
இங்கிலீஷ் ராஜாங்கத்தார் குடிகளிட சவுக்கியத்தைத்தானே விசேஷமாய்ப் பார்த்து வருவதே அவர்களுடைய முக்கியமான கருத்தாயிருக்கிறது.

ராயல் இன்ஜினீயர் பென்னி குக் மேசையின் மேலிருந்த தாள்களைக் காற்று படபடவென்று புரட்டி வாசித்துக்கொண்டிருந்தது. காற்று வாசிப்பதை அறியாத பென்னி, தாள்கள் பறந்துவிடப்போகும் பதற்றத்தில் அவற்றை ஒழுங்குசெய்து அதன்மேல் சிறு தாட்கட்டையை வைத்தார். பிடித்தெடுக்க வசதியாகக் குமிழ் வைக்கப்பட்டு, நாட்டுத் தேக்கு மரத்தில் நேர்த்தியாய்ச் செய்யப்பட்டிருந்த சின்னஞ்சிறு மரக்கட்டை. தாள்களின் மையமாக வைத்துவிட்டால் காற்று எப்படி முயன்றாலும் தோற்றுத்தான் போகும். ஏமாற்றமும் கோபமும் கொண்ட காற்று, எனக்கென்ன என்பதுபோல், திறந்திருந்த சாளரத்தின் வழி வெளியேறியது.
மதுரா டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் டர்னர் செய்யும் காரியங்கள் இயல்பில் தவறாகப் போகிறதா, அல்லது, தவறாகப் போகவேண்டுமென்று அவர் திட்டமிட்டுச் செய்கிறாரா என்பது பென்னிக்குச் சந்தேகமாக இருந்தது.
கூடலூர் முதல் பேரணை வரை இருக்கிற பதினைந்து தடுப்பணைகளையும் ஒரே சமயத்தில் மூடுவதற்கு யாராவது உத்தரவிடுவார்களா? முதல் போகம் பயிர்கள் கதிர்விட்டு, இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும் இந்த நேரத்தில் பெரியாறு அணை நீர் கொண்டு செல்வதற்கான மராமத்துப் பணிகளுக்காக எல்லா மதகுகளையுமா மூடச் சொல்லி நோட்டீசு அனுப்புவார்? ஏற்கெனவே ஜமீன்தார்கள் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சுருளியாற்றுப் பாசன ஆயக்கட்டில் ஏகப்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் இருக்கின்றன. லஸ்கர்களுக்குக் கொஞ்சம் காசு கொடுத்து, கையில் காசுள்ளவர்கள் தங்களின் மடைகளுக்கு நிறைய நேரம் தண்ணீர் திறந்துவிட்டுக்கொள்கிறார்கள், மேட்டுக் கால்வாயாக இருக்கும் நிலங்களுக்குத் தண்ணீர் வருவதே இல்லை என்று ரயத்துகள் நூற்றுக்கணக்கான மனக்குறைகளுடன் இருக்கிறார்கள். கலெக்டரின் இந்த அறிவிப்பு ரயத்துகளின் நூற்றுக்கணக்கான குறைகளை விழுங்கிவிட்டு, பிரதான குறையாகிப் பெருத்து நிற்கிறது. சிறு எலியை விழுங்கி வயிறு வீங்கிப் புரளும் பாம்புபோல் மதுரை பொதுப்பணித் துறை இன்ஜினீயரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். பொதுப்பணித்துறையின் இணைச் செயலாளரும், பெரியாறு அணைத் திட்டத்தின் சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயருமான தன்னிடம் ரயத்துகளின் கடிதம் வந்திருக்கிறது.
காற்று வாசித்துவிட்டுப் பாதியில் நிறுத்திச் சென்ற கடிதத்தை எடுத்து மீண்டும் படித்தார் பென்னி குக்.
‘மதுரை டிஸ்ட்ரிக்ட் பெரியகுளம் தாலுகாவைச் சேர்ந்த வைரவனாறு, சுருளியாறு ஆயக்கட்டின் பாசனக்குடிகளாகிய எங்களுக்கு ரிவினியூ டிபார்ட்மென்டில் கலெக்டர் துரையவர்களால் ஒவ்வொரு நோட்டீசு அச்சுப்பாரத்தில் கிடைத்திருக்கிறது. அதனால் எங்களுக்கு அநேக தீங்கு உண்டாகிறதென்கிற உறுதியினால் அதை ஆக்ஷேபித்து அடியில் விவரிக்கிறோம். தயவுசெய்து விசாரித்து, எங்களிட மனவருத்தத்தை நிவர்த்தி செய்து கொடுத்த பின்பு ௸ (மேற்படி) நோட்டீசில் கண்ட வேலைகளை நடத்த வேணுமாய் தாழ்ந்த வணக்கத்துடனே கேட்டுக்கொள்கிறோம். ௸ விளம்பரம் இத்துடன் அனுப்பியிருக்கிறோம்.
