
குட்டிய தூக்கிறத ஆத்தா பாத்திருந்தா, ஐயோ... நெனைக்கவே முடியல. மூஞ்சிய கொதறிப் போட்டிருக்கும். பொழச்சாக்கூட மூஞ்சியோட கோரம் சகிக்காமச் செத்துடுவானுங்க

பச்சிலைகளின்மேல் எஸ்தரின் கண்கள் பாய்ந்து சென்ற வேகத்தில், கைவிரல்கள் பறித்தெடுத்திருந்தன. சங்கிலியை மடியில் போட்டு, முகத்தின் ரத்தத்தைத் துடைத்துவிட்டுக்கொண்டிருந்த பேயத்தேவனைச் சுற்றிக் கூட்டம்.
“நல்லவேளை, குட்டியாப்போச்சு. மொடாசா இருந்திருந்தா இந்நேரம் மூஞ்சியைப் பாக்க முடியாது. நகத்தால பொறாண்டியிருக்கும்” முங்கிலித் தேவன்.
“அதுவே எச்சிப்போனது, செவனேன்னு இருந்ததப்போய் இவென் ஒறண்ட இழுத்திருப்பான். குட்டியோட இருக்க காட்டுச் சீவாத்து எல்லாமே அதோட குட்டிக் குருமானப் பாத்துக்கிற ஆவேசத்துல ரொம்ப ஆக்ரோசமா இருக்கும். இவென் கல்ல கொண்டு எறிஞ்சிருப்பான்” மொக்கைமாயத் தேவன்.
“இல்ல சிய்யான். கரடியோட குட்டி மட்டுந்தான் இருந்துச்சாம். ரோமத்தோட நல்ல புஷ்டியா இருக்கிறத பாத்து, இவென் நம்ம கன்னுக்குட்டி, நாய்க்குட்டிய தூக்குற மாதிரி ஆசையா ஓடிப்போய்த் தூக்கிட்டான். தூக்கினவன குட்டிக்கரடி மூஞ்சியில பொறாண்டிருச்சி... ஆத்தா கரடி வரல. அது வந்திருந்தா இந்நேரம் பேசறதுக்கு என்னா மிஞ்சி இருக்கும்?” ராசுமாயன்
எஸ்தர், கையில் சேகரித்த இலைகளைக் கொண்டு வந்தாள். அருகில் இருந்த பாறையில், ஓரிடத்தினைத் தட்டிவிட்டு, குனிந்து ஊதினாள். மேடு பள்ளமான இடுக்குகளில் படிந்திருந்த துகள்கள் நகர, நன்றாக ஊதி மண்ணை அகற்றினாள். வேகமாக ஒவ்வொரு இலையாகக் கையிலெடுத்து உள்ளங்கைக்குள் வைத்து அழுத்திச் சாறு பிழிந்தாள். அவளின் உள்ளங்கை கசக்கிய இலைகளின் சாறு சொட்டுச் சொட்டாகப் பாறையில் விழுந்தது. சில இலைகளில் அதிக சாறும், சிலவற்றில் ஒன்றிரண்டு சொட்டுகளுமே வந்தன. பிழிந்தெடுத்த சாற்றினை, நடுவிரலால் கலக்கிவிட்டுக்கொண்டே, பேயத்தேவனிடம் சங்கிலியைத் தூக்கி வரச்சொல்லிச் சைகை காட்டினாள்.
பேயத்தேவன் சங்கிலியைத் தூக்கிக்கொண்டு எஸ்தர் அருகில் வந்து, பாறையின்மேல் சங்கிலியைக் கிடத்தினான். பென்னியும் இன்ஜினீயர்களும் சரியாக அந்நேரம் ஓடி வந்தார்கள். எஸ்தர் இலைச் சாற்றினைத் தொட்டு, சங்கிலியின் காயத்தின்மேல் தடவப்போனாள்.
சங்கிலியின் ரத்தம் தோய்ந்த முகத்தைப் பார்த்து அதிர்ந்தார் பென்னி.
“எஸ்தர், என்ன மருந்து இது?”
“மூலிகைச் சாறு தொர.”
“காயத்துக்கு அதெல்லாம் போடலாமா? காட்டுச் செடிகள்ல நல்லதும் இருக்கும், விஷமும் இருக்கும். உனக்கெப்படித் தெரியும்? நாமாக வைத்தியம் பார்க்க வேணாம். ஒரு தூளி கட்டுங்க, உடனே கீழ கொண்டு போயிடலாம்.”
“க்ஷமிக்கணும் தொர, புள்ளையக் கீழ கொண்டு போற வரைக்கும் உசுரு இருக்குமான்னு சொல்ல முடியாது. கீரத்தண்ட ஒடச்ச நாழியில வாடிப்போற மாதிரிதானே பச்சப் புள்ள உசுரு? பச்சை இல மருந்து போடலாம், தப்பில்ல.”
“எஸ்தருக்கு நல்லாத் தெரியுமா மாயன்? தப்பா போட்டு, அதுவே பிரச்சினையாயிடப்போது?”
