மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 52 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

தூரத்தில் புல் கடித்துக்கொண்டிருந்த கேழையொன்று, இருவரையும் பார்ப்பதும் புல்லொன்றைக் கடிப்பதுமாக இருந்தது.

நீர்க்கசிவின் தடம் தாங்கி, தனித்துத் தெரிந்த பாறையிடுக்கில் சாய்ந்திருந்தாள் பார்வதி. பார்வதியின் விழியிரண்டில் மையம் கொண்டிருந்த பேயத்தேவனின் பார்வை, அவளின் கருவிழிக்குள் தெரிந்த தன் உருவத்தை ரசித்துக்கொண்டிருந்தது.

அவளின் அசைவைக் கட்டுப்படுத்துவதுபோல் இரண்டு தோளையும் ஒட்டி, அவன் உள்ளங்கை பதிந்திருந்தது.

விழிக்குள் கிடந்த தன் பிம்பத்தின்மேல் பொறாமை கொண்ட பேயத் தேவன், பிம்பத்தை விரட்டி, தானந்த இடத்தைப் பிடித்துவிடும் முயற்சியில் பார்வதியின் இமைமீது இதழ் வைத்தான். கதவுகளைச் சாத்திக்கொண்டால், விழிகளுக்குள் அவன் நுழைய முடியாதென்று தப்புக்கணக்குப் போட்டன விழிகள். பேயத்தேவன் பார்வதியின் இமைகளில் இருந்து கீழிறங்கி, இதழ் பற்றியபோது திறந்துகொண்ட விழிகளில் இரண்டு மயங்கிய விழிகளே சிக்கிக்கொண்டன.

நீரதிகாரம் - 52 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

எங்கோ தூறிக்கொண்டிருக்கும் சிறு மழையைக் கொண்டுவந்த காற்று, அவர்களின்மேல் பூத்தூவலாய்ச் சிதற விட்டது. காய்தலும் உலர்தலும், வெயிலும் மழையும் பனியுமென்று கிடக்கும் பாறை, காட்டின் அங்கமாய் இருவரையும் குளிர்வித்தது.

பூக்களின் மதுரம் பருகிய வண்டுகள்போல், இதழின் மதுரம் பருகி, மயங்கிய இருவரும் பிரிவதறியா மோனத்தில் திளைத்தார்கள்.

தூரத்தில் புல் கடித்துக்கொண்டிருந்த கேழையொன்று, இருவரையும் பார்ப்பதும் புல்லொன்றைக் கடிப்பதுமாக இருந்தது. மரங்களின் சலசலப்பு கூடுவதைப் பார்த்த, சுழன்றடித்த காற்றும் தன் வேகம் குறைத்தது. புடைத்த முதுகுடனும் மெலிந்த உடலுடனுமிருந்த உடும்பொன்று அவர்களின் அருகில் கடந்தது. காடு மௌனம் கொள்ளவும் கலைக்கவும் காரணம் கண்டறிந்துவிட முடியாதென்றாலும், இப்போது பேயத் தேவன் – பார்வதியின் முத்தத்தின் மோன தவத்தைக் குலைத்துவிடாத புரிதலில் மௌனம் காத்தது. மௌனத்தை உடைப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் இருப்பார்கள்தானே? பழுப்பு நிற எறும்பொன்று பார்வதியின் இடதுகால் சிறு விரலில் கடிக்க, விருட்டென்று காலை உதறினாள் பார்வதி. ஞானியின் தவங்களையே கலைத்த புராணப் பெருமைகள் கொண்ட எறும்புகள், காதல் தவத்தைக் குலைக்கவும் தயங்குவதில்லை.

மயக்கம் தீரா விழிகளும் நினைவுகள் குழம்பிய இதயமுமாகப் பார்வதி சூழலைப் பார்த்தாள். தூரத்தில் கூலிகள் மரங்களை வெட்டும் சத்தம் காதில் விழுந்தது. நினைவுகளை அழித்து அமைதி கொள்ளத்தான் மூளை நேரமெடுக்கும். விழித்துக்கொள்ளும் மூளை எள்ளளவு நாழிகையில் ஆயுள் பரியந்தம் சேகரித்த நினைவுகள் எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டிவிடும். நினைவுக்குத் திரும்பிய பார்வதி, தங்களை யாரும் பார்க்கிறார்களோ என்று பதறினாள். சுற்றிப் பார்த்தாள்.

“ஒருத்தரும் நம்மள பாக்க முடியாது புள்ளே... பாறையைப் பாரு. நமக்குக் கொடை புடிச்ச மாதிரி நிக்குது” என்று சொல்லிக்கொண்டே பார்வதியை அணைக்கப் போனான்.