பெரியாற்றுத் தண்ணீர் சுருளியாற்று வாய்க்கால்கள் வழியாகச் செல்ல இருப்பதாகவும், அதற்காகச் சுருளியாற்றின் குறுக்கே உள்ள மதகுகளில் ரிப்பேர் செய்யவிருப்பதாகவும் சர்க்கார் உத்தரவிட்டுள்ளதால், எங்களுடைய அனுமதியில்லாமலே எங்கள் மதகுகள் யாவற்றையும் மூடிவிட கலெக்டர் துரையவர்களுக்குப் பூரண அதிகாரம் இருப்பதாகவும் அவ்வாறே செய்து முடிப்பதாகவும் நோட்டீசில் எழுதியிருப்பதனாலே அந்த அச்சுக் காகிதங்களை மாத்திரம் எங்களுக்கு ஏன் அனுப்பப்பட்டிருக்கிறதோ, அதைப்பற்றி நாங்கள் என்ன செய்ய வேணுமோ அறியக்கூடவில்லை.
1. ௸ நோட்டீசில் கண்டபடி எங்கள் பூமிகளுக்குத் தண்ணீர் பாய நாங்கள் எப்பவும் சர்க்காரில் அனுமதி பெற்று டெம்பரரி மதகு வைத்திருப்பதில்லை. எங்கள் பூமிகளுக்குப் பாயப்பட்ட மதகுகளோ எந்தக் காலத்தில் அணையும் வாய்க்காலும் உண்டாயினவோ அதுமுதல் ஏற்பட்டு எங்கள் பூமியைச் சொந்த ஈஸ்மெண்டு (அனுபவ பாத்தியத்துடன்) எங்கள் பூமிகளைச் சேர்ந்ததாகவேயிருக்கிறது. இந்த சுதந்திரத்தை அணையும் வாய்க்காலும் ஏற்பட்டதுமுதல் நாளதுவரை இடைவிடாமல் நாங்கள் அனுபவித்துவருகிறோம்.
2. ௸ மதகுகளில் சர்வ சுதந்திரம் எங்களுக்கே பாத்தியப்பட்டதென்று காட்டுவதற்குத் திருஷ்டாந்திரமாய் சில விஷயங்களைக் குறித்துக் காட்டுகிறோம்.
அ. மண் மதகாயிருந்த எங்கள் மதகுகளை பலமான காரைக் கட்டடமாய்க் கட்டிக்கொள்ள வேணுமாயும் இல்லாவிட்டால் எங்களைத் தண்டிப்பதாயும் நோட்டீசுகள் முன்னிருந்த ரிவினியூ அதிகாரிகள் பல தடவைகளில் கொடுத்திருக்கிறார்கள்.
ஆ. அவ்வாறே மதகொன்றுக்கு 50-முதல் 1000-ரூபாய் வரை செலவிட்டு காரைக்கட்டு கருங்கல் இப்படிப்பட்ட பலமான கட்டடங்களைக் கட்டியிருக்கிறோம்.
இ. ௸ மதகுகளில் தண்ணீர்பாய்ச்சும் வேலையும் நாளதுவரை எங்கள் சொந்தமாயிருக்கிறது. அது எப்படியென்றால் ஆதியில் நாங்கள் சுதாவில் (நேரடியாய்) தண்ணீர் பாய்ச்சி வந்தோம். அப்பால் நாங்கள் நேராக கூலிகொடுத்து ஆள் வைத்துப் பார்த்து வந்தோம். அதில் சிலர் கூலி கொடுக்காமல் புகாரா (முறையீடு) நேரிட்டது. அப்போது ரிவினியூ அதிகாரிகள் அந்தக் கூலி தங்களிடம் கொடுக்கும்படியும் அதை ஆள்களுக்குப் பங்கு கொடுத்துத் தண்ணீர் எல்லோருக்கும் சராகமாய்ப் பாயும்படி செய்வதாகச் சொன்னதன் பேரில் செக்குறுணி என்றும் ஒருவித வரி நாங்கள் சர்க்காரில் செலுத்தி வருகிறோம். அந்த வரியைக்கொண்டு சானல் சூப்பிரெண்டெண்டெண்டு, மேல்மணியம், நீராணி முதலான அநேக சிப்பந்திகளை வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எங்களுடைய சொந்த காரியஸ்தர்களாகவே இருக்கிறார்கள்.
ஈ. இதுதவிர மதகில் ஏதாவது அலசல் உண்டாகி அதனால் வாய்க்கால்கரையில் எவ்வளவு பெரிய உடைப்பு உண்டானாலும் யாருடைய மதகில் அப்படி சம்பவித்ததோ அவனைக் கட்ட வேணுமாய் நிர்ப்பந்தப்படுத்தி, கட்டி வைக்கப்பட்டும் சிலசமயம் சர்க்காரில் சிலவிட்டுக் கட்டி வைக்கப்பட்டு அந்தப் பணம் அந்த மதகின் சொந்தக்காரனால் வசூல்செய்யப்பட்டும் வந்திருக்கிறது. சர்க்கார் செலவு செய்து கட்டியிருக்கும் 15 மதகுகளையும் அந்தந்த மதகு பாசனக் குடிகளைத்தானே சேர்ந்ததென்று அவர்களே ரிப்பேர் செய்து வைத்துக்கொள்ளலாமென்றும் ஆதிநாளில் உத்தரவுகொடுக்கப்பட்டு இருக்கிறது.
