
தேக்கடியில் பெரியாறு டிவிஷன் அலுவலகக் கட்டுமானம் பெருமளவு நிறைவடையும் நிலையில் உள்ளது. தேக்கடியில் இருந்து அணை கட்டுமிடத்திற்கு ஒற்றையடிப் பாதை வேலை முடிந்தது.
பழனி மலையின் முன் அந்தியைப்போல் ரசமான பொழுது வேறொன்றில்லை. அதிகாலை ஆளை முடக்கிப்போடும். பகல் நிலையற்றது. அன்றைய தட்பவெட்பத்திற்கு ஏற்ப கூடிக் குறையும் வெயில், மழை, காற்று என இம்மூன்றினாலும் பகலின் ரம்மியத்தை அனுமானிக்க முடியாது. இரவின் கணம் மனத்தின் பலவீனத்தை அதிகரிக்கும். முன்அந்தியே பழனி மலையில் அணுக்கமாக இருப்பது.

பென்னியும் ஜார்ஜியானாவும் தங்களின் மூன்று குழந்தைகளுடன் சிறு நடையில் இருந்தார்கள். பென்னியின் இடது கைக்குள் டோராவின் வலது கை பூப்போல் புதைந்திருந்தது. லூசி ஜார்ஜியானாவின் வலது கையைப் பிடித்திருக்க, லூசி அமர்ந்திருந்த சக்கரம் பொருத்தப்பட்ட மடக்கு நாற்காலியை இடது கையில் மெல்ல தள்ளிக்கொண்டு நடந்தாள் ஜார்ஜியானா.
கடந்த பருவத்திற்கான அணை வேலையை முடித்துக்கொண்டு பென்னி கொடைக்கானலுக்கு வந்து மூன்று நாள்களாகிவிட்டன. மெக்கன்சியும் லோகனும் பென்னியுடன் கொடைக்கானல் வந்துவிட, டெய்லர் தேக்கடியில் தங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். அணை வேலைக்குத் தேவைப்படும் இயந்திரங்கள் வாங்குவதற்காகப் பென்னி இங்கிலாந்து செல்ல வேண்டியிருந்தது. தான் இங்கிலாந்து செல்லும் நேரத்தில், தன்னுடைய பொறுப்பு டெய்லரிடம் தரப்பட வேண்டுமென்று பென்னி, சீப் இன்ஜினீயருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
பென்னி திரும்பி வர குறைந்தது நான்கைந்து மாதங்களாகிவிடும். பென்னி வரும்வரை என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும், அணை கட்டுமிடத்தில் நடக்க வேண்டிய வேலைகள், அணையிலிருந்து சுரங்கத்திற்குத் தண்ணீரைக் கொண்டுவர வேண்டிய கால்வாய், சுரங்கத்தில் இருந்து சமவெளிக்கு நீர் கொண்டுவர வேண்டிய கால்வாய், பேரணையில் இருந்து பெரியாற்று நீரை மேலூருக்குக் கொண்டு செல்லும் பிரதான கால்வாய் எனப் பென்னி அளவிற்கு, அணை பற்றிய முழுமையான செயல்திட்டங்களை அறிந்தவர் டெய்லர். பென்னியும் அவரிடம் போதுமான அளவிற்கு விவரித்துள்ளார். அடுத்த பருவம் தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளையும், கூலிகளை அழைத்து வருவதற்குக் கங்காணிகளிடம் பேசுவதற்காகவும் டெய்லர், தேக்கடியில் இருந்தால் வசதியென்று எண்ணி, தேக்கடியில் தங்கினார்.

கட்டுமானப் பொருள்களை இன்னும் மலைக்குக் கொண்டு செல்லாததால், மலையில் கூலிகளைத் தங்க வைக்கவில்லை. குடியிருப்புகள் கட்டுவதற்கு மூங்கில் கழிகளும், அணை வேலைக்குத் தேவையான மரக்கட்டைகளும் ஆங்காங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கொன்றும் பாதுகாப்பு தேவைப்படாது. வெள்ளம் அதிகமாகி அடித்துச் செல்லப்பட்டால் உண்டு. பாதுகாப்புக்குக் கூலிகள் இருந்தாலும் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்த முடியாது.
