
முதலிரண்டு யானைகளைத் தொடர்ந்து மூன்றாவதாக வந்த யானையின்மேல் பிரிட்டிஷ் சர்க்காரின் யூனியன் ஜாக் கொடி பறந்தது
நீரதிகாரம் இதுவரை...
ஜான் பென்னிகுக், மெட்ராஸ் பிரசிடென்சியின் பொதுப்பணித் துறை இன்ஜினீயர். தொண்ணூறாண்டுகளாய் திட்டமிடுவதும், கிடப்பில் போடுவதுமாக இருந்த பெரியாறு அணை கட்டும் திட்டத்தின் சிறப்பு அலுவலராய் நியமிக்கப்படுகிறார். பெரியாறு, மெட்ராஸ் பிரசிடென்சியில் உற்பத்தியாகி, கடலில் கலப்பது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில். மேற்கு மலையின் ஒரு பக்கம் அபரிமிதமான தண்ணீர், மறுபக்கம் வறட்சி. தாது வருஷப் பஞ்சத்தில் 25 லட்சம் மக்களைச் சாகக் கொடுத்த சர்க்கார், பெரியாறு அணையைக் கட்டியே தீர வேண்டுமென்று முயல்கிறது.
அணை கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் திருவிதாங்கூருக்குச் சொந்தமானது. மேற்குத் திசை நோக்கி ஓடி வீணாகக் கடலில் கலக்கும் நீரை, மதுரை இருக்கும் கிழக்குத் திசைக்குத் திருப்பவும், அணை கட்டிக்கொள்ளவும் இடம் கேட்டுத் திருவிதாங்கூருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது பிரிட்டிஷ் சர்க்கார். பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நீண்ட பேச்சுவார்த்தை, இறுதியில் ஆண்டுக்கு 40,000 ரூபாய் என்று முடிவுக்கு வந்து, 999 வருடத்திற்குக் குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
ராயல் இன்ஜினீயர் ஜான் பென்னிகுக், திருவிதாங்கூர் மகாராஜா மூலம் திருநாள், பிரிட்டிஷ் ரெசிடென்ட் ஜான் சைல்ட் ஹானிங்டன், திவான் ராமய்யங்கார் உள்ளிட்டோர் ஒப்பந்தம் கையெழுத்தானதன் பின்புலமாக இருந்தனர்.
அணை கட்டும் பணியை மெட்ராஸ் கவர்னர் கன்னிமாரா தொடங்கி வைக்கிறார்...

மெட்ராஸ் பிரசிடென்சியின் மேன்மைமிகு கவர்னர் கன்னிமாரா, திருவிதாங்கூர் சமஸ்தான மகாராஜாவின் ஆனந்த விலாசத்தின் சாளரத்தின் அருகே நின்றிருந்தார். அடர் சிவப்பு வண்ண முழு அங்கி அவர் தோற்றத்துக்குக் கம்பீரம் கூட்டியிருந்தது. மேலங்கியில் பொருத்தியிருந்த தங்கப்பொத்தான்களும், வெண்ணிறக் கழுத்துப்பட்டியும் தனித்த அழகோடு தெரிந்தன. அவரின் நீல நிறக் கண்கள் தங்கப்பொத்தான்களைவிட ஒளி கூடியிருந்தன.
செண்ட வாத்தியமும் கொம்பும் ஓர் ஒழுங்கில் ஒன்றையடுத்து ஒன்று முழங்க, வாழ்த்தொலிகள் அதிர, பளபளக்கும் சிவப்பு நிற அம்பாரி, தங்க முகப்படாம் என ராஜ அலங்காரத்தில் இருந்த சர்க்கார் யானைகள், அரண்மனைக்குள் அணிவகுத்தன. மக்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் பெருமித நடையில் உள்நுழைந்த சர்க்கார் யானையின்மேல் சமஸ்தானத்தின் கொடியை உயர்த்திப் பிடித்தபடி வீரன் ஒருவன் அமர்ந்திருந்தான். கொடியின் நடுநாயகமாக இருந்த சங்கு, கடலில் ஆர்த்தெழுவதுபோல் ஜனக்கடலில் மூழ்கியெழுந்தது. “ஸ்ரீபத்மநாபசாமியின் தாசன், ஸ்ரீமகாராஜா வாழ்க வாழ்க” என்று மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அடுத்து வந்த யானையின் மீதிருந்தவன், ‘`ஸ்ரீபத்மநாபதாச வஞ்சிப்பால ஸ்ரீமூலம் திருநாள் ராம வர்ம குலசேகர கிரீடபதி மகாராஜா ஸ்ரீராஜ ராமராஜ பகதூர், திருவிதாங்கூரின் மகாராஜா வருகிறார்” என்று அரசரின் முழுப்பெயரையும் கட்டியஞ்சொல்லி முடிக்கவும் மீண்டும் மக்கள் ஆர்ப்பரித்தார்கள். நடுக்கடலில் எழும் அலையைக் கரையை நோக்கி இழுத்து வரும் காற்றுபோல், வாழ்த்தொலிகள் மக்கள் கூட்டத்தை அரண்மனை நோக்கி இழுத்து வந்தன.