“தொர வர்றார்...” பார்வதி சொன்னவுடன் பேயத்தேவன் அலறிப் பின்வாங்கினான்.

சிரித்துக்கொண்டே தலைமுடியைச் சரிசெய்த பார்வதி, “போலாம் வா. மரத்தை வெட்டச் சொன்னா, நீ என்ன செய்யறேன்னு தொர கோவிக்கப்போறார்” என்றாள்.

“தொர என்ன கோவிக்க மாட்டார். எனக்கும் சேர்த்துப் பத்தாளு வேலை செய்யுதே?”

“நீ என்ன வேலை செய்யுற?”

“இந்தக் காட்டுல தனியா நிக்க முடியுதா? உன்கிட்ட ஒட்டிக்கிட்டு நின்னாத்தான் கதகதப்பா இருக்கு.”

“அதுக்குத்தான் என் ஆத்தா என்னை மேல்மலைக்கு வரக்கூடாதுன்னு சொல்லுச்சி.”

“ஒன் ஆத்தாவையும் ரோசனையா கூட்டிக்கிட்டு வந்துட்டோம்ல...”

“ஒன் பேச்சுக் கேட்டு வரல. குமாஸ்தா வந்து கூப்டதால வந்துச்சி. பேச்ச விட்டுட்டு ஜோலியப் பாப்போம் வா.”

பார்வதி வேகமாக முன்னால் சென்றாள். அவளின் அடியொற்றி நடந்தான் பேயத் தேவன்.

கம்பம், கூடலூர், உத்தமபாளையம், அல்லிநகரம், உசிலம்பட்டி பகுதிகளுக்கெல்லாம் சென்று மேல்மலை அணை வேலைக்கு வர ஆள்களைக் கூப்பிட்டார்கள், மதுரை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாக்கள். பெரியகுளம் போலீசு, கண்ணில் படுகிறவர்களையெல்லாம் உருட்டி மிரட்டி ஆள்களைப் பிடித்தனுப்பினார்கள். ஆண்களுக்கு ஒரு நாளைக்கு எட்டணா, பெண்களுக்கு நாலணா, பையன்களுக்கு மூனணா என்று சொன்னவுடன், குடிகள் வேலைக்கு வர நான், நீயென்று முன்வந்தார்கள். குடும்பத்துடன் வந்தால், தங்குவதற்குத் தனிக் குடிசை போட்டுக்கொள்ளலாம் என்ற சலுகையைக் கேட்டு, சம்சாரிகள் குழந்தை குட்டிகளுடன் மேல்மலைக்குக் கூட்டம் சேர்ந்தனர்.

ஜமீன்தார்களும் மிராசுதாரர்களும் தங்களின் பண்ணைகளில் வேலை செய்யும் கூலியாள்களை, “எட்டணாக் கூலிக்கு ஆசைப்பட்டு அணை வேலைக்குப் போனீங்கன்னா, திரும்பி வந்து ஊர்ல கால் வைக்க முடியாது” என்று மிரட்டினர். வருஷம் முழுக்க நிலத்திலும் வீட்டிலும் ஆடு மாடுகளைப் பார்த்துக்கொள்வது அவர்கள்தான். ஒவ்வொரு போகம் அறுவடை முடியும்போது, அந்த நேரத்திற்குக் கைக்கு என்ன தாராளம் வருகிறதோ அந்த அளவுக்குத் தானியங்களை அள்ளித் தருவார்கள். அதுதான் கூலி. வேலைக்குப் பணமோ, காசோ கிடைப்பது அரிது. ஒரு நாளைக்கே எட்டணாக் கூலி என்ற வார்த்தை சம்சாரிகள் நாவில் இனிப்பூறச் செய்தது. அணை கட்டி முடித்த பிறகு, வேலைக்கு எங்கு போவது? மீண்டும் பண்ணைக்குத்தானே திரும்ப வேண்டும்? சேவகத்துக்கு வைத்துக்கொள்ளாமல் விரட்டி விட்டால் எங்கு போவதென்று பயந்து, பண்ணைகளில் இருந்த சம்சாரிகள் மௌன அழுகையுடன் மேல்மலையின் வேலையை மறந்தார்கள்.