தேக்கடியில் பெரியாறு டிவிஷன் அலுவலகக் கட்டுமானம் பெருமளவு நிறைவடையும் நிலையில் உள்ளது. தேக்கடியில் இருந்து அணை கட்டுமிடத்திற்கு ஒற்றையடிப் பாதை வேலை முடிந்தது. பதினான்கடி அகலத்தில் உள்ள ஒற்றையடிப் பாதையில் மாட்டு வண்டிகளும் கழுதைகளும் சுமையேற்றிச் செல்லலாம். சுண்ணாம்புக் கற்களைச் சிறு மூட்டைகளாகக் கட்டி, கழுதைகளின் முதுகில் அனுப்பி வைக்க முடியும். ஆனால் கனமான கட்டுமானப் பொருள்களை மேலே கொண்டு செல்ல, பென்னி இரண்டு வழிகளை யோசித்திருக்கிறார். கூடலூர் கணவாயில் குருவனூத்திலிருந்து அணை கட்டுமிடம் வரை ரயில்வே டிராம் பாதை அமைப்பது, மற்றொன்று தேக்கடியில் இருந்து முள்ளியபாஞ்சான் நதியில் படகுகள் மூலம் பொருள்களை மேலே கொண்டு செல்வது. முள்ளியபாஞ்சான் நதியை வருஷம் முழுக்க நம்ப முடியாது. கோடையில் நீர் வற்றிப்போகும். மலையின் மேடுகளிலும் பள்ளத்தாக்கிலும் செல்லும் நதியில் படகுகள் மூலம் பொருள்களைக் கொண்டுசெல்வது சவாலான காரியம். முள்ளியபாஞ்சான் நதியைப் பயன்படுத்த புதிய வழிமுறையைக் கண்டறிந்திருக்கிறார்.
திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதற்கும் இப்போது நடைமுறையில் கூடும் குறையும் செலவினங்களுக்கும் தனித்தனியாகத் திருத்திய திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. பிரிட்டிஷ் இன்ஜினீயர்களின் குடியிருப்புகளுக்கான செலவு எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாகிறது.
“யோசிப்பதென்றால் நீ வீட்டிலேயே தனியாக உட்கார்ந்து யோசித்திருக்கலாமே பென்னி?”
சிந்தனைகளில் மூழ்கியிருந்த பென்னி, சூழலுக்குத் திரும்பினார்.
“சாரி டியர். லண்டன் கிளம்புவதற்குள் இங்கு செய்ய வேண்டிய வேலைகளை நினைத்தால் தலையைச் சுற்றுகிறது.”
“டெய்லர் உன்னைப்போலவே சரியா செய்வார். கவலைப்படாதே பென்னி.”
“இது கவலையில்லை ஜார்ஜி. பொறுப்பு. சின்னக் காலதாமதமும் இல்லாமல் காரியம் நடக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தரும் பதற்றம். அவ்வளவுதான். இதோ இதோ... இந்தப் பழனி மலையில் தரை இறங்குகிறேன்... அணை பற்றிய பேச்சே இல்லை. சரியா?” என்று கேட்டுவிட்டு, “டியர் டோரா...” என டோராவைத் தூக்கிக் கொஞ்சி, அழுந்த முத்தமிட்டு, முதுகின் பின்னால் கட்டிக்கொண்டார் பென்னி.
“பப்பா... லண்டன் போப்போறீங்களா?”
“யெஸ் டியர்...”
“மம்மாவும் நானும்?”
“பப்பா போயிட்டு உடனே வரணுமா, அதனால இந்த முறை நீங்கல்லாம் இங்கியே மம்மாகூட இருக்கணும். சரியா?”
பளிங்கு போன்ற நீலநிற விழியில் லூசி பென்னியைப் பார்த்தது.
“பப்பா, லூசி உங்கள கோவமா பாக்குறா?”
“பப்பா மேல கோவமா, எதுக்கு டியர்?”
“நீங்கதான் எங்ககூடவே எங்கயும் வரதில்லையே?”
“பப்பா, ஊருக்குப் போயிட்டு வந்து, டேம் கட்டுற இடத்துக்கு உங்களையும் கூட்டிக்கிட்டுப் போறேன். மேல்மலையில பப்பாவுக்குன்னு தனி வீடு ஒன்னு கட்டப்போறேன்.”
“அய்ய்ய், பப்பா வீடு, பப்பா வீடு...” டோரா பென்னியின் முதுகிலிருந்து நழுவி, இறங்கி ஜார்ஜியின் கால்களைக் கட்டிக்கொண்டது.
“உங்ககூட இருக்கறதுன்னா டோராவுக்குப் பிரியம்.”
“ஏன், எடித்துக்கும் லூசிக்கும்?”
“இவங்க பிறந்ததுல இருந்தே நீங்க விசிட்டர் மாதிரி வர்றீங்க, போறீங்க. கூட இருந்தாத்தானே பிரியமா இருக்குங்க. எடித்துக்கு என்னவோ கொஞ்சம் பயமும் இருக்கு.”
