மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 60 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

ஆளுக்கொரு திசைக்கு ஓடினார்கள். சங்கரன் தம்பி வரவேற்பறைக்குச் செல்வதற்குள், கார்த்தியாயினியுடன் ரெசிடென்ட் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

பிரிட்டிஷ் ரெசிடென்ட், மகாராஜாவைச் சந்திக்க அவரின் அரண்மனைக்கு வருவது அரிதினும் அரிதான நிகழ்வு. தர்பாரின் நிகழ்வுகளிலும் சமஸ்தானத்தின் உத்சவங்களிலும் சந்தித்துக்கொள்வார்களே தவிர, ரெசிடென்டின் அரண்மனைக்கு மகாராஜா வருவதோ, மகாராஜாவின் அரண்மனைக்கு ரெசிடென்ட் வருகை தருவதோ அபூர்வம்.

நீரதிகாரம் - 60 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

அப்படியொரு அபூர்வ நாளான இன்று. ரெசிடென்ட் ஹானிங்டனின் குதிரை டாமினேஷன், மகாராஜாவின் அரண்மனை வாயிலுக்கு வந்து நின்றது. மெய்க்காவலர்களின்றி ரெசிடென்ட் மட்டும் தனியாக வந்திறங்கியதில் புரியாமல் விழித்த காவலர்கள் தங்கள் நிலைக்குத் திரும்பி, அவசர மரியாதைக்குத் தயாரானார்கள். அவர்கள் ஆயுதங்கள் தாங்கி, மரியாதை செய்யத் தொடங்குவதற்குள் ஹானிங்டன் விரைந்து அரண்மனைக்குள் நுழைந்தார். ‘இந்த மரியாதை கிடைக்கவில்லையென்றுதான் திவான் மனவருத்தம் கொண்டாரோ?’ ஹானிங்டனுக்குள் சிந்தனை ஓடியது. ‘அதொரு காரணமாக அமைந்துவிட்டது, அவ்வளவுதான். சமஸ்தானத்தின் மாற்றங்களுக்காக என்று நினைத்து திவான் செய்த காரியங்கள், அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டன. மாற்றங்கள் எல்லாம் நல்லதுமல்ல, சீர்திருத்தங்களும் அல்ல என்று முன்பிருந்த திவான் மாதவ ராவ் அடிக்கடி சொல்வாரென்று, ரெசிடென்ட் ஆபீசில் இருக்கும் ஹெட் பியூன் சொல்வார். திவான் விஷயத்தில் நடந்தது அதுதான்.’ ஹானிங்டனுக்குள் எண்ணங்கள் முன்பின்னாகச் சென்று அலைக்கழித்தன.

குட்டன் நாயன்தான் ரெசிடென்ட் வருவதை முதலில் பார்த்தவன். திகைத்து, பின் சுதாரித்து, பவ்யமாக உடல் வளைத்து வணங்கி, ரெசிடென்டை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றான். மகாராஜாவிடம் உத்தரவு வாங்கி வருவதாகச் சொல்லி உள்ளே ஓடினான். அவனுடைய குடுமி அவிழ்ந்து தோளில் பரவியது.

நீரதிகாரம் - 60 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

மகாராஜாவை அழைத்து வருவதாகச் சொன்னாலும், நேராக அவன் சங்கரன் தம்பியிடம்தான் சென்றான். அகன்ற வரவு செலவு தஸ்தாவேஜை வைத்துக் குனிந்து எழுதிக்கொண்டிருந்த சங்கரன் தம்பி, குட்டன் நாயனின் நடை அதிர்வில் நிமிர்ந்து பார்த்தார்.

“ஹனுமனுக்கு வாலில் தீ வச்சதும் லங்கையில் ஓடியலைஞ்ச மாதிரி குட்டனுக்கு ஓட்டமென்னடே?” எகத்தாளமாக வரவேற்றார்.

“தம்புரான், ரெசிடென்ட் தொரை வந்திருக்காரு.” மூச்சிரைப்பாய்ச் சொன்னான்.

“எங்கடே?”

“நம்ம கொட்டாரத்துக்குத்தான். உக்கார வச்சிட்டு வந்திருக்கேன்.”

“என்னடே வம்பு வளத்த வந்திருக்கான், இந்தக் கெழட்டு தொர?” சங்கரன் தம்பி அவசரமாக எழுந்து உடுப்பை அவிழ்த்துக் கட்டிக்கொண்டு வேக நடை நடந்தார்.