பண்ணைகளிடம் இல்லாமல் உதிரிகளாக ஊரில் இருந்த பத்திருபது ஆள்களுக்குப் பெயருக்குக் கால் காணி, அரைக் காணி என்றிருந்த நிலத்தை விட்டுவிட்டு அணை வேலைக்குச் செல்வது இயலாத காரியம். ஒவ்வொருவருக்கும் கால்கட்டுப் போட்டதுபோல் வீட்டில் இருந்த கன்று காலிகள் ஒருபக்கம். மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல, ஓட்டி வர ஆள் இல்லாமல் நடக்காது என்று, வருவதற்கு விருப்பமிருந்தாலும் முடியாமல் திணறினார்கள்.

குடும்பம், குழந்தை குட்டி இல்லாமல் ஊரில் தான்தோன்றியாகத் திரிந்து கொண்டிருந்தவர்கள்தான் மேல்மலைக்கு வருவதற்குச் சம்மதித்தார்கள். வேளைக்குச் சாப்பாடு, ஒரு நாளைக்கு எட்டணா என்பது மண்ணில் சொர்க்கமாக இருந்தது. ஒவ்வொரு ஊருக்குள்ளும் இருந்த பத்திருபது தான்தோன்றிகளைச் சேர்த்துப் பிடித்தார்கள் வருவாய்த்துறையினரும் காவலர்களும். “நான்தான் ஆளைப் பார்த்தேன்” என்று வருவாய்த்துறையும், “எங்க மிரட்டல்லதான் அவனுங்க வேலைக்கே வர்றானுங்க” என்று போலீசும் போட்டி போட்டன. ஒருமுறை ஆள்பிடித்துக் கொடுத்துவிட்டால் தங்களின் வேலை முடிந்துவிட்டது என்று இரண்டு துறைகளும் ஓடியாடி வேலை செய்ய, “முதல் நாள் அனுப்பிய நூறு பேரில், அடுத்த நாள் ஐம்பது பேர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார்கள், உடனடியாக மீண்டும் நூறு பேர் வேண்டும்” என்று வரும் தகவலில் சலிப்படைந்தார்கள். பொதுப்பணித்துறையினர் வேலைக்கு ஆள் கூப்பிட ஊருக்குள் வந்தாலே, தீர்க்கப்படாமல் இருக்கிற கண்மாய், வாய்க்கால், வரப்பு தாவாக்களைத் தீர்க்கச் சொல்லி, விண்ணப்பங்களுடன் மொய்த்தார்கள் சம்சாரிகள். அதிகாரிகளின் கூச்சல்கள் விரயமாயின.

நீரதிகாரம் - 52 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

ஒற்றையடி மண்பாதை மட்டுமே போடப்பட்டிருந்த மேல்மலைக்கு அணை கட்ட ஆள்களை அழைப்பது நாளுக்கு நாள் சவாலாக மாறியது. தங்குவதற்குக் குடிசைகள் தயாராகவில்லை. பேரியாற்றின் கரையில் இருக்கும் புதர்களையும் புற்களையும் உயர்ந்தோங்கி நிற்கும் காட்டு மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்திய பிறகு, அந்த இடத்தில்தான் குடிசைகள் எழுப்ப வேண்டும். வெட்டி வீழ்த்தும் மரங்களும், மலைகளில் இருந்து உடைத்தெடுக்கும் கற்களும் வந்த பிறகே குடிசைகள் கட்ட முடியும். அதுவரை கித்தான் கூடாரங்களை அமைத்திருந்தார்கள். கம்புகளை ஊன்றி, சுற்றிலும் துணிகளைச் சுற்றி, மேல்கூரைக்கு யானைப்புற்களைப் பரப்பிய குடிசைகளை ஒன்றிரண்டு நாள்களில் காற்று பிய்த்தெறிந்துவிட்டுச் சென்றது.

பென்னியும் இன்ஜினீயர்களும் சர்க்காரின் முயற்சிகளுக்கு இடையில், ரத்தினம் பிள்ளை, பேயத்தேவன், ராவுத்தர், அனுமந்தன்பட்டி பாதிரிகள் மூலம் ஆள்களைச் சேர்த்தார்கள். காட்டின் அசௌகரியங்கள் ‘ஒரு நாளுக்கு எட்டணாக் கூலி’ என்ற வசீகரத்தை வலுவிழக்கச் செய்தன.

கூடலூரிலும் கம்பத்திலும் தன் சகாக்கள் மூலம் பேயத்தேவன் ஆள்களைத் திரட்டியிருந்தான். பெண்ணாள்கள் வேலைக்கு வந்தால் மற்றவர்களின் அச்சம் குறையுமென்று பேயத்தேவன் ஊரில் இருக்கிற பெண்களையெல்லாம் வேலைக்கு அழைத்து வந்தான். காடு மேட்டுக்கு வீட்டாம்பளைகள் வேலைக்குச் சென்றால், வீட்டு வேலைகளையும் மாடு கன்றுகளையும் பார்த்துக்கொள்ளும் பெண்ணாள்கள் வேலைக்கு வரச் சம்மதித்ததில் அவன் யோசனை வெற்றியடைந்தது. பார்வதியும் அவள் அம்மாவும் முதல் நாளில் இருந்தே வேலைக்கு வந்துவிட்டார்கள்.