முதலிரண்டு யானைகளைத் தொடர்ந்து மூன்றாவதாக வந்த யானையின்மேல் பிரிட்டிஷ் சர்க்காரின் யூனியன் ஜாக் கொடி பறந்தது. “இங்கிலாந்து தேசத்தின் மேன்மைமிகு அரசி, இந்தியாவின் பேரரசி விக்டோரியா, வாழ்க வாழ்க” என்ற முழக்கங்கள் எழுந்தன.
கூட்டம் முழக்கங்களில் உச்சம்கொண்ட வேளையில், மகாராஜா மூலம் திருநாளின் ரதம் உள்நுழைந்தது. ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பிரஜைகள் கூடியிருந்த இடம், மகாராஜாவின் வருகையில் சன்னதம் கொண்டது. ஒரே அச்சில் இருந்த ஆறு வெண்ணிறக் குதிரைகள் வானுலகில் இருந்து தரையிறங்கியதுபோல் வெண்பளிங்கியின் தூய்மையில் ஒளிர்ந்தன. மக்களின் வாழ்த்தொலிகளைக் கேட்ட மகாராஜா ரதத்திலிருந்து எழுந்து நின்று இருபக்கமும் கூடியிருந்த தம் பிரஜைகளைப் பார்த்துக் கையசைத்தார். தங்கச்சரிகை நெய்யப்பட்ட பச்சை வண்ணப் பட்டு மேலங்கி, மகாராஜாவுக்கு இங்கிலீஷ் கவர்னரின் தோற்றம் தந்தது. கால்சராய்க்குப் பதில் வெண்பட்டு வேட்டியினைத் தார்ப்பாய்ச்சியாகக் கட்டியிருந்த மூலம் திருநாள் மலர்ச்சியுடன் தெரிந்தார். அவரின் கிரீடத்தில் பச்சை வண்ண ஆடையை மேலும் எடுப்பாகக் காட்டும் பச்சை வண்ண மரகதக் கற்கள் ஒளிர்ந்தன. கிரீடத்தின் பின்புறம் செருகப்பட்டிருந்த வெள்ளை வெளேரென்ற நாரை இறகுகள் காற்றில் அசைந்தன.
அரசரைத் தொடர்ந்து குதிரைப் படை வீரர்களின் அணிவகுப்பு உள்நுழைந்தது. நுனியில் கூர்மையான கத்தியிருந்த ஆளுயர ஈட்டிகளைக் கையிலேந்திய நாயர் படை வீரர்களின் அணிவகுப்பின் அதிர்வில் மக்கள் விலகி நின்றனர். நாயர் படையைத் தொடர்ந்து பிரிட்டிஷ் படைவீரர்களின் அணிவகுப்பு.
கவர்னரின் பயண நாள் கொல்லம் வருஷம் 1063 (1887) கன்னி மாதம் (அக்டோபர்) என்று ரெசிடென்டுக்குக் கடிதம் வந்ததிலிருந்து திருவிதாங்கூரின் வீதிகள் புதுப்பொலிவோடு தயாராயின.எப்போதும் பொழிந்து கொண்டிருக்கும் கன்னி மாதத்திய மழைகூட திருவிதாங்கூரின் கோலாகலத்திற்கு வழிவிட்டு நின்றிருந்தது. சமஸ்தானத்தின் எல்லையான பாலக்காட்டிற்குள் கவர்னர் கன்னிமாரா நுழைந்ததில் இருந்து சமஸ்தானத்தில் சூரியன் அஸ்தமனமாகவில்லை. கொல்லத்தில் கவர்னரை வரவேற்று, திருவனந்தபுரம்வரை அழைத்து வருவதற்கு நான்கு தினங்கள் கடந்திருந்தன. வழி முழுக்க பிரஜைகள் அளித்த வரவேற்பு ஒரு காரணம், சமஸ்தானத்தின் பேரழகை நின்று நிதானமாகப் பார்த்து வர கவர்னர் விரும்பியது இன்னொரு காரணம். சமஸ்தானம் திருவிழாக் களையின் லாகிரியில் திணறியது.
நேற்று நள்ளிரவு திருவனந்தபுரம் வந்தடைந்த கவர்னரை, ரெசிடென்ட் ஹானிங்டன், பிரிட்டிஷ் சர்க்காரின் ராணுவ அதிகாரிகள், சமஸ்தானத்தின் பிரிட்டிஷ் மருத்துவர், இன்ஜினீயர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்று ரெசிடென்ட் அரண்மனையில் தங்க வைத்தனர். கவர்னர் தங்குவதற்காக மெட்ராஸ் கவர்ன்மென்ட் ஹவுஸின் வசதிகள் இங்கும் செய்யப்பட்டன.

காலை உணவோடு மகாராஜாவின் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரெசிடென்ட் அரண்மனையில் இருந்து மகாராஜாவின் ஆனந்த விலாசம் இருந்த ஒன்றரை மைல் தூரத்திற்கு வழிமுழுக்க கண்ணைக் கவரும் அலங்காரங்கள். மூங்கில் கம்புகள் ஊன்றி, ஒவ்வொரு கம்பிலும் எண்ணெய் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. ஒன்றரை மைல் தூரமும் படைவீரர்களின் அணிவகுப்புடன் சமஸ்தானத்தின் பாரம்பரிய வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. நாட்டியப் பெண்கள் முன்செல்ல, வீரர்கள் பின்தொடர்ந்தனர்.
