
காட்டு விலங்குகள் பற்றிய பயமில்லையா பென்னி?” பாறையில் பென்னியின் அருகில் உட்கார்ந்தபடி கேட்டார் கன்னிமாரா. பென்னி கைகாட்டிய இடத்தில் பார்த்த கன்னிமாரா வியந்தார்.
மேல்மலையின் இரவு சில்லிட்டு நடுங்கியது. கித்தான் கூடாரங்கள் இரவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் மழையில் நனைந்ததுபோல் இருந்தன. கூடாரத்திற்குள்ளும் வெளியிலும் இருந்த ஒரே வித்தியாசம், உள்ளுக்குள் மனிதர்களின் வெப்பமான மூச்சுக்காற்று இருந்தது மட்டும்தான். குளிர் அதிகரிக்க அதிகரிக்க மூச்சுக் காற்றில் வெப்பம் கூடுவது அதிசயம்தான்.
உடலை மடக்கிச் சுருண்டுகொள்ள வைத்த கடுங்குளிர் தூக்கத்தை விரட்டியது. தடித்த மேலங்கியும் அதற்குமேல் அணிந்திருந்த கம்பளிப் போர்வையும் குளிரை விரட்ட முயன்று தோற்க, கவர்னர் கன்னிமாரா தூக்கமின்றிப் படுத்திருக்க முடியாமல் குறைத்து வைக்கப்பட்டிருந்த விளக்கினைத் தூண்டிவிட்டார். உறைந்திருந்த ஒளியும் உடனே ஒளிரத் திணறி, எண்ணெயிலிருந்து வெப்பம் உறிஞ்சி ஒளிர்ந்தது.

கூடாரத்தை விட்டு வெளியில் வந்தார் கன்னிமாரா. நதியையொட்டிய சிறு பாறையின்மேல் தெரிந்த நிழலுருவத்தைப் பார்க்கும்போதே பென்னி என்று முடிவுக்கு வந்தார்.
சுழன்றடிக்கும் காற்றும் புரண்டோடும் நீரும் குளிரைச் சேர்த்து இழுத்துச் செல்வதில் வெளியில் குளிர் குறைந்திருந்தது. இரவில் பெருஞ்சத்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் பேரியாறு நதியைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த பென்னியின் அருகில் சென்றார் கன்னிமாரா.
“மிஸ்டர் பென்னி...”
திடுக்கிட்டுத் திரும்பிய பென்னி, கன்னிமாராவைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
“யுவர் எக்ஸலென்ஸி...” என்று எழுந்திருக்க முயன்றார்.
“வேண்டாம், உட்காருங்கள். நடுக்காட்டின் நள்ளிரவில் யுவர் எக்ஸலென்ஸி என்ற அழைப்புக்குத் தேவையே இல்லை மிஸ்டர் பென்னி.”
“யுவர் எக்ஸலென்ஸியே மிஸ்டர் சேர்த்துத்தானே என்னை அழைக்கிறீர்கள்?”
“ஓ... காட் த பாயின்ட்” - கன்னிமாராவின் சிரிப்பொலி நள்யாமத்தின் அடர்த்தியை அசைத்தது.
“மிஸ்டரையும் எக்ஸ லென்ஸியையும் விடுவோம்.”
பென்னியின் முகத்திலும் சிரிப்பு.
“காட்டு விலங்குகள் பற்றிய பயமில்லையா பென்னி?” பாறையில் பென்னியின் அருகில் உட்கார்ந்தபடி கேட்டார் கன்னிமாரா. பென்னி கைகாட்டிய இடத்தில் பார்த்த கன்னிமாரா வியந்தார். பேயத்தேவன், ஆனை விரட்டி, புலி விரட்டி உள்ளிட்ட அவனின் கூட்டாளிகள், மன்னான்கள் முதலானோர் பென்னி அமர்ந்திருந்த பாறையைச் சுற்றிக் காவல் இருந்தார்கள்.
“கிரேட் பென்னி. நீங்கள் அணை கட்டிவிடுவீர்கள். உங்களுக்கு இருக்கும் உள்ளூர் ஆள்களின் ஒத்துழைப்பு வியப்பைத் தருகிறது.”
“ஆம் யுவர் எக்ஸலென்ஸி.”
“மீண்டுமா?”
“பிரிட்டிஷ் பணியாளர்களின் ரத்தத்தில் இருக்கிறதல்லவா பணிவும் கீழ்ப்படிதலும்?”
“அதைத்தான் விரும்புகிறார்கள் நம் அதிகாரிகளும். கடந்த இருநூற்று ஐம்பது வருஷங்களாக காலனிய நாடுகளில் இங்கிலாந்து தேசத்தின் கோமான்களும் பிரபுக்களும் அரசர்களைப் போலாகி விட்டார்களே! அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும் வசதிகளும் இங்கிலாந்து அரசிக்கே கிடைக்காதவை.”