பார்வதியும் பேயத்தேவனும் வருவதைப் பார்த்த முங்கிலித்தேவன், வெட்டுவதை நிறுத்தினார். ஐந்தாள் உயரமிருந்த மரம், பாதி வெட்டுப்பட்டிருந்தது. தனியாளாக பருத்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்.

“என்ன பெரிய மனுஷா, காலையிலேயே காலார நடக்கிறாப்ல இருக்கு?”

“இல்ல நல்லப்பூ, சும்மாதான்...”

“நல்லப்பனுக்குத் தெரியாத ரகசியம் என்ன இருக்கப்பூ? ஒன் கூட்டாளிப் பயலுக கண்டுபிடிக்காததக்கூட நல்லப்பன் கண்டுபிடிச்சுடுவேன், தெரியும்ல?”

“பெரியாம்பளையா ஜோலியப் பாப்பியா? சின்னஞ்சிறுசுகள மோப்பம் பிடிச்சிக்கிட்டுத் திரிவியா?” பேயத்தேவன் கேட்டவுடன், முகம் தொங்கிப்போன முங்கிலித்தேவன், பாதியில் விட்டிருந்த மரத்தை ஓங்கி வெட்டினார். வெட்டு முன்பைவிட ஆழமாக விழுந்தது.

“வேணும்னா நல்லப்பனைக் கூட்டுக்காரன்னுவாங்க, வேணாம்னா பெரியாம்பளைன்னு ஒதுக்கி வைப்பாங்க. இந்தப் பேய்ப் பய மட்டும் இதுல விலக்கா என்ன?’ மனசுக்குள் பொருமினார்.

பார்வதி சற்று தூரம் கடந்தபின், பேயத் தேவன் சித்தப்பனிடம் வந்தான்.

“உடனே மூஞ்சி செத்துப்போயிருவியே நல்லப்பூ? அந்தப் பிள்ளையை வச்சிக்கிட்டே என்னைய எடக்கு மடக்கா கேட்டினா, நாள பின்ன உன் முன்னாடி வந்து நிக்குமா? அந்தப் பிள்ளைக்கு மாமனார்தானே நீ, கூறு வேணாமா?”

“என் வகுசிக்கு என்னா கூறு இருக்கப்போது? வஸ்தாது மாதிரி ஒடம்ப வளத்ததுக்கு இப்போ பிரயோஜனப்படுறேன். ஆயுசுல வேறென்னத்த நான் பாத்தேன்.”

“சரி நல்லப்பூ... இங்க பாரு, ஒம் மருமக பார்வதி ஏத்திவிட்டுட்டுப் போன மனசுல தண்ணி ஊத்துற, பாத்தியா?”

“சரி அப்பு, சரி அப்பு... மருமக தம்மையான புள்ள மாதிரிதான் தெரியுது” என்று இயல்புக்குத் திரும்பினார் முங்கிலித்தேவன்.

தவ்வித் தவ்வி, கையில் தட்டான் ஒன்றைப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தான் பனையேறி கிறுக்கன். பேயத்தேவன் அவனைப் பார்த்தான். கிழிந்து தொங்கிய ஆடையில், செம்பழுப்பு ஏறியிருந்தது. செம்பட்டைத்தலை வறண்டு, சகதியேறிய புற்கட்டைப் போலிருந்தது.

“ஆள் முங்குற அளவுக்குத் தண்ணி ஓடுது. நீ தேய்ச்சிக் குளிக்கக்கூட வேணாம். சும்மா விழுந்தெழுந்தாகூடப் போதுமேடா கிறுக்கா?” முங்கிலித்தேவன் கடிந்தார்.

“நல்லப்பூ, இனி கிறுக்கான்னு சொல்லாதே, பாவம். இவென் பேர் என்ன? பெரியகுளம் போலீசு ஸ்டேஷன்ல பார்த்தது... எப்படியோ பத்துப் பேரைச் சேர்த்துக்கிட்டு வந்துட்டானே?”

“இல்ல சாமி, இவெனை அந்த இன்ஸ்பெக்டர் தர்மராஜ்தான் வேணும்னு அனுப்பிட்டாராம். போலீசு பண்ற அழும்புங்களைப் போற வர்றவங்க கிட்டல்லாம் சொல்றானாம். அதான் மலைக்கு வெரட்டி வுட்டுட்டாராம்.”