கார்த்தியாயினியின் கல்யாணம் நடந்த பிறகு, மகாராஜா தன்னுடைய பழைய கொட்டாரத்திற்குச் சென்றுவிட்டார். கவர்னரைச் சந்திக்கத்தான் ஆனந்த விலாசம் வருகிறார்.
மகாராஜா வருவதற்குமுன், மகாராஜாவைச் சந்திக்கும் இடத்திற்கு கவர்னர் முன்கூட்டியே வருகைதர வேண்டுமென்பது சமஸ்தானத்தின் வழக்கம். கவர்னர் கன்னிமாராவும், ரெசிடென்ட் ஹானிங்டனும் அரண்மனையின் வரவேற்பறையில் காத்திருக்க, திவான் ராமய்யங்காரும், சமஸ்தானத்தின் அதிகாரிகளும் வாசலில் காத்திருந்தார்கள். அரசர் வாயிலை நெருங்கியவுடன் நாட்டு பாணங்கள் வெடிக்கப்பட்டன. விண்ணுக்குச் சென்ற பாணமெழுப்பிய சத்தத்திற்குப் பழகியிருந்த யானைகள் ஒய்யாரமாகச் சின்னஞ்சிறு வாலை ஆட்டியபடி முன்னேறின.
ரதத்தை நிறுத்த, குதிரைகளை இழுத்துப் பிடித்தான் சாரதி. மேலிருந்த பட்டாடை நழுவிவிடாமல் இடக்கைக்குக் குறுக்காகப் படரவிட்ட மகாராஜா கூடியிருந்தவர்களை வணங்கிவிட்டு அரண்மனைக்குள் சென்றார்.
அரசர் வருவதைச் சொல்லும் வண்ணம் ஹானிங்டன் கவர்னரின் முன்னால் நின்றார். அரசர் உள்ளே வரும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கன்னிமாரா, அரசரை வரவேற்கத் தயாரானார். சிவப்பு நிறத் தரைவிரிப்பு முடியும் இடத்தில் கன்னிமாரா நிற்க, நான்கடி முன்னால் நின்ற மகாராஜா, வலது கையை முன் நீட்டி கன்னிமாராவின் கைபிடித்துக் குலுக்கினார். கன்னிமாராவும் வரவேற்பு சொல்லிய வண்ணம் மகாராஜாவின் கை குலுக்கினார். ஹானிங்டனும் மகாராஜாவும் கன்னிமாராவும் பேசியபடி வரவேற்பறையின் உள்ளே சென்றனர்.
ஒவ்வொரு ஆசனத்திற்கும் இடையில் ஐந்தடி இடைவெளி இருந்தது. மகாராஜா நடுநாயகமான நாற்காலியில் அமர, கன்னிமாரா அவரின் வலப்பக்கம் அமர்ந்தார். மகாராஜாவின் இடப்புறம் ஹானிங்டன். திவான் எதிரில் நின்றார். பிரிட்டிஷ் சர்க்காரின் அதிகாரிகள் வரவேற்பறையின் வெளியில் நின்றார்கள்.
“மேன்மைமிகு இங்கிலாந்து ராணியின் பிரதிநிதியான யுவர் எக்ஸலென்ஸி கன்னிமாரா அவர்களை வரவேற்பதில் சமஸ்தானம் பெருமைகொள்கிறது.”
“மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னராகப் பொறுப்பேற்றுக்கொண்ட நான், திருவிதாங்கூருக்கு முதல்முறையாகப் பயணம் செய்வது, என்னுடைய நற்பேறு. இங்கிலாந்து ராணியின் பணிவுமிகு ஊழியர்களான எங்களுடன் நீங்கள் கொள்ளும் நட்புறவுக்கு மகிழ்கிறேன் மகாராஜா.”
இங்கிலீஷ் பாணியில் வெள்ளுடை அணிந்த உதவியாளன், நடுவில் சக்கரம் வைத்த நான்கு கால்கள் கொண்ட சிறு மேசையை உருட்டிக்கொண்டு வந்தான். மேசையின் மேலிருந்த அகன்ற தட்டு வெண்ணிறப் பட்டாடையால் போர்த்தப்பட்டிருந்தது. உள்ளே வந்தவுடன் மேசையை நிறுத்திவிட்டு, ரெசிடென்டைப் பார்த்தான். ஹானிங்டன் எழுந்து வந்து, பட்டாடையை விலக்கினார். வெள்ளித்தட்டில் ரோஜா மலர்மாலைகள். ஒரு மாலையையெடுத்து மகாராஜாவின் கையில் கொடுக்க, மகாராஜா கவர்னருக்கு அணிவித்தார். லேடி கன்னிமாராவும் உடன் வருகிறார் என்று கடிதத்தில் தகவல் இருந்ததால் இரண்டு மாலைகள் தயார் செய்யப்பட்டன. லேடி கன்னிமாரா வரவில்லையென்று தெரிந்தவுடன் ஒரு மாலை மட்டும் போதுமென்று மறுஉத்தரவு கொடுக்காததால் இரண்டு மாலைகள் வந்திருந்தன. இன்னொரு மாலையை என்ன செய்வதென்று ஹானிங்டன் யோசிக்கும்முன், கன்னிமாரா அந்த மாலையை வாங்கி, மகாராஜாவுக்கு அணிவித்தார்.