இருநூறு அடி அகலத்தில் ஐந்தாறு அடி ஆழத்தில் மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கி ஓடிக்கொண்டிருக்கும் பேரியாற்றைப் பார்த்தபடி இருவரும் சிறிது நேரம் அமைதியில் மூழ்கினர். நீரின் சலசலப்பு காட்டின் அமைதிக்குள் தனி ஆவர்த்தனமாய் எழுந்தது.
‘பொதுப்பணித்துறையின் அணை கட்டும் இன்ஜினீயருக்கு ஓடும், நிற்கும் நதிநீரின் இலக்கணம் கற்றுக்கொள்வதுதானே பாலபாடம்?’ என்ற சிந்தனை பென்னிக்குள் ஓடியது. காதுக்குள் ரீங்கரிக்கும் நீரின் சத்தம் கொடுக்கும் இனிமையைவிட நீர் தரும் சவால் அதிகமாக இருந்தது. ‘இதோ பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும் நீரை, அதன் தடத்தை மாற்றிவிட்டு, நதிப்படுகையில் சுவரெழுப்பித் தேக்குவதுவரை, நீருடன் நடத்தப்போகும் போராட் டங்கள் என்னென்னவோ? அற்புதம் நிகழ்த்தும் தெய்வமொன்று இந்நிலத்தில் முளைத்தெழாதா?’ பென்னியின் மனத்திற்குள் எண்ணத்தின் தீவிரமும், கண்முன் நீர் விலகி, அணையின் சுவரெழும்பும் காட்சியும் விரிந்தது.
“அடர்ந்த மலைக்கு நடுவில் இன்று சூரிய அஸ்தமனம் பார்த்ததில் மனம் பதினைந் தாண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களுக்குள் மூழ்கி விட்டது பென்னி.” சிந்தனையில் இருந்து விடுபட்ட கன்னிமாரா ஓடும் நதியைப் பார்த்துக் கொண்டே பேசினார். அவருக்குக் குளிர் குறைந்தி ருந்தது.
“கடைசியாக என் அண்ணன் மேயோ, அந்தமான் ராஸ் தீவில் ஹரியத் மலையின் உச்சியில் உட்கார்ந்து நிதானமாகச் சூரிய அஸ் தமனத்தை ரசித்திருக்கிறார். இந்த மேல்மலையும் காடும், குன்றின் உச்சியும் அண்ணன் மேயோவின் நினைவை அதிகப்படுத்திவிட்டது.”
கன்னிமாராவின் குரலில் கணம் கூடியிருந்தது. பிரிட்டிஷார் தங்களின் துயரங்களைக் கண்ணீரில் கரைய விடுவதில்லை.
இந்தியாவின் நான்காவது வைஸ்ராயாக இருந்த மேயோவின் துயர் நிரம்பிய முடிவைப் பற்றி பென்னியும் நன்கறிவார். மேயோ, கன்னிமாராவின் உயரத்தைவிட இரண்டங்குலம் கூடுதலான உயரம். உயரத்திற்கேற்ற உடல் பருமன். பல நாள்கள், வாரங்கள் குதிரையில் பயணித்தாலும் சோர்ந்து போகாத உடல் வலிமை என லார்டு மேயோவின் ஆளுமையை அறிந்த அத்தனை பேருக்கும், அவருடைய படுகொலை பேரதிர்ச்சி அளித்தது.
முக்கொம்பில் சமீபத்தில் ஆர்தர் காட்டனை பென்னி சந்தித்தபோது, மேயோவைப் பற்றி நிறைய நேரம் காட்டன் பேசினார். இருபதாண்டுகள் அயர்லாந்தின் கன்சர்வேட்டிவ் பார்ட்டியின் தலைவராக இருந்த மேயோவை, இந்தியாவின் வைஸ்ராயாக இங்கிலாந்து அரசி நியமித்த நேரம், பிரிட்டிஷ் இந்தியாவில் சிப்பாய் கலகத்தின் கொந்தளிப்பு மீதம் இருந்தது. மீரட்டில் தொடங்கி, கான்பூர் வரை பிரிட்டிஷாருக்கு எதிராக சுதேசி அரசர்கள் செய்த போராட்டங்களைப் பிரிட்டிஷ் சர்க்கார் ஒடுக்கிப் பத்தாண்டுகள் கடந்துவிட்டாலும், போராட்டக்காரர்கள் ஆயுதங்களுடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள். சர்க்காரின் கடும் தண்டனைகளுக்கு பயந்து போராட்டங்கள் வெடிக்காமல் இருந்தபோதும், புகைந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே பிரிட்டிஷ்காரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மேயோ பதவியேற்ற ஓராண்டில் கல்கத்தா உச்ச நீதிமன்ற நீதிபதி படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் தொடங்கியிருந்தது.