“இவன் இருக்கிறது நல்லதுதான், வேலை செய்ற அலுப்பிருக்காது” என்ற பேயத்தேவன், பனையேறி கிறுக்கனிடம், “ஒம் பேர் என்ன?” என்றான்.

“பனையேறி...” ஈயென்று பல்லைக்காட்டிச் சிரித்தான்.

“பனையேறிதான். ஒம் பேர் என்னான்னு தெரியாதா?”

“பனையேறி... கச்சேரில கூப்பிடுவாங்க.”

“பாரு நல்லப்பூ, போலீஸ் ஸ்டேஷனைக் கச்சேரின்னு சொல்லத் தெரிஞ்சிருக்கான், ஆனா அவெம் பேர் தெரியல.”

“தெரியாட்டினா என்ன? நாம பேர் வச்சிட்டாப் போது.”

முங்கிலித்தேவனும் பேயத்தேவனும் யோசித்தார்கள். பனையேறியும் சேர்ந்து யோசித்தான்.

“ஒனக்கு என்னா பேர் வேணும்? என்னா பேர் புடிக்கும்?” கேள்வி கேட்ட பேயத்தேவனைப் பார்த்தான் பனையேறி.

“சாமி... சாமிதான் புடிக்கும்.”

இருவரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

“சாமியா?” பேயத்தேவன்.

“சாமி...” என்று மேலே கையெடுத்துக் கும்பிட்டான்.

“நல்ல பேர்தான் நல்லப்பூ. எல்லாச் சாமியும் ஒரே சாமியில கூப்பிட்டுக்கலாம்.”

“இனிமே ஒம்பேர் சாமி, சரியா? சாமின்னு கூப்ட்டா வரணும்.”

புதிதாக மகுடம் சூட்டியதுபோல் துள்ளிக் குதித்து ஓடினான் பனையேறி என்கிற சாமி.

பென்னியும் இன்ஜினீயர்களும் அகன்ற பாறையில் உட்கார்ந்திருந்தார்கள். இரவின் குளிர் முற்றிலும் விலகி, சுள்ளென்ற வெயிலில் வியர்வை முதுகில் வழிந்தது. ஐந்தடி தூரத்தில் ஆறு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. நீரின் தண்மையை மிஞ்சி வெப்பம் காற்றில் பரவியிருந்தது.

“கூலிகள் ஓடிப்போவதைக் கட்டுப்படுத்த வேண்டும் பென்னி. இல்லைனா தினம் தினம் மேஸ்திரிகளை அனுப்பி கூலிகளைப் பிடித்து வரும் வேலையைத்தான் செய்ய வேண்டியிருக்கும்.”

“கூலிகளைத் தடுத்து நிறுத்த முடியாது லோகன். பத்து நாளாய் வேலை நடக்குது. பத்திருபது குடிசை போடுவதற்குக்கூட மரம் கிடைக்கலை. எல்லாம் புல்லையும் புதரையும் வெட்டிட்டு, எங்கயாவது பாறையைப் பார்த்துப் படுத்துடுறாங்க.”

“மதியத்துக்கப்புறம் யாரும் வேலை செய்யறதில்ல பென்னி. வானம் இருண்டுகிட்டு வந்தா போதும், அப்படியப்படியே ஓடிடுறாங்க.” டெய்லர்.

“வேறொரு யோசனை செய்யலாம். தினம் கொடுக்கும் கூலியை, அந்தந்த சீசன் முடிந்த பிறகு கொடுக்கலாம். ஒரு சீசனுக்கு வந்தால் நாற்பது, அம்பது நாள்தானே வேலை இருக்கப் போகுது? சீசன் முடிந்தால்தான் கூலி என்று சொல்வோமா?” பென்னி கேட்டார்.

“நல்ல யோசனைதான். ஆனால், கூலிகளைக் கூட்டிக்கிட்டு வரும் மேஸ்திரிங்க என்ன பேசிக் கூட்டிக்கிட்டு வர்றாங்களோ?” லோகன்.

“என்ன சொல்லியிருந்தா என்ன? கூலியைக் குறைக்கவா போறோம்? சேர்த்து வச்சுத்தானே தரப் போறோம்? மொத்தமாக் கொடுத்தா அவங்களுக்குப் பெரிய தொகையா இருக்கும்.”

“பென்னி சொல்வது சரிதான். ராத்திரியானால் ஓடிப்போகிறவர்களைக் கட்டுப்படுத்தலாம்” டெய்லர்.

