
நீங்கள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை மிஸ்டர் ராபர்ட்” என்றாள் குருவாயி. சட்டென்று அவளுக்குப் பாதிரியார் என்றழைக்க வரவில்லை.
ஏசுசபை பாதிரி ராபர்ட் சந்திக்க வந்திருக்கும் செய்தியை வாயில் காவலன் உள்ளே வந்து சொன்னான். ரெசிடென்ட் ஹானிங்டன் குருவாயியை வியப்பாகப் பார்த்தார்.
“இந்த நேரத்தில் பாதிரியார் வருமளவிற்கு என்ன அவசர சேதியோ?”
“எதுவாக இருந்தாலும் நாளை ரெசிடென்ட் கச்சேரியில் சந்திக்க வரச்சொல்லிவிடு டியர். நம் ஏகாந்தமான நேரமிது. பாதிரியார் நம் மனநிலையைக் குலைத்துவிடுவார்.”
“உண்மைதான் ஹனி. பாதிரியார் ராபர்ட்டை நீங்கள் நன்கறிவீர்கள். காரணமின்றி அவர் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார். அவசர செய்தியாக இருக்கும். இல்லை, பிரச்சினைக்குரிய செய்தியாக இருக்கும். இரண்டுமில்லையென்றால் விந்தையான சமாச்சாரமாக ஏதேனும் ஒன்றைக் கொண்டு வந்திருப்பார். உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களையே சீப் செக்ரட்டரியிடம் வம்பில் மாட்டி விட்டாரே?”

“ஓ அதுவா?” என்று சிரித்தார் ஹானிங்டன். இருவருக்கும் அந்தச் சம்பவம் நினைவில் வந்தது.
கிறிஸ்துவர்கள் இருக்கும் சின்னச் சின்னக் குடியிருப்புகளிலும் தவறாமல் ஒரு தேவாலயம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர் ராபர்ட். அதற்கான ஏற்பாடுகளையும் எப்பாடுபட்டாவது அவரே முன்னின்று செய்துவிடுவார். பதினாறு பேர் மட்டுமே இருந்த சிறிய குடியிருப்புப் பகுதி, காயலொன்றை ஒட்டியிருந்தது. அவ்விடத்திலும் ராபர்ட் ஒரு தேவாலயம் கட்டினார். தேவாலயம் கட்டுவதற்கு பிரிட்டிஷ் பிரஜைகளிடம் நிதியுதவி பெற்றார். தேவாலயத்திற்குப் பெரிய மணி ஒன்றை அமைத்துத்தர வேண்டும் என்று கோட்டயத்தில் இருந்த எக்ஸிகியூட்டிவ் இன்ஜினீயரிடம் விண்ணப்பித்தார். அவரும் தேவாலயம் சென்று பார்த்துவிட்டு, பத்தடி உயரத்தில் ஒரு மணியைப் பொருத்தினார். ராபர்ட் நிறைவடையவில்லை. பன்னிரண்டு அடி உயரத்தில்தான் மணி பொருத்த வேண்டும், அதுதான் வழக்கமாக எல்லா தேவாலயங்களிலும் செய்வதென்று இன்ஜினீயருக்கு மீண்டும் எழுதினார்.
இன்ஜினீயர், ‘தான் புதிதாகப் பணிக்கு வந்திருப்பதால் எனக்கிந்த விதிமுறைகள் தெரியாது. சிறிய தேவாலயம் என்பதால் நான்தான் உயரம் குறைத்து மணியைத் தொங்கவிடச் சொன்னேன். மணியடிப்பதன் நோக்கமே ஊரில் உள்ளவர்களுக்குப் பிரார்த்தனை நேரத்தைத் தெரிவிப்பதுதான். இது சின்னஞ்சிறிய தேவாலயம், வெறும் பதினாறு பேர் இருக்கிறார்கள், எல்லாருமே தேவாலயத்தைச் சுற்றித்தான் இருக்கிறார்கள், இங்கு மணியே தேவையில்லை’ என்று பதில் எழுதினார்.
ராபர்ட்டுக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே கோட்டயத்தின் பிஷப்புக்கு இன்ஜினீயரின் கடிதத்தையனுப்பி, இன்ஜினீயரைப் பன்னிரண்டடி உயரத்தில் மணியை மாற்றியமைத்துத் தரச் சொல்ல வேண்டுமென்று எழுதினார். பிஷப்பும் மறுக்காமல் இன்ஜினீயருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். ‘நீங்கள் சொல்வதன் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உங்கள் கடிதத்தில் வெறும் 16 பேர் இருக்கிற தேவாலயத்திற்கு என்று குறிப்பிட்டுள்ள தொனி கண்டிக்கத்தக்கது. இறைவனின் திருநாமத்தைச் சொல்லும் நாவுதான் தேவாலய மணி. அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. எதிர்காலத்தில் உங்கள் கடிதங்களில் கேலி சொல்லும் தொனி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று எழுதினார்.