உ. ௸ வாய்க்கால் கரையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மதகும் இன்னின்ன பூமிகளுக்குப் பாயப்பட்டதென்றும் அந்த மதகுகளுக்கு இன்னார் சொந்தக்காரர்களென்றும் சர்க்காரில் வெகுகாலமாய் கணக்குகள் வைக்கப்பட்டு தாலுகாவிலும் கிராமத்திலும் ரிக்கார்டுகளிருக்கிறது.
ஊ. ௸ வாய்க்கால் கரையில் அடிக்கடி முரிவுபோட்டு முதலானதுகள் சம்பவித்தால் அதுகள் கட்டுவதற்கு கிராமம் ஒன்றுக்குச் சில ஆள்கள்வீதம் விடவேணுமென்றும் அவ்வாள்களைக் கொண்டு கட்டுகிறதென்றும் ஏற்பாடாயிருந்து அந்தப்படி நடந்துவந்தது.அப்படி நேரிட்ட சமயத்தில் ஆள்கள் சேர்ப்பது அசாத்தியமென்றும் அதற்காகக் குடிகள் செய்யாள் வரியென்று ஒருவித வரிகொடுக்கும் பக்ஷத்தில் அதைக் கொண்டு ௸ வேலைகள் செய்விப்பதாகவும் சர்க்காரிலும் குடிகளிலும் ஒரு ஏற்பாடு செய்துகொண்டு செய்யாள்வரி கொடுத்துக்கொண்டுவருகிறோம். அந்த வரியைக்கொண்டு ௸ வேலைகள் நடந்து வருகிறது. இதுகளால் வாய்க்கால் கரையிலும் சில பாத்தியம் குடிகளுக்குண்டென்று ஏற்படுகின்றது.
மேல்கண்ட நடவடிக்கையால் வாய்க்கால் கரையிலுள்ள சகல மதகுகளும் குடிகளைத் தானே சேர்ந்ததென்றும் எங்களுடைய பாத்தியதையும் அனுபோகத்தையும் காண்பிக்க வைக்கக் கூடியதாக இருக்கிறது.
இங்கிலீஷ் ராஜாங்கத்தார் குடிகளிட சவுக்கியத்தைத்தானே விசேஷமாய்ப் பார்த்து வருவதே அவர்களுடைய முக்கியமான கருத்தாயிருக்கிறது. இதற்குத் திருஷ்டாந்தமாய் புஞ்சை பூமி வைத்திருக்கும் குடியானவர்களுக்கு அவர்கள் பூமிக்குத் தாராளமாய் தண்ணீர்பாயும் பொருட்டுக் கிணறு வெட்டவும் குட்டைகளைக் கட்டவும் சர்க்காரில் கடன்கொடுப்பதும் அந்தக் கடனுக்குச் சொல்ப வட்டி போட்டுப் பல கெடுக்களில் நீடித்த வாய்தா கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெற்றுக்கொண்டும் உதவிசெய்து வருகிறார்கள்.
நஞ்சை நிலம் உடைத்தானவர்களாகிய எங்கள் விஷயத்தில் நடத்த உத்தேசித்திருக்கும் காரியமோ அதற்கு நேர்விரோதமாயிருக்கிறது. மேல்கண்டபடி சர்க்காருக்கு புஞ்சையைவிட 15 முதல் 20 மடங்குவரை ஜாஸ்தியான வரிகள் கொடுத்தும் வெகுபணங்கள் எங்கள் சொந்தத்திலிருந்து செலவழித்தும் உண்டாக்கிக் கொண்டிருக்கும் மதகு வாய்க்கால் இவைகளை நிஷ்காரணமாய்ப் பிடுங்கிக்கொள்வதாயும் பூமிகளுக்குத் தண்ணீர் பாயவொட்டாமல் ரிப்பேருக்கென்று சொல்லி மதகுகளை மூடிப்போடுவதாயும் நோட்டீசு அனுப்பியிருப்பது குடிகளுக்குப் பாதகம் செய்வதாகும். கதிரெல்லாம் பால்கட்டியிருக்கும் நேரத்தில் சர்க்காரின் முடிவு குடிகளுக்கு அநீதியாகும்.

இந்தப்படி இராஜாங்கத்தார் பலவாதம் செய்யத்தொடங்கினால் இராஜாங்கத்தாருக்குப் பிள்ளைகளைப்போலிருக்கும் குடிகள் என்ன செய்யக்கூடும்? ஆகையால் சமூகத்தில் மேல்கண்ட விஷயங்களையும் ஆலோசித்து மதகுகளை மூடிவிடுவதாக எழுதியிருக்கும் நோட்டீஸ்படி அமல் நடத்தாமல் நிறுத்திவைத்து விசாரணை செய்து நீதி செலுத்த பிரார்த்திக்கிறோம். ஏற்கெனவே வைரவனாறு, சுருளியாறு நீரைப் பயன்படுத்தும் சம்சாரிகளான எங்களுடைய வெள்ளாமையை நாசம் செய்துதான் பெரியாற்றுத் தண்ணீர் வருமென்றால் எங்களுக்குப் பெரியாற்றுத் தண்ணீர் வேண்டாமென்று துரைமார் சமூகத்துக்குப் பணிந்து தெரிவிக்கிறோம்.’
