கார் பேரியாறு அணை கட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி எத்தனை வருஷம் இருக்கும்?”
“இந்த வருஷத்தோடு ஏறக்குறைய தொண்ணூறு வருஷமாகியிருக்கும் மகாராஜா. ராமநாதபுரம் ராணியுடனும் சிவகங்கை ஜமீனுடன் முதல் இருபது இருபத்தைந்தாண்டுகள் பேசியிருக்கிறார்கள். பேரியாற்றை வைகையுடன் இணைத்து, ராமநாதபுரத்திற்கும் சிவகங்கைக்கும் கொண்டு செல்லும் விருப்பத்தில் தொடக்க நிலைப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இரண்டு சமஸ்தானங்களின் அரசியல் சூழலும் தாங்கள் அறிந்தவைதானே மகாராஜா? பிரிட்டிஷ் சர்க்கார் உள்ளூர் சமஸ்தானங்களைத் துவம்சம் செய்துவிட்டதோடு, வரிவசூலையும் கெடுபிடி செய்தது. வருஷ கிஸ்தியைக் கட்ட முடியாமல், அவகாசம் கேட்டுக் கடுதாசி எழுதியே ஓய்ந்து போனார்கள் சமஸ்தானத்தின் குமாஸ்தாக்கள். ஒரு வருடம் மழை பெய்து பயிர் பச்சைகளைப் பார்த்தால் அடுத்து வரும் இரண்டு வருஷங்களுக்குப் பயிர் பச்சையைப் பார்க்கவே முடியாது. அவ்விரு சமஸ்தானங்களின் வீழ்ச்சியில் இயற்கையின் சதியும் இருக்கிறது...” திவான் பேச்சை நிறுத்தினார்.
“அணை கட்டி, பேரியாற்றை ராம்நாட்டிற்குக் கொண்டு செல்கிறார்கள்தானே?”
“இல்லை மகாராஜா. வைகை ஆயக்கட்டுக்காரர்களுக்குப் பேரியாற்றுத் தண்ணீர் இல்லை. பேரியாற்றுத் தண்ணீர் முழுக்க மேலூரில் இருக்கிற ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்மாய்களுக்குத்தான் போகிறது. வைகைக்குத் தண்ணீர் கொடுத்தால் ஏற்கெனவே இருக்கிற நிலவரியினைப் பேரளவில் கூட்டவும் முடியாது. பேரியாற்றுக்கென்று தனி ஆயக்கட்டு உருவானால்தானே பிரிட்டிஷ் சர்க்காருக்கு லாபம்?”
“அவர்கள் லாபம் பார்க்கலாம். நமக்கு மட்டும் லாபத்தில் பங்கு கொடுக்கமாட்டோம் என்கிறார்கள்.”
“ஒருவகையில் பார்த்தால் நமக்கு வரும் பேரியாற்றுக்கான தண்ணீரை அவர்கள் பகுதியில் இருக்கும் சிற்றோடைகள்தானே தருகின்றன மகாராஜா? அவர்களின் எல்லையில் இருக்கும் மேல்மலையிலிருந்து வரும் தண்ணீருக்கு நாம் பணமா கொடுக்கிறோம்? கம்பம், கூடலூரையொட்டிய பகுதிகளைத் திருவிதாங்கூருடன் சேர்ப்பதற்காக, மெட்ராஸ் பிரசிடென்சியை அளந்தபோது நமக்கு நடந்த நன்மை தெரியும்தானே மகாராஜா?”
“நன்மை எங்கே கிடைத்தது? நம் எல்லைகளாக இருந்த கம்பமும் கூடலூரும் பிரிட்டிஷார் கைக்குப் போனது.”
“ஆனால் மேல்மலையில் இருந்து நம் சமஸ்தானத்திற்கு வரும் வற்றாத நதிகளுக்கு நீரைக் கொண்டு வந்து சேர்க்கும் சிற்றாறுகளெல்லாம் நமக்குச் சொந்தமானதே? 1822ஆம் வருஷத்தில் நடந்த சர்வேயில், பிரிட்டிஷ் சர்க்காரும் திருவிதாங்கூரும் எல்லைகளை வரையறுத்தன. அதில் பிரிட்டிஷ் சர்க்காருக்குச் சொந்தமாக இருந்த மேல்மலையின் சிற்றாறுகளெல்லாம் நம் எல்லைக்குள் வந்தன. இப்போது அணை கட்டத் திட்டமிடுகிறார்களே பேரியாறு... அந்தப் பேரியாற்றுக்கு நீரைக் கொண்டு வந்து சேர்க்கும் ராஜாகுளம் நதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா மகாராஜா? ராஜாகுளம் நதியெல்லாம் அவர்களின் சமஸ்தானத்தில்தான் இருக்கிறது.”