“கொஞ்ச வயசுப் பிள்ளையா இருந்தாலும் வெவரமாத்தான் இருக்கு. பேர் சொல்லக்கூடாது, அது பறிச்ச எலையெல்லாம் நான் பாத்துக்கிட்டுத்தான் இருந்தேன் தொர. இந்தப் பிள்ளை பார்வதிக்கும் நல்லாத் தெரியும். அது ஆத்தாவும் பச்சிலை வைத்தியம் செய்யறவதான்.”
ஒப்புதலுக்காக பென்னியின் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் எஸ்தர். பார்வதி சங்கிலியின் தலையைத் தூக்கி மடியில் வைத்தபடி, மருந்து போட வாகாகத் தூக்கிப்பிடித்தாள்.

ஆங்காங்கு மரங்களை வெட்டிக் கொண்டிருந்தவர்கள், சத்தம் கேட்டு கும்பல் கூடிவிட்டார்கள். எஸ்தர் பாறையில் பிழிந்துவிட்டிருந்த சாற்றை வழித்தெடுத்து, அகலமான இலை நுனியில் தொட்டு, சங்கிலியின் காயங்களில் விட்டாள். ராசுமாயனும் ஒப்பிலியும் கவலையுடன் சங்கிலியின் அருகில் நின்றார்கள்.
“பச்சப்புள்ள, ஒங்கூடவே வச்சுக்கடான்னு சொன்னனா இல்லையா?” ராசுமாயன் ஒப்பிலியிடம் கோபித்தான்.
“அங்கனவேதான்டா ஒக்கார வச்சிருந்தேன். பயபுள்ள எப்ப எழுந்து போனான்னு கவனிக்கல.”
“கண்ணு முழிச்சவுடனே அவென வீட்டுக்கு அனுப்பிடணும். நம்மள பாத்துக்கிறதே இங்க பெரும் பிரச்சினையா இருக்கு...” ராசுமாயன்.
“குட்டிய தூக்கிறத ஆத்தா பாத்திருந்தா, ஐயோ... நெனைக்கவே முடியல. மூஞ்சிய கொதறிப் போட்டிருக்கும். பொழச்சாக்கூட மூஞ்சியோட கோரம் சகிக்காமச் செத்துடுவானுங்க. ஒனக்குத் தெரியும்தானே, கூடலூர்ல ஒரு சிய்யானுக்கு மூஞ்சியில ஒரு பக்கமே கிழிச்சித் தச்ச மாதிரி கோலமா இருக்குமே, அவரையும் கரடியடிச்சுத்தான் அப்படியாச்சாம். இருவது வருஷமாச்சு, அவர் மூஞ்சியில விழுந்த தழும்பு இன்னும் போவலை பாரு.”
“இவென் அப்பன் ஆத்தாவுக்கு என்னா ஜவாபு சொல்லப்போறமோ?” ராசுமாயன்.
பார்வதி சங்கிலியின் உடலில் அசைவு வருகிறதா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். எஸ்தர் பச்சிலைச் சாற்றைத் தொட்டுத் தொட்டுத் தடவினாள்.
பென்னியும் கூட்டத்தினரும் நகர்ந்து சென்று, மற்றொரு பெரிய பாறையில் உட்கார்ந்தனர். கம்பூன்றியபடி மெதுவாக நடந்து வந்த மொக்கைமாயத் தேவன், பென்னியின் காலருகில் பாறையின் கீழ் உட்கார்ந்தார்.
“கூலி இத்தன துட்டுன்னு சொல்லி மேல்மலைக்கு ஆளுங்கள கூட்டிக்கிட்டு வந்துடுறோம் தொர. ஊர்நாடு மாதிரி இல்லல்ல காடு... காட்டுக்குள்ள எப்படி இருக்கணும்னு கொஞ்சம் சொல்லிக் கொடுக்கணும். மானாவாரியா காட்டுக்குள்ள நடமாடக் கூடாது. அந்நியமா ஒருத்தவங்க வூட்டுக்குப்போனா எப்படி இருப்போம், திண்ணையிலேதானே குந்திக்கிட்டுப் பேசுவோம்? அப்படித்தான், இந்தக் காடு மிருகராசிங்களோடது. நாம விருந்தாளி மாதிரி சத்தமில்லாமக் குந்திக்கிட்டு கெடக்கணும். தொர ஒரு கூட்டம் போட்டுச் சொன்னீங்கன்னா உபகாரமா இருக்கும்.”
மொக்கைமாயன் சொல்வதை பென்னி கேட்டுக்கொண்டிருந்தார். லோகனும் டெய்லரும் அமைதியாக நிற்கும் மரங்களை வேடிக்கை பார்த்தனர். வெப்பம் கூடக் கூடக் காட்டின் சத்தம் குறைந்திருந்தது. நீரின் சலசலப்பும் குறைந்தது போன்ற பிரம்மை.