“நீ மகாராஜா கிட்ட ஓடுடே. நான் போய் சம்பிரதாயப்படி ஸ்வாகதம் பண்றேன்.”

“உத்தரவு தம்புரானே...”

ஆளுக்கொரு திசைக்கு ஓடினார்கள். சங்கரன் தம்பி வரவேற்பறைக்குச் செல்வதற்குள், கார்த்தியாயினியுடன் ரெசிடென்ட் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘இந்தப் பெண் குட்டி சமயம் பார்த்து இங்க வந்துட்டாளே?’ பல்லைக் கடித்தபடி வேகமாக இருவரின் அருகில் வந்தார்.

“தம்புரானுக்கு இந்தச் சங்கரன் தம்பியுடைய நமஸ்காரம்.” பணிவைக் கூட்டி வணங்கினார்.

ஹானிங்டன் லேசாகத் தலையை அசைத்ததுடன், கார்த்தியாயினியிடம் பேச்சைத் தொடர்ந்தார். இருவரும் முன்பே அறிமுகமானவர்கள் போல் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த சங்கரன் தம்பிக்குக் கோபம் பொறுக்கவில்லை. அதற்குள் குட்டன் அருகில் வர, குட்டனுக்குப் பின்னால் மகாராஜாவும் உதவியாளர்களும் வந்தனர்.

மகாராஜா ரெசிடென்ட்டின் கைகுலுக்கி, மெல்ல அணைத்தார். கைபிடித்தபடியே உள்ளே அழைத்துச் சென்றார். வேறொருவர் கவனித்திருக்க முடியாத இடைவெளிக்குள் மூலம் திருநாள், கார்த்தியாயினியின் கண்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விலகிக்கொண்டன. விநாடியின் 60 அலகின் ஓரலகு நேரமே எனினும் இருவருக்கும் போதுமானதாயிருந்தது.

மகாராஜாவும் ரெசிடென்டும் உள்ளே செல்ல, வெளியில் வந்து நின்ற கோச் வண்டியில் ஏறி விரைந்தாள் கார்த்தியாயினி.

``யுவர் எக்ஸலென்ஸி நேரில் வருமளவு சிரமம் எதற்கு, கடிதம் அனுப்பியிருந்தால் போதுமே?”

“நேர்முகக் கடிதத்தை யாருக்குக் கொடுத்துவிடுவது, எந்த விஷயமென்றாலும் ஆராய்ந்து உடனே பதிலளிக்கும் திவான் இல்லையே யுவர் எக்ஸலென்ஸி?”

“இன்னும் அவர் சமஸ்தானத்தின் திவான்தான்.”

“நீங்கள் சொல்வது பெயரளவுக்குத்தான். அவருக்கான தர்பார் மரியாதைகள் நீக்கப்பட்டிருக்கிறதே? இத்தனை பெரிய அவமரியாதை அய்யங்காருக்கு அதிகம். பண்பினாலும் செயலினாலும் உயரிய குணம் கொண்டவர். சுதேசி சமஸ்தானங்களில் முதன்மையான சமஸ்தானமாகத் திருவிதாங்கூரை முன்னிறுத்துவதற்கு அதிகம் முயற்சியெடுத்தவர். அவரின் நண்பர் மாதவ ராவ் பத்தாண்டுகள் திவானாக இருந்து செய்த காரியங்களை இவர் ஆறு ஆண்டுகளில் செய்திருக்கிறார். மாதவ ராவ் அளவிற்கு வேகம் கொண்டவர் அல்ல. ஆனால் அவரின் சாத்விகமே அவருக்கு எதிராக மாறியிருக்கிறது.”

மகாராஜா அமைதியாக இருந்தார்.

“திவான் என்னைச் சந்தித்தார். அவருக்கான ராணுவ மரியாதை, என் உத்தரவுக்குப் பிறகுதான் நிறுத்தப்பட்டது என்று அவர் உறுதியாக நினைக்கிறார். அவர் கருத்தை நான் சரிசெய்ய முயலவில்லை. காரணம், யாரின் உத்தரவென்று எனக்கே தெரியவில்லை. மகாராஜாவின் உத்தரவாக இருக்குமோ என்றும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.”

“எனக்கும் வருத்தம் யுவர் எக்ஸலென்ஸி. திவானுக்கு ராணுவ மரியாதை நிறுத்தப்பட்ட தகவல், நிறுத்தப்படுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்புதான் எனக்குத் தெரிய வந்தது என்று சொன்னால், சமஸ்தானத்தின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். விசாரித்ததில் நாயர் பிரிகேடின் கமாண்டெண்ட் விடுமுறையில் சென்றிருக்கும் வேளையில், பொறுப்பில் இருக்கிற ஒரு அசிஸ்டென்ட் கமாண்டெண்ட் இந்த வேலையைச் செய்திருக்கிறான். திவானிடம் சொன்னாலும் ஏற்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் அவசியம் நான் அவரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.”