மேல்விசாரணைக்காகவும், பெரியாறு அணையில் இருந்து வரும் நீரைக் கால்வாய்கள் வழியாக மேலூர் கொண்டு செல்வதற்கு, குடிகளுக்குத் தொந்தரவு தராத வழிமுறையையும் பரிந்துரைக்கச் சொல்லி, சீப் இன்ஜினீயர் இந்தக் கடிதத்தைப் பென்னிக்கு அனுப்பியுள்ளார்.
மதுரா கலெக்டரின் நோட்டீசில் டிஸ்ட்ரிக்ட்டின் நிலைமை பற்றிய புரிதல் இல்லையென்பதுடன், வெள்ளாமைப் பருவங்கள் பற்றிய புரிதலும் இல்லையென்பதை நோட்டீசு சொல்கிறது.
மதுரா கலெக்டர் ஆபீசினைத் தூய்மைபடுத்துவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை அனுமதி வழங்கி, நிதியும் ஒதுக்கியிருந்தது. கலெக்டர் ஆபீசில் இருந்த மேசை, நாற்காலி, அலமாரி முதலான அத்தனை பொருள்களையும் இடம் மாற்றி வைத்து, தற்காலிகமாக தமுக்கம் கட்டடத்தில் கலெக்டர் ஆபீசுக்கான இடம் ஒதுக்கினார்கள். மராமத்து வேலை முடிந்தவுடன் மீண்டும் பொருள்களை அந்தந்த இடத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்கள். கலெக்டர் ஆபீசை காலி செய்ததுபோல் மதகுகளை அடைத்துவிட்டு மராமத்து வேலை செய்துவிடலாம் என்று நினைத்துவிட்டாரோ கலெக்டர்? ஆற்றுத் தண்ணீர் இவருடைய உத்தரவுக்குக் கட்டுப்பட்டு மதகுக்கு வெளியில் கலெக்டரின் மறு உத்தரவு வரும்வரை காத்திருக்கும் என்று எதிர்பார்க்கிறாரா? கலெக்டர்களுக்கும் பொதுப்பணித்துறைக்கும் பொருந்தியே வருவதில்லை. பொதுப்பணித் துறையின் வேலையைக் கலெக்டர்கள் புரிந்துகொள்வதும் இல்லை. மேல்காட்டில் அணை கட்டுவதைவிட, அணையில் இருந்து நீரை வயல்களுக்குக் கொண்டு சேர்ப்பது பெரிய தாவாவாக இருக்கும் போலிருக்கிறது.
எக்ஸிகியூட்டிவ் இன்ஜினீயர் டெய்லரையும் அசிஸ்டென்ட் இன்ஜினீயர் லோகனையும் வரச் சொல்லியிருந்தார். அவர்களுடன் கலந்து, பிறகு முடிவு அனுப்பலாம் என்ற எண்ணம்.
கலெக்டர் அனுப்பிய நோட்டீசிற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் இருந்து பென்னிக்குத் தெளிவாகத் தெரிந்த ஓர் உண்மை, நிலமும் நீரும் ரயத்துகளின் பராமரிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருக்கும்வரை மட்டுமே சரியாக நிர்வகிக்கப்படும். கஞ்சம் முதல் திருநெல்வேலி வரையுள்ள 22 மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் பென்னி பயணித்திருக்கிறார். வடாற்காடு, சேலம், பெல்லாரி முதலிய மாவட்டங்களில் பணிசெய்திருக்கிறார். நேரடியாக அப்பகுதியின் நீர்ப் பராமரிப்பைப் பார்த்து பென்னி வியந்ததுண்டு. இந்த மண்ணின் முந்தைய அரசர்கள் மேற்கொண்டுள்ள பாசன முறைகள் பென்னிக்கு வியப்பைத் தருபவை.
பெரியாறு அணை கட்டுமானத்திற்கான சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயராக மதுரா டிஸ்ட்ரிக்டின் நீர்ப்பாசனங்களை ஆய்வு செய்ததில், குடிகளிடமிருந்து நிலத்தையும் நீரையும் பாதுகாக்கும் பொறுப்பை ஒருபோதும் சர்க்கார் தன் கையில் எடுக்கக் கூடாது என்று பென்னிக்கு நன்றாகப் புரிந்தது.
பெரியாற்றில் இருந்து சுரங்கம் வழியாக விநாடிக்கு 1,600 கன அடி நீரைக் கொண்டு வரும்போது, அந்த நீர் பாய்ந்தோடுவதற்கு வசதியாக முந்தைய தடுப்பணைகளும் கால்வாய்களும் இருக்கின்றனவா என்று சமீபத்தில் மீண்டும் ஆய்வு செய்தார்.