உதவியாளன், சக்கரம் உருளும் சத்தமெழுப்பாமல் வண்டியுடன் வெளியேறினான்.
மூவரும் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு மகாராஜா எழுந்து வந்து அறையின் வாசலில் நிற்க, வெளியில் அமைதியெழுந்தது. மகாராஜா வழிநடத்திச் செல்ல கன்னிமாரா அரண்மனையின் வாயிலுக்கு வந்தார். இரண்டடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த சின்ன மேடையின்மேல் மகாராஜாவும் கன்னிமாராவும் ஏறி நின்றனர். கூட்டம் மீண்டும் வாழ்த்தொலிகளை எழுப்பியது.
மகாராஜா, கூடியிருந்த மக்களிடம் பேசத் தொடங்கினார்.
“ஸ்ரீபத்மநாபசாமியின் தேசத்தவராகிய நம்முடைய சமஸ்தானத்திற்கு, மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் ஹிஸ் எக்ஸலென்ஸி கன்னிமாரா அவர்களை வரவேற்போம்.”
வானத்தில் பாணங்கள் வெடித்தன.
“பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள சுதேசி சமஸ்தானங்களில் திருவிதாங்கூர் தனித்துவமானது. குடிகளின் நலனுக்காக திவான் மாதவ் ராவ் காலம் தொட்டு ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்துவருகிறோம். மறைந்த அரசர் விசாகம் திருநாள் தொடங்கி வைத்த சீர்திருத்தங்களை நானும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன், திவான் ராமய்யங்காரின் முன்னெடுப்பில். கவர்னரின் வருகை, இரண்டு தேசத்தின் நட்புறவை மேம்படுத்துவதோடு, நம் சமஸ்தானத்திற்கு நன்மை சேர்க்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று சுருக்கமாக உரையாற்றினார் மூலம் திருநாள்.
கன்னிமாராவின் ஆங்கில உரையை, ஹானிங்டன் மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.
“..... பெரியாறு புராஜெக்ட்டைத் தொடங்கி வைப்பதற்காக மெட்ராஸிலிருந்து புறப்பட்ட நான், நீலகிரி வந்து பாலக்காடு, கொல்லம், ஆலப்புழா வழியாக திருவனந்தபுரம் வந்திருக்கிறேன்.”
கன்னிமாரா பேசிக்கொண்டிருந்த மேடைக்குப் பின்புறம், அகன்ற தூண் மறைவில் நின்றிருந்த காரியக்காரன் சங்கரன் தம்பி, தன்னருகில் நின்றிருந்த குட்டன் நாயனின் காதில் கிசுகிசுத்தார்.
“இவரோட ஸ்திரிபாகம் பாதி வழியில கோச்சுண்டு போயிட்டாளாம்டே. மெட்ராஸ்ல கவர்ன்மென்ட் ஹவுஸே துர்கந்தமா இருக்காம், இவங்க ரெண்டு பேரோட களேபரத்துல...”
“எசமான், யார் காதுலயும் விழப்போது...”
“விழட்டுமேடே... நான் கேக்கிறேன். உங்க சாரட்டை விட்டு, பாரியாளோட சாரட்டுல பத்து மைல் பிரயாணம் பண்ணீங்களே? பிறகு என்ன நடந்துச்சி? கூட வந்த ஸ்திரி ஏன் கோச்சுண்டு போனான்னு கேக்கிறேன். பதில் சொல்லட்டும், முடியும்னா பதில் சொல்லட்டும்” எகத்தாளம் கூடியது சங்கரன் தம்பியின் பேச்சில்.
சுற்றிலும் பூரண அமைதி நிலவும் இடத்தில் பல்லியின் கௌளிச் சத்தம்போல் புரியாத அடிக்குரலில் பேசிக்கொண்டே இருந்தார் சங்கரன் தம்பி.
“.... வெனீஸ் நகரத்தைப்போல் எங்கெங்கும் ஓடைகளும் கால்வாய்களும். பார்ப்பதற்கு அரிய நிலக்காட்சிகள். ஆலப்புழையைக் கிழக்கின் வெனீஸ் என்று அழைப்பதன் காரணத்தை இப்போது நான் நேரில் அறிந்துகொண்டேன். பிரிட்டிஷ் இந்தியாவைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படியென்றால் என் சகோதரர் மேயோ பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தவர்.”
“அவரைத்தான் அந்தமான்ல கைதியா இருந்த ஒரு துலுக்கன் குத்திக் கொன்னுட்டானே?” சங்கரன் தம்பி குட்டனிடம் சொன்னார்.
“ஐயய்யோ...” குட்டனின் குரல் சத்தமாக எழுந்ததில் அவன் வாயைப் பொத்தினார்.
“காரியத்தைக் கெடுக்கப் பாக்குறீயாடே சவத்து மூதி?”