“காட்டுக்குள்ள வந்தவுடனே வாயைக் கட்டிப்போடணும்னு சொல்லணும் தொர. இங்க இருக்க இதான் பாலபாடம்னு புரிய வைக்கணும். ஊர்ல சலசலன்னு பேசுற பயலையெல்லாம் வாயக்கட்டித்தான் உள்ளயே கூட்டிக்கிட்டு வரணும். கண்ணும் காதும் நல்லாத் தொறந்திருக்கணும். வாய் மூடியே இருக்கணும்.”
“மாயன், நீங்க இப்போ பேசிக்கிட்டு இருக்கீங்களே?”
“டெய்லர், என்ன இது...”
“ஓ சாரி பென்னி. சும்மா விளையாட்டுக்கு.”
“சின்ன தொரமார் சொல்றதும் சரிதான். பேசக்கூடாதுன்னு சொல்றதுக்காக நான் பேசித்தான் ஆகணும். மனுஷ ராசிக்கு எதையுமே ஜாடையில காட்டிப் புரிய வைக்கிற மகிமைதான் பேச்சு வந்தப்புறம் போயிடுச்சே..!”
“மாயன் பெரிய அறிவாளியாத்தான் இருப்பார் போல...” லோகன் சிறு புன்னகையோடு சொன்னார்.
“பெரிய பெரிய அறிவாளியெல்லாம் காட்டுக்குள்ளதான் இருக்காங்க தொர. ஏன்னா, காட்டப் படிச்சிட்டாப் போதும். வேற ஒன்னுமே வேணாம். காட்டுக்குள்ள நடக்கிறது எப்படின்னு நம்ம மன்னான்களையும் பளியனுங்களையும் கூப்பிட்டுக் கேட்டுப் பாருங்களேன் தொர. இவ்ளோவும் இவனுங்க எங்க படிச்சாங்கன்னு நீங்கெல்லாம் கேப்பீங்க.”
“பதினைந்து வருஷம் முன்னாடி நான் ஆய்வுக்காக இங்க வந்தப்பவே என்கூட மன்னான்கதான் அஞ்சாறு பேர் கூட இருந்தாங்க டெய்லர். புதுசு புதுசா சொல்லுவாங்க. கேட்டுக்கிட்டே இருக்கலாம். நடந்துக்கிட்டே இருப்பாங்க, திடீர்னு நின்னு கீழ இருக்க புல்லப் பார்ப்பாங்க. உடனே, சைகை காட்டி நம்மள வேற வழியில நடக்கச் சொல்லிட்டு முன்னுக்கு வேகமா நடப்பாங்க.”
“வெறும் புல்லப் பார்த்துட்டா?”
“ஆமாம் டெய்லர், புல் மடிஞ்சிருக்கிற திசை பார்த்து, அந்தப் புல்ல மிதிச்சிட்டுப் போயிருக்கிற விலங்கு என்னன்னு சொல்லுவாங்க. யானையா இருந்தா, ஒரு யானையா, கூட்டமான்னும் சொல்வாங்க. எந்தத் திசையில போயிருக்கும், அந்த இடத்தக் கடந்து எவ்வளவு நேரமாயிருக்கும் எல்லாம் சொல்லிடுறாங்க. ஏன், விலங்கோட எச்சங்களைப் பார்த்துக்கிட்டுத்தான் நடக்கிறாங்க. அந்தப் பகுதியில எந்த விலங்கு இருக்கும்னு எச்சத்தை வச்சுப் புரிஞ்சிக்கிட்டு, என்னைக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.”
“காட்டுல இருக்கிறவங்க, மத்த விலங்குகள் மாதிரி அவங்களும் காட்டுல இருக்க எல்லா உயிரினங்க கூடவும் சேர்ந்துதானே வாழணும். அதான் கத்து வச்சிருக்காங்க” லோகன்.
“ஆமாம், காட்ட கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டா போதும், ஒன்னும் பயமில்ல. யானை, கரடி, பாம்பு... இதுங்க மூணுகிட்ட மட்டும் ஜாக்கிரதையா இருக்கணும். சிறுத்தை, புலியெல்லாம்கூட நமக்கு பயமில்ல. நம்ம சத்தம் கேட்டா அதுகளே ஓடிடும். இங்க இருக்கிறவங்க எல்லாருக்கும் கேட்டுச்சா? ஊர்ல இருக்க மாதிரி, காட்டுக்குள்ள எங்கயும் தனியா போகாதீங்க. எந்த விலங்கையும் விளையாட்டாகூட தொந்தரவு செய்யாதீங்க. கவனமா இருங்க. நம்ம நல்ல நேரம், வேலை ஆரம்பிச்சிருக்கிற இந்தப் பருவம், நமக்கு ரொம்ப சாதகமா இருக்கு. நீங்களும் ஆரோக்கியமா இருக்கீங்க. இல்லன்னா காய்ச்சல் வந்து படுத்துடுவாங்க.”
“தொர சொல்றது சரிதான், காட்டம்மைக்கு நம்ம மக்க மேல கருணை இருக்கு...” மொக்கைமாயன் காலுக்கடியில் குனிந்து கொஞ்சம் மண்ணைக் கீறியெடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டார்.