பென்னியின் முகம் வாடியது. குழந்தைகளுக்கும் ஜார்ஜிக்கும் நியாயம் செய்ய முடியாத தன் வாழ்வை நினைத்தார். பதினேழு வயதில் அடிஸ்கோம்ப் ராயல் இந்திய ராணுவக் கல்லூரியில் பயிற்சியை முடித்தார். தேர்ச்சி பெற்ற அவ்வாண்டு (1858) மாணவர்களிடம் லார்டு ஸ்டான்லி உரையாற்றினார். சிப்பாய்க் கலகத்திற்குப் பின்னால், இந்தியா பிரிட்டிஷ் அரசியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தவுடன் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸ் அவர். பிரிட்டிஷ் இந்தியாவின் முழுமையான அதிகாரம் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸிடம்தான் இருக்கிறது. இந்தியாவின் வைஸ்ராய், கவர்னர்கள், கலெக்டர்கள் முதல் மிலிட்டரியின் லெப்டினெண்ட் வரை அத்தனை பேரின் தலையெழுத்தையும் தீர்மானிப்பது செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸ்தான்.
அன்று ஸ்டான்லி பேசியது இப்போது பென்னிக்கு நினைவுக்கு வந்தது. ‘நம்முடைய காலனிய நாடுகளுக்குச் செல்லப்போகும் பிரிட்டிஷாராகிய உங்களுக்குத் தனிப்பட்ட வாழ்க்கை என்பதே இருக்காது. குறிப்பாக, இந்தியாவுக்குச் செல்லப்போகும் இன்ஜினீயர்களாகிய உங்களுக்குத் திருமணம், குழந்தைகள், பொழுதுபோக்கு என்பதெல்லாம் இரண்டாமிடம்தான். வேலைதான் உங்கள் வாழ்நாள் முழுக்க நிரம்பியிருக்கும்’ என்றார். ‘ஆம், அதுதான் நடந்திருக்கிறது’ என்று பென்னி நினைத்துக்கொண்டார்.
“டோரா, பப்பாகூடவே நாம் டேம் கட்டுற இடத்துக்குப் போலாம். இப்போ போய் விளையாடு” என டோராவையும் லூசியையும் அனுப்பினாள். தூக்கம் வந்துவிட்டதை, கண்களைக் கசக்கியும் சின்னஞ்சிறு கொட்டாவி விட்டும் குறிப்பால் உணர்த்தியது குழந்தை எடித்.
“அங்கு உட்காரலாம் பென்னி” ஜார்ஜி அருகில் கிடந்த பாறையொன்றைக் காட்டினாள். கொடை ஏரியைச் சுற்றிய நடைபாதையை ஒட்டி சிறிய பூங்கா அது. ஐரோப்பியக் குழந்தைகள் வெளிறிய பூனைக்குட்டிகளைப்போல் கம்பளியாடைகளில் பூங்காவிற்குள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
மடக்கு நாற்காலியும் குட்டை மேசையையும் வைத்து, பிரிட்டிஷாரும் அமெரிக்க பிரஜைகளும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
‘மேன்மைமிகு இங்கிலாந்து அரசியின் உடல்நலனுக்காக இந்த மதுவை அருந்துகிறேன்’ என்று கண்ணாடிக் கோப்பைகள் உரசும் சப்தமும் அரசிக்காக வேண்டிக்கொள்ளும் பிரிட்டிஷாரின் பிரார்த்தனையும் கேட்டது.
`அமெரிக்க அதிபரின் நலனுக்காக இந்த மதுவை அருந்துகிறேன்’ என்று அமெரிக்கர்கள் வேண்டிக்கொண்டு மதுக் கோப்பைகளை உயர்த்தினர்.
எடித்தை மடியில் படுக்க வைத்தபடி ஜார்ஜி, பாறையில் உட்கார்ந்தாள். பென்னி ஜார்ஜியின் அருகில் உட்கார்ந்து, எடித்தின் கால்களைத் தன் மடியில் வைத்துக்கொண்டார்.
ஏரி நீரில் இருந்து வெளிக்கிளம்பிய மெல்லிய வெப்பமும், மரங்களின் குளிர்காற்றும் சேர்ந்து சூழலில் இதம் கூடியிருந்தது.
“டோரா கேட்டதுக்குக் கஷ்டப்படாதே பென்னி.”
“டோரா உண்மையைத்தானே சொல்றா? என்னோட வாழ்க்கை முழுக்க இப்படித்தான்னு அவ புரிஞ்சிக்கிற வயசு வந்தா புரிஞ்சிப்பா.”
“அப்போ ஏன் முகம் சுருங்குச்சு?”