“அப்படியொரு நதி இருக்கிறதா மேல்மலையில்?”
“ராஜாகுளம் நதி இப்போது இல்லை மகாராஜா. ஆனால் ராஜாகுளம்தான் பேரியாற்றுக்கு நீர் கொண்டு வரும் முக்கியமான சிற்றாறு. கடந்த இருபதாண்டுகளில் காணாமல் போய்விட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகள் சுதாரிப்பின்றி வற்றாத ஜீவ நதிகள் பாயும் பகுதிகளைத் திருவிதாங்கூருக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். கம்பம், கூடலூர் நமக்குக் கிடைக்கவில்லையென்றாலும் நதிகள் கிடைத்திருக்கிறதே மகாராஜா?”
“அதெப்படி, மேல்மலையில் அவர்களின் எல்லை அறியாமலா நமக்கு விட்டுக் கொடுத்திருப்பார்கள்?”
“அடர்ந்த காட்டுப் பகுதிகளில் எது யாருக்குச் சொந்தம் என்று எப்படிக் கண்டறிய முடியும் யுவர் ஹைனெஸ்? மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களுக்கும் திருவிதாங்கூருக்கும் எல்லைகளை ஆய்ந்து அளந்து குறித்தபோதுதானே இரு தேசத்தவரும் மேல்மலைக்குச் சென்றார்கள்? 1830களுக்குப் பிறகுதான் பேரியாற்றில் அணை கட்டுவது தொடர்பாக பிரிட்டிஷ் சர்க்கார் திருவிதாங்கூருக்கு அனுமதி கேட்டுக் கடிதம் எழுதத் தொடங்கியிருக்கிறது...”
“இதெல்லாம் புதிய சேதியாக இருக்கிறதே..!” மகாராஜா வியந்தார்.
“எனக்கும் புதிய சேதிதான் மகாராஜா. பேரியாற்றுக் குத்தகை ஒப்பந்தம் எழுதுவதற்குமுன், பேரியாறு சம்பந்தமாக என்னென்ன கடிதப் போக்குவரத்து நடந்திருக்கும் என்று அறிந்துகொள்வதற்காக, திவானின் ஹுசூர் கச்சேரியில் (அலுவலகத்தில்) இருந்த பழைய ஆவணங்களைத் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன். அதில்தான் நான் சொன்ன விவரங்களெல்லாம் இருந்தன.”
“ஆச்சரியம்தான். ஐந்தாறு மகாராஜாக்களைக் கடந்து, இத்தனை நீண்ட வருஷங்களுக்குப் பிறகு திட்டம் நடைமுறைக்கு வருவதில் மகிழ்ச்சிதான். அதுவும் என் காலத்தில் வருவதில் கூடுதல் மகிழ்ச்சி.”
“நிச்சயம் மகாராஜா... ஒரு திட்டம் இத்தனை வருஷம் உயிரோடு இருப்பதும், அதற்கான காரணம் மாற்றமுடியாமல் இருந்ததும் வரலாற்றில் அரிய நிகழ்வுதான். பேரியாறு அணைத் திட்டத்தின் சிறப்பும் பலவீனமும் இதுதான்.”
“பார்ப்போம்... நான் கையெழுத்திட்ட ஒப்பந்தம் அவர்களுக்குச் சென்றுவிட்டதுதானே?”
“சென்றுவிட்டது மகாராஜா...” திவானின் குரல் வேறொன்றைக் கேட்பதற்கான தயக்கத்துடன் ஒலித்தது.
“என்ன விஷயம் அய்யங்கார்?”
“தங்களின் பயணத்தை ஒத்தி வைக்கக் காரணம்?”