குதியாட்டம் போட்டு அங்கு ஓடிவந்த பனையேறி, மொக்கைமாயன் மண்ணெடுத்த இடத்திலிருந்து மண்ணைத் தொட்டு, பென்னியின் நெற்றியில் இட்டான்.
“டேய் சாமி, தொர கிறிஸாத்த கும்பிடுறவர்டா....” என மொக்கைமாயன் கூச்சலிட்டுக்கொண்டு, “ஒன்னும் மனசுல வெச்சுக்காதீங்க தொர, அவென் நல்லது கெட்டது தெரியாத பொறப்பு” என்றார்.
“பரவாயில்லை மாயன், இப்போதைக்கு காடுதான் நம்ம எல்லாருக்குமே சாமி” என்றார் பென்னி.
அப்போது ராசுமாயன் சத்தமாக, “சங்கிலி கண்ண முழுச்சிட்டான் தொர. பயத்துலதான் புள்ள நடுங்கி அழுது” என்றான்.
“ஓ... கண்ணு முழிச்சிட்டானா? நான் சொன்னேன்ல, காட்டம்மை நம்மள கைவிட மாட்டான்னு. அதோ காவலா கண்ணகியம்மையும் நிக்கிறா...” மங்கலதேவி கண்ணகி இருக்கும் எதிர்மலையைப் பார்த்து, இருகை குவித்துக் கும்பிட்டார் மாயன்.
பென்னியும் இன்ஜினீயர்களும் நெற்றியிலும் மார்பிலும் சிலுவை வரைந்தனர்.
பாளையத்தின் மேட்டுக் கண்மாயருகே இருந்த அடர்ந்த அரச மரத்தின் நிழலில் தன்முன்னால் போட்டிருந்த பசும்புற்களைக் கடித்து மென்றபடி நின்றிருந்தது, பெரியகுளம் தாசில்தார் சர்க்கரை முதலியாரின் குதிரை. பெரியகுளத்திலிருந்து பாளையம்வரை நிற்காமல் ஓடிவந்த களைப்பு. தாவாயோரம் நுரை தள்ளியிருந்தது. குதிரையிலிருந்து இறங்கிய தாசில்தார், குதிரைக்குப் புல்லும் தண்ணீரும் வைக்கச் சொல்லியிருந்தார். அரை நாழிகை போதும், குதிரை ஓட்டத்திற்குத் தயாராகிவிடும்.
குதிரைக்கு அருகில், இரண்டு ஜோடி மயிலைக் காளைகள் நின்றிருந்தன. ஒரு ஜோடி, மதுரை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா ரத்தினம் பிள்ளையுடையது. மற்றொரு ஜோடி கண்மாய் ஆய்வாளர் சுப்பராய முதலியாருக்குச் சொந்தமானது. தாசில்தாரின் குதிரைக்குப் பக்கத்தில் நின்று ஒருவன் புல்லையெடுத்து அதன் வாயருகில் போடுவதும், ஊறவைத்த கொள்ளினைத் தண்ணீரில் கலந்து கைவிட்டுத் துழாவி விடுவதும், ஒருவன் நல்லாச் சாப்பிடு என்பதுபோல் குதிரையின் பிட்டத்தைத் தடவிவிடுவதுமாக நின்றிருந்தனர். தாசில்தார் புல்லையும் கொள்ளையும் சாப்பிட மாட்டார் என்பதால் குதிரைக்கு வஞ்சமின்றிக் கொடுத்தார்கள். குமாஸ்தாவின் குதிரைக்கும், கண்மாய் ஆய்வாளர் குதிரைக்கும் முன்னால் பிரித்துப்போடாமல் புல்கட்டு கிடந்தது. தண்ணீர் வைக்க யோசித்தபடி நீர்க்கட்டி நின்றிருந்தான்.