குட்டனுக்கு உடம்பு நடுங்கியது.
“பயணங்களிலும் துணிச்சலான காரியங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என் சகோதரர். என் மனைவி, லேடி சூசன் ஜார்ஜியானா இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லார்டு டல்ஹௌசியின் மூத்த மகள். இவர்களின் மூலமாக பிரிட்டிஷ் இந்தியாவை நான் நன்கறிந்திருந்தாலும், நேரில் அனுபவித்து உணர, இங்கிலாந்து தேசத்தின் பேரரசி எனக்கொரு வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். நான் மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னராக வந்த நேரம், கோமகன் (Baron) பட்டமும் தேடி வந்துள்ளது.
உங்களின் சமஸ்தானம் போன்ற அழகிய நகரத்தை நான் கண்டதில்லை. திரும்பும் திசையெங்கும் கண்களைக் கவரும் காட்சிகள். இயற்கை பூரணமாக நிலைகொண்ட பூமி. உங்களின் மகாராஜா இளையவர். இந்திய சுதேசி சமஸ்தானங்களிலேயே முன்னோடி சமஸ்தானமாக இருக்க நிறைய சீர்திருத்தங்களைச் செய்கிறார்.
பிரிட்டிஷ் சர்க்கார் தொண்ணூறாண்டுகளாய் எடுத்து வந்த ஒரு காரியம், மகாராஜாவின் அனுமதியினால்தான் நிறைவேற இருக்கிறது. திருவிதாங்கூர் என்றாலே தண்ணீர் தேசம் என்று சொல்லும் அளவுக்கு நீர்வளம் நிறைந்திருக்கிறது. நீர்வளமின்றி இருக்கும் மதுரா தேசத்திற்குப் பெரியாறு நதியைக் கொண்டு செல்லும் திட்டத்திற்கு அணை கட்ட மகாராஜா இடம் கொடுத்திருப்பதன் மூலம், பிரிட்டிஷ் சர்க்காருக்கு நீங்கள் பெரிய உதவி செய்திருக்கிறீர்கள்.”
“பெரியாத்து வெள்ளத்தைப் பாண்டி நாட்டுக்குத் திருப்பினா அஞ்சு தாலூக்கா வெள்ளமில்லாம காயப் போது. வேனல்ல குளிக்க வெள்ளமில்லாமப் போனா அந்தப் பாண்டி திவானத்தான் அழைக்கணும். திவானோட சதிதான் எல்லாம்.”
சங்கரன் தம்பி பொருமினார்.
“எசமானே, எனக்கு அகத்துல காரியம் இருக்காக்கும். உத்தரவு வாங்கிக்கலாமா?”
“எனக்குத் தெரியாத என்னடே காரியம்... இடுப்பு எலும்பு முறிஞ்சிடும்டே” குட்டனை மிரட்டினார்.
திவான் திரும்பாமலேயே இரண்டு முறை பார்வையாலேயே தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது குட்டனுக்குத் தெரிந்துவிட்டது. இன்று இடுப்பு எலும்பு உடையுமோ, பிராணன் போகுமோ என்று தெரியாமல் தத்தளிப்புடன் நின்று கொண்டிருந்தான்.
“உங்களுக்குச் சொந்தமான நீரைப் பங்கிட்டுக் கொடுக்க உயரிய குணம் வேண்டும். அந்த உயரிய குணம் உங்கள் மகாராஜாவுக்கும் மக்களாகிய உங்களுக்கும் இருக்கிறது. இன்று மட்டுமல்ல, எதிர்காலத்திலும் நீங்கள் கொடுத்திருக்கிற உத்தரவாதங்களை மதித்து நடக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலையென்னும் இயற்கையின் மடியில் இருக்கிற உங்களுக்கு என்றென்றும் நலன் விளைய வாழ்த்துகிறேன். மகாராஜாவுக்கு என் வணக்கம்.”
“சயாத்ரி பர்வதம் இவன் அச்சனோட சொத்தாக்கும்...” கொண்டையை அவிழ்த்து முடிந்த சங்கரன் தம்பி உறுமிவிட்டு உள்ளே நடந்தார்.
கன்னிமாரா உரையை நிறைவு செய்தவுடன் வீரர்கள் சூழ்ந்து நின்று பாதுகாப்பாக வழிநடத்தினர். மகாராஜாவும் ஹானிங்டனும் உணவறைக்கு உடன் செல்ல, கன்னிமாரா முன்னால் நடந்தார்.
கன்னிமாராவுக்கும் ஹானிங்டனுக்கும் உணவு பரிமாறப்பட்டது. எதிரில் மகாராஜா அமர்ந்திருந்தார். பிரிட்டிஷாருக்கு விருந்து கொடுக்கும் வழக்கத்தை அனுசரித்தாலும் மகாராஜாக்கள் பிரிட்டிஷாருடன் சேர்ந்து உணவுண்பதில்லை. கிறிஸ்தவர்களுடன் உணவுண்பதை அவர்களின் இந்துமத வழக்கம் அனுமதிக்காததால், உணவு மேசையில் உடன் உட்கார்வதை மட்டும் அரசு மரியாதையாக வைத்திருந்தார்கள்.