இத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை. பிஷப் மெட்ராஸ் பிரசிடென்சியின் சீப் செக்ரட்டரிக்கு எழுதி, அவர் ஹானிங்டனுக்கு அந்தக் கடிதத்தையனுப்பி, ‘ஒரு தேவாலயத்தின் மணியைக்கூடச் சரியாகப் பொருத்தும்படி உத்தரவிட முடியாத அளவிற்கு ரெசிடென்ட் என்ன செய்துகொண்டிருக்கிறார்’ என்று பதிலளிக்கக் கோரியிருந்தார். ஹானிங்டனும் குருவாயியும் என்ன சொல்வதென்று தெரியாமல் சிரித்தார்கள். சிரித்து முடித்தவுடன் ஹானிங்டன் பவ்வியமாக, ‘அந்தத் தேவாலயத்தின் மணியைப் பன்னிரண்டடி உயரத்தில் பொருத்தும் பணியை நான் நேரடியாகப் பார்வையிட்ட தகவலை இந்தக் கடிதத்தின் மூலம் உறுதி செய்கிறேன்’ என்று எழுதியனுப்பினார்.
நினைவிலிருந்து மீண்ட குருவாயி, “இரவென்றும் பாராமல் அவர் மேல்மலையில் இருந்து வந்திருக்கிறார். பென்னியுடன் அணை கட்டும் வேலையில் இருந்தவர் கிளம்பி வந்திருக்கிறார் என்றால் முக்கிய சேதியாகத்தான் இருக்கும். நேர்முகம் தாருங்கள் ஹனி.”
“பென்னியிடமிருந்து வருகிறாரா?” ஹானிங்டன் யோசித்தார்.
“வரச்சொல்லவா?”
“நீயே சென்று கேட்டுவிட்டு வாயேன்?”
“ஹனி... என்ன இது? அலுவலக விஷயங்களில் நான் நேரடியாகச் சம்பந்தப்பட மாட்டேன் என்று உங்களுக்குத் தெரியும்தானே?”
“நல்லது... வரச்சொல்...” பெருமூச்சு விட்டபடி உத்தரவிட்ட ஹானிங்டன், “சர்க்கார் உத்தியோகத்திற்கு வந்தால் சொந்த விருப்புவெறுப்புகளை மூட்டைகட்டி வைத்து விடணும். இந்தப் பங்கா, பங்களா, நூற்றுக்கணக்கான வேலையாள்கள், சேவகத்திற்குக் கைகட்டி நிற்கும் வீரர்கள் இதற்கெல்லாம் சர்க்கார் செலவு செய்தாலும், அவற்றை அனுபவிக்கிற நான் செய்கிற செலவென்ன தெரியுமா டியர்?” என்று கேட்டார்.
“உங்களுக்கென்ன செலவு?”
“ஏன் இல்லை? பெரிய செலவே என்னுடையதுதான். என் தனிப்பட்ட வாழ்க்கை, விருப்பு வெறுப்பு, ஆர்வம் எல்லாவற்றையும்விட என் சுதந்திரம்... இவற்றுக்கெல்லாம் என்ன விலை சொல்வது?”
“மாகே போய் மணிக்கணக்காக ஆராய்ச்சி செய்கிறேன் என்று இலை, செடிகொடிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது உங்கள் பின்னால் ஐம்பது பேர் நின்று, நீங்கள் கேட்கும் தாவரங்களையெல்லாம் கொண்டுவந்து தருகிறார்களே, அதை நினைத்தால் நீங்கள் சொல்லும் செலவு குறைவுதான், வருத்தப்படாதீர்கள்” என்று சொல்லிவிட்டு, மணியை இழுத்தாள். வெண்கலத்தட்டில் இரும்புத்துண்டு அடித்து எழுந்த ஒலிக்கு உள்ளே வந்தான் காவலன்.
“பாதிரியாரை வரச்சொல்” என்றாள் குருவாயி.
ஐந்தடிக்குச் சற்றுக் கூடுதலான உயரம், நீண்ட வெள்ளையங்கி, கழுத்திலிருந்து அடிவயிற்றைத் தொடும் நீளத்திற்குச் சிலுவை கோக்கப்பட்ட சங்கிலி என உள்ளே நுழைந்த பாதிரியாரை ஹானிங்டன் நொடியில் பார்வையால் அளந்தார். ஈர்ப்பில்லாத தோற்றமென்றாலும் பாதிரியாரின் கண்களில் தெரிந்த பிரகாசமும் கனிவும் ஹானிங்டனை ஈர்த்தன. அறைக்குள் சட்டென்று புத்துணர்ச்சி பரவியதை உணர்ந்தார். அதுவரை பாதிரியாரைச் சந்திக்க முரண்டுபிடித்துக் கொண்டிருந்த மனம், இனிப்புக்குக் கட்டுப்பட்டுப் பின்வரும் குழந்தைபோல் வழிக்கு வந்தது.