ஹானிங்டன் மகாராஜா முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அதில் உண்மை இருக்கிறதா என்று கண்கள் தேடி அலைந்தன.

முண்டு உடுத்திய பணிப்பெண், வெண்கலச் செம்பில் மணக்காரப் பொருள்களிட்டு சுண்டக் காய்ச்சிய பாலும், நேந்திரம் பழங்களும் கொண்டு வந்து வைத்தாள். மகாராஜா, ‘கொடுக்கலாம்’ என்ற உத்தரவுபோல் தலையசைத்ததைக் கவனித்தவள், குவளையில் பாலூற்றி இருவர் முன்பும் வைத்தாள்.

“இரவு நேரமென்பதால், உங்களுக்கு விருப்பமான தேநீரைத் தவிர்த்துவிட்டேன்.”

“நல்லதுதான் யுவர் ஹைனெஸ். காலையில் குடித்த முதல் காப்பிக்குப் பிறகு இன்று முழுக்க வேறொன்றும் சாப்பிடவில்லை. டாமினேஷனுடன் கிளம்பியவன், அங்கும் இங்குமாக அலைந்துவிட்டு நேராக ஹைனெஸ்ஸைப் பார்க்க வந்துவிட்டேன். குருவாயி அங்கு கவலையுடன் காத்துக் கொண்டிருப்பாள்.”

“நாள் முழுக்க உளைச்சலுடன் அலையும் அளவிற்குப் பிரச்சினை அதிகமாகிவிட்டதா?”

“நிறைய பிரச்சினைகள், வழக்குகள், தாவாக்கள் இருக்கின்றன.”

ஹானிங்டன் குடிக்க ஆரம்பித்த பிறகு, மகாராஜா பால் குவளையைக் கையிலெடுத்துச் சுவைத்தார்.

“ரெவரென்ட் பாதிரி ராபர்ட் என்னைச் சந்திக்க வந்திருந்தார். லண்டன் கிறிஸ்துவ மிஷனரியில் இருந்து எழுதப்பட்ட கடிதத்திற்குத் தங்கள் தர்பாரில் இருந்து இன்னும் பதில் வரவில்லையென்று வருத்தம் தெரிவித்தார். எனக்கும் மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் இன் கவுன்சில் கன்னிமாராவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது.”

“அவர்கள் கேட்கும் விஷயங்களெல்லாம் எளிதில் நிறைவேற்றக்கூடியவை அல்ல யுவர் எக்ஸலென்ஸி. திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கென்று நியதிகள் இருக்கின்றன. எங்கள் சமஸ்தானத்தின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நான் ஆட்சியதிகாரம் செய்ய முடியும். மன்னிக்க வேண்டும். நேரடியாகச் சொல்கிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம். மெட்ராஸ் பிரசிடென்சியின் ஆட்சியாளர்களாகிய நீங்கள் கிறிஸ்தவர்கள். உங்கள் பிரசிடென்சியில் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு அனுகூலம் செய்யவும், மதம் மாறியவர்களின் மரபான உரிமைகளைப் பாதுகாக்கவும் நீங்கள் சட்டமியற்றலாம். நியாயமும்கூட. இந்து மத நெறியைப் பின்பற்றும் சமஸ்தானமாகிய நாங்களும் உங்களின் சட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயமாக இருக்க முடியும்?”

“மதம் மாறியதாலேயே ஒருவன் அவன் தந்தைக்குப் பிள்ளையில்லையென்று ஆகிவிடுமா? இல்லை பிள்ளைக்குத் தந்தையில்லையென்று ஆகிவிடுமா? மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் சிவில் உரிமைகள் பிரிட்டிஷ் இந்தியா முழுமைக்கும் ஒன்றுதான் என்று 37 வருஷங்களுக்கு முன்பே சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது (Act XXI of 1850) மகாராஜா. திருவிதாங்கூர், கொச்சின், மைசூர் சமஸ்தானங்கள் அந்தச் சட்டத்தை ஏற்க மறுக்கின்றன. திருவிதாங்கூர், கொச்சினின் நிலைப்பாடு பற்றி, விளக்கமாக நான் எழுதியனுப்ப வேண்டும். மகாராஜா என்ன முடிவில் இருக்கிறீர்களென்று தெரிந்துகொள்ளவே நான் நேரடியாக வந்தேன்.”