உணவுக்குப்பின், அரண்மனையின் தனிச்சிறப்பாக இருந்த மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றார். கோசாலையில் சூரத், குஜராத், நெல்லூர்ப் பசுக்களும் காளைகளும், கூண்டுகளில் சிறுத்தை, புலி, காட்டெருமை, காட்டுக் குரங்குகள், பறவைகள் என மேற்கு மலையின் காடொன்றே இருந்தது. இங்கிலாந்தில் விடுமுறை நாள்களில் வாத்துகளை வேட்டையாடும் பிரிட்டிஷார், இந்தியாவில் புலிகளையும் யானைகளையும் வேட்டையாடி மாமிச ருசி கொண்டுவிட்டார்கள் என்பதைக் கன்னிமாரா கேள்விப்பட்டிருந்தார்.
மிருகங்களுடன் மனிதர்கள் மோதும் மல்யுத்தமும் நடத்த மகாராஜா திட்டமிட்டிருந்தார். கன்னிமாரா தனக்கு அதில் விருப்பமில்லை என்று தவிர்த்துவிட்டார்.
திருவனந்தபுரத்தில் மூன்று நாள்கள் தங்கிய கவர்னர் பெண்கள் பள்ளிக்கும் மகாராஜா கல்லூரிக்கும், நேப்பியர் அருங்காட்சியகத்துக்கும் சென்று பார்வையிட்டார். கன்னிமாராவின் வருகையை மரியாதை செய்யும்பொருட்டு, திருவனந்தபுரத்தின் காய்கறி அங்காடிக்குக் கன்னிமாரா பெயரைச் சூட்டிப் பெருமை செய்தார் மகாராஜா.
சமஸ்தானத்தின் எல்லை முடியும் நாஞ்சில் நாடுவரை, நாயர் படை வீரர்கள் உடன் வந்து கவர்னரை வழியனுப்பி வைத்தார்கள்.
அம்மையநாயக்கனூர் ரயில் நிலையத்தில் இருந்து கூடலூரின் அடிவாரம் வரையான 80 மைல் தூரத்தைக் குதிரை வண்டியிலும் பல்லக்கிலுமாக மாறி மாறி பயணம் செய்தார்கள் கன்னிமாராவும் உடன் வந்த அதிகாரிகளும். இடையில் பெரியகுளத்தில் ஒரே ஒருமுறை உணவுக்காகச் சிறிது நேரம் செலவிட்டார்கள்.
கூடலூரின் அடிவாரத்தில் பென்னி குக், டெய்லர், லோகன், மெக்கன்சி உள்ளிட்ட இன்ஜினீயர்களும் மதுரையின் மேற்குப் பகுதி ஜமீன்தார்களும் உடனிருந்தார்கள். அம்மையநாயக்கனூர் ஜமீன் ராமசாமி நாயக்கர் ரயில் நிலையத்தில் வரவேற்று பயணத்தில் சேர்ந்துகொண்டதால் கன்னிமாராவின் அருகிலேயே இருக்கும் வாய்ப்பு பெற்றார்.
“சின்ன ஊருக்கு எதற்கு அவ்வளவு பெரிய பெயர்?” என்று கன்னிமாராவுடன் வந்த அவரின் நண்பர் ரீல் அடிக்கடி கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்வதுதான் சங்கடமாக இருந்தது நாயக்கருக்கு.
பென்னியையும் இன்ஜினீயரையும் அறிமுகம் செய்துகொண்டவுடன், கன்னிமாரா அணை கட்டும் இடத்திற்கு நடக்கத் தொடங்கினார். அடர்ந்த காட்டினைப் பார்த்தவுடன் அவரின் உற்சாகம் கூடிவிட்டது. ஏறக்குறைய ஏழரை மைல் தூரம்.
பேயத்தேவனையும் அவன் நண்பர்களையும் முன்னால் போகச் சொல்லியிருந்தார் பென்னி. புற்களையும் புதர்களையும் முட்களையும் அகற்றி ஒற்றையடிப் பாதையொன்றைத் தற்காலிகமாக உருவாக்கியிருந்தாலும் நான்குபேர் சேர்ந்து நடக்குமளவிற்குப் பாதையின் விஸ்தீரணம் இல்லை.
அட்டைப்பூச்சிகள் காலில் ஏறிடாமல் காக்க, கன்னிமாராவுக்கு முட்டிவரையிலான தோல் பூட்சைக் கொடுத்திருந்தார் பென்னி. பென்னியும் இன்ஜினீயர்களும் முட்டி வரையிலான காக்கி டிரவுசர், அரைக்கை வெள்ளைச் சட்டை, கம்பூட்ஸ், தலையில் தொப்பி எனப் பொதுப்பணித் துறையின் சீருடையில் இருந்தார்கள்.
பேயத்தேவனுக்கு முன்பு காட்டு யானைகள், சிறுத்தை, கடுவா, கரடிகளின் நடமாட்டத்தையறிந்து சொல்லும் மன்னான்கள் நான்கைந்து பேர் நடந்தனர்.