“புரிஞ்சிக்கிறோம்ன்றதுக்காக கஷ்டமில்லேன்னு அர்த்தமாயிடுமா? உங்களையெல்லாம் விட்டுட்டுத் தனியா இருக்க நான் எவ்ளோ கஷ்டப்படுறேன்னு நெனைச்சேன்.”
ஜார்ஜி பென்னியின் கையைக் கோத்துக்கொண்டாள். பென்னி, குனிந்து குழந்தைக்கு முத்தமிட்டார்.
“இருபது, இருபத்தோரு வயசுல லண்டன்ல இருந்து கிளம்பி வரும்போது ஒவ்வொரு பிரிட்டிஷ் பிரஜைக்கும் இந்தியாவுல நல்ல வசதியான வாழ்க்கை, மரியாதையான வேலைன்னு நெனைச்சுத்தான் கிளம்பி வர்றாங்க. என்னோட காலேஜ் கடைசி நாளன்னைக்கு லார்டு ஸ்டான்லி பேசினது, முப்பது வருஷமான பிறகும் இன்னும் அப்படியே ஞாபகத்துல இருக்கு ஜார்ஜி. இந்தியாவுக்குப் போற உங்க யாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை கிடையாதுன்னார். அதுதான் நிதர்சனமா நடக்குது.”
“அவர் உங்கள மாதிரி மிலிட்டரி இன்ஜினீயர்களைச் சொல்லியிருப்பார். நல்லா பொழுதுபோக்குற கவர்னரும் கலெக்டர்களும் இருக்கிறாங்கதானே?”
“நான் என்னை மாதிரி இன்ஜினீயர்களைத்தான் சொல்கிறேன். பிரிட்டிஷாருக்கு, இப்படிப் பரந்து விரிந்த, ஒரு தேசம் கிடைச்சிருக்குன்னா அதுக்கு எங்கள மாதிரி மிலிட்டரி இன்ஜினீயர்கள்தான் காரணம். சுதேசி அரசர்களையும் சமஸ்தானங்களையும் மிலிட்டரியோட உதவியோடுதான் பிரிட்டிஷ் வீழ்த்தியது. அதுக்குத்தானே அடிஸ்கோம்ப் மிலிட்டரி காலேஜையே தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி?”
இங்கிலாந்தில் அடிஸ்கோம்ப் ராணுவக் கல்லூரி தொடங்கப்பட்ட கதை சுவாரசியமானது. கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தகர்கள், இந்தியாவின் சுதேசி அரசர்களுடன் போர் செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்தது. நவீன ஆயுதபலத்தினாலும் துரோகத்தாலும் மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும் என்று பிரிட்டிஷார் உறுதியாக நம்பினார்கள். தெற்கில் திப்பு சுல்தான், மருது பாண்டியர், வடக்கில் மராட்டியர்கள் போன்ற வலிமையான போராட்டக்காரர்களைச் சமாளித்து, ஒருவழியாக வெற்றியும் பெற்ற பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள் மூச்சுத் திணறினார்கள். போர் செய்வதற்கென்று பிரிட்டிஷாரைப் பழக்க வேண்டுமென்று ஒரு ராணுவக் கல்லூரியை அமைக்கத் திட்டமிட்டார்கள். 1809ஆம் ஆண்டு இந்தியாவில் போர் செய்ய வீரர்களையும் இன்ஜினீயர்களையும் உருவாக்க நிறுவப்பட்டதுதான் அடிஸ்கோம்ப் ராயல் இந்தியா ராணுவக் கல்லூரி. 14 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. கல்லூரியில் சேர்வதற்கு எழுதப் படிக்கவும் குறைந்தபட்ச கணித அறிவும் மட்டும் போதுமானதாயிருந்தது. கல்லூரியில் மாதிரி மண்கோட்டைகளை நிறுவி, அக்கோட்டைகளை எப்படிச் சிதைப்பது என்று பாடம் எடுத்திருப்பதிலிருந்து, ராணுவக் கல்லூரியின் நோக்கம் புரியும். ஆர்தர் காட்டன், லார்டு மெட்கால்ப் உள்ளிட்ட அடிஸ்கோம்ப் கல்லூரியின் மாணவர்களில் பலர் இந்தியாவின் ஆதார வளர்ச்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள்.
“மிலிட்டரி காலேஜ் மூடிட்டாங்க இல்ல? நீங்களா கடைசி பேட்ஜ்?”