“உங்களிடம் சொல்வதில் என்ன தயக்கம்? லண்டனில் நடைபெற இருக்கும் பொன்விழாவில் கலந்துகொள்ள, இந்தூர், ஐதராபாத் உள்ளிட்ட ஏழெட்டுச் சமஸ்தானங்களின் மகாராஜாக்களுக்குப் பேரரசியின் தனிப்பட்ட அழைப்பு வந்திருக்கிறதாம். தென்னிந்தியாவிலேயே நாம்தான் பிரிட்டிஷாருக்கு அணுக்கமானவர்கள். ‘மாட்சிமை மிகுந்த கம்பெனியின் நம்பிக்கைக்குரிய சகா’ என்று நமக்கு நயமாகக் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? நமக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. அழைப்பு வராத நிலையில், டெல்லியில் நடக்கும் கொண்டாட்டங்களுக்கு மட்டும் நாம் ஏன் செல்ல வேண்டுமென்று யோசித்தேன். வைஸ்ராயின் சந்திப்பையும் தள்ளிப் போடுவதன் பின்னணி இதுதான்.”
“தங்களுக்கு இந்தத் தகவல் எப்படி வந்தது மகாராஜா? கடிதம் ஒன்றும் வரவில்லையே?”
“ஐதராபாத் நிசாமைச் சந்தித்துவிட்டு வந்திருந்த வேங்கடகிரி ராஜா ஆள் மூலம் சேதியனுப்பியிருந்தார்...”
“அப்படியும் நானறியாமல்?”
“ஏன் அதிகம் யோசிக்கிறீர்கள் அய்யங்கார்? சேதி வந்தது. பயணத்தை ரத்து செய்து உடனடியாகக் கடிதம் எழுதுங்கள்.”
“ஒத்தி வைத்தா... ரத்து செய்தா?”
“ரத்து செய்துதான்... பாதியில் நிற்கிற நம் சமஸ்தானத்தின் காரியங்களை மீண்டும் தொடங்குவோம். புகழ்மிகு பேரரசியின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென்றாலும், பேரரசியின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் நினைவாகத் திருவனந்தபுரத்தில் பேரரசி விக்டோரியாவின் பெயரில் பெரிய அரங்கொன்றும், கொல்லத்தில் விக்டோரியா மகாராணியின் பெயரில் பெண்களுக்காகத் தனி ஆஸ்பத்திரி ஒன்றும் கட்டவிருப்பதாக உடனடியாக இந்தியச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்.”
திவானுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. ‘தான் பதவி விலகல் கடிதம் கொடுத்ததால் தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே மகாராஜா எல்லா முடிவுகளையும் எடுத்திருக்கிறாரோ?’ என்று யோசித்தார். ‘நல்லதுதானே?’ என்ற எண்ணமும் எழுந்தது.
அப்போது உள்ளே வந்த வாயிற்காப்பாளன், கார்த்தியாயினி சந்திக்க வந்திருப்பதாகச் சேதி சொல்லிவிட்டு வெளியேறினான்.
திவான் தான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்து எழுந்துகொள்ளத் தயாரானார்.
“நீங்களும் இருக்கலாம் அய்யங்கார்.”
“நானெதற்கு மகாராஜா? தம்புராட்டியுடன் பேசிய பிறகு நான் ஆசுவாசமாக வருகிறேன்.”
“தனியாகப் பேசிக்கொள்ள ஒன்றுமில்லை. நீங்களும் இருந்து செய்ய வேண்டிய நற்காரியம்தான். கார்த்தியாயினி, தன்னுடைய கல்யாணத்திற்கான அழைப்பைச் சொல்லவும் ஏற்பாடுகளைச் செய்து தரக் கோருவதற்காகவும் வருகிறாள்.”
“ஓ கல்யாணமா? மகாராஜா என்னிடம் எந்தச் சேதியையும் சொல்வதில்லையென்று முடிவெடுத்துவிட்டீர்களா?”
“அய்யங்கார்... கார்த்தியாயினியின் கல்யாணம் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? நம் சமஸ்தானத்தில் ஊழியம் செய்யும் சங்கரன் தம்பியைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாள்... வரச் சொல்கிறேன். நீங்களே முழு விவரம் அறிந்துகொள்ளலாம்.”
‘என்னாச்சு மகாராஜாவுக்கு? சங்கரன் தம்பியையா?’ கேள்வி மேல் கேள்வி எழுந்து திவானுக்குத் தலை சுற்றியது.
கார்த்தியாயினி உள்ளே நுழைகையிலேயே மகாராஜாவுக்கு வணக்கம் சொன்னாள். ராமய்யங்காரைப் பார்த்தும் தலைகுனிந்து இரு கை குவித்து வணக்கம் தெரிவித்தாள். மகாராஜா கார்த்தியாயினியை உட்காரச் சொன்னார். தயக்கத்துடன் ஆசனத்தின் நுனியில் அமர்ந்தாள்.