“யுவர் எக்ஸலென்ஸிக்கு, இந்த இறைத்தொண்டனின் வணக்கமும் மன்னிப்பும். அகாலத்தில் சந்தித்துத் தொந்தரவு செய்வதற்கு ஹர் மெஜஸ்டியிடமும் என் மன்னிப்பைக் கோருகிறேன்.”
“நீங்கள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை மிஸ்டர் ராபர்ட்” என்றாள் குருவாயி. சட்டென்று அவளுக்குப் பாதிரியார் என்றழைக்க வரவில்லை.
பாதிரியார் உட்கார்ந்து தன் பதற்றம் தணிவதற்குள் அவர் முன்னால் தேநீர்க் கோப்பை வைக்கப்பட்டது.
“என்ன விஷயமென்று சொல்லுங்கள் பாதர்.”
“நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன் யுவர் எக்ஸலென்ஸி. லண்டன் மிஷனரியிடமிருந்து எனக்கொரு தந்தி வந்திருக்கிறது. நான் முன்பிருந்த கோட்டயம் தேவாலயத்தில் ஒரு வாரம் முன்பு தந்தியை வாங்கியிருக்கிறார்கள். நான் அனுமந்தன்பட்டியில் இருப்பேன் என்று நினைத்திருக்கிறார்கள். அனுமந்தன்பட்டியில் டெலிகிராம் வசதி இல்லையென்பதால் திண்டுக்கல்லுக்குச் சேதியனுப்பி, அங்கிருந்து அனுமந்தன்பட்டிக்குச் சென்று பார்த்து, பிறகு திருவனந்தபுரத்திற்குத் தொடர்புகொண்டு எனப் பல இடங்களில் அலைந்து திரிந்து, கடைசியாக நான் பெரியாறு அணை கட்டுமிடத்தில் இருப்பதையறிந்து எனக்குத் தகவல் அனுப்பினார்கள். லண்டனிலிருந்து தந்தி வந்த கடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, நான் கோட்டயம் சென்று பார்த்தேன். என்னுடைய பெயருக்கு ஒரு தபாலும் வந்திருந்தது.”
“என்ன விஷயமென்று நேரடியாகச் சொல்லலாமே பாதர்?”
“மன்னிக்கணும் யுவர் எக்ஸலென்ஸி. இருபது நாள்களாக அங்கும் இங்குமாக நான் ஓடிக்கொண்டிருப்பதில் அந்த ஓட்டத்தைச் சொல்வதிலேயே பிரதான ஆர்வம் வந்துவிட்டது.”
“பரவாயில்லை, சொல்லுங்கள்.”
“நன்றி யுவர் எக்ஸலென்ஸி. லண்டன் மிஷனரி சொசைட்டியிலிருந்து மகாராஜாவுக்குத் தபாலொன்று அனுப்பியிருக்கிறார்கள். தபாலின் நகலை மெட்ராஸ் பிரசிடென்சியின் சீப் செக்ரட்டரிக்கும் கவர்னருக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.”
சுவரில் இருந்த கடிகாரம் ‘டிங் டாங் டிங் டாங்’ எனப் பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. கடிகாரச் சத்தம் முடியும்வரை பாதிரியார் பேச்சை நிறுத்தினார்.
“எது குறித்து?”
“கோட்டயம் மேஜிஸ்ட்ரேட் கொடுத்த தீர்ப்பு ஒன்றைத் தள்ளுபடி செய்யச் சொல்லி, மகாராஜாவுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நான்கு மாதங்களாகிவிட்டதாம். மகாராஜாவிடமிருந்து பதில் வரவில்லையாம். மெட்ராஸ் கவர்னர் அலுவலகத்திலிருந்தும் சீப் செக்ரட்டரி அலுவலகத்திலிருந்தும் அதற்கான முன்னெடுப்பு எடுக்கவில்லையாம். லண்டன் மிஷனரியில் மிகக் கவலையோடு மகாராஜாவின் பதிலுக்காகக் காத்திருக்கிறார்கள். பதில் பெறுவதற்குத் தோதாக, தங்களைச் சந்திக்க என்னை அனுப்பியிருக்கிறார்கள்.”
“முதலில் என்ன தீர்ப்பென்று கூறுங்கள்.”