“எனக்கடுத்து மூணு பேட்ஜ் படிச்சாங்க. நான் 57-58 பேட்ஜ். இந்தியாவில் வேலை செய்வது ஆபத்தானதுன்னு ஸ்டான்லி அன்று சொன்னார். மெட்ராஸ் கவர்னர் கன்னிமாரா அணை வேலையைத் தொடங்கி வைக்க வந்திருந்தார். அவருடைய சகோதரர் லார்டு மேயோ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி மிகவும் துயரத்துடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஸ்டான்லி சொன்னதை நினைத்துக்கொண்டேன். இந்தியாவைப்போல் ஆப்கானிஸ்தானும் ஆபத்தானதுதான்.”
“உன்னுடைய அப்பாவும் அண்ணனும் போரில் இறந்தாலும் நீயும் ராணுவத்தில் சேரணும்னு எப்படி தைரியம் வந்தது பென்னி?”
பென்னி சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். ஏரி நீரில் காற்று எழுப்பிய மென்னலைகளைப் பார்த்தார். தூரத்தில் டோராவும் லூசியும் கைகோத்து சின்னஞ்சிறிய வண்ணத்துப் பூச்சியொன்றைப் பிடிக்க துள்ளல் நடையில் ஓடுவதைப் பார்த்தார். பிறகு ஜார்ஜி பக்கம் திரும்பி,
“இழந்த இடத்தில்தானே இழந்ததைப் பெற வேண்டும்...” என்று கேட்டார்.
“ஓ ஜீசஸ்...” ஜார்ஜி வானத்தைப் பார்த்து வணங்கினாள்.
“காடு மேடெல்லாம் சுற்றி, இந்தியத் துறவிகளைப்போல மாறிடாதே” என்ற ஜார்ஜியைப் புன்னகையுடன் பார்த்தார் பென்னி.

வண்ணத்துப்பூச்சி, குழந்தைகளின் கைகளுக்கு அகப்படுவதுபோல் போக்குக் காட்டிப் பறந்தது.
“எப்போ கிளம்பப்போற?”
“அது என் கையில் இல்ல. சீப் செக்ரட்டரி அனுமதி கொடுத்தவுடனே கிளம்ப வேண்டியதுதான்.”
“ஃபர்லோவில் (ஊதியத்துடன்கூடிய விடுமுறை) லண்டன் போனால் நாங்களும் வரலாம். நீ வேலைக்காகப் போகிறாய். அதனால்தான் நான் யோசிக்கிறேன். ஊருக்குப் போய் மூணு வருஷமாயிடுச்சு. போகணும்னு தோணுது.”
“நான் வந்த பிறகுகூட நீ குழந்தைங்களோடு போகலாம்.”
“மூணு பேரையும் கூட்டிக்கிட்டு? தனியா?”
“முன்ன மாதிரி லண்டன் போக ஆறு மாசமா ஆகப்போகுது? நான் முதன்முதலில் இந்தியா வந்தபோது ஆறுமாசமானது. சூயஸ் கால்வாய் திறந்த பிறகு (1869) இருபதே நாள்தான், நாம் லண்டன் போயிடலாம். இப்போது நீராவிக் கப்பலும் வந்துடுச்சே?”
“பாம்பேயில இறங்கி மாறணும். என்னால் சமாளிக்க முடியாது.”
“தூத்துக்குடியில இருந்து லண்டனுக்கு நேராவே கப்பல் போகுது ஜார்ஜி.”
“குழந்தைங்களைச் சமாளிக்க முடியாது பென்னி. எனக்கே கப்பல் பயணம் ஒத்துக்காது. பாதி மயக்கத்தில் இருப்பேன்.”
“சரி, நானும் அடுத்த வருஷம் வர்றேன். போகலாம்.”
“மெஷின்ஸ் வாங்கிட்டு லண்டன்ல வேறு எங்க போகப்போறாய்?”
“இந்தியா ஆபீஸுக்கு நடந்தே பொழுது போயிடும். பட்டியலைக் கொடு, பில்லைக் கொடுன்னு மாறி மாறிக் கேட்பாங்க. ஏஜெண்ட்டுங்க பின்னாலும் அலையணும். எனக்குப் பிடிக்காத விஷயம் இதெல்லாம்தான்.”
“கோபப்பட்டுடாதே பென்னி. அதான் உன்னோட பிரச்சினை.”
“எல்லாம் சரியா நடந்தா எனக்குக் கோபம் வராது.”
“அதுக்கு யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது டியர்.”
“சரி, அதைவிடு. இந்த முறை ரொம்ப மரியாதையான ஒருத்தர பார்க்கணும்னு நினைக்கிறேன். அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்.”
“யார் அது, எனக்குத் தெரியுமா?”