“திவானும் இந்த நேரத்தில் இங்கிருப்பது நல்லதாகப் போய்விட்டது. உனக்கு என்ன ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நீ சொல்லலாம். தம்புராட்டி பாகீரதி காலையிலேயே எனக்குத் தகவல் அனுப்பியிருந்தார்.”
திருவிதாங்கூரின் பெண்களுக்கே உரித்தான வெண்சந்தன நிறப் பட்டுப்புடவையில் துலக்கி வைத்ததுபோல் இருந்தாள் கார்த்தியாயினி. வழக்கமான கொண்டை இன்றி, நீள் கூந்தல் தழையப் பின்னியிருந்தது. ஆடம்பரமான நகைகளின்றி, உடல் பனித்துளியின் தூய்மையும் மினுப்புமாகத் துலங்கியது. பேசுவதற்குச் சொற்களைக் கோத்துக்கொண்டிருந்த மனத்தின் போராட்டத்தில், கை விரல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி, விலகி, பின்னி என அலைக்கழிந்தன. மகாராஜா தன்னை உறுதியாகக் காட்டிக்கொள்வதற்காகவே தோள் நிமிர்த்தி உட்கார்ந்திருப்பதாக ராமய்யங்காருக்குத் தோன்றியது.
“அய்யங்கார், பூக்களைக் கோக்கும் மென்விரல்களைக் கொண்ட கார்த்திக்கு, கடுமையான சொற்களைக் கோக்கும் சிரமத்தை நாம் கொடுக்க வேண்டாம். நானே உங்களுக்கு விளக்கிச் சொல்கிறேன். கார்த்திக்கும் நம் அரண்மனையின் ஊழியக்காரனுக்கும் கல்யாணம் முடிவாகியிருக்கிறது. உங்களுக்கு வியப்பாக இருக்கும். நீங்கள் அறிந்திருக்கும் சேதியில் எந்தக் குழப்பமும் இல்லை. நான்தான் இனியும் கார்த்தியைக் காத்திருக்க வைக்க விரும்பவில்லை. அவளின் குடும்பத்தார் உடனடியாகக் கல்யாணம் செய்தே ஆக வேண்டும் என்கிறார்கள். நாள்கூடக் குறித்து விட்டார்கள். நீங்கள் அரண்மனையின் சார்பாகச் செய்ய வேண்டிய சீர்களை இருவருக்கும் அனுப்பி வையுங்கள். விமரிசையாக மூன்று நாள்களுக்குக் கல்யாணம் நடக்கட்டும். என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள் உன்னுடன் இருக்கும் கார்த்தி. நீ கிளம்பலாம்.”
சங்கரன் தம்பியுடன் கல்யாணம் என்ற சேதி எழுப்பிய பீதி குறைந்தது திவானுக்கு. சமஸ்தானத்தின் காரியக்காரன் அல்ல, அரண்மனையின் தினசரி காரியங்களை நிர்வாகம் செய்யும் ஊழியக்காரனாக இருக்கிற மற்றொரு சங்கரன் தம்பி என்றவுடன் நிம்மதி எழுந்தாலும், மகாராஜா எப்படி இந்த முடிவுக்கு உடன்பட்டார் என்று குழம்பினார்.
மகாராஜா, திவானுடன் இருக்கும் வேளையில் தன்னைச் சந்திக்க நேரம் கொடுத்திருந்ததில் கார்த்திக்குப் புரிந்தது, அவர் தன்னைத் தனிமையில் சந்திக்க விரும்பவில்லையென்று. சந்தித்துப் பேசியும் இனி ஆகப்போவது ஒன்றில்லை.
“நீங்கள் என்மேல் கொண்டிருந்த அன்பும் கருணையும் என் நினைவில் என்றும் பசுமையாக இருக்கும் மகாராஜா. உங்கள் நிழலில் நாங்கள் இருவரும் வாழ எங்களுக்குத் துணையிருங்கள்...” கார்த்தியாயினி மகாராஜாவின் பாதம் பணிந்து எழுந்து திரும்பிப் பார்க்காமல் வெளியேறினாள்.
மகாராஜாவின் பாதத்தினைப் பார்த்தார் திவான். கார்த்தியாயினியின் கண்களில் வழிந்த கண்ணீர்த்துளி, பாதரசத் திவலைபோல் கனம் சேர்ந்து உருண்டோடாமல் இருந்தது.
- பாயும்