மேயோ வைஸ்ராயாக நியமிக்கப்பட்ட வுடன், ஒவ்வொரு துறையின் தேர்ந்த வல்லுநர்களை அழைத்துப் பேசியிருக்கிறார். நீர்ப்பாசனம், நீர்வழிப் போக்குவரத்து தொடர்பாகப் பேச காட்டனை அழைத்திருந்தாராம். இரண்டரை மணி நேரம், காட்டன் சொன்ன கருத்துகளைக் கேட்டுக் குறிப்பெடுத்திருக்கிறார். ‘ரயில்வேக்குப் போடும் பணத்தை, நீர்வழிப் போக்குவரத்துக்குச் செலவிடுங்கள். இந்தியாவின் மண், என்ன விதைத்தாலும் விளையும் வளமான மண். அதைக் கரியாக்கி ரயில் ஓட்டாதீர்கள்’ என்று சொல்லும்போது மட்டும் மேயோ நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாராம். காரணம், ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்தி, நீண்டு அகன்ற நிலப்பரப்பும் மக்கள் தொகையும் கொண்ட இந்தியாவுக்கு ரயில் போக்குவரத்து அத்தியாவசியமென்று சொல்லி அதிகப்படுத்த நினைத்த முதல் வைஸ்ராய் டல்ஹௌசியின் மகளைத்தான் மேயோவின் தம்பி, இதோ அமர்ந்திருக்கும் கன்னிமாரா கல்யாணம் செய்திருக்கிறார். அவரின் உறவினரைக் குறை சொல்லி காட்டன் பேசியிருந்தாலும் மேயோ அவரின் கருத்தை ஆதரித்திருக்கிறார். ‘நீங்கள் என்னுடன் வாருங்கள், இந்தியா முழுக்க, குறிப்பாக தென்னிந்தியாவில் நீர்வழிப் போக்குவரத்திற்கு உள்ள சாதகமான பாதைகளைக் காட்டுகிறேன்’ என்றும் அழைத்திருக்கிறார். இதையெல்லாம் காட்டன் அன்று பென்னியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
மேயோ சுதந்திரமான சிந்தனையும் உண்மையான ஈடுபாடும் கொண்டவர். மேயோவுக்குப் பாதுகாப்பு கொடுப்பது போலீசுக்கும் அவருடைய ராணுவச் செயலருக்கும் மெய்க்காப்பாளர்களுக்கும் கடும் சவாலாக இருந்தது. மேயோ தன்னைப் பற்றிக் கவலை கொண்டதில்லை. காடு மேடெங்கும் சுற்றுவார். மக்களைச் சந்திப்பார். போலீசும் செயலரும் அவரின் பயணத்திட்டத்தை ஒழுங்கு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தால், பயணத்திற்கு நடுவில் அவர், எல்லோரின் வழிகாட்டுதலையும் புறக்கணித்து, புதிய பாதையில் செல்வார். இந்தியாவின் நிதி மற்றும் நிலச்சீர்த்திருத்தங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட மேயோ, அந்தமான் சுற்றுப்பயணம் முடித்து ஒரிசா கிளம்பும்போது படுகொலை செய்யப்பட்டது இங்கிலாந்து தேசத்தின் இழப்பு என்பதோடு, இந்தியா நல்ல நிர்வாகியை இழந்தது என்பதுதான் உண்மை.
“அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு நேர இருந்த முடிவைப் பற்றி அறியாமல் அத்தனை நிதானமாகச் சூரியனை ரசித்திருக்கிறார். உடன் இருக்கும் ஒவ்வொருவரிடமும் மேற்கில் இறங்கிக்கொண்டிருந்த சூரியனைக் காட்டிக்கொண்டிருந்தாராம்” கன்னிமாரா.
ஆம், அந்த நாள் திட்டமிட்டு, மேயோவை மலையுச்சிக்கு அழைத்துச் சென்றது. அவரின் துர்பாக்கிய முடிவென்பதைக் கடந்து, சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது? ‘எந்த அசாதாரண சம்பவம் நடந்தாலும், நான் அவசர நேர்முகக் கடிதம் அனுப்ப வேண்டுமென்றாலும் எனக்கு உடனே தந்தி கொடுங்கள். பயணத்தில் இருந்து பாதியில் திரும்பிவிடுவேன்’ என்று சொல்லிக் கிளம்பியிருக்கிறார் மேயோ. அவரின் மரணச் செய்தியே அசாதாரண சம்பவமாகி, இந்தியா துயரத்தில் ஆழ்ந்தது. பர்மாவில் இருந்து வைஸ்ராய் அந்தமானுக்குச் செல்கிறார், அந்தமானில் இருந்து ஒரிசா மாகாணத்திற்குப் பயணம் என்றவுடன் பாதுகாப்பு அணிக்குத் திகில் கூடியது.