“என்ன தெரிய வேண்டும் உங்களுக்கு?” மகாராஜாவின் முகம் இறுகிவிட்டது.

“கிறிஸ்தவ மதத்தைத் தழுவுபவர்களுக்கு, மதம் மாறியதால் அவர்களின் எந்த சிவில் உரிமையும் மறுக்கப்படக் கூடாது. இந்து மத வழக்கப்படி அவர்களின் சாதியைச் சொல்லிப் பழிக்கக் கூடாது. கோட்டயம் மேஜிஸ்திரேட், கிறிஸ்தவர்கள் பழிக்கப்படுவதை நியாயப்படுத்தி ஒரு தீர்ப்பு கொடுத்திருக்கிறார். கேட்கவே காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது.”

“யுவர் எக்ஸலென்ஸி...” மகாராஜாவின் குரலில் கோபம் வெடித்தது.

“நான் சொல்லும் வார்த்தை உங்களைக் காயப்படுத்தலாம். உண்மை அதுதானே?”

“எது உண்மை?”

“சாதியே இல்லையென்ற மதத்திற்கு மாறிய ஒருவனைக் கீழ்ச்சாதியென்று எப்படி அழைக்கலாம்?”

“உங்கள் வாதத்திற்கே வருகிறேன். சமஸ்தானத்தில் நாயர் சாதியில் பிறந்த ஒருவனுக்கு, அவன் கிறிஸ்தவத்தைத் தழுவிய பிறகு, நாயர் சாதியின் மருமக்கத்தாய வழக்கப்படி, அவன் குடும்பத்தின் மூத்தவனாக இருந்தால் காரணவான் என்ற தலைமைப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும், தரவாட்டின் சொத்துரிமையையும் கொடுக்க வேண்டுமென்று எப்படி உங்களின் செக்ரட்டரி எங்களுக்குக் கடிதமெழுதினார்?”

“புரியவில்லை எனக்கு?”

“மலையாள தேசத்தில் நம்பூதிரிகள் முதல் புலையர்கள் வரை எழுபது சதவிகிதத்தைய குடிகள் மருமக்கத்தாய வழிப்படிதான் தங்கள் குடும்பத்தின் சொத்துகளைப் பெறுகிறார்கள். கிறிஸ்துவனாக மாறிய ஒருவனுக்குத்தான் சாதியே இல்லையென்கிறீர்களே? பிறகு ஏன், இந்து சமயத்தின் சாதிய உரிமை அடிப்படையில் சொத்து பெற முடியாத கிறிஸ்தவர்களுக்காக வழக்கு நடத்துகிறீர்கள்?”

ஹானிங்டன் யோசித்தார். குவளையில் மீதமிருந்த பாலைப் பருகி முடித்துக் குவளையைக் கீழே வைத்தார். அரண்மனையெங்கும் எண்ணெய் குறைந்த விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றி, திரிகளைத் தூண்டிவிடுவதற்காகப் பெண்கள் ஆங்காங்கு நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

தர்பார் அரங்கில் ஆளுயரங்களில் இருந்த முந்தைய மகாராஜாக்களின் ஓவியங்களைப் பார்த்தார். மகாராஜா விசாகத்தின் ஓவியத்தைப் பார்த்தவுடன் அவர் முகத்திலேயே பார்வை நிலைத்தது. ‘நீங்கள் இருந்திருந்தால் சமஸ்தானத்திற்கு இத்தனை நெருக்கடிகள் வந்திருக்காதோ?’ என்று ஓவியத்தில் இருந்த மகாராஜாவைப் பார்வையால் கேட்டார். மீண்டும் மூலம் திருநாளின்மேல் பார்வை திரும்பியது. அரச உடையின்றி, வெண்பட்டுத் தார்ப்பாய்ச்சும், தோள் புரளும் அங்கவஸ்திரமும், கழுத்திலொரு ஆபரணமுமாக எளிமையாக இருந்த மகாராஜாவிடம் தான் எதிர்பார்க்கும் உத்தரவைப் பெற்றே ஆக வேண்டுமென்று ஹானிங்டனுக்குத் தோன்றியது.