“உனக்குத் தெரியாது. அடிஸ்கோம்ப்ல நாங்க படிக்கும்போது மதர் ரோஸ்னு ஒருத்தர் இருந்தார். விடுதியை ஒட்டி, அவருக்குச் சொந்தமான ஒரு காட்டேஜ் இருந்தது. அவரோட முக்கியமான வேலையே அங்க படிக்கிறவங்களுக்குத் தேவையான பியர், மதுபானம் கொடுக்கிறதுதான். நான் அவங்க கொடுக்கிற அட்டகாசமான பிரெட் ஆம்லெட்டுக்காகப் போவேன். எதுக்கு பியர் கொடுக்கிறீங்க மதர்னு கேட்டா, ‘I’m giving the spiritual liquor’னு சொல்லுவாங்க. காலேஜ் வனாந்தரத்தில் இருந்தது. வெளியாள் ஒருத்தர் வர முடியாது. மதர் ரோஸ் மாதிரி எங்களுக்கு உதவ ஒரு பார்பரும் இருந்தார். வாரா வாரம் மாணவர்களுக்கு முடி வெட்டிவிட...” சொல்லி முடிக்கும்முன் பென்னி சிரிக்க ஆரம்பித்தார்.
“என்னன்னு சொல்லிட்டுச் சிரி பென்னி.”
பென்னிக்குச் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“மிலிட்டரி காலேஜ்ல வாரத்துக்கு ஒருமுறை முடிவெட்ட, தனியா ஒரு பார்பரே இருந்தார். ஆனால் இந்தியாவில் வேலைக்கு வந்த பிறகு, நிலைமையே வேற. எங்க துறையில் ஒரு நகைச்சுவை சொல்லுவாங்க...”
“என்னன்னு சொல்லு பென்னி.”
“பொதுப்பணித்துறையில், ஒரு அசிஸ்டென்ட் இன்ஜினீயர் ஆய்வுக்காக மலைக்குப் போயிருந்தாராம். மலைமேல் மாசக்கணக்கில் தனியா இருந்து அவருக்குப் பைத்தியம் பிடிக்கிற நிலை வந்துவிட்டதாம். விடுமுறை கேட்டு அவர் சீப் இன்ஜினீயருக்குத் தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறார். அவருக்கு விடுமுறை அனுமதிக்கலையாம். கடைசியில் அவர், ‘உங்களுக்குக் கடிதம் எழுத முடியாமல் என்னுடைய தலைமுடி கண்ணை மறைக்கிறது. நான் தலைமுடி வெட்டிக்கொள்ள வேண்டும். அதற்காகவாவது எனக்கு விடுமுறை கொடுக்க வேண்டும்’ என்று எழுதினாராம். அவர் கடிதத்தைப் படித்த சீப் இன்ஜினீயருக்குச் சிரிப்பு வந்துவிட்டதாம். உடனே அவருக்கு ஒரு வாரம் விடுப்பு அனுமதித்தாராம்.”

ஜார்ஜியானா அமைதியாக இருந்தாள்.
“உனக்குச் சிரிப்பு வரலையா ஜார்ஜி? சரி, கதை இன்னும் முடியலை, கேள்.”
“அதிசயமா நீ சிரிக்கிறீயேன்னு எனக்குச் சிரிப்பு வரலை.”
“சரி, மீதிக் கதையைக் கேளு. அந்த அசிஸ்டென்ட் இன்ஜினீயரை மெட்ராஸில் விருந்தொன்றில் பார்த்த சீப் இன்ஜினீயர் அதிர்ந்துபோனாராம்.”
“ஏன், என்னாச்சு?”
“அவர் தலையில் ஒரு முடியில்லையாம். முழு வழுக்கை.” ஜார்ஜிக்கு உண்மையிலேயே சிரிப்பு வந்தது.
“மிலிட்டரி இன்ஜினீயர்களுடைய வாழ்க்கையே இப்படித்தான். படிக்கும்போது அந்த வனாந்தரத்தில் மதர் ரோஸ் எங்களுக்கு தேவ மாதாவாக இருந்தார்.”
“வயதானவங்களா, மதர் ரோஸ்னு சொல்ற?”
“இப்போ அவங்களுக்கு எண்பது வயசுக்கு மேல இருக்கும். நான் படிக்கும்போது ஐம்பது வயசு. அவங்க கணவர் ஜான். அவங்களுக்கு கல்யாணமாகி கொஞ்ச வருஷம் கழிச்சுத்தான் குழந்தை பிறந்துச்சாம். இரட்டைக் குழந்தைங்க.”
“அருமை.”