“இந்த சீசன் முடியப்போகுது. நவம்பர் வந்தா காட்டுக்குள்ள இருக்க முடியாது. மரத்தை வெட்டி விட்டிருக்கிற இடமெல்லாம் மூன்று மாதம் கழித்து வந்து பார்த்தால் எப்படியிருக்கும்னு தெரியல. புதுசா வேலையை ஆரம்பிக்கிற மாதிரிதான் இருக்கப் போகுது” பென்னி.

பென்னியும் இன்ஜினீயர்களும் பேசிக்கொண்டிருக்கும் இடத்தை நோக்கி, எஸ்தரும் பாதிரியார் ராபர்ட்டும் வந்தனர்.

``ஸ்தோத்திரம் பாதர்...” பென்னியும் இன்ஜினீயர்களும் சொன்னார்கள்.

“கடவுளின் கிருபை உண்டாகட்டும்.” மூவரையும் ஆசீர்வதித்த பாதிரியார், அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்தார்.

“எஸ்தர், எவ்வளவு தைரியமா மலைக்குக் கிளம்பி வந்திருக்காய்? ஆச்சரியம். உங்களுக்குத் தெரியுமா பாதர், எஸ்தர் வரலைன்னா எங்களைச் சிறுத்தை அடித்திருக்கும்.”

“அனுமந்தன்பட்டியில் எஸ்தரைப் பார்த்தபோது கொடைக்கானலில் நடந்த சம்பவத்தைச் சொன்னாள். எஸ்தர் இரண்டு குணங்களும் கொண்ட பெண். துணிச்சலும் சாத்வீகமும் கொண்டவள். வாழ்க்கையின் துயரங்கள் எஸ்தருக்குத் துணிவைத் தந்திருக்கிறது. எஸ்தர் கற்றிருக்கிற கலை சாத்வீகத்தைத் தந்திருக்கிறது” பாதிரி ராபர்ட்.

எஸ்தர் மற்றவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அமைதியாக நின்றாள்.

“பென்னி, உங்களைப் பார்க்க வந்த காரியத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். அதுதான் என் வழக்கம். வந்த காரியம் முடியவில்லையென்றால் மனம் அதிலேயே இருக்கும்.”

“சொல்லுங்க பாதர்.”

“ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னர் கன்னிமாரா வந்து சென்றதற்கு முன்பும் பின்பும் நான் கவனித்துக்கொண்டுதானிருக்கிறேன். வேலையைத் தொடங்கிவிட்டீர்களே தவிர, வேலை வேகமாக ஓடவில்லை. கரையோரத்தில் இருக்கிற மரம் செடி கொடிகளை அப்புறப்படுத்தவே திணறிக்கிட்டிருக்கீங்க. எந்தக் காரியமும் நல்லவிதமா நடக்கணும்னா அந்த இடத்தில் முதல்ல தேவன் குடியேறணும். தேவன் குடியேறினாத்தான் தேவனுடைய கிருபை அங்கிருக்கிறவங்களுக்குப் பூரணமா கிடைக்கும். இந்தக் காடு மேடு மலையில் இருந்துக்கிட்டு, ஜனங்க வேலை செய்யிறது மனுஷ முயற்சி மட்டுமல்ல. அதுக்குத் தேவனுடைய கிருபை வேணும்.”

“தேவனின் கிருபை எல்லா இடத்திலும்தான் இருக்கே பாதர்?” டெய்லர்.

“தெய்வம் இருக்கு. இங்க இருக்க செடி, கொடி, புழு, பூச்சியெல்லாமும் தெய்வத்தோட அம்சம்தான். ஆனா, தேவனைக் குடியேற்றி, தேவனுடைய கிருபையைப் பெறணும்னா அதுக்கு முதல்ல இங்க சின்னதா தேவாலயம் கட்டணும்.”

“என்ன பாதர் நீங்க? ஜனங்க இருக்கிறதுக்கே குடிசை போட முடியலை. கூடாரத்தைப் போட்டு குளிர்ல நடுங்க வச்சிக்கிட்டிருக்கோம்” டெய்லர்.

“தேவனைக் குடியேத்துங்க முதல்ல. அவர் ஜனங்களப் பார்த்துப்பார்.”

“என்ன செய்யணும் பாதர்?”

“வர்ற ஜனங்கல்லாம் கால் நிக்காம ஓடிப் போறாங்க. இருக்கிறவங்களும் சரியா வேலை செய்யலை. முதல்ல இங்க ஒரு தேவாலயத்தைக் கட்டினோம்னா, நமக்குத் தேவனின் பூரண கிருபை கிடைக்கும். எல்லாருக்குமே நெஞ்சுக்குள்ள விளக்கேத்தி வச்சது மாதிரி தெளிவு பிறக்கும்.”