“சொத்துகள் இருக்கிற நாயர்களில் சிலரே கிறிஸ்தவத்தைத் தழுவுகிறார்கள் மகாராஜா. சமூகத்தில் மிகவும் கீழான நிலையில் வைக்கப்பட்டுள்ள ஈழவர்களும் புலையர்களும் சாணார்களும் பரதவர்களும்தான் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாகியிருக்கிறார்கள். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் கிறிஸ்தவ மதத்தின் மேலுள்ள நம்பிக்கையில் மதம் மாறும் தனிநபர்கள் அரிது. குடும்பம் குடும்பமாக, கிராமம் கிராமமாக கிறிஸ்தவத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கையே அதிகம்.”

“அதேதான் நானும் சொல்ல வருகிறேன். குடும்பமாகவோ, ஒரு ஊரில் இருப்பவர்கள் மொத்தமாகவோ மதம் மாறினால் அவர்களுக்கென்ன இழிவு நேரும்?”

மகாராஜா எப்படிச் சென்றாலும் தன் பக்க நியாயத்தை ஒளிமங்கச் செய்வதைப் புரிந்துகொண்ட ஹானிங்டன், பேச்சை திசை திருப்ப எண்ணினார்.

நீரதிகாரம் - 60 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

“எந்த மதத்திலிருந்தாலும் சமஸ்தானம் தன்னுடைய குடிகளைச் சமமாக நடத்த வேண்டும். சமஸ்தானத்தின் வருவாயில் அனைத்துக் குடிகளும் பங்களிப்புச் செய்கிறார்கள். அதன்பலன் எல்லாருக்கும் சென்று சேர்வதில்லையே?”

“எப்படிச் சொல்கிறீர்கள் யுவர் எக்ஸலென்ஸி?”

“சமஸ்தானத்தில் இருக்கும் நாற்பது ஊட்டுப்புறைகள் யாருக்காக? பிராமணர்களுக்கு மட்டுமே ஊட்டுப்புறையில் உணவு வழங்கப்படுகிறது.”

“இல்லையே, சமஸ்தானத்தின் ஊழியர்கள், பள்ளிக்கூடக் குழந்தைகள், அரண்மனை ஊழியர்கள் எல்லோருக்குமே ஊட்டுப்புறையில் உணவு கொடுக்கிறார்களே? காலை எட்டு மணிக்கும், மாலை ஆறு மணிக்கும் என இரு வேளைக்கு உணவு கொடுக்கிறார்கள்.”

“அங்கே கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களின் பிற சாதியினருக்கும் உணவு உண்டா?”

“சமஸ்தானத்தின் ஏழைக் குடிகள் எல்லாருக்குமே கஞ்சிப்புறையில் உணவு கொடுக்கிறார்களே யுவர் எக்ஸலென்ஸி?”

“ஊட்டுப்புறைகள் நாற்பது இருக்கிற சமஸ்தானத்தில் கஞ்சிப்புறைகள் நான்கே நான்குதான் இருக்கின்றன. தோவாளை, செங்கோட்டை, குமாரகோயில், பெருவில்லா அம்பலம். நான் முழுமையாக விசாரித்துவிட்டேன். ஊட்டுப்புறையில் பிராமணர்களைத் தவிர பிற சாதியினர் உணவு பெற முடிவதில்லை. மீறிச் சென்றாலும் அவமரியாதை செய்யப்பட்டுத் திருப்பியனுப்பப்படுகிறார்கள். கஞ்சிப்புறையில் எல்லா நாளும், எல்லா ஏழைகளுக்கும் கஞ்சி கொடுக்கப்படுவதில்லை. பல கஞ்சிப்புறைகளில் மாதத்தில் ஐந்து நாள்கள்தான் கஞ்சி ஊற்றுகிறார்கள். அதுவும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே.”

“நீங்கள் சொல்லும் ஐந்து நாள்கள் சமஸ்தானத்தின் சிறப்பு வழிபாட்டுத் தினங்கள். சுக்லபட்சத்திலும் கிருஷ்ணபட்சத்திலும் வரும் இரண்டு துவாதசி தினங்கள், பௌர்ணமி, அமாவாசை, திருநாள் நட்சத்திரம் (மகாராஜா பிறந்த நாள் நட்சத்திரம்)... இந்த ஐந்து நாளும் எல்லாக் கஞ்சிப்புறைகளிலும் சிறப்பு உணவு தருவார்கள். மற்ற நாள்களில் கஞ்சி உண்டு யுவர் எக்ஸலென்ஸி.”