“கோட்டயத்தைச் சார்ந்த ஒரு இந்து, கிறிஸ்துவத்திற்கு மாறியிருக்கிறான். கோட்டயத்தில் அவனுடைய உறவினர்கள் அவனுக்குத் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். ஊர்க் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடவில்லையாம். பொதுப்பாதையில் போகக் கூடாது என்று அவனை மறித்து அடித்திருக்கிறார்கள். அவன் மனைவி பிள்ளைகளையும் பொது இடத்தில் புழங்க விடாததில் மனம் வெறுத்து, அவன் தங்கசேரிக்குக் குடிபெயர்ந்திருக்கிறான். தங்கசேரியில் முழுக்கவும் கிறிஸ்தவர்கள் இருந்ததால் தனக்குப் பிரச்சினையொன்றும் இருக்காது என்றெண்ணிக் குடிபெயர்ந்துவிட்டான். ஒரு வருஷத்திற்கு முன்பு கிறிஸ்துமஸ் அன்று கொல்லத்தில் ஒரு தோட்டத்தில், தன்னுடைய கிறிஸ்துவ நண்பர்களுடன் அவன் மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறான். அவனுக்கு வேண்டிய ஆளொருவன் இவன் கிறிஸ்துவர்களுடன் விருந்துண்பதைப் பார்த்து, கோட்டயத்தில் பரப்பிவிட்டான். கோட்டயத்தில் அவனுடைய வீட்டுச் சுவரில் சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட கீழ்ச்சாதியன் என்று எழுதி வைத்துவிட்டார்களாம். இவனுடைய உறவினர்கள் அவமானம் பொறுக்க முடியாமல், தங்கசேரிக்குத் தேடிவந்து இவனையும் இவன் குடும்பத்தாரையும் அடித்திருக்கிறார்கள்.”
“அச்சச்சோ... இந்தச் சமஸ்தானத்தின் கெடுபுத்தியே இதுதான்” குருவாயி.
“ஹாரிபிள்” ஹானிங்டன்.
“காரணமின்றித் தானும் தன் குடும்பத்தாரும் அவமதிக்கப்படுவதைத் தடுக்கக் கோரி, அவன் கொல்லம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறான். பிரச்சினை கோட்டயத்தில்தானே, நீங்கள் அங்கு செல்லுங்கள் என்று எல்லைப் பிரச்சினையைக் காட்டி நீதிமன்றம் அவர் வழக்கை எடுக்க மறுத்தது. பல காலமாகத் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதம் மாறிய கிறிஸ்துவர்கள் தங்களின் உரிமைகளுக்காக அலைக்கழிக்கப்படுவதை யுவர் எக்ஸலென்ஸி நன்கறிவீர்கள். பாதிக்கப்பட்டவர் விடாப்பிடியான மனிதர் என்பதால் கோட்டயம் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குச் சென்றார். ஒரு வருஷம் வழக்கை இழுத்தடித்தார்கள். கடைசியாக நீதிபதி தீர்ப்பும் கொடுத்தார்.”

“என்ன தீர்ப்பு?” இருவருமே ஆர்வமாய்க் கேட்டார்கள்.
“இந்து மதம் சாதியை ஏற்றுக்கொள்கிற மதம். பிறப்பினால் சாதி இருக்கிறது என்பதையே மறுக்கின்ற மதம் கிறிஸ்துவம். ஏதேனும் ஒரு சாதியில் பிறக்காதவர்கள் இந்துவல்ல என்று இந்து மதம் வெளிப்படையாகச் சொல்கிறது. அதைப்போல் கிறிஸ்துவர்களுடன் உணவு உண்பவர்கள் இந்து மதத்தினராக இருக்க முடியாது. வாதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கிறிஸ்துவர்களுடன் அமர்ந்து உணவுண்டதை ஏற்றுக்கொள்கிறார். பிறகு அவரைச் சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட கீழ்ச்சாதியன் என்று சொல்வது எப்படிக் குற்றமாகும்? உண்மைதானே? அவரின் புகழுக்குப் பங்கம் விளைவிக்கும் செயல் இதிலொன்றுமில்லையென்று இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன் என்று கோட்டயம் நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.”
“நீதிபதி நிச்சயம் சமஸ்தானத்தைச் சார்ந்தவராகத்தான் இருப்பார்.”
“ஆமாம் யுவர் எக்ஸலென்ஸி, பெயர் ரகுநாத ராவ்.”