“தேவாலயம் எங்க கட்டுவீங்க? இன்னும் எந்தெந்த இடம் எதெதுக்குன்னு முடிவு செய்யலை. ஆத்தோட கரையில கூலிக தங்குறதுக்குக் குடிசைகள் கட்டணும். நடுவில் எங்கு தேவாலயம் கட்டுவீங்க?”

“மிஸ்டர் பென்னி, முதல் இடத்தை இறைவனுக்கு என்று ஒதுக்கிக் கொடுங்க. மற்றதெல்லாம் தானா நடக்கும். பெரிசா யோசிக்கவோ, தயங்கவோ ஒன்னுமில்லை.”

“நீங்க எப்படிச் செய்யலாம்னு யோசிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க பாதர்...”

“அதோ பாருங்க பென்னி...” அவர்கள் இருந்த பாறையை அடுத்திருந்த சிறிய குன்றைக் காட்டினார் பாதிரியார். பென்னியும் இன்ஜினீயர்களும் வேலையாள்களும் இருப்பது ஆற்றின் இடப்பக்கக் கரையோரம். வலப்பக்கம் நதியின் நீரை வெளியேற்றுவது பென்னியின் திட்டம். இதற்கிடையில் எங்கு கோயில் கட்டுவது? பாதிரியாரோ ஆற்றுக்குமேல், ஆறு செல்லும் வழியில் இருந்த சிறு குன்றைக் காட்டினார். நதி அந்தக் குன்றினைச் சுற்றி இரண்டாகப் பிரிந்து சென்றது.

“நதிக்கு நடுவில் இருக்கும் குன்றின்மேல் தேவாலயம் கட்டினால் பிரார்த்தனைக்கு ஜனங்கள் எப்படிச் செல்வார்கள்?”

“தேவன் உயர்ந்தவன் என்பதால் உயரமான குன்றின் மீதிருப்பது உகந்தது பென்னி. நீங்கள் சொல்வதுபோல் இருபக்கமும் நீரால் சூழ்ந்த குன்றுக்கு வழியுண்டாக்குவது கடினம்” என்று சொல்லிய பாதிரியார், மலையைச் சுற்றிப் பார்த்தார்.

நதியின் இடப்புறம் இருந்த உயரமான குன்றைப் பார்த்தார்.

“அந்தக் குன்றில் இருக்கலாம் பென்னி.”

“பாதர், இப்போது இருக்கும் நிலையில் எப்படித் தேவாலயம் கட்ட முடியுமென்று நினைக்கிறீர்கள்?”

“பென்னி, கிறிஸ்துவின் சொரூபம் வைத்து, மேலே கூரை அமைப்போம். கல்லால் கட்டடம் கட்ட வேண்டிய அவசியமோ, அவசரமோ இல்லை. தேவன் இங்கு குடியேற வேண்டும், அவ்வளவுதான்.”

பென்னி யோசித்தார்.

“மத்தவங்க எப்படிக் கும்பிடுவாங்க?”

நீரதிகாரம் - 52 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“இறைவன் எல்லோரின் மனத்திலும் மாற்றம் கொண்டு வருவார் பென்னி. நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம். தேவனின் சொரூபத்தை வைத்த பிறகு பாருங்கள், அணை வேலை தடங்கலின்றி நடக்கும்.”

பென்னியின் அமைதியை அனுமதியாக எடுத்துக்கொண்ட பாதிரியார் மகிழ்ச்சியுடன் கிளம்பப் பார்த்தார். எஸ்தர் யோசனையுடன் நிற்பதைப் பார்த்த பாதிரியார், மீண்டும் பென்னியைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்.

“எஸ்தருக்கு ஒரு சகாயம் செய்யணும் நீங்க?”

“எஸ்தர் கேட்கும் எல்லாமே செய்து தருவேன்” சிரித்தபடி சொன்னார் பென்னி.

“இங்க வர்றதுக்கு ஜனங்க பயப்படுற முக்கியமான காரணமே, மலேரியா வந்தும், கொசு கடிச்சும் செத்துப்போயிடுவோம்னுதான். கொஞ்சம் மருந்து மாத்திரைங்கள வச்சி, சின்னதா ஒரு அஸ்பித்தால் வச்சிட்டா எஸ்தர் பார்த்துக்குதாம். பசுமலையில இருக்கிறப்ப ஊசிபோடவும் கத்துக்கிட்டு இருக்கா.”