“நீங்கள் உங்கள் உத்தரவுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள். நான், உத்தரவுக்கும் செயல்பாட்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியைப் பற்றிப் பேசுகிறேன். விரைவில் இந்த ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்படாமல் சென்றால், லண்டனில் இருக்கும் இந்தியா ஆபீசிலிருந்து சமஸ்தானத்திற்குக் கடிதம் வரும். லண்டன் கிறிஸ்தவ மிஷனரி ஏற்கெனவே சுதேசி சமஸ்தானங்களின் பாரபட்சமான நடவடிக்கைகளைப் பற்றிய வருத்தத்துடன் இருக்கிறது.”

“திருவிதாங்கூரில் இன்றைக்கு நேற்றாகவா கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்? வாஸ்கோட காமா கோழிக்கோட்டில் வந்திறங்கியபோது உடன் வந்த போர்த்துக்கீசியர்கள் தொடங்கி, பிரிட்டிஷார் வரை சமஸ்தானத்தில் ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகம். ரோமன் கத்தோலிக்கர்களில் இருந்து பிராட்டஸ்டென்ட் வரை எல்லாக் கிறிஸ்தவர்களும் இருக்கிற சமஸ்தானமிது. 81ஆம் வருஷம் (1881) கணக்கெடுப்பு நடந்ததே? யுவர் எக்ஸலென்ஸிக்கு மறந்திருக்காது. பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே கிறிஸ்தவர்கள். திருவிதாங்கூரின் மக்கள் தொகையில் இருபது சதவிகிதத்தினர் கிறிஸ்தவர்கள். சமஸ்தானம் மதம் மாறுபவர்களுக்குச் சாதகமாக இல்லாமலா எங்களின் சமஸ்தானத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது?”

“பிறகேன் தங்கசேரி கிறிஸ்தவர்கள் சமஸ்தானத்துடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் வரைக்கும் கடிதம் அனுப்புகிறார்கள்?”

மகாராஜா ஒரு நிமிடம் ஹானிங்டனை உற்றுப் பார்த்தார்.

“கடிதம் எழுதியது பிரஜைகள் இல்லை யுவர் எக்ஸலென்ஸி, எழுதியது பாதிரிகள். கிறிஸ்தவ மிஷனரிகளைச் சேர்ந்த பாதிரிகள்தான் கடிதம் எழுதினார்கள். நீங்கள் விசாரிக்கச் சென்ற அன்றும் மக்களைத் தூண்டிவிட்டு, உங்களிடம் பேச வைத்தது பாதிரிகள்தான்.”

“பாதிரிகள் எதிர்ப்பைக் காட்டவும் முகாந்திரம் இருக்கிறது. ஐரோப்பியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சமஸ்தானத்தில் ஊழியம் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.”

“சமஸ்தானத்தின் பிரஜைகள், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லையே?”

“அப்படியெனில், ஐரோப்பியர்களுக்குச் சமஸ்தானத்தில் வேலை கொடுப்பதற்கான தடையை ஏன் அதிகப்படுத்துகிறீர்கள்? திவான், இனி சமஸ்தானத்தில் பிரிட்டிஷ் பிரஜைகள் நியமிக்கப்படுவது படிப்படியாகக் குறைக்கப்படும் என்று எதற்கொரு கடிதம் எழுதினார்?”

“பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கிறோம். அதிக செலவினம் என்றாலும் அதைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் பிரிட்டிஷ் பிரஜைகள் தவறிழைத்தால் சமஸ்தானத்தின் சட்டப்படி எந்தக் கோர்ட்டிலும் விசாரிக்க முடியவில்லை, தண்டிக்க முடியவில்லை. அவர்களை விசாரிப்பதற்குத் தனியாக ஐரோப்பிய நீதிபதி வேண்டும். சமஸ்தானத்தின் ஊதியம் பெற்றுப் பிழைக்கும் ஒரு பிரஜையை விசாரிக்க, சமஸ்தானத்தின் சட்டதிட்டங்கள் செல்லாது என்றால் என்ன நியாயம் யுவர் எக்ஸலென்ஸி?”

“ஐரோப்பியர்களை விசாரிக்கும் உரிமை, சட்டப்படிப்பில்லாத சுதேசி ஜட்ஜ்களுக்குக் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இந்து மத தர்மம் மட்டுமே.”

“சட்டம் படித்திருந்தாலும்தான் விசாரிக்க வழி செய்யவில்லையே பிரிட்டிஷ் சர்க்கார்? சாம்சன் நாமிருவரும் சென்ற வழியில் வெடிமருந்து வைத்திருக்கிறான். அவனைக் கைது செய்துவிட்டோம். விசாரிப்பதற்கு எங்களுடைய நீதிபதிகளுக்கு உரிமையில்லை. நான் என்ன செய்யட்டும் இப்போது?”