மரத்தடியில் போடப்பட்டிருந்த கல்மேடையின் குளிர்ச்சியில் அமர்ந்திருந்தார் தாசில்தார் சர்க்கரை முதலியார். மத்திம வயதிற்குரிய திடகாத்திரத்துடன் இருந்தார். திண்டுக்கல்காரர். திண்டுக்கல்லை அளந்து எல்லை குறிக்க வந்த பிரிட்டிஷ் சர்வேயருடன் சர்க்கரை முதலியாரின் தாத்தா, பழனி மலைக்கும், நத்தம் மலைக்கும் உடன்சென்றிருக்கிறார். சர்க்கரையின் தாத்தாவுக்குக் காடு மேடு எல்லாம் அத்துப்படி. ஓடையில் போகிற நீரள்ளிக் குடித்தும், உதிர்ந்து கிடக்கிற காட்டு நாவல் பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டுமே வாரக்கணக்கில் நடக்கும் தெம்புகொண்டவர். சர்வேயரின் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டும், அவருடன் வந்த பிரிட்டிஷ்காரர்களுக்கும் வெகுவாய் ஒத்தாசையாய் இருந்திருக்கிறார். திண்டுக்கல்லில் இருந்து மதுரையைப் பிரித்துத் தனி மாவட்டமாக்கினாலும் திண்டுக்கல்லில்தான் வருவாய்த்துறை அதிகாரிகள் நிறைய பேர் இருந்தார்கள். பிரிட்டிஷ் அதிகாரி, சர்க்கரையின் தாத்தாவுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்ததால் திண்டுக்கல் தாலுகாபீசில் குமாஸ்தாவாக நியமிக்கலாம் என்று பரிந்துரை செய்து ஒரு தபால் கொடுத்திருந்தார். தாத்தாவின் தம்பி, சர்க்கரையின் சின்னத் தாத்தா, நல்ல தேகபலம் கொண்டவர், அவரும் இவர்களுடன் காட்டுமேட்டில் அயராமல் நடந்திருக்கிறார். மற்றவர்கள் இரண்டு நாழிகையில் கடக்கும் தூரத்தைக் கால் நாழிகையில் ஓடிக் கடப்பார். அவரின் ஓட்டத்தை வியந்து பார்ப்பார்கள் பிரிட்டிஷார். சின்னத் தாத்தாவின் ஓடும் திறமையை மதித்து, அவரைத் தபால் துறையில் ரன்னராக நியமிக்கலாம் என்றும் பரிந்துரைக் கடிதம் கொடுத்திருந்தார் அந்த பிரிட்டிஷ் சர்வேயர்.
சர்வேயரின் கடிதத்தைப் பத்திரமாக வைத்திருந்த இருவரும், மதுரை மாவட்டம் பிரிந்தவுடன், கலெக்டர் ஆபீசுக்குச் சென்று, கலெக்டரிடம் சர்வேயரின் கடிதத்தைக் கொடுத்து, சர்க்கார் உத்தியோகம் வாங்கிக்கொண்டார்கள். ஒரே வீட்டில் இரண்டு பேருக்குச் சர்க்கார் உத்தியோகம் என்று பிராந்தியம் முழுக்கப் பேச்சாக இருந்தது. சர்க்கரையின் தாத்தாவுக்குப் பிறகு சர்க்கரையின் அப்பா, இப்போது சர்க்கரை என்று மூன்று தலைமுறையாகச் சர்க்கார் உத்தியோகத்தின் தொடர்ச்சி விட்டுப்போகாமல் நடக்க அந்த மீனாட்சிதான் காரணமென்று, சர்க்கரையின் அப்பா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீனாட்சி கோயில் முழுக்க இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றி வணங்கினார்.
ரன்னராகச் சேர்ந்த சுப்பராயனின் தாத்தாவுக்குப் பிறகு, சுப்பராயனின் அப்பாவுக்குச் சர்க்கார் உத்தியோகம் கிடைக்கவில்லை. பெரியாறு அணை கட்டும் அதிர்ஷ்டத்தில் சுப்பராயனுக்குச் சர்க்கார் உத்தியோகம் கிடைத்தது.
சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயர் பென்னிக்கும், மதுரை கலெக்டர் டர்னருக்கும் பெரியாற்று நீரை மேலூருக்குக் கொண்டுபோகும் வேலைகளில் முரணான கருத்துகளே இருந்தன. கூடலூர் தொடங்கி பேரணைவரை இருக்கும் பதினைந்து தடுப்பணைகளையும் பதினேழு கால்வாய்களையும் கால்வாய்களில் இருந்து நீர் வெளியேறும் வாய்க்கால்களையும் தூரெடுத்து, வண்டல் படிவுகளை அள்ளி, வெள்ளம் வீணாகாமல் நீர் தேங்குவதற்கு ஏற்ப சரிசெய்ய வேண்டும். இப்பணிகளைச் செய்வதற்கான பணம் பெரியாறு அணை செலவு ஒதுக்கீட்டில் இருக்கிறது. வேலையைச் செய்ய வேண்டியது கலெக்டர் டர்னர். பென்னியைப்போல் டர்னருக்கு மதுரையின் நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களும் புரிதலும் இல்லை. டர்னரின் பல வேலைகளில் நீர்நிலைப் பராமரிப்பு ஒரு வேலை. பென்னிக்கோ இதுமட்டும்தான் வேலை. பென்னிக்கு வரைபடம்போல் ஒவ்வொரு தடுப்பணையும், தடுப்பணையில் இருக்கின்ற வாய்க்கால்கள், கால்வாய்கள், கண்மாய்கள், ஆயக்கட்டுகள் பற்றியும் துல்லியமாகத் தெரியும். கலெக்டரின் வேகம் போதவில்லையென்றவுடன் பென்னி, ரயத்துகளை நம்பி காரியத்தில் இறங்கத் தீர்மானித்தார். பென்னியின் கோரிக்கையை ஏற்று, ரயத்துகளிடம் இருக்கும் ஒவ்வொரு ஏக்கருக்கும் அவர்களுக்கு வரும் வாய்க்கால்கள் உடைப்பின்றி, மணல் படிந்திடாமல் பார்த்துக்கொள்ள நான்கு அணா கொடுக்க சர்க்கார் சம்மதித்தது. கலெக்டராலும் வருவாய்த் துறையின் சப் கலெக்டர், தாசில்தார், டெபுடி தாசில்தார் யாராலும் தனிக்கவனத்துடன் நீர்ப்பராமரிப்பைச் செய்ய முடியவில்லை.