“எதிர்பார்த்ததுதான். சமஸ்தானம் வேற்று மதத்தவருக்கான நீதியை வழங்கத் தடுமாறுகிறது. ஆங்காங்கு அநேக பிரச்சினைகள். பெரியாறு அணைக்காக தங்கசேரியை ஒப்படைத்தே ஆக வேண்டுமென்று மறைந்த அரசர் விசாகம் திருநாளும் திவான் ராமய்யங்காரும் எத்தனை அழுத்தம் கொடுத்தார்கள்? சீப் செக்ரட்டரி எனக்குக் கடுமையான தபாலொன்று எழுதினாரே? ‘பதினைந்து நாளுக்கு ஒருமுறை அறிக்கை அனுப்புவதற்காகவா நீங்கள் அங்கு ரெசிடென்டாக இருக்கிறீர்கள்? அதுவும் அசிஸ்டென்ட் ரெசிடென்ட் சொல்லி, கிளார்க் தட்டச்சு செய்து கொடுக்கும் தபால்களில் கையொப்பமிட? பிரசிடென்சியின் நிலையை மகாராஜாவிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. ஹர் மெஜஸ்டியின் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸ் தங்கசேரியை விட்டுக்கொடுக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். அதற்குப் பதில் வருஷ குத்தகைத் தொகையைக் கூடுதலாகவோ அல்லது இடத்திற்கான மொத்த விலையோ கொடுக்கத் தயாரென்று அழுத்தமாகச் சொல்லுங்கள்’ என்று எத்தனை தபால்? உங்களுக்கே தெரியும், விசாகம் திருநாள் எவ்வளவு இளகிய மனம் கொண்டவரோ அவ்வளவு உறுதியும் கொண்டவர். தங்கசேரி அவர்களுக்கு நிரந்தரத் தலைவலி. மொத்தக் கடத்தல்காரர்களும் அடைக்கலம் தேடும் இடம். சமஸ்தானத்தின் நடைமுறைகளைக் குலைப்பவர்களின் சரணாலயம். அதனால் அஞ்சாங்கோவையும் தங்கசேரியையும் கொடுக்காமல் அணைகட்ட இடம் கொடுக்கவே முடியாதென்று மகாராஜா சொல்லிவிட்டார். சீப் செக்ரட்டரி, ரெசிடென்ட் கண்ணையும் காதையும் திறந்து வைத்து நடப்பதைக் கவனித்து அதற்கேற்ப பேச்சுவார்த்தையைத் தொடருங்கள் என்று எழுதினார். தங்கசேரி எல்லோருக்குமே அவப்பெயரைத்தான் வாங்கித் தருகிறது. சரி நீங்கள் சொல்லுங்கள், பிறகென்ன ஆனது?”
“அந்தக் கிறிஸ்துவன், லண்டன் மிஷனரி சொசைட்டிக்கு எழுதியிருக்கிறான். ஒரு கிறிஸ்துவனானதற்காக நான் கீழ்ச்சாதியனாக ஆக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய அவமானத்தைத் துடைப்பது மிஷனரியின் கடமையென்று எழுதியிருக்கிறான். அவர்கள் மகாராஜாவுக்குத் தபால் எழுதியிருக்கிறார்கள்.”
“ஓ... மகாராஜாவிடம் என்ன கோரிக்கை வைத்திருந்தார்கள்?”
“பெட்டிஷனர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவத்திற்கு மதம் மாறிய பிறகு, இந்து மதத்தின் கோட்பாடுகளை அவர்மேல் சுமத்துவது நியாயமல்ல. நீதிபதியின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி, கிறிஸ்துவத்திற்குச் சாதி கிடையாது. சாதி இல்லாத ஒருவரை, கீழ்ச்சாதி என்றும் சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் என்றும் குறிப்பிடுவது அவப்பெயரைக் குலைப்பதாகாது என்று நீதிபதி சொல்வது பொருத்தமற்றது. இந்து மதத்தில் இருந்து முகம்மதியனாக மாறும் ஒருவரை உங்களின் தர்பார் முகம்மதியன் என்றுதான் அழைக்கிறது. இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவத்திற்கு மாறுபவர்களை மட்டும் கீழ்ச்சாதி என்று சொல்வது, குடிகளைச் சமமாக நடத்துவதாகச் சொல்லும் உங்களின் தர்பாருக்குப் பொருத்தமானதல்ல. முகம்மதியனாக மாறும் இந்துவை முகம்மதியன் என்று சொல்வதைப்போல் கிறிஸ்துவனாக மாறும் இந்துவைக் கிறிஸ்துவன் என்று மட்டுமே அழைக்க வேண்டும். அவர்களைக் கீழ்ச்சாதி என்று அவமானப்படுத்துவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று மகாராஜாவுக்குத் தபால் எழுதினார்களாம்.”
“திவான் என்னிடம் இந்தத் தபால் பற்றிச் சொல்லவில்லையே?”
“திவான் கைக்குச் சென்றதா என்பதே சந்தேகம்தான். மகாராஜாவின் பெயருக்கு வரும் தபால்கள் அரண்மனைக்குச் செல்லும். அரண்மனையின் காரியக்காரனின் கண்களுக்குத் தப்பி எந்தத் தபாலும் நேரடியாக மகாராஜாவிடம் செல்ல முடியாது.”
“சரியாகப் புரிந்துவைத்திருக்கிறீர்கள் பாதர். இந்தத் தபால் மகாராஜாவிடம் போவது நல்லதல்ல என்று சங்கரன் தம்பி தடுத்துவிட்டிருப்பார்.”
“இருக்கலாம் யுவர் எக்ஸலென்ஸி... லண்டன் மிஷனரி சொசைட்டியிலிருந்து அதன் உறுப்பினர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டிருக்கிறார். உங்கள் மூலம் மகாராஜாவிடம் எடுத்துச் சொல்லி, கிறிஸ்துவர்களுக்குப் பாதுகாப்பையும் மரியாதையையும் பெற்றுத்தரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.”
“அரசியல் புரிந்துணர்வுகளைக் கடந்து மதச் சம்பிரதாயங்களுக்குள் சென்றாலே சிக்கல்தான். மகாராஜா புரிந்துகொண்டாலும் என்ன நடவடிக்கையெடுப்பார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.”