‘அந்தமான், சிப்பாய்க் கலகத்தில் சிறைபிடிக்கப்பட்ட ஆயுள் கைதிகளைக் காலாபாணியாக்கி வைத்திருக்குமிடம். தனிமையும் தண்டனையும் கைதிகளை மூர்க்கமாக்கியிருந்த இடம்.’ பென்னியின் மனத்திற்குள் கன்னிமாரா பேச்சின் தொடர்ச்சி ஓடியது.
“ஐந்து மணிக்குக் கப்பலில் ஏற வேண்டுமென்பது செயலரின் திட்டம். போர்ட் பிளேயரில் இறங்கி, அந்தமானைப் பார்வையிட்ட பிறகு, கிளம்ப இருந்த நேரத்தில், ஆயிரம் அடி உயரமிருந்த ஹரியத் மலையைப் பார்த்தவுடன் மலையேற வேண்டுமென்று சொல்லியிருக்கிறார் அண்ணன். மலையேறி இறங்குவதற்குள் இருட்டிவிடும். இருட்டுக்குள் பாதுகாப்பு கடினம் என்று ராணுவச் செயலர் தயக்கம் காட்டியிருக்கிறார். அண்ணனின் செயலர், எட்வர்ட், அவரும் என் அண்ணன்தான், மலையேறுவது பாதுகாப்பில்லை. மலையேறும் பாதையையொட்டி அடர்ந்த காடிருக்கிறது என்று எச்சரித்திருக்கிறார்.”
‘ஆம், மேயோ கல்கத்தாவில் கிளம்பியதில் இருந்து அவரின் வலப்பக்கம் போலீசு சூப்பிரண்டெண்ட், இடப்பக்கம் தனிச்செயலர், அவரின் கால்களை உரசாத இடைவெளியில் மெய்க்காப்பாளர்கள், அவரின் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் கத்திமுனை துப்பாக்கிய ஏந்திய போலீசு. மேயோவின் நிழல்கூட முன்னால் நிற்கும் வீரனின் மேல்தான் விழ வேண்டும். மூன்றாம் நபரின் நிழல்கூட உள்நுழைய முடியாத நெருக்கமான பாதுகாப்பு. வைஸ்ராயின் பயணம் முழுக்கவே ஒவ்வொரு வருக்குள்ளும் ஏதோ ஓர் அசாதாரணத்திற்குச் சாட்சியாகப் போகிற அவஸ்தையிருந்ததில் ஒருவரும் கண் இமைக்கவில்லை. மேயோ பயணித்த குதிரைகளை அடிக்கடி மாற்றினார்கள். வழக்கமாக அவர்தான் பாதை மாறிச் செல்வார். இம்முறை போலீசு அவரின் பாதைகளை மாற்றியது...” - பென்னி மேயோவின் இறுதிப் பயணத்தினை நினைவுகூர்ந்தார்.
“பாதுகாப்பு வீரர்களைப் பின்னால் வரச் சொல்லிவிட்டு, அண்ணன் மலையேறியிருக்கிறார். வைஸ்ராய் என்ன கோபித்தாலும் அவரை விட்டு விலகக் கூடாது என்று புரிந்து வைத்திருந்த வீரர்கள், அவரின் வார்த்தைகளுக்கு அடிபணியவில்லை. அண்ணன், ஆயிரம் அடி உயரமான மலையை இருபது நிமிடத்தில் ஏறியிருக்கிறார்.”
‘இருள் விழுகிறது. வேகமாகக் கீழிறங்கலாம்’ என்று செயலர் அவசரப்படுத்திய போதும், மேயோ மலையை விட்டிறங்க அவசரப்பட வில்லை. தன் வாழ்வின் கடைசி அஸ்தமனம் என்று அவருக்கு நிச்சயம் தோன்றியிருக்காது. அவர் மரணத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கிறவர் அல்ல. ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையை அனுபவிக்க நினைப்பவர். மலைமுகட்டில் இருந்து பள்ளத் தாக்கிற்குள் விழும் சூரியன் அவரை வசீகரித்திருக்கலாம். அதன் அழகில் மயங்கி உட்கார்ந்திருக்கலாம். துப்பாக்கியும் கத்திகளும் வைத்திருந்தாலும் தங்களின் ஆயுதங்கள் தயாராவதற்குள் அவருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்று பாதுகாப்பு அதிகாரி மேயோவின் கையில் ஒரு கம்பைக் கொடுத்திருந்தார். போலீசு லத்தியைவிட வலிமையாக இருந்த கம்பை மேயோ எப்போதுமே தயார் நிலையில் வைத்திருப்பார். எல்லாத் தயார் நிலைகளையும், முடிவெழுதிக் காத்திருந்த காலம் ஒன்றுமில்லாமலாக்கி விட்டது...’ கன்னிமாராவின் பேச்சின் தொடர்ச்சியில், பென்னி மனத்திற்குள் அடுத்தடுத்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
“மலையின் திருப்பங்களில் உயிரைக் கையில் பிடித்துப் பாதுகாப்பாக அண்ணனைக் கொண்டு வந்துவிட்ட நிம்மதியில் மூச்சு விட்டிருக்கிறார்கள் வீரர்கள். `எதற்கு அச்சத்தில் வெளுத்திருக்கிறீர்கள்? எனக்கொன்றும் ஆகாது. தைரியமாக இருங்கள்’ என்று சொன்னவரின் வார்த்தைகளில் ஆறுதல் கொண்ட சூப்பிரண்டெண்ட், தூரத்தில் அணிவகுத்திருந்த கிளாஸ்கோ, டாக்கா கப்பல்களைப் பார்த்தார். கிளாஸ்கோ கப்பல், வைஸ்ராயின் பயணத்திற்காகப் பிரத்தியேகமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டது. கப்பலுக்குச் செல்ல, நாட்டுப் படகைக் கொண்டுவர உத்தரவிட்டு, மலையின் இரு பக்கங்களும் அடர்ந்திருந்த காட்டின்மீது கவனம் கொண்டார்...” கன்னிமாரா.