1870-களில் ஆய்வுக்கு வந்தபோது மேல்மலையில் அணை அமையவிருக்கிற இடத்தைப் பென்னி ஆய்வு செய்தார். மலையிலிருந்து சமவெளிக்கு வரும் தண்ணீரைப் பேரணைக்குக் கொண்டு செல்வது குறித்து இன்ஜினீயர் ஸ்மித் ஆய்வு செய்தார். அப்போது மதுரா டிஸ்ட்ரிக்டின் நுட்பங்களை அறிந்து கொள்ளாத பென்னி, கடந்த மூன்றாண்டுகளில் அறிந்துகொண்டார்.
கம்பம் பள்ளத்தாக்கு இரண்டு மலைத் தொடருக்கு நடுவில் அமைந்திருக்கும் பகுதி. ஆறு ஊருக்கும் மலைக்கும் நடுவில் பாய்ந்தோடுகின்றது. நதிக்கு இடப்பக்கம் முழுவதும் மேடான நிலம். நதி நீரை வாய்க்கால்கள் வழியாகக் கொண்டு செல்வதும் கடினம். மலையையொட்டிய பெரும்பகுதி நிலங்கள் தரிசாகக் கிடப்பதற்கு முதன்மையான காரணம் நிலம் மேடாக இருப்பதுதான். உழைப்புக்கு அயராத விவசாயிகள் ஆற்று நீரில் சின்னச் சின்னக் கால்வாய்கள் வெட்டி ஒருபோகம் விளைவித்து விடுவார்கள். மைலுக்கு ஒரு தடுப்பணை, ஒரு கால்வாய், ஐந்தாறு சின்ன வாய்க்கால்கள் என்று நீரின் போக்கினைப் பின்தொடர்ந்திருக்கிறார்கள்.
ஆயிரமாண்டு, ஐந்நூறாண்டு பழைமையான தடுப்பணைகள் பிரமிப்பூட்டின. தொழில்நுட்பத்தினை அறிந்திராத மக்கள் கற்களைப் போட்டும் மண்ணாலான தடுப்புகளை எழுப்பியும் அணை கட்டி வைத்திருந்தார்கள். ஒவ்வொரு தடுப்பணையின் முன்னாலும் உருண்டோடிக் கிடக்கும் பாறைக்கற்களே, நீரைத் தடுத்து நிறுத்த மக்கள் உபயோகித்த தடுப்பாக இருந்திருக்கும். நீரின் போக்கையும் அதன் பலத்தையும் தீர்மானித்து, ஓடும் நீரைத் தேக்கித் தங்களுக்கு உபயோகப்படுத்தும் கலையை
அறிந்திருந்திருக்கிறார்கள்.
மெட்ராஸிலிருந்து கடிதம் வந்திருப்பதாக உள்ளே வந்த உதவியாளன், கடித உறையை, அலங்காரமான பிடி வைத்திருந்த சின்னஞ்சிறிய கத்தியினால் பிரித்தெடுத்து, சிந்தனையிலிருந்த பென்னியின் முன்னால் இருந்த மேசையில் வைத்துவிட்டு வெளியேறினான்.
கடிதத்தைப் பிரிக்கும் முன்பாகவே பென்னிக்குப் புரிந்துவிட்டது, கவர்னரின் ஒப்புதலோடு சீப் இன்ஜினீயர் எழுதியிருக்கும் கடிதமென்று. செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முத்திரையுடன், பொதுப்பணித்துறையின் முத்திரையும் கடிதத்தின் பின்பக்கம் இருந்தது.
கடிதத்தைப் பிரிக்கும் மனநிலையில் இல்லை பென்னி. ஏற்கெனவே கல்போல் எதிரில் உட்கார்ந்திருக்கும் கடிதத்திற்கு என்ன பதில் என்று தெரியவில்லை. இன்னொரு கடிதத்தைப் பிரித்துப் பார்த்து, அதை மூளையில் ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை.
டெய்லரும் லோகனும் உள்ளே வந்தார்கள்.
“ஜார்ஜ் கோட்டையிலிருந்து கடித வடிவில் வெடிமருந்துகளைத் தயாரிக்கிறார்களோ என்னமோ? அங்கிருந்து கடிதம் வந்தாலே எல்லோரும் ஸ்தம்பித்துப்போகிறார்கள்” டெய்லர்.
“அதுவும் பெரியாறு அணை சம்பந்தமானது என்றால், மூச்சுப்பேச்சில்லாமல் உட்கார்ந்துவிடுகிறார்கள்” லோகன்.
“நீங்கள் இருவரும் பதில் அனுப்பும் இடத்தில் இல்லாததால் என் நிலையைப் பார்த்துப் பரிகாசம் செய்கிறீர்கள். டெய்லர், உனக்கும் நேரம் நெருங்கிவிட்டது. நீயும் கடிதங்கள் முன்னால் முகம் செத்து உட்கார்ந்திருக்கப் போகிறாய். பெரியாறு டிவிஷனை இரண்டாகப் பிரித்து, மதுரா டிஸ்ட்ரிக்டின் பெரியாறு கால்வாய்த் திட்டத்துக்கு உன்னைத்தான் சூப்பிரெண்டெண்டிங் இன்ஜினீயராக நியமிக்கச் சொல்லியிருக்கிறேன்…”
“ஐயோ, புலிகளோடும் யானைகளோடும் போராடியாவது நான் அணை கட்டுகிறேன். இங்குள்ள கலெக்டரோடும் ஜமீன்தார்களோடும் என்னால் போராட முடியாது மிஸ்டர் பென்னி.”