பாதிரியாரின் முன்னால் இருந்த தேநீர் ஆடை படிந்து சில்லிட்டிருந்தது.
“உங்களுக்கு வேறு தேநீர் கொடுக்கச் சொல்கிறேன்” என்ற குருவாயி, பாதிரியார் வேண்டாமென்று மறுப்பதைப் பொருட்படுத்தாமல், மூவருக்கும் புதிதாகத் தேநீர் கொண்டுவரச் சொன்னாள்.
தலையைக் குனிந்தபடி, இரண்டு கைகளையும் பிசைந்துகொண்டு உட்கார்ந்திருந்த பாதிரியாரைப் பார்த்த குருவாயிக்கு அவர் கவலைப்பட்டது இதுவரை சொன்ன விஷயத்திற்காக அல்ல, சொல்லப்போகும் விஷயத்திற்காகத்தான் என்று புரிந்தது. தேநீர் வரும்வரை காத்திருந்தாள். ஹானிங்டன் இருட்டில் நின்றிருந்த மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் கண்களுக்குள் குடியேற தூக்கம் தயாராகிவிட்டதைக் குருவாயி கவனித்தாள்.
தேநீர் வந்தவுடன், ஹானிங்டனுக்கும் பாதிரியாருக்கும் எடுத்துக் கொடுத்த குருவாயி, தானும் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள். சூடாக ஒரு மிடறு தேநீரை உறிஞ்சியவள், அதன் இதத்திற்குக் கண்களை மூடித் திறந்தாள்.
“நீங்கள் சந்திக்க வந்த காரணத்தைச் சொல்லவில்லை மிஸ்டர் ராபர்ட். முன்கதைச் சுருக்கத்தைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.”
குருவாயி சொன்னவுடன் ஹானிங்டன் ஆச்சரியமாகத் திரும்பினார். தான் கவனிக்கத் தவறிய ஒன்றை குருவாயி கவனித்துவிட்ட வியப்பு அவர் பார்வையில். பாதிரியாரும் குருவாயியின் நுண்ணுணர்வை வியந்து பார்த்தார். அவர் முகத்தில் கவலையும் கூடியது.

“யுவர் எக்ஸலென்ஸி, மிஷனரியின் தபால் வந்த சேதி கிடைத்த பிறகுதான் நான் கோட்டயம் வந்தேன். வந்த இடத்தில்தான் கவர்னர் கன்னிமாராவின் பயணத்தில் நடந்த அபாயகரமான சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டேன். மிகவும் கவலையாக இருக்கிறது. வறுமையும் பஞ்சமும் இந்தத் தேசத்தின் மக்களைப் பட்டினியில் தள்ளியிருந்தாலும் சாதிதான் இவர்களைப் படுகுழியில் தள்ளியிருக்கிறது. தேவனின் படைப்பில் ஒரு உயிரும் புறக்கணிப்பின் அவமானத்தில் மரணிக்கக் கூடாது என்பதற்காகத்தான் பாதிரிகளான நாங்கள் காடு மேடு எல்லாம் அலைந்து திரிந்து இறைவனின் அருளொளியைப் பெறுவதற்காகப் பாவப்பட்டவர்களை நல்லூழ்க்கு அழைத்து வருகிறோம். சுதேசி சமஸ்தானத்தவர்களோ மேலும் மேலும் பாவப்பட்ட இம்மக்களை ஒடுக்குவது நற்காரியமன்று யுவர் எக்ஸலென்ஸி. சுதேசி சர்க்காரின் பாரபட்சத்தினால் நம் தேசம் அதன் புகழ்மிகு பிரபுவை இழந்திருக்கும்.”
ஹானிங்டனும் குருவாயியும் கவலையுடன் பாதிரியின் முகத்தைப் பார்த்தார்கள்.
“நல்லவேளையாக அசம்பாவிதம் தடுக்கப்பட்டதே?”
“தற்காலிகமாகத்தான் எக்ஸலென்ஸி. மீண்டும் நடப்பதற்கான தயாரிப்புகள் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கின்றன. சமஸ்தானத்தின் பாரபட்சமான போக்குகளைக் கண்டிக்க, சமஸ்தானத்துடன் நல்லுறவு வளர்க்க நினைக்கும் பிரிட்டிஷ் சர்க்காரின் அதிகாரிகளையும் தண்டிக்க நினைக்கிறார்கள்.”
“சமஸ்தானத்துடன் நல்லுறவென்று எப்படித் தீர்மானித்தார்கள்? பெரியாறு அணை கட்ட இடம் பெறுவதற்கு இருபத்தைந்து வருஷமாகியிருக்கிறது. சமஸ்தானம் தன்னுடைய கோரிக்கைகளிலிருந்து இறங்கி வரவில்லையே?”