‘அப்போதுதான் மேயோவின் இறுதி அவரைக் கைபிடித்து வழிநடத்தியது. படகு அருகில் வருவதற்காக மேயோவைச் சுற்றிவளைத்து நின்றிருந்தவர்களை விலக்கி, இரண்டடி முன்னால் நடந்தார் மேயோ. சுற்றிலும் முகம் பார்க்க முடியாத இருட்டு. மேயோ நடக்கிறார் என்று சுதாரித்து, அவரைத் தொடர்வதற்குள், நீரில் பாறை ஒன்று பொத்தென்று விழுந்த சத்தம். தீவட்டி வெளிச்சத்தைத் திருப்புவதற்குள் சாம்பல் நிற டஸ்ஸர் பட்டு மேலங்கி நீருக்குள் மூழ்கியெழுவது தெரிந்தது. நீருக்குள் மூழ்கிய தலையை உயர்த்திய மேயோ, ‘யாரோ என்னைக் குத்திட்டாங்க’ என்று குரல் கொடுத்தார். உடனிருந்தவர்களின் அச்சம் தீப்பற்றியெரிந்தது நிமிடத்தில். கடலுக்குள் குதித்த வீரர்கள் மேயோவைத் தூக்கினார்கள். அவர் கழுத்தின் பின்புறத்திலிருந்து ரத்தம் பீறிட்டது’ பென்னி நினைவு கூர்ந்தார்.
“எல்லோரும் பதறிக் கூச்சலிட்ட போதும் அண்ணன் நிதானம் தவறவில்லை. எனக்குப் பெரிதாகக் காயமில்லையென்று நினைக்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன் என்று தைரியமாகத்தான் சொல்லியிருக்கிறார். கைக்குட்டைகளைப் போட்டு இறுக்கிக் கட்டியும் ரத்தம் நிற்கவில்லை. அண்ணனுடன் சென்றிருந்த டாக்டர் ஓடிவந்து காயத்தைப் பார்த்திருக்கிறார். ரத்தம் வெளியேறும் வேகத்தைப் பார்த்து அவருக்கு நம்பிக்கை போய்விட்டது. உனக்குத் தெரியுமா பென்னி, அண்ணன் பேசிய கடைசி வார்த்தை என்னவென்று? ‘என் தலையை உயரமாக வையுங்கள்... என் தலையை உயரமாக வையுங்கள்...’ ” - கன்னிமாராவினால் பேச்சைத் தொடர முடியவில்லை.

‘மேயோ இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் படகில் காத்திருந்த லேடி மேயோ, உடன் சென்ற நண்பர்கள் எல்லோரும் உறைந்து நின்றனர். அழுகை, கூச்சல் ஒன்றுமில்லை. கடல் எல்லோருக்காகவும் ஆர்ப்பரித்து அழுதது. வைஸ்ராயின் இறந்த உடலைச் சுமந்து கிளாஸ்கோ கல்கத்தா வந்தது. கல்கத்தா நகரம் துயரத்தில் மூழ்கியது. கல்கத்தாவில் இருந்து பாம்பே, பாம்பேயில் இருந்து வைஸ்ராயின் சொந்த ஊரான அயர்லாந்தின் டப்ளினுக்குக் கொண்டு செல்லப்பட்டது. வைஸ்ராயாக இந்தியாவுக்குக் கிளம்பிய மேயோ, திரும்பி வந்து டப்ளினில் வாழ விரும்பினார். காலமோ அவரின் உயிரற்ற உடலைத்தான் டப்ளினுக்குக் கொண்டு சென்றது. தேன்கூடு போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குள் நுழைந்து வைஸ்ராயைக் கொன்ற அலி அப்ரிதி தான் செய்த படுகொலைக்கு வருந்தவில்லை. சொல்லப்போனால் அவன் பஞ்சாபில் பிரிட்டிஷ் சர்க்காரில் போலீசாக வேலை பார்த்திருக்கிறான். பிரிட்டிஷ் உயரதிகாரியின் பணிவுமிக்க சேவகனாக இருந்தவன், ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக அந்தமானில் சிறை வைக்கப்பட்டவன், சாவதற்குள் பிரிட்டிஷ் உயரதிகாரி ஒருவரையாவது கொல்ல வேண்டுமென்ற வெறியில் இருந்திருக்கிறான். மேயோவின் பயணத்திட்டம் தெரிந்தவுடன் திட்டமிட்டு, நிறைவேற்றியும்விட்டான். விசாரணையில், ஏன் கொலை செய்தாய் என்ற கேள்விக்கு, கடவுளின் உத்தரவினால் கொலை செய்தேன் என்றும் யாருடைய தூண்டுதலும் இக்கொலையில் இல்லை, இக்கொலையில் கடவுளே என் கூட்டாளி என்றும் சொல்லியிருக்கிறான்’ சிந்தனையோட்டத்தில் பென்னியின் மனமும் துயரத்தில் ஆழ்ந்தது.