முழுமையாக வருவாய்த் துறையினரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று பென்னிக்குத் தெரியும். கண்மாய்களை ஆய்வு செய்து, ஒவ்வொரு கிராமத்திலும் கால்வாய்கள் சரியாக இருக்கிறதா என்று பார்வையிட்டு அறிக்கை கொடுக்க, மதுரை மாவட்டம் முழுக்க கண்மாய் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டுமென்று கடிதம் எழுதியிருந்தார். மெட்ராஸ் பிரசிடென்சியின் போர்ட் ஆப் ரெவன்யூவும், பொதுப்பணித் துறையும் இன்ஜினீயர்களுக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கும் அதிகரிக்கும் முரண்பாடுகளைக் களைந்து, யார் யாருக்கு என்னென்ன அதிகாரம் என்று வரையறுத்துச் சொல்வதற்காகத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தன.
இதற்கிடையில் பென்னியின் அதிகாரத்தைக் குறைப்பதற்காகவும் அவரின் கோரிக்கையை நிராகரிக்க வைப்பதற்காகவும் சர்க்காருக்குச் செலவைக் குறைக்க யோசனை சொல்வதுபோல் நல்லெண்ணம் உண்டாக்கவும், போர்டு ஆப் ரெவன்யூவுக்கு கலெக்டர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘பெரியாறு அணையின் சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயர் அனுப்பியுள்ள பரிந்துரை தேவையற்றது. வருவாய்த் துறையில் இருந்து தாசில்தார் வரிவசூல் செய்யவும், உள்ளூர் தாவாக்கள், சொத்துத் தாவாக்கள் தொடர்பாகவும் ஒவ்வொரு ஊருக்கும் செல்கிறார். கிராமங்களுக்கு ஆய்வுக்காகவும் சுற்றுப்பயணமாகவும் செல்லும்போது அப்படியே ஊரில் இருக்கிற கண்மாய்களைப் பார்த்து நல்ல நிலையில் இருக்கிறதா, என்ன குறைபாடு இருக்கிறது என்று ஆய்வுசெய்து சர்க்காருக்கு ஆய்வறிக்கை அனுப்பலாம். தாசில்தார் அவரின் வழக்கமான பணிகளோடு கண்மாய்களையும் ஆய்வு செய்துவிட முடியும். அத்துடன் கண்மாய்களை நன்னிலையில் வைத்துக்கொள்வதற்காக ஏக்கருக்கு நாலணா கொடுக்கும் வேலையையும் தாசில்தார் செய்துவிடுவார். பெரியகுளம் தாலுகாவில் 3,777 ஏக்கர் நிலமிருக்கிறது. ஏக்கருக்கு நாலணா வீதம் 944-4-0 ரூபாயை ரயத்துகளுக்குப் பிரித்து வழங்குவதும் கடினமான காரியமல்ல. மேற்குறிப்பிட்ட தொகையில் ஸ்தாபன செலவீனங்களுக்கான 15%, ரூ.141 என்று கணக்கிட்டால், கண்மாய் ஆய்வாளர்களுக்கான ஊதியச் செலவீனங்களுக்கு இத்தொகை மிகச் சிறியது. பெரியகுளம் தாசில்தாரே கண்மாய்களையும் ஆய்வு செய்து அறிக்கை வழங்க அவருக்கு அனுமதியளிக்கலாம் எனத் தாழ்மையுடன் பரிந்துரைக்கிறேன். கூடுதலான அவரின் இப்பணிக்காகக் குதிரைப் படியாக மாதம் ரூ.10 தாசில்தாரின் ஊதியத்துடன் சேர்த்து வழங்கலாம் என்றும் பணிந்து வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கடிதம் எழுதினார்.
இரண்டே வாரத்தில் கலெக்டருக்குப் பதில் கடிதம் வந்தது. ‘கண்மாய்களை ஆய்வு செய்ய, ஆய்வாளர் நியமனத்திற்குப் பதிலாக, பெரியகுளம் தாசில்தாருக்குக் கூடுதல் பொறுப்பு கொடுத்து, அதற்காக மாதச் சம்பளத்துடன் குதிரைப் படியாக ரூ.10 கொடுக்கலாம் என்ற மதுரை மாவட்டக் கலெக்டரின் பரிந்துரை போர்டுக்கு ஏற்புடையதாக இல்லை. கண்மாய் ஆய்வாளர் ஆண்டு முழுவதும் அந்தந்த கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்படுபவர். ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளில் பெரியாறு அணையின் நீர்வரத்துக்கான அளவிற்கேற்ப பலப்படுத்துவதும், முறையாகப் பராமரிப்பதும் அவசியமாகிறது. தாசில்தார் தன்னுடைய வழக்கமான சுற்றுப்பயணங்களுக்கு இடையில் கண்மாய் ஆய்வைச் செய்ய முடியாது. வருவாய் ஆய்வாளரின் நிலையில் கண்மாய் ஆய்வாளரை நியமித்து, பெரியாற்றுப் பாசனத்திற்கான வசதிகளைச் செய்துதர வேண்டும். தாசில்தார் நிலையில் இருக்கும் ஓர் அதிகாரிக்கு, குதிரைப் படியாகப் பத்து ரூபாய் பரிந்துரைப்பது அவரின் தகுதியைக் குறைக்கும் செயலாகும். உடனடியாக கண்மாய் ஆய்வாளர்களை நியமித்து, அவர்கள் தாசில்தார் மூலம் அறிக்கை அனுப்ப அறிவுறுத்தவும்’ என்று போர்டு ஆப் ரெவன்யூ அதிகாரிகள் பதில் அனுப்பியிருந்தார்கள்.