“தப்பிக்க முடியாது மிஸ்டர் டெய்லர்… ஜமீன்தார்களின் சாரட் வரும் சத்தம் கேட்டாலே உனக்கு மூச்சுத் திணற வேண்டும்.”
“எப்படியொரு ஆசை… ஓ ஜீசஸ்…” மார்புக்குக் குறுக்காகச் சிலுவையிட்டார் டெய்லர்.
``சரி, இரண்டு கடிதம் இருக்கிறது. இரண்டில் அதிக வெடிமருந்து எதில் இருக்கிறது?” லோகன்.
“நம் சீப் இன்ஜினீயரிடமிருந்து வந்திருக்கிற கடிதமிது. இப்போதைக்கு அதைக் கையில் எடுக்க வேண்டாம். பத்து வருஷங்களாக என்னிடம் கேள்வி கேட்டு, நான் விளக்கம் சொல்லி, விளக்கத்தின்மேல் விளக்கம் கேட்டு… ஜீசஸ், இப்போது அணை கட்டும்முன் மீண்டும் விளக்கம் சொல்ல வேண்டும் என்று என் பத்தாண்டுக் கால ஆய்வைத் திரும்பச் செய்யச் சொல்லும் கடிதம். தொடவே வேண்டாம். இதைப் படித்துப் பாருங்கள்” என்று பென்னி, ரயத்துகளின் கடிதத்தைக் கொடுத்தார்.
கையில் வாங்கிய லோகன், உடனே திருப்பிக் கொடுத்தார்.
“தமிழில் எழுதப்பட்டுள்ள கடிதத்தை நான் என்றைக்குப் படித்து முடிப்பது. நீங்கள் வேகமாகப் படிக்கக் கூடியவர். என்ன உள்ளதென்று சொல்லுங்கள்.”
``வைரவனாறு, சுருளியாறு மதகுகளை மூடச் சொல்லி, வருவாய்த் துறைக்கு மதுரா கலெக்டர் உத்தரவு போட்டிருக்கிறார். அதை, ரயத்துகளுக்கும் தெரியப்படுத்தி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.”
“மதகுகளை மூடச் சொல்லியா, எதற்கு?”
“அது தெரியாமல்தான் குழம்பியிருக்கிறேன். குச்சனூர் அணையில் உடைப்பிருக்கிறது. அந்த அணைக்குச் சொந்தமான போடிநாயக்கனூர் ஜமீன்தாருக்கு நான் தகவல் அனுப்பி விட்டேன். அவர் சரிசெய்துவிடுவதாகச் சொல்லிவிட்டார். கம்பம், பாளையம் புரவு வாய்க்கால்களை அகலப்படுத்த வேண்டும். வைரவனாறு என்ற சிற்றாறு ஓடும் கால்வாய் அவை. பெரியாற்றுத் தண்ணீரை விட்டால் ஒரே நாளில் உடைந்துவிடும். இப்படி ஒவ்வொரு அணையிலும் என்னென்ன சிக்கலோ அந்தச் சிக்கலைச் சரிபார்த்து, சர்க்காரிடம் சொல்லி மராமத்துக்கான பணத்தை வாங்கிக்கொண்டிருக்கிறேன். விரைவில் வாய்க்கால்களையும் மதகுகளையும் சரிசெய்துவிடலாம். அதற்குள் பொத்தாம்பொதுவாக இப்படியொரு உத்தரவைப் போட்டிருக்கிறார் கலெக்டர்.”
“என்ன விஷயம் என்று தெளிவாகச் சொல்லுங்கள் பென்னி…”
“சொல்கிறேன் மிஸ்டர் டெய்லர். பெரியாறு அணையின் நீர் வரும் வாய்க்கால்கள், தடுப்பணைகளில் பல பழுதடைந்தும் உடைந்துமிருக்கின்றன. உடைந்திருக்கிற மதகுகளைப் பழுது பார்க்க வேண்டும். வாய்க்கால்களின் கரைகளைச் சீரமைக்க வேண்டும். இதற்காகப் பேரணை வரை இருக்கிற 15 மதகுகளையும் மூடச் சொல்லி மதுரா கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார். வெள்ளம் குறைவான காலத்தில் அவருடைய உத்தரவு சரியாகக்கூட இருந்திருக்கலாம். வெள்ளம் பெருக்கெடுத்தோடும் பருவத்தில் அவருடைய உத்தரவு எப்படிச் சரியாக இருக்க முடியும்? கட்டுப்படுத்த முடியாத வெள்ளமே எல்லாத் தடுப்பணைகளையும் உடைத்தெறிந்துவிட்டுச் செல்லாதா? கலெக்டருக்கு யார்தான் இந்த அரிய யோசனையைச் சொன்னார்களோ? கலெக்டர், கவர்னரைச் சுற்றி எப்போதுமே அரிய ஜீவன்கள் இருக்குமோ, யாருக்குமே தோன்றாத புதுப்புதுச் சிந்தனைகளைச் சொல்வதற்கு?”