“அந்தமானில் இருந்த கைதிகளும் அதிகாரிகளும் வைஸ்ராய் அங்கு வருகை தருவதன்மூலம், குற்றவாளிகளின் தண்டனை இடமாக, அச்சுறுத்தல் நிரம்பிய வாழ்விடமாக மாறிய தீவுகளுக்கும் கைதிகளுக்கும் வைஸ்ராய்மூலம் விடிவு வரும் என்று நம்பியிருந்தார்கள். நிலைமை தலைகீழாகப்போனது. எங்கள் குடும்பத்தின் மூத்த மகனை அந்தமானில் தொலைத்துவிட்டோம். என் அம்மாவிற்கு நாங்கள்தான் உலகம், நாங்கள் சிரித்துப் பேசி, நன்றாகச் சாப்பிட்டு, ஆரோக்கியமாக இருந்தால் போதும். மிகவும் மென்மையான உணர்வு கொண்டவர்கள் என் குடும்பத்தினர். எங்களின் அரசியல் ஆர்வம் என் அண்ணனை பலிகொண்டுவிட்டது.”
பென்னி நதிநீரின் ஓசையில் ஆழ்ந்தார். கன்னிமாரா தீவிரமாகப் பேசுவதையும் பென்னியின் முகம் சிந்தனையில் ஆழ்ந்திருப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் பேயத்தேவனுக்கும் மற்றவர்களுக்கும் காட்டின் சிறு அசைவிலும் கண்காணிப்பின் மிருகம் விழி திறந்திருந்தது.
“வைஸ்ராய் மேயோவின் மறைவு துயரச் செய்தியாகி, காற்றில் மறைந்துவிட்டது. தந்தையை இழந்த ஐந்து பிள்ளைகளுக்கு ஈடென்று எதைக் காட்ட முடியும்? உன் தந்தையும் சகோதரனும் சில்லியன்வாலா போரில் இறந்துவிட்டார்கள் அல்லவா?”
“ஆமாம். நம் இருவருக்கும் துரதிர்ஷ்டவசமாய் இழப்பில் ஒற்றுமை இருக்கிறது. சில பிரிட்டிஷ் அதிகாரிகளின் தவறான அணுகுமுறையால் ஆங்காங்கு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்கள். இனி பிரிட்டிஷாரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லைதான்.”
“இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கனவும் இந்தியாவில் கவர்னராகச் செல்வது. ஆடம்பரமான பங்களா, நூறு, இருநூறு வேலைக்காரர்கள், காலனிய தேசங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு என வசீகரிக்கும் ஆடம்பரங்களுக்கு மயங்கி இந்தியா வருகிறார்கள். நானும்தான். இனி நிலைமை எப்படியிருக்குமோ?”
“மக்களின் நலன் பற்றிக் கொஞ்சம் கவனித்து நடந்தால்கூடப் போதும் யுவர் எக்ஸலென்ஸி.”
“இன்று என் அண்ணனைப் பற்றிய எண்ணமே எனக்கு அதையொட்டிதான் வந்தது. ஆர்தர் காட்டன் என் அண்ணனிடம் பரிந்துரைத்த திட்டத்தில் இந்தப் பெரியாறு திட்டமும் ஒன்று. அண்ணன் இறந்து பதினைந்தாண்டுகள் கழித்து, நானே திட்டத்தினைத் தொடங்கி வைக்க வருவேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.”
“ஆனால் நான் சமீபத்தில் சந்தித்தபோது, கடவுளே வந்தாலும் பெரியாற்றில் அணை கட்ட முடியாது என்று என்னிடம் சொன்னார்.”