சர்க்கார் உத்தியோகம் கைவிட்டுப் போகும் நிலையில், ஊர் ஊருக்குக் கண்மாய் ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்படும் தகவலறிந்து சென்ற சுப்பராய முதலியாருக்கு முதலிலேயே உத்தியோகம் கிடைத்தது. அப்பா தவறவிட்ட சர்க்கார் உத்தியோகத்தைத் தேடிக்கொண்ட பெருமையைக் குடும்பத்திற்கு அவர் கொடுத்தார். சுப்பராய முதலியாருக்கு மெட்ராசு சர்க்காரே உதவியதென்ற செய்தி காட்டுத் தீயாகச் சுற்றுவட்டாரத்தில் பரவியது. தன்னை மீறி, தன் தம்பியான சுப்பராயனும் சர்க்கார் உத்தியோகஸ்தன் ஆனதில் சர்க்கரை முதலியாருக்கு மனம் பொறுக்கவில்லை.
வேறொரு சங்கடம் எழுந்தது முதலியாருக்கு. கலெக்டர் குதிரைப் படி பத்து ரூபாயைத் தாசில்தாருக்குக் கொடுக்கலாம் என்று அவராகப் பரிந்துரைத்திருந்தாலும், தாசில்தார் கேட்டதுபோல் அவப்பெயர் நேர்ந்தது. நான்கு காணி நிலம் வைத்திருக்கும் செல்வந்தர், சொந்தமாக வீட்டில் இருபது ஜோடி காளைகள் நிற்கின்றன என்றபோதும் மக்களின் வாயில் விழும் அவலநிலை தாசில்தாருக்கு நேர்ந்தது. அன்றிலிருந்து அவர் எங்கு சென்றாலும் புல்லும் கொள்ளும் வண்டியில் கட்டிக்கொண்டே செல்கிறார்.
அவருடைய காரியங்களுக்கு நிகழும் எதிர்விளைவுகளில் இந்த ஏற்பாடும் தப்பவில்லை. தாசில்தாரின் குதிரைக்குக் கொள்ளும் புல்லும் ஊட்டிவிடுவதற்கு மூன்று ஆள் கூடவே வருகிறார்கள். எல்லாமே தாலுகா ஆபீஸ் ஆள்கள் என்று பேச்சுக் கிளம்பியது. தன்னுடைய கிரகநிலைதான் காரணமென்று புரிந்துகொண்ட முதலியார், மௌனமாகிவிட்டார்.
“பிராது குடுத்திருந்த சம்சாரி யாருப்பா?”
“நான்தானுங்க எசமான்” கட்டுக் குடுமியும் திடகாத்திரமான உடம்புமாகப் பெரியவர் ஒருவர் கூட்டத்திலிருந்து முன்னே வந்து நின்றார்.
“உங்க பிராது என்ன?”
“பெட்டிசன்ல எல்லாம் விளக்கமா எழுதச் சொன்னேனே சாமி, பயலுவோ எழுதலையா?”
“யோவ் பெருசு, கேட்டாச் சொல்லு. ஆயிரத்தெட்டுக் கத சொல்லாத.” தாசில்தாரின் கோபத்தைப் பார்த்து பெரியவர் பயந்துபோனார்.