“ஒரு மாதமாக கவர்னர் வர்றார், கவர்னர் வர்றார் என்று நிற்க நேரமில்லாமல் ஓடி ஓடி வேலை செய்தோம். கவர்னர் நம்மை ஒரு நிமிஷம்கூடப் பார்க்கலை. என்ன வேலை நடக்கிறது என்று கேட்கவும் இல்லை” -டெய்லர் சலிப்பாகச் சொன்னார்.
“கவர்னருக்காகவா நாம் வேலை செய்தோம்? ஏழரை மைலுக்குப் பாதை தயாராச்சே, கவர்னர் வருவதால்தான் ஒரே வேகத்தில் செய்தோம். அதை நினைச்சு ஆறுதலா இரு.”
“எங்களை விடு, உன்னிடமாவது இரண்டு நிமிஷம் பேசியிருக்கலாம்.”
“நானே போய்ப் பேசட்டுமா லோகன்?” பென்னி சிரித்தார்.
“திருவிதாங்கூர் மகாராஜாவிடம் மூன்று நாள் அரச விருந்து சாப்பிட்டு வந்திருப்பார். இன்னும் தெளிந்திருக்காது” - மெக்கன்சி.
“வெறும் இலையும் காயுமாகச் சமைத்துப் போட்டிருப்பார்கள் கொட்டாரத்தில். கன்னிமாரா வாய் செத்திருப்பார். இன்னும் கொஞ்ச நேரத்தில் வழியில் சிக்கும் முயலைச் சுட்டுத் தின்னப் போகிறார்கள், பார்த்துக் கொண்டிரு.”
“ஐயய்யோ... அரண்மனையில் மாமிசம் இல்லாத உணவா?”
“ஆம். அவர்கள் சாகபட்சிணிகள். அசைவம் உண்பதில்லை. அவர்களின் கடவுளான பத்மநாபருக்குத் தினம் பூஜை செய்வதால் மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டார்களாம்.”
“நல்லவேளை. ஜீசஸ், ஒரு குழிமுயலையாவது அவர்கள் கண்ணில் காட்டிடு. இல்லை, வெறிகொண்டு மனித மாமிசம் சாப்பிட்டு விடப்போகிறார்கள்.”
அடங்கிய குரலில் சிரித்தபடி மேலேறியது இன்ஜினீயர்கள் குழு.
“மிஸ்டர் பென்னி...”
நடந்துகொண்டிருந்த கன்னிமாரா திரும்பி நின்று பென்னியை அழைத்தார். தாங்கள் பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் விழுந்ததோ என்று திடுக்கிட்டார்கள்.
“யுவர் எக்ஸலென்ஸி...” பென்னி பதிலளித்துக் கொண்டு முன்னே சென்றார்.
“பாதையோரத்தில் கிடக்கிற செடிகொடிகள் இன்னும் பசுமையாக இருப்பதைப் பார்த்தால், பாதையைச் சமீபத்தில்தான் சரிசெய்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே?”
“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி...”
“மனிதர்களுடைய காலடித் தடமே இல்லாத இந்தக் காட்டில் நீங்கள் வேலை செய்வது மிகுந்த சவாலாகத்தான் இருக்கும்.”
“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி.”
“சோர்ந்துவிடாமல் உறுதியான எண்ணம் கொண்டவர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அணை கட்டிவிடலாம். மெட்ராஸிலிருந்து கிளம்பும்முன், பெரியாறு புராஜெக்ட் தொடர்பான ஆவணங்களைப் படித்துப் பார்த்தேன். இத்தனை தடங்கல்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்திற்கு உயிர்கொடுக்க முடிந்திருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள் மிஸ்டர் பென்னி?”
பென்னியின் நடை மெதுவானது.
“மதுரா கன்ட்ரியின் வறட்சிதான் யுவர் எக்ஸலென்ஸி.”
“எக்ஸாட்லி. மதுரா கன்ட்ரி மக்களின் துயரங்களுக்குத் தெய்வம் தீர்வு கொடுத்திருக்கிறது. அந்தக் காரியத்தைத் தொய்வின்றிச் செய்ய உங்களுக்கும் ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறது. தைரியமாகச் செய்யுங்கள்.”
“நிச்சயமாக யுவர் எக்ஸலென்ஸி. உங்கள் வார்த்தைகள் பெரும் ஒளியாக என் மனத்தில் பதிந்திருக்கும்.”
“அணை கட்டி முடிப்பது அவ்வளவு எளிய காரியமன்று. என் மனத்தில் தோன்றுவதால் இந்த வேண்டுகோள்.”
“வேண்டுகோள் என்று யுவர் எக்ஸலென்ஸி சொல்ல வேண்டாம். உங்களின் கீழுள்ள பணியாளனாய் என் கடமையது.”
“கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் மை பாய்.”
பென்னிக்கு மனம் நெகிழ்ந்தது. கன்னிமாரா முன்னேறிச் சென்றார்.