“ஐரோப்பிய ஜட்ஜ்கள் அக்கிரமமான செயலை, நியாயமென்று தீர்ப்பு தருவார்களா என்ன?”

“தீர்ப்பு என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் யுவர் எக்ஸலென்ஸி. நாங்கள் ஏன் ஐரோப்பிய நீதிபதியைத் தேட வேண்டும்?”

ஹானிங்டனுக்கு மகாராஜாவின் கேள்வி நியாயமாகப்பட்டது.

“நீதிமன்றங்களின் சீர்திருத்தத்தைச் செய்தவரே திவான்தான். பிறகேன் அவரிடம் மகாராஜா கடுமை காட்டினீர்?”

“அவரின் சீர்திருத்தம்தான் காரணம். ரெசிடென்ட் ஆகிய உங்களிடமும் சொல்லாமல், மகாராஜாவாகிய எனக்கும் தெரியாமல் கல்குளத்தில் இருந்த ஊட்டுப்புறையை மூடியிருக்கிறார்.”

“ஏன்?”

“திவான்தான் சொல்ல வேண்டும். மூன்று மாதங்களாகச் சமஸ்தானத்திலிருந்து செல்லும் பலசரக்கு கல்குளம் ஊட்டுப்புறைக்கு அனுப்பப்படவில்லை. அத்துடன், கல்குளம் ஊட்டுப்புறைக்கு அருகில் மதராஸி பிராமணன் ஒருவரின் பொறுப்பில் புதிதாக ஒரு கஞ்சிப்புறையை அமைத்திருக்கிறார். ஊட்டுப்புறைக்குச் செல்ல வேண்டிய அத்தனை பலசரக்கும் அங்கு சென்றிருக்கிறது. சமஸ்தானத்தின் காரியக்காரன் சங்கரன் தம்பியின் உறவினன்தான், பலசரக்கு வண்டி ஓட்டியிருக்கிறான். இதைவிடப் பெரிய அநியாயம், கஞ்சிப்புறைக்குப் பலசரக்கு வாங்கியதாகக் கணக்குவழக்கு எழுதி வைத்திருக்கிறார்கள். அதே கணக்குவழக்கு, கஞ்சிப்புறைக்குப் பக்கத்தில் உள்ள கோயிலின் வரவு செலவுக் கணக்கிலும் இருக்கிறது. உங்களுக்கொன்று தெரியுமா யுவர் எக்ஸலென்ஸி?”

“நீங்கள் சொல்லும் எல்லாமே எனக்குத் தெரியாத தகவல்கள்தான், சொல்லுங்கள்.”

“பக்தர்களே செல்ல முடியாத அடர்ந்த காட்டுக்குள் அந்தக் கோயில் இருக்கிறது. யானைகளும் புலிகளும் அடைக்கலமாக இருக்கும் கோயிலில் கஞ்சி ஊற்றியதாகக் கணக்குவழக்கு தயாரித்திருக்கிறார்கள். இந்தச் சமஸ்தானத்தின் தர்மகாரியங்கள் நடக்கும் இந்த தர்மசாலைகளுக்கெல்லாம் நானே தர்மகர்த்தா. என் பெயரில் எத்தனை தில்லுமுல்லுகள். என் பெயரில் என்றாலும் பத்மநாபரின் பெயரும் இதில் அடங்கியிருக்கிறது.”

“இதில் திவானின் மீதான சந்தேகம் எங்கு வருகிறது?’

“கிடைக்கிற எல்லாத் தகவல்களுமே திவானின்மேல் சந்தேகத்தை அதிகரிக்கிறது.”

“ஒரு கஞ்சிப்புறைக்குப் பலசரக்கு அனுப்பியதற்காகவா திவான் பதவி விலக வேண்டும்?” ஹானிங்டன் அதிர்ச்சியாய்க் கேட்டார்.

“பலசரக்குக்காக அல்ல. நடந்திருப்பது பெரிய துரோகம். கஞ்சிப்புறை வைத்திருக்கும் மதராஸி பிராமணன் பெயரில்தான் வெடிமருந்து வாங்கப்பட்டிருக்கிறது யுவர் எக்ஸலென்ஸி. அந்த வெடிமருந்துதான் நாமிருவரும் வந்த பாதையில் வைக்கப்பட்டது.”

“ஓ ஜீசஸ்... என்ன சொல்கிறீர்கள் யுவர் ஹைனெஸ்?”