“இப்போது பெரியாறு அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதன்மூலம், பிரிட்டிஷ் சர்க்காரைக் கோபப்படுத்துவது. பிரிட்டிஷ் சர்க்காருக்குக் கோபம் வந்தால் அவர்கள் திருவிதாங்கூருடன் மோதுவார்கள் என்ற கணக்கு. சாம்சனிடம் இரண்டு பை வெடிமருந்து இருந்ததே? அதெப்படி அவன் கைக்கு வந்தது என்று போலீசு கண்டுபிடித்துவிட்டதா?”
“சாம்சனை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.”
“அவன் சீக்கிரம் உண்மையைச் சொல்லிவிடுவான். அடி வாங்குவதற்கு அவன் உடம்பில் தெம்பிருக்காது. ஆனால் அவன் மூளை அடுத்த ரகசியத் திட்டத்தை யோசிக்க ஆரம்பித்துவிடும்.”
“சாம்சனுக்குப் பின்னால் யார் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா என்ன?”
“மன்னிக்கணும் யுவர் எக்ஸலென்ஸி. இன்னும் அந்த அளவிற்கு உண்மைகள் எனக்குத் தெரிய வரவில்லை. ஆனால் சாம்சனுக்கு வெடிமருந்து கொடுத்தது அந்தக் கிறிஸ்துவன்தான்.”
“என்னது?” ஹானிங்டன் அதிர்ந்தார்.
“தனக்கு நீதி கொடுக்காத சமஸ்தானத்தை அதிர வைக்கத் திட்டமிட்டிருக்கிறான். ஆலப்புழா துறைமுகத்தில் வேலை பார்க்கும் பிரிட்டிஷ் பிரஜை ஒருவன் அவனுக்கு நெருக்கமான நண்பனாம்.”
“ஆலப்புழா துறைமுகத்தில்தானே சமஸ்தானத்திற்கு வேண்டிய வெடிமருந்தும் ஆயுதங்களும் கொண்டுவர முடியும்? சமஸ்தானத்தின் வேறெந்த வழியாகவும் ஆயுதங்களோ வெடிமருந்தோ உள்ளே கொண்டுவர முடியாது. திவான் கொடுக்கும் பட்டியலுக்கு அதிகமாகக் கொஞ்சம்கூட வெடிமருந்தோ ஆயுதமோ இறக்குமதி செய்ய முடியாதே? சாம்சனுக்கு எப்படிக் கிடைத்தது? ஒரு வருஷத்துக்கு முன்பே மாப்பிளா கலகத்தில் கள்ள வழியில் நிறைய வெடிமருந்துகள் விநியோகப்பட்டன. அதனால் வெடிமருந்து ஏற்றுமதி, இறக்குமதி, விநியோகம் செய்பவர் பெயர், விலாசம், சர்க்காரிடம் அவர்கள் பெற்ற உரிமம் இவையெல்லாம் இல்லாமல் ஒரே ஒரு துப்பாக்கி ரவைகூட துறைமுகத்திலிருந்து வெளியில் செல்லக்கூடாதென்று உத்தரவு போட்டிருந்தோமே? துறைமுகத்திற்குத் தனியாக சமஸ்தானத்தின் தர்பார் பெயரில் திவான் உத்தரவு பிறப்பித்திருந்தாரே?”
“எல்லாம் சரி யுவர் எக்ஸலென்ஸி...”
“அதைவிட முக்கியம், துறைமுகத்தின் ஏஜெண்ட் கட்டாயம் பிரிட்டிஷாராய் இருக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தோம் குருவாயி.”
குருவாயியும் கவலையுடன் பார்த்தாள்.
“பிரிட்டிஷார் என்பதுதான் சாம்சனுக்கும் கிறிஸ்துவனுக்கும் காரியத்தை எளிதாக்கிவிட்டது. கிறிஸ்துவர்களை அவமதிக்கும் இந்தச் சமஸ்தானத்திற்கு நெருக்கடி தருவோம் என்று ஏஜெண்டிடம் மதத்தைக் காட்டி மயக்கியிருக்கிறார்கள். வெடிமருந்தை வெளியில் கொண்டு வருமிடத்தில் இருக்கும் சுங்க அதிகாரிகளிடம், ‘நம்முடைய நாயர் படைக்குத் தங்களின் எல்லை வழியாக வழிவிடாத பிரிட்டிஷ் சர்க்காருக்கு அணை கட்ட மட்டும் எதற்காக நாம் இடம் கொடுக்க வேண்டும்? அணை கட்டினால் நம்முடைய ஏலத்தோட்டங்களில் விளைவதில் பாதி திருடு போகும். இடம் கொடுப்பதற்குச் சமஸ்தானத்தின் குடிகளுக்கு எதிர்ப்பிருக்கிறது என்று காட்ட வேண்டும். வெடிமருந்தை வெடிக்க மாட்டோம், அச்சுறுத்துவதற்காக மட்டும் கவர்னர் வரும் வழியில் வெடிமருந்துப் பையை வைக்கப் போகிறோம்’ என்று சொல்லி, அங்குள்ளவரை சரி செய்திருக்கிறார்கள். அவரை வசியம் பண்ணக்கூடிய இந்தக் காரணம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் ஓராண்டுச் செலவுக்குரிய பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.”