சொல்லும்போதே பென்னிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“நம் சர்க்கார் என்ன சொல்கிறது இப்போது?” சிரித்து ஓய்ந்த டெய்லர் கேட்டார்.
“பெரியாறு அணைக் கட்டுமானம் தொடர்பாக எந்தப் பிரச்சினையும் சர்க்காரின் காதுக்குச் சென்றுவிடக் கூடாது என்று நான் படாதபாடு படுகிறேன். அப்படியும் சென்று விடுகிறது. ஏதாவது காரணம் சொல்லி, திட்டத்தை நிறுத்திவிடுவார்களோ என்று பயந்துகொண்டிருக்கிறேன்…”
“இனி நிறுத்த மாட்டார்கள் பென்னி. விரைவில் நிதி ஒதுக்கீடும் வரப்போகிறது என்று கேள்விப்பட்டேன்…”
“அப்படியா, எனக்குத் தெரியாமல் உனக்குத் தெரிந்திருக்கிறதே?”
“நீ பெரியாற்றின் தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கிறாய். நான் சுற்றி நடப்பதையும் கவனிக்கிறேன்.”
“அப்படியென்றால் நீதான் விரைவில் சூப்பிரெண்டெண்டிங் இன்ஜினீயர் மிஸ்டர் டெய்லர்.”
“எனக்கெதற்கு அந்தத் தலைவலி? இப்போ இதற்கென்ன தீர்வு?”
“யோசித்திருக்கிறேன். சரியாக இருக்குமா என்று சொல்லுங்கள்.”
“சரியாக இருக்குமா என்று சீப் செக்ரட்டரிதான் சொல்லுவார். நாம் எழுதியனுப்புவோம். சொல்லு.”
“நீ சொல்வதுதான் உண்மை டெய்லர். சரி, என் யோசனையைச் சொல்கிறேன். சர்க்கார் மதகுகளையும் வாய்க்கால்களையும் சரிசெய்யும் பொறுப்பைக் குடிகளிடமே கொடுக்கலாம். நான் ஏற்கெனவே சர்க்காருக்கு இதுகுறித்து ஒரு பரிந்துரையை எழுதியிருக்கிறேன். இந்த பெட்டிஷன் படித்தவுடன் என் கருத்து சரியென்று தீர்மானமாகியிருக்கிறது. நீரையும் நிலத்தையும் குடிகள்தான் அவர்களின் வசதிக்கேற்ப பராமரிக்க முடியும். ஒரு ஏக்கருக்கு நாலணா வீதம் சர்க்கார் உதவித்தொகையாகக் குடிகளிடமே பணத்தைக் கொடுத்து, அவகாசத்தையும் சொல்லிவிட்டால் அந்தந்த ஊரில் இருக்கிற மதகுகளையும் வாய்க்காலையும் ரிப்பேர் செய்துவிடுவார்கள்.”

“எல்லா ஊருக்கும் பொதுவான தொகையாக எப்படி நாலணா இருக்க முடியும் பென்னி?”
“இருக்க முடியாது லோகன். தேவையான முடிவை அந்தந்த கிராமத்து மணியமும் லஸ்கரும் எடுக்கலாம் என்று சர்க்கார் சொல்லலாம்.”
“லஸ்கர் ஓரணாவை வாங்கிக்கொண்டு காசு கொடுக்கிறவனின் மடைக்கு அதிக நேரம் தண்ணீர் திறந்துவிடுகிறான் என ஒரு நாளைக்குப் பத்துப் பெட்டிஷன் வருது. லஸ்கரை எப்படி நம்புவது?”
பென்னி யோசித்தார். சிறிது இடைவெளிக்குப் பிறகு,
“லஸ்கர்கள் இதில் ஏமாற்ற முடியாது. ஊருக்கே பணம் கொடுக்கும்போது ரயத்துகள் எல்லோருமே கூடியிருந்து எதிராளியின் பலவீனத்தைச் சொல்லிவிடுவார்கள். அதற்கேற்ப சூழலைச் சமாளிக்கலாம். கொஞ்சம் கடுமையான உத்தரவு போட்டுத்தான் இப்பணியைக் கொடுக்க முடியும். ஆனால், நான் புரிந்துகொண்ட வரை, ரயத்துகளிடம் பணம் கொடுத்து, அவரவர் வாய்க்காலைப் பராமரிக்கச் சொன்னால் அவசியம் செய்வார்கள். சர்க்கார் கூலிக்கு அவர்களை அழைத்துச் செய்வதைவிட என் யோசனை பலனளிக்கும்.”
“உன் யோசனைகள் எவ்வளவு புதுமையோ, அதைவிட இந்த ஊர் மக்கள் விநோதமானவர்கள். நீ எழுதியனுப்பு, பார்ப்போம். அடுத்து இர்ரிகேஷன் ஜெனரலின் கடிதம் இருக்கே?”
“அதை நான் தனியாகப் படித்துத்தான் சமாளிக்க வேண்டும். மீண்டும் ஆய்வுக்குச் செல்லச் சொல்வார்கள். ஆய்வுக்கு அவசியம் இல்லை. முழுக்க முழுக்கத் தொழில்நுட்ப சந்தேகங்கள்தான். நானே பதில் எழுதுகிறேன்.”