“உங்களுக்கே தெரியும். ஆலப்புழா நீர்த்துறையில் மட்டுமே வெடிமருந்தும் ஆயுதங்களும் சமஸ்தானத்திற்குள் வந்திறங்க முடியும். இறங்கும் ஆயுதம், வெடிமருந்து, வாங்குபவர் பெயர், விலாசம், என்ன காரணத்திற்காக எவ்வளவு வெடிமருந்து வாங்குகிறார் ஆகிய எல்லாத் தகவல்களும் எழுதப்பட்டு, கீழே திவான் அலுவலகத்தின் முத்திரையுடன், திவானின் கையொப்பமிருந்தால் மட்டுமே நீர்த்துறைக்குள் அனுமதிப்பார்கள் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். திவானுக்கு வேண்டியவரின் பெயரில் வெடிமருந்து வாங்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் பொருள்?”

ஹானிங்டனுக்குப் படபடத்தது.

“யுவர் ஹைனெஸ், அவர் பெரிய மனிதர். இந்த சமஸ்தானத்திற்காக அரும்பணி யாற்றியவர்...”

“மன்னிக்க வேண்டும். என் மாமா விசாகம் அவருடன் நட்பு கொண்டிருந்த காலம்தொட்டு நான் அய்யங்காரை அறிவேன். இப்போதைக்கு அதெல்லாம் தேவையற்றது. வெடிமருந்து அவருக்கு வேண்டியவர் பெயரில் வாங்கப்பட்டி ருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அன்று நம் இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. அதனால் உயிர் பிழைத்து இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்.”

“அவசரப்பட வேண்டாம் மகாராஜா. நான் விசாரிக்கிறேன். உண்மை தெரிந்த பிறகு நாம் முடிவு செய்யலாம். அதுவரை திவான் அறியாமல் இருப்பது நல்லது.”

“காலையிலேயே திவான் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை நேர்முகமாய் அனுப்பியிருக்கிறார். அடுத்த திவானாக யாரை நியமிப்பது என்ற ஆலோசனையைத் தொடங்கிவிட்டோம்.”

ஹானிங்டனுக்கு நா வறண்டுவிட்டது. உடனடியாக மதுவருந்த வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. லண்டன் மிஷனரிக்குப் பதில் அனுப்ப வேண்டிய அவசியம் பற்றிய கவர்னரின் கடிதமும் நினைவுக்கு வந்தது.

கல்விளக்கொன்றில் ஒளிமங்கிய தீபத்தின் நாவினைத் துலங்கச் செய்தாள் பணிப்பெண். தீபம் காற்றை எதிர்த்து உயர்ந்தெழுந்தது.

“கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் உரிமை பற்றி...”

“யுவர் எக்ஸலென்ஸி, உங்கள் கோரிக்கையில் நியாயம் இருக்கலாம். ஆனால் நான் இந்து சமஸ்தானத்தின் இந்து மகாராஜா. என் சமஸ்தானத்தின் பாரம்பரிய மரபு, பழக்கவழக்கங்கள், குடும்ப நம்பிக்கைகள், மதநம்பிக்கைகள் அனைத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு என் தர்பாருக்கிருக்கிறது. மதம் மாறுபவர்களுக்கு நான் தரும் சலுகைகள், மதமாற்றத்தை நேரடியாகத் தூண்டுவதாகும். மன்னியுங்கள்.”

“கவர்னருக்கு நான் பதில் அனுப்ப வேண்டும் யுவர் ஹைனெஸ்.”

“என் நிலைப்பாட்டைச் சொல்லிவிட்டேனே?”

ஹானிங்டன் மகாராஜாவிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றார்.

பருத்திக் குன்னு பங்களாவின் செவ்வண்ணத் தட்டோட்டில் விழுந்த வெயிலோனின் கதிர்கள் வெப்பம் தணிந்து இறங்கின. பங்களாவின் சுவர்களும் அமுங்கின சுவாசத்தில் இருந்தன.

ராமய்யங்கார் அலங்காரமான மர இருக்கையில் அமர்ந்திருக்க, பெயரன் பத்மநாபன் அவரின் இடது தொடையின்மேல் அமர்ந்திருந்தான். எதிரில் ஆளுயர ஓவியக் கித்தானில் ராஜா ரவிவர்மா ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தார். திவான் கருநீல வண்ண அங்கியும் வெண்பட்டு வேட்டியில் தார்ப்பாய்ச்சும் கட்டியிருந்தார். அவரின் தலைப்பாகை வெண்பட்டில் தங்கச் சரிகை நெய்யப்பட்டிருந்தது. கழுத்தில் கனத்த தங்