“இந்த மலைச் சூழலையெண்ணி அப்படிச் சொல்லியிருப்பார். அண்ணனின் டைரியில் ஆர்தரைப் பற்றிப் புகழ்ந்து எழுதியிருக்கிறார். இங்கிலாந்து ஏகாதிபத்தியம் தன்னுடைய வருவாய் வழிகளிலிருந்து பாசன வருவாய்க் கணக்கை முதலில் விடுவிக்க வேண்டுமென்பதே ஆர்தரின் ஆலோசனை. அணை கட்டினால் ஒரு லட்சம் ஏக்கருக்குத் தண்ணீர் கொடுக்கலாம், ஒரு லட்சம் ஏக்கருக்கான நில வருவாய் ஆறேழு லட்சம் எனக் கணக்கிடக் கூடாது. நீர்ப்பாசனத்திற்குச் செலவு செய்வது சர்க்காரின் கடமை. பாசன வசதிகளின் அடிப்படையில்தான் மாவட்டங்களைப் பிரிக்க வேண்டுமென்பதும் காட்டனின் ஆலோசனையாம். பெரியாறு அணை கட்டுவதுதான் கடினம். கட்டி முடிக்கப்பட்டால் மதுரா கண்ட்ரிக்கு நிரந்தரத் தீர்வு என்று வைஸ்ராய்க்கு எழுத்து மூலமாகக் கொடுத்திருக்கிறார்.”
“லார்டு மேயோ உயிரோடு இருந்திருந்தால் ஒருவேளை இந்த அணை பதினைந்தாண்டுகளுக்கு முன்பே கட்டிமுடிக்கப்பட்டிருக்கலாம். எத்தனையோ மாமனிதர்களின் பரிந்துரைகள் இந்தப் பெரியாறுக்குப் பின்னால் இருக்கிறது. மேற்கு நோக்கியோடும் நதியைக் கிழக்கு நோக்கித் திருப்ப கடவுளின் கிருபை வேண்டும்.”
“உனக்குப் பூரண கிருபை இருக்கு பென்னி. தயக்கமே வேண்டாம். எத்தனை முறை முயன்றாய் என்று கணக்கில் கொள்ளாதே. ஒரே ஒருமுறை வென்றுவிடுவாய் என்பதை மட்டும் கருத்தில் கொள்.”
“யுவர் எக்ஸலென்ஸி...” பென்னி வார்த்தையின்றித் தடுமாறினார்.
“என் அண்ணன் மேயோவின் பெயரை வட இந்தியா முழுக்க பல கட்டடங்களுக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால் என் அண்ணனின் ஆன்மா எங்கிருக்கும் தெரியுமா பென்னி?”
எங்கிருக்கும் என்று கேட்பதுபோல் பென்னி, கன்னிமாராவைப் பார்த்தார்.
“அந்தமானின் ராஸ் தீவில், அவர் இறந்து ஓராண்டுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ஸ்வாலோடெயில் வண்ணத்துப்பூச்சிக்கு அவரின் நினைவாக மேயோ வண்ணத்துப்பூச்சி என்று பெயரிட்டிருக்கிறார்கள். அவரின் விடுதலையுணர்வு அந்த வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளில்தான் இருக்கும். ஆன்மாவின் விடுதலையென்பது ஞானிகளுக்கு உலக வாழ்வைத் துறத்தல் என்றிருக்கலாம். ஆனால் நம்மைப் போன்றவர்களுக்கு நாம் செய்யும் காரியங்கள்தான் ஆன்மாவின் விடுதலை. பெரியாறு அணைதான் இந்த வாழ்வில் உன்னைப் பிணைத்து வைத்திருக்கிற பந்தம்.”
மின்மினிகள் கூட்டம் மேலெழுவதைப் பார்ப்பதுபோல் பென்னிக்கு உடல் சிலிர்த்தது. சரியாகச் செய்யப்படும் செயலே, மானுட வாழ்வின் விடுதலையென்ற ஞானம், கன்னிமாராவுக்கும் பென்னிக்கும் பேரியாற்றின் கரையில், இரண்டாம் சாமத்தின் முடிவில் வந்தது.
இரவு முழுக்கக் கண் மூடாமல் இருந்திருந்தாலும் முகத்தில் சோர்வின்றி இருந்த கவர்னர் கன்னிமாரா, அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் விடைபெற்றார். விடியலில் நதிக்கரையின் மரக்கிளைகளை வெட்டிச் சாய்க்கப் புறப்பட்டிருந்தவர்களையும் பேயத்தேவன் ஒன்று திரட்டியிருந்தான்.
“நேற்றிருந்தவர்கள் எல்லாரும் இருக்கீங்களா?” அச்சத்துடன் தன் முன்னால் நின்றிருந்தவர்களைப் பார்த்துக் கன்னிமாரா கேட்டார்.
பதில் சொல்லாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
காலையிலேயே மேலங்கி அணிந்து சந்தனம் துலங்கும் நெற்றி, வெற்றிலையில் சிவந்த உதடுகளுமாக ரத்தினம் பிள்ளை முன்னால் வந்து நின்றார்.