“தர்பாருக்கு விரோதமாக இத்தனை காரியங்களா? என்னதான் நடக்கிறது ஹனி? நாயர் படைக்கு வழி கொடுக்காததால் என்று சொல்கிறாரே? அதென்ன விஷயம்?”
“போன வருஷம் நடந்த பிரச்சினை அது. மேல்மலையில் இருக்கிற ஏலத்தோட்டத்திற்குத் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து செல்வதற்கு நல்ல பாதையில்லை. அடர்ந்த காட்டு வழியாக குறுகலான ஒற்றையடிப் பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். ஏலத்தோட்டத்திற்குச் செல்லும் நாயர் படைப்பிரிவு வீரர்கள் ஒவ்வொரு முறையும் உயிரைப் பணயம் வைத்துத்தான் காட்டு வழியில் சென்று திரும்புவார்கள். பல இரவுகள் நடக்க வேண்டியிருக்கும். நன்றாகக் கிளம்பும் படைப்பிரிவின் வீரர்களில் பலர் ஏலத்தோட்டத்திற்குச் செல்லும்போது நடக்கத் தெம்பில்லாமல் ஊர்ந்துகொண்டு செல்வார்கள். பலர் காட்டு ஜுரம் வந்து நிற்க முடியாமல் வழியிலேயே விழுந்து கிடப்பார்கள். ஏலத்தோட்டத்தின் விளைபொருளைக் காப்பதற்காக மனிதர்களை இழந்து கொண்டிருப்பதைக் கவலையோடு ஏலத்தோட்டத்தின் சூப்பிரண்டெண்டுகள் சொல்வதாக திவான் எனக்குத் தபால் எழுதியிருந்தார். அவர் தபால் எழுதும்போது மலைக்குச் சென்ற படைப்பிரிவில் ஒரு ஜமேதாரன், ஒரு நாயக், இரண்டு ஹவில்தார், பன்னிரண்டு சிப்பாய்கள் இறந்துபோனார்கள். 80, 90 பேர் வீரர்களாகப் பணிபுரியும் உடல்தகுதியை இழந்திருந்தார்கள்.”
சட்டென்று அங்கு நிலவிய மௌனம் சங்கடமாக உணரப்பட்டது.
“திவான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எனக்குத் தபால் எழுதினார். ஒற்றையடிப் பாதையைத் தவிர்க்க மெட்ராஸ் பிரசிடென்சியில் உள்ள கம்பம் தேவாரம் மலைத்தொடர்களுக்கு இடைப்பட்ட வழிதான், ஏலத்தோட்டங்களுக்குச் செல்லக்கூடிய நேர்வழி. மதுரா கண்ட்ரியின் மக்களில் பலர் ஏலத்தோட்டங்களுக்குக் கூலியாக வருவதற்குக் காரணமும் அதுதான். அவர்களுக்குக் காட்டு வழியாக நல்ல பாதை இருக்கிறது. அந்தப் பாதையை நாயர் படைப்பிரிவும் பயன்படுத்திக்கொள்ள பிரசிடென்சி அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். இதற்கு முந்தைய வருஷங்களில், முந்தைய திவான்கள் இதே கோரிக்கை வைத்தபோது பிரசிடென்சி நிராகரித்தது. சென்ற வருஷம், நான் தபால் எழுதியவுடனே, ‘கேட்ட அனுமதி வழங்கப்படுகிறது’ என்று ஒரே வரியில் பதில் அனுப்பிவிட்டார் சீப் செக்ரட்டரி. பெரியாறு அணைத் திட்டம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததும் ஒரு காரணம்.”
குருவாயிக்கு மேலும் கவலை கூடியது.
“எந்தவொரு சமஸ்தானமும் பிறிதொரு சமஸ்தானத்துடன் உறவுகொள்ளாமல் தனித்திருக்க முடியாது. பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும்போதுதான் இணக்கம் வரும். எதிர்காலத்தில் என்னென்ன பிரச்சினைகள் விஸ்வரூபமெடுக்குமோ?” என்று கேட்ட குருவாயி, “காட்டு வழியாக நடந்து போவதற்கே இவ்வளவு பெரிய உயிரிழப்பு என்றால், எட்டு வருஷம் அந்த அடர்ந்த காட்டிலேயே தங்கி அணை கட்டப்போகும் பென்னிக்கும் மற்ற ஊழியர்களுக்கும் என்ன நிலையாகும், கேட்கவே மனசு பதறுகிறதே?!” என்றாள்.
“ஆமாம் குருவாயி. பெரிய சவால்தான். காலத்தின் முன்னால் உள்ள இந்தச் சவாலில் மிஞ்சி நிற்பது அவரவர் அதிர்ஷ்டம்தான்.”
- பாயும்