“வாய்ப்பேச்சுல என்னமோ தப்பு வந்துடுச்சி சாமி, இந்தப் பயலுவோ சரியா எழுதலையோன்னு கேட்டுட்டேன். சாமி, பெரியாத்துத் தண்ணி இந்த ஊர் வழியாப் போவப்போதாம். உங்களுக்கே தெரியும், பாளையத்துல ஆறு வடக்கால போயிடுது. வாய்க்கா வரப்பு வெட்டித்தான் தெக்குல இருக்க நஞ்ச புஞ்சைக்குத் தண்ணி கொண்டாறோம். என்னோடது கால் காணி நெலம் சாமி, மேட்டுல இருக்கு. கீழ இருக்க சம்சாரியோட வாய்க்கா வழியா எனக்குத் தண்ணி விட்டா நான் வரப்பு வெட்டித் தண்ணி பாய்ச்சிக்குவேன். மேட்டுல தண்ணியேறணும்னா, வாய்க்காவுல முழுசா தண்ணி ஓடணும். அவரு பெரிய சம்சாரி. அதனால நாலாப்பக்கமும் வரப்பு வெட்டி நெலத்துக்குத் தண்ணி பாய்ச்சிக்கிறாரு. இதுவரைக்கும் சுருளியாத்துத் தண்ணி, வரத்துக் கம்மியா இருக்குன்னு காரணம் சொன்னாங்க. சர்க்கார் குடுக்கிற நாலணாகூட எனக்கு வேணாம் சாமி. நானே என்னோட வரப்பு வாய்க்காலைச் சீர் பண்ணி வச்சிக்கிறேன். என்னோட மேட்டு நெலத்துக்குப் பெரியாத்துத் தண்ணி குடுக்கணும். என்னோட பிராது இது ஒன்னுதான் சாமி.”
“மேட்டு நெலத்துக்கு எப்படிப் பெருசு தண்ணி குடுக்க முடியும்?”
பெரியவர் அமைதியாக நின்றார்.
“முதலியாருக்கு எதுனா யோசனை இருந்தா சொல்லுங்க?” சுப்பராயனிடம் தனக்கு விரோதமில்லையென்று காட்டிக்கொள்ள அவரையும் பேச்சில் கொண்டு வந்தார் தாசில்தார்.
“மலையையொட்டிய பெரிய மேட்டுலதான் பெரியவரோட நெலமிருக்கு. அவ்ளோ தூரம் வாய்க்கா வெட்டி எப்படிக் கொண்டு போக முடியும்னு தெரியல. ஏத்தத்துக்குப் போற அளவுக்குத் தண்ணி வரணுமே?”
“பெரியாத்துத் தண்ணி திமுதிமுன்னு வரும்னு சொன்னாங்களே சாமி?”
“வரும். அதுக்காக மலைமேல ஏர்ற அளவுக்கா வரும்? றெக்கையா மொளைச்சிருக்கு தண்ணிக்கு?” பெரியவரின் முகம் வாடியது. கண்கள் கலங்கின. கூட்டத்தில் ஆங்காங்கு சலசலப்பு எழுந்தது.
தோளில் இருந்த துண்டையெடுத்து இடுப்பில் கட்டிய பெரியவர், “சாமிகளா, இந்தக் கால் காணி நெலம் என் அய்யா எனக்குக் குடுத்தது. அப்பாருக்கு மூணு சம்சாரம். என் ஆத்தா கடைசியா கட்டிக்கிடுச்சி. இருவது பசங்க மூணு சம்சாரம் வழியா. என் ஆத்தாவுக்குப் பொறந்தது ரெண்டு பொட்டப்பிள்ளைங்க, நான் ஒரே ஒரு ஆள்தான் ஆம்பளப் பிள்ளை. அப்பாரு ஏலக்காய் தோட்டத்துக்கு வேலைக்குப் போனாரு, துட்டு நெறைய கெடைக்குதுன்னு. தேவாரம் மெட்டு வழியா ராத்திரியில ஒரு நா வந்திக்கிட்டு இருக்கப்ப, அப்பா இடுப்புல முடிஞ்சிருந்த ரூபாய்க்காக அவரக் குத்திப் போட்டுட்டாங்க. நண்டும் சிண்டுமா வூடே அவலமாப்போச்சு. என் ஆத்தா வாய் செத்தது. பெரிம்மாக்காரிக ரெண்டு பேரும் பெரிய லண்டிக. எங்க ஆத்தாவ அடிச்சுத் தொரத்திட்டாங்க. நாலு சட்டி பானைங்களோடு அனாதையா நின்ன எங்கமேல எங்க அய்யாவுக்குப் பாசம் அதிகம். அவர்தான் அவரோட ஜீவனத்துக்கு மிச்சம் வச்சிருந்த இந்தக் கால்காணி நெலத்தை, பொழைச்சிப் போய்யா சாமின்னு எனக்குக் குடுத்தாரு. என் அக்காளுக ரெண்டு பேரையும் கரை சேத்துனது, எம் ஆத்தாவுக்குக் கவுரிதையா கஞ்சி ஊத்தினது எல்லாமே இந்தக் காக் காணிய வச்சிதான் சாமிகளா. எனக்குச் சாமின்னா இந்த நெலமும் எங்க ஊரு கம்மாயும்தான். என் நெலம் தரிசாப் போச்சுன்னா என் சாமியெல்லாம் இல்லாமப் போவும். நீங்க குடுக்கப்போறது தண்ணி மட்டுமில்ல, என் சாமிங்களையும்தான்” என்று சொல்லியபடியே தாசில்தாரின் முன்னால் தரையில் விழுந்து கும்பிட்டார்.
அரச மரத்தின் கூட்டிலிருந்த காக்கைக்குஞ்சுகள், முற்றாத அரைக்குரலில் பசியின் குரலெழுப்பின.
- பாயும்