“சீக்கிரம் மேல்மலையில் வேலை தொடங்கிவிட்டால் நல்லது. எல்லாப் பிரச்சினையையும் சுண்ணாம்புடன் சேர்த்துக் குழைத்துக் கட்டிவிடலாம்” டெய்லர் சொன்னதில் வேலையின் தத்துவமும் அடங்கியிருந்தது.
“உங்க பெயர்?”
“ராவுத்தருங்க தொர. ஆங்கூர் பாளையத்துல இருக்கிறன்.”
“ரத்தினம் பிள்ளை சொன்னார், நீங்க மேல்மலைக்குப் பொருள்களை சப்ளை செய்வீங்கன்னு. என்ன தொழில் செய்றீங்க?”
“நேரத்துக்குத் தக்கன தொழில் செய்வேனுங்க தொர. நாங்க என்ன சர்க்காரு உத்தியோகமா செய்றோம்? மழை பேஞ்சா நல்ல வெளைச்சல் இருக்கும். தானிய தவசத்தை மொத்தமா கொள்முதல் பண்ணி, சில்லறைக்கு விப்போம். மழை பெய்யாம பூமி காஞ்சுபோனா, சம்சாரிகளோட கன்னு காலிகள வித்துக் காசு கொடுத்து ஏஜென்ட் லாபத்தை மட்டும் எடுத்துக்கிடுவோம். எல்லாத் தொழிலும் பார்க்க வேண்டியதுதானே தொர? இந்தச் சாண் வயிறு சொல்றதுதானே சட்டம்?”
பென்னி ராவுத்தரைப் பார்த்தார். முட்டி வரை நீண்டிருந்த வெள்ளுடையும் சிவந்த நிறமும் தீர்க்கமான கண்களும் பார்க்கும் யாருக்கும் அவர்மேல் மரியாதையைத் தரும். வயதும் அதிகமிருக்காது என்று தோன்றியது. இந்த வயதிற்குள் பெரிய தொழில் செய்கிற அளவுக்கு முதலீடும் நற்பெயரும் இருக்கிறதென்றால் அவருக்குப் பின்னால் இருக்கும் உழைப்பைப் புரிந்துகொள்ள முடிந்தது.
“உங்க சொந்த ஊர் ஆங்கூர்தானா?”
“சொந்த ஊர் ராஜபாளையம் தொர. பஞ்சம் பொழைக்க வந்தவங்கதான் இந்த ஊருக்கு. நாத்தப் பிடிங்கி தள்ளித் தள்ளி ஊனி வைக்கிற மாதிரி, அல்லா எந்த ஊர்ல எந்த வித்து வேர் புடுக்குமோ அந்த ஊர்ல ஊனி வச்சிடுறாரு. இந்த ஊர்லயே பஞ்சத்துல செத்துப்போனவங்க எம்பூட்டு ஜனமோ. ஆனா, மொக்கைமாயத் தேவன், எங்க அத்தா எல்லாரும் சொந்த பூமியை விட்டு, இங்க வந்து பஞ்சம் பொழைச்சிக்கிட்டாங்க. அவரைக்கு ஒரு மண்ணு, தொவரைக்கு ஒரு தண்ணி மாதிரி.”
“நீங்க என்ன உதவி செய்வீங்க?”
“தொர, நீங்க செய்யப்போறது தெய்வ காரியம். மூணாயிரம் நாலாயிரம் ஜனங்கள வச்சு வேலை வாங்குற அசகாய காரியம். ஜனங்களுக்கு வயிறாரக் கஞ்சி ஊத்த என்னென்ன வேணுமோ, அத்தனையும் நான் கீழ இருந்து மேல்மலைக்குக் கொண்டாந்து சேத்துடுவேன் தொர. கல்லொடைக்கிறது, பொழுது முச்சூடும் தண்ணியில நிக்கிறதுன்னு மலைமேல ரெண்டாளு தெம்பு வேணும். அதுக்குச் சாராயத்தையும் மருந்து மாதிரி கொடுத்தாத்தான் வேலை நடக்கும். என்னுடைய மார்க்கத்தின்படி லாகிரி வஸ்துகளை வர்த்தகம் செய்யக்கூடாது. உலகம் முழுக்க ஒரே தர்மம் இல்லையே? மேல்மலைக்குச் சாராயம் ஒரு மருந்து. அதையும் கொடுப்பேன். என் அத்தா மாதிரி இன்னொரு தலைமுறை பஞ்சம் பொழைக்க சொந்த மண்ண விட்டுப் போவக் கூடாது தொர. அதுக்கு என்னா செய்யணுமோ நான் செய்யறேன்.”
ராவுத்தர், பேயத் தேவன், எஸ்தர், தேவந்தி போன்ற எளிய மனிதர்களின் அர்ப்பணிப்பான உழைப்பினால்தான் பெரியாறு அணை கட்டி முடிக்கப்படவிருக்கிறது என்று பென்னிக்கு அந்தக் கணம் தோன்றியது.
- பாயும்