பென்னி, மீண்டும் தன் நண்பர்களுடன் சேர்ந்துகொண்ட வேளை, முன்னே சென்றவர்கள் அடிக்குரலில் எச்சரிக்கை விடுப்பது கேட்டது. இருந்த இடத்தில் அப்படியப்படியே ஒலியடக்கி அமர்ந்தார்கள். மன்னான்கள் சைகை காட்டிய திசையில் பென்னி பார்த்தார். கரிய குன்று போன்ற யானையொன்று முன்செல்ல, யானைக் கூட்டம் பின்தொடர்ந்தது. பிறந்து ஒன்றிரண்டு வாரங்களான குட்டி யானை, பெரிய யானைகளின் கால்களின் ஊடாக நுழைந்து நுழைந்து முன்சென்றது. முன்னால் சென்ற பாட்டியின் அருகில் சென்றதும் குதூகலமானது கன்று. தன்னை வருடிக் கொடுத்த பாட்டியின் தும்பிக்கையில் தன் தும்பிக்கையைக் கோத்து இணைந்து நடந்தது கன்று.
யானைகள் கூட்டம் கடக்கும்வரை அமைதி காத்த மன்னான்கள், இனி பயமில்லையென்றவுடன் எழுந்து நடந்தார்கள்.
“மன்னிக்கணும் யுவர் எக்ஸலென்ஸி...” - உடன் வந்த மிலிட்டரி கமாண்டர் கன்னிமாராவிடம் மன்னிப்பு கோரினார்.
“ஏன், யானைகள் கூட்டத்தை நீதான் அனுப்பி வைத்தாயா?” என்று கேலி செய்தார் கன்னிமாரா.
“உயர்ந்த குன்றுகளையும், பள்ளத்தாக்குகளையும் கடந்து செல்ல சீர் செய்யப்படாத ஒற்றையடிப் பாதை துணை வருகிறது என்பதுதான் இயற்கையை மனிதன் வெல்லும் ரகசியம் அல்லவா?” சிந்தனை தோய்ந்த குரலில் கேட்டார் கன்னிமாரா.
“இருங்க நண்பரே, குறிப்பெடுத்துக் கொள்கிறேன்...” கன்னிமாராவின் நண்பர் ரீலின் செய்கை சிரிப்பு தந்தது.
“இயற்கை எவ்வளவு ரகசியம் காத்தாலும் ரகசியத்திற்குள் நுழையும் சாவியை மனித மூளை கண்டறிந்துவிடும்” - கன்னிமாரா.
ஒருவர் பேசுவது மற்றொருவர் அருகில் இருந்து கேட்க முடியாதபடி, பாதை குறுகியும் வளைந்தும் சென்றதில் ஒழுங்கற்ற உரையாடலாகத் தொடர்ந்தது.
மாலை நான்கு மணிக்குள் மஞ்சு மூடிய குன்றுகள் இரவின் வருகையை அறிவித்தன. கன்னிமாரா நடையைத் துரிதப்படுத்தினார். தூரத்தில் அணை கட்டுமிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கொளிகளைப் பார்த்தவுடன் அவருக்கு உற்சாகம் மிகுந்தது. இரவில் பாதுகாப்பாகத் தங்கிக்கொள்ள சின்னச் சின்னக் குடில்களை அமைத்திருந்தார்கள்.
ஆண்களும் பெண்களுமாக செம்பழுப் படைந்த ஆடையுடன் இருநூறு ஆள்கள் கவர்னரைக் கும்பிட்டபடி நின்றிருந்தனர்.
“இவங்கெல்லாம் கூலிகளா?” கேட்டுக்கொண்டே மலையில் ஏறியிறங்கிய சோர்வு கொஞ்சமும் இன்றி, கன்னிமாரா அருகிருந்த குன்றின்மேல் ஏறி நின்றார்.
“மிஸ்டர் பென்னி... அணை கட்டும் வேலையைத் தொடங்கி வைத்துவிடலாமா?”
“இருள் சூழ்ந்துவிட்டது யுவர் எக்ஸலென்ஸி. விடியலில் தொடங்கலாம். அணை கட்டுமிடத்தில் கற்கள் எடுத்து வைத்துச் சுண்ணாம்புச் சாந்திட்டு நீங்கள் தொடங்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கு குறைந்தது அரை மணி நேரமாகும். மலையில் இருள் நிமிடத்தில் படர்ந்துவிடும்.”
“கல்லெடுத்து வைத்துத்தான் அணையைத் தொடங்க வேண்டுமா? தொண்ணூ றாண்டுகள் இந்தத் திட்டம் காத்திருந்தது போதும். இப்போது, இங்கே, இந்த நிமிடமே நான் தொடங்கி வைக்கிறேன்...” என்று சொல்லிய கன்னிமாரா அங்கிருந்தவர்களை அருகில் வரச் சொன்னார். அனைவரும் அருகில் கூடினர்.
கொடுவாளை வாங்கினார் கன்னிமாரா. குன்றின் மேலிருந்த சிறிய ஈட்டி மரமொன்றை ஓங்கி வெட்டினார். ஒன்று, இரண்டு, மூன்று.... வெட்டுகளைத் தாங்க முடியாமல் மரம், குன்றுக்குக் கீழே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பேரியாற்றில் சரிந்தது.
விழுந்த கணத்தில் மரக்கிளையை உள்வாங்கிய பேரியாறு மேற்கு நோக்கிச் சுழன்றோடியது.
இந்த நாளின் அந்தியில், பேரதிசயமாய் கிழக்கில் சூரியன் உதித்தெழுந்தான்.
- பாயும்