“துரதிருஷ்டவசமா இரண்டு குழந்தைங்களும் உடம்பு சரியில்லாம இறந்துபோச்சு. நாங்க படிக்கிற சமயத்தில் ஜானும் இறந்துட்டார். மதர் ரோஸ் தனியா இருந்தாங்க. உடம்பு சரியில்லாம இருக்கிற அவங்கள போய்ப் பாக்கணும்னு தோணுது. உனக்குத் தெரியுமா? அவங்களுக்கு ஞாபக சக்தி அதிகம். என்னோடு வம்பு இழுத்துக்கொண்டே இருக்கும் ராயல் இன்ஜினீயர் போய்லோ இருக்காரே, அவர் ஒருமுறை மதரைப் பார்க்கப் போயிருக்கார், அவர் தன்னோட பேரச் சொன்னவுடன் மதர், உங்க நெம்பர் ஐந்துன்னு சொன்னாங்களாம். காலேஜ்ல எங்களுக்குன்னு ஒரு நெம்பர் இருக்கும். ஒவ்வொரு மாணவரோட பேரைவிட நெம்பர நல்லா நினைவு வச்சிருப்பாங்க மதர். சின்னக் காட்டேஜ்தான். குளிர்காலத்துல அதுக்குள்ள இருபது பேர் கிட்ட இருப்போம். கனப்படுப்பு கிட்ட வரிசையா நாற்காலி போட்டுட்டு ராத்திரி முழுக்க பேச்சுதான்.”
பென்னி கல்லூரி நினைவுகளில் மூழ்கினார்.
“அவங்களுக்கு அடிஸ்கோம்ப் கல்லூரியை மூடப்போறாங்கன்னு (1861ஆம் ஆண்டு) தெரிஞ்சவுடனே உடம்புக்கு முடியாமப்போச்சு. கல்லூரியை மூடக்கூடாதுன்னு நெனச்சாங்க. அவங்க அந்தக் கல்லூரிக்கு வந்த அன்னைக்கு இரவுதான் ஹிஸ் ராயல் ஹைனெஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் பிறந்தாராம்.”
“கிரேட்... ஒவ்வொருத்தருக்குள்ளயும் எத்தனைவிதமான நினைவுகள். சின்னச் சின்னச் சம்பவங்களோடு அவங்களுக்கு இருக்கிற பிடிப்பு. ஆச்சரியம்தான் பென்னி.”
“காலேஜுக்கு வர ஐந்து பாதை இருக்கும். பிரிட்டிஷ் இந்தியா சிப்பாய்க் கலகத்துல ஜெயிக்கிறதுக்கு உதவியா இருந்த இந்தியாவின் கவர்னர் ஜெனரல் முதல் மிலிட்டரி கமாண்டெண்டுகள் வரை முக்கியமான ஐந்து பேரின் பெயர்களை, அந்தப் பாதைகளுக்கு வச்சிருந்தாங்க. மதர் ரோஸ் ஐந்து பாதையின் பெயரையும் சொல்ல மாட்டாங்க. இந்தியாவில் கவர்னர் ஜெனரல் கானிங் பிரபு கடுமையா நடந்துகிட்டாரே என்று முகம் சுளிப்பாங்க. இந்தக் காலேஜ்ல படிச்சுட்டுப் போற பிரிட்டிஷ்காரங்க, நம்ம தேசத்தோட பிரதிநிதிங்க. இங்கிலாந்து தேசத்துக்கும் ராணிக்கும் பெரிய நற்பெயர் இருக்கு. மிலிட்டரிக்காரங்க யார் தப்பு செய்தாலும் பிரிட்டிஷ் ராணியே செஞ்ச மாதிரி. சுதேசி அரசர்களோட உரிமையை நம்ம ராணுவம் பறிக்கக் கூடாது. மீரட்ல நடந்தது கிழக்கிந்தியக் கம்பெனியோட அத்துமீறல்னு கோபப்படுவாங்க.”
“கிரேட் லேடி” ஜார்ஜிக்கு வார்த்தை குழைந்தது.
“எனக்கு அந்தக் காலேஜ் எத்தனையோ கற்றுக்கொடுத்திருக்கு. ஆனா அது அத்தனையும் மதர் ரோஸுடன் பின்னிப் பிணைந்திருக்கு. நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமா இருக்கு. பதினேழு வயதில் கிடைத்த அனுபவம் இப்போ வரைக்கும் என்னைக் கட்டுக்கோப்பா, உறுதியா வச்சிருக்கு என்பதை நம்ப முடியவில்லை.”
“உண்மைதான் பென்னி. உன்னோட ஆச்சரியம் எனக்குப் புரியுது. அவசியம் மதர் ரோஸைப் பார்த்துவிட்டு வா.”