“எஸ்தர் ஊசிபோடும்னு தெரிஞ்சா இப்போ இங்க இருக்க ஒரு கூலியும் இருக்க மாட்டாங்க, ஓடியே போயிடுவாங்க. ஊசின்னா பிரசிடென்சியில இருக்க ஜனங்களுக்கு அவ்ளோ பயம். பிளேக் வரும்போதும், காலரா வரும்போதும் ஜனங்களுக்குத் தடுப்பூசி போட சர்க்கார் எவ்ளோ பாடுபடுது.”

“ஊசியெல்லாம் இல்லைங்க தொர. நான் ஜனங்களுக்கு ஏத்த மாதிரியே மருந்து மாத்திர கொடுக்காம நாட்டு மருந்து கொடுத்துப் பாத்துக்கிறேன். அவங்களுக்கு எதுனா ஒன்னுன்னா கீழ தூக்கிக்கிட்டுப் போறதுக்குள்ள உசுரு இருக்கும்னு உத்தரவாதம் கெடையாதே?”

“எஸ்தரை அணை வேலைக்கு அப்போத்தகிரியா (மருந்து மாத்திரை கொடுக்குமிடம்) வச்சிடலாம் பென்னி” லோகன் உற்சாகமாகச் சொன்னார்.

“ஆமாம், அவங்க கை வைத்தியத்துக்கு என்ன மருந்தோ அதையே வச்சிக் கொடுக்கலாம். அப்போத்தகிரி ரொம்ப அவசியம்கூட. செக்ரட்டரிக்கு எழுதிக் கேட்கணும், ஒரு கம்பவுண்டர் நியமிக்கச் சொல்லி. காட்டில் எந்த நேரத்தில் என்ன நடக்கும்னு சொல்ல முடியாது.”

“எஸ்தருக்கு எப்படி இவ்வளவு ஆர்வம், தைரியம்?” டெய்லர்.

“இழப்பதற்கு ஒன்னுமே இல்லைன்ற நெலமை வந்துட்டா, பயப்பட ஒன்னுமே இல்லையே தொர? எதையாவது இழந்துடுவோம், யாரையாவது தொலைச்சிடுவோம்னாதான் பயம் வரும். எனக்குன்னு யாரும் இல்ல, எதுவும் இல்ல. இருக்கிறது உடம்பும் உயிரும். அது கடவுள் கொடுத்தது. அவருக்கு வேணும்னா அவரே திரும்ப எடுத்துக்கப்போறார்? அதுவரைக்கும் அதைச் சும்மா வச்சி என்ன செய்யப்போறோம்?”

“ஆகா, எஸ்தர் பாதரைவிட நல்லா பேசுதே...” என்று சொல்லிய லோகன், “மன்னிக்கணும் பாதர்” என்றார்.

“பரவாயில்லை. எஸ்தர் என்கிட்டதானே கத்துக்கிட்டாள்.”

எல்லோரும் வெடித்துச் சிரித்தார்கள்.

திடீரென்று விதவிதமான குரல்களின் அலறல் எழுந்தது. மரம் வெட்டிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் கையிலிருந்த கொடுவாள்களோடு ஓடினார்கள். பென்னியும் உடன் இருந்தவர்களும் என்னவென்று புரியாமல் பாறையின் மேலேறிப் பார்த்தனர்.

நதியையொட்டி அடர்ந்த மரங்கள் இருந்த இடத்திற்குள் எல்லோரும் ஓடுவது தெரிந்தது. பென்னி ஓட்டமான நடையில் அங்கு விரைந்தார். பென்னி சென்றடைவதற்குள், எதிரில் ஓட்டமாக பேயத்தேவனின் கூட்டாளி ராசுமாயன் ஓடிவந்தான். அவன் முகம் வெளிறியிருந்தது.

“என்னாச்சு ராசுமாயன்?”

“தொர, வேணாம்னு சொன்னேன் கேட்கலையே? எங்ககூட இருப்பானே சங்கிலி, அவனைக் கரடி அடிச்சிடுச்சி தொர... மூச்சுப் பேச்சில்லாமக் கெடக்கிறான்.”

பென்னி அதிர்ச்சியில் நின்றார்.

எஸ்தர் பென்னியைக் கடந்து சங்கிலி கிடந்த இடம் நோக்கி ஓடினாள்.

தாது வருடப் பஞ்சத்தில் ஒரு வாய்க் கஞ்சிக்காக வரிசையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கூட்டத்தில் மிதிபட்ட மீனாட்சியின் அழுகை இப்போது கேட்டது, சிலுவை அணிந்திருந்த எஸ்தருக்கு.

- பாயும்