“யுவர் எக்ஸலென்ஸி... என்னோட பேர் ரத்தினம் பிள்ளை. ரெவென்யூ டிபார்ட்மென்ட்ல குமாஸ்தாவா இருக்கேன். மொத்தம் இருநூத்துப் பத்து முழுக் கூலி, அஞ்சு அரைக் கூலி நேத்து இருந்தாங்க. இன்னைக்கு இருபது முழுக் கூலியும் ரெண்டு அரைக் கூலியும் ஓடிட்டாங்க யுவர் எக்ஸலென்ஸி.”
“ஏன் போயிட்டாங்க?” கன்னிமாரா.
“ராத்திரியில காட்டு மரங்க ஒவ்வொன்னும் பேயாட்டம் ஆடுதாம். குடிசைகூட இல்லாத இந்தக் காட்டுல ஒருத்தரும் உசுரோட இருக்க முடியாதாம். ஆனைக வந்தா ஒரு மிதிக்குத் தாங்க மாட்டோம்னு பேசிக்கிட்டாங்களாம். ஆனா எப்ப போனாங்கன்னு யாருமே பாக்கலை தொர.”
கன்னிமாரா பென்னியைப் பார்த்தார். பென்னி சுற்றிலும் நின்ற கூலிகளைப் பார்த்தார். மரங்களை வெட்டி அணை கட்டப்போகும் இடத்தை ஒழுங்கு செய்ய ஐந்நூறு கூலிகளுக்குமேல் வந்தார்கள். பதினைந்து நாளில் ஒவ்வொரு இரவு முடிந்தும் சிறு கூட்டம் காணாமற்போவது வழக்கமாக இருந்தது.
நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவர் கண்ணிலும் காட்டின் அச்சமும் குளிரும் உறைந்திருந்தன. இரண்டு மடங்கு கூலி என்ற மந்திரம் செயலிழந்து நின்றிருப்பதையும் பென்னி கவனித்தார்.
“பிள்ளை...” பென்னி அழைத்தார்.
“உங்களின் அனுமதியில்லாமல் எப்படிப் போறாங்க?”
“சுவரா கதவா, என்ன இருக்கு தொர, பிடிச்சு நிறுத்த? திறந்த காடு. பாதை அவங்க போறதுதான். நம்மள கேக்கணும்னு நினைக்க மாட்டாங்க தொர. குழந்தை குட்டிகள வச்சிருக்கிறவங்க, காட்டப் பாத்து பயந்துபோயிருப்பாங்க. அதுவும் நடுக்காட்டுல கித்தானுக்குள்ள தங்குறது சாதாரணமான விஷயம் இல்லையே?”
“யெஸ் பென்னி... கூடாரம், காடு, மலை இதெல்லாம் நமக்குப் பழக்கமாயிடும். இந்த ஜனங்களுக்கு கஷ்டம்தான். பார்ப்போம். மனசைத் தளரவிடாதே.”
“தொர...” பென்னியும் கன்னிமாராவும் ஒரே நேரத்தில் திரும்பினர்.
“என் கையைப் பாருங்க தொர. அடுப்பெரிக்க காட்டுல முள்ளு வெட்டிக்கிட்டுப் போவேன். இங்க பத்தாளு ஒசரம் இருக்க காட்டு மரத்த வெட்டச் சொல்றாங்க. கை பொத்துப் போயிடுச்சு. வேல அலுப்புல படுத்தா தூங்க முடியல தொர. ராப் பூரா தண்ணி சளசளன்னு ஓடுற சத்தம் காதக் கொடையுது. தண்ணி சத்தம் கிறுக்குப் புடிக்க வைக்குது. என்ன அனுப்பிடுங்க தொர” மூன்று வயதுக் குழந்தையை இடுப்பில் சுமந்திருந்த பெண் சொல்லும்போதே கதறி அழுதாள்.
“தொர, கடுவா வாயில கடிச்சி என்னத் தூக்கிக்கினு போற மாதிரியே திக் திக்குனு இருக்கு தொர. தூர இருந்து தெனம் பார்த்த மலைதான். அழகி வேஷம் போட்டு ராட்சசி ஆவுற பொம்பள கதை மாதிரி இருக்கு இந்த மலை, ஆன்னு வாயத் தொறந்து என்னை முழுங்கிற மாதிரியே கெட்ட கனாவா வருது” நோஞ்சான்போல் இருந்த கூலி மடங்கி உட்கார்ந்து அழுதான்.
சூரியன் கிழக்கின் மேலேறி வெப்பம் பரவிய அறிகுறி துடைத்து, திடீரென்று அடித்துப் பெய்யத் தொடங்கியது மழை. கூடாரத்தின் கித்தானைக் காற்று ஆக்ரோஷமாகத் கிழித்தது.
காட்டு மரங்களைப்போல் அசையாமல் மழையில் நின்றார்கள் எல்லோரும்.
- பாயும்