“போகணும் ஜார்ஜி. ரொம்பத் திறமையான ராயல் இன்ஜினீயர்கள் அகாலத்தில இறந்துபோயிட்டாங்க. பெரிய இழப்பு. பெரியாறு நதி எங்க பிறக்குது, எப்படி ஓடிக் கடலில் கலக்குதுன்னு கண்டுபிடிக்கவே அவங்கவங்க தடுமாறிக்கிட்டு இருக்கும்போது மேஜர் ரைவ்ஸ்தான் பெரியாற்றோட விவரங்களை ஆய்வு பண்ணிச் சரியாச் சொன்னார். அணைக்குன்னு முழுமையா ஒரு திட்டத்தைக் குடுத்ததும் அவர்தான். அவருக்கு அடுத்து மேஜர் ஸ்மித். ஸ்மித்தோட திட்டத்தைத்தான் தேவையான மாற்றம் செய்து நான் இப்போ கொடுத்திருக்கேன். ரெண்டு பேருமே அவங்களோட திறமையை வெளிக்காட்டுறதுக்கு முன்னாடியே இறந்துட்டாங்க. அடிஸ்கோம்புக்குப் பெரிய இழப்பு. ராயல் இன்ஜினீயர்களுக்கு மரணம் என்பது அவங்களோட தலையில இருக்கிற தொப்பி மாதிரிதான். நிரந்தரமா, நிதர்சனமா வெளிய தெரிஞ்சுக்கிட்டு இருக்கும்.”
“பென்னி, இதென்ன பேச்சு?”
“யதார்த்தத்தைச் சொன்னேன்.”
“யாருக்குத்தான் மரணமில்லை? நாம நடக்கும்போது நமக்கு முன்னால விழற நம்மோட நிழல் மாதிரிதான் நம்மோட மரணம். கூடவே தான் இருக்கும். அதுக்காக நடக்காம இருக்க முடியுமா?”
ஜார்ஜியின் குரலின் சத்தம் கூடியவுடன் எடித் தூக்கத்தில் சிணுங்கியது.
பென்னி எடித்தின் தலையை வருடினார்.
இருள் கவிழ்ந்திருந்தது.
“போலாமா ஜார்ஜி, இருட்டிடுச்சே? டோராவையும் லூசியையும் கூப்பிடு.”
“போலாம். வாழ்க்கையில் சோர்வென்பதையே நினைக்க மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கிற ஆள் நீ. மறந்துடாதே.”
“சாரி...” பென்னி ஜார்ஜியை இழுத்தணைத்தார். எடித் கால்களை நெளித்து உதைத்தது.
“தவறான நேரத்தில் வந்துவிட்டேனா?” லோகன் குதிரையில் இருந்து இறங்கினார்.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை லோகன்.” குதிரையின் குளம்பொலி அருகில் வரும்வரை இருவரும் கவனிக்கவில்லையே என்று நினைத்துச் சமாளித்தார் பென்னி.
“உட்கார் லோகன்.”
“எடித் சீக்கிரமே தூங்கிடுச்சா?” அன்புடன் குழந்தையின் தலையைத் தொட்டுத் தடவிவிட்டு, பென்னியின் அருகில் உட்கார்ந்தார் லோகன்.
“விடுமுறை எப்படிப் போகுது?’’
“பெரியாறு இரண்டு சர்க்காருக்கு இடையில் மாட்டி முழிப்பதுபோல், நாமும் மாட்டி முழிக்கிறோமே?”
பென்னிக்குச் சுரீரென்றது, ‘ஏதேனும் புதுப் பிரச்சினையா?’ என்று.
“என்ன தகவல் வந்திருக்கு லோகன்?”
“டெய்லர் தந்தி அனுப்பியிருக்கார். உங்கள் பங்களாவுக்குக் கொண்டுபோன தந்திக்காரன், நீங்கள் இல்லையென்றவுடன் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தான்.”
“என்ன தந்தி?”
“ராமய்யங்கார் திவான் பதவியைத் துறந்துவிட்டாராம். பதவி விலகல் கடிதம் கொடுத்துவிட்டு, மகாராஜாவின் பதிலுக்குக் காத்திராமல் மெட்ராஸுக்குக் கிளம்புகிறாராம். ரெசிடென்ட் தகவல் அனுப்பியுள்ளதாக அதில் குறிப்பிருந்தது.”
மேல்மலையில் அகற்றிய மரங்களும் புதர்களும் பன்மடங்கு பெருகி அடர்ந்து நிற்கும் பிரமை எழுந்தது பென்னிக்கு.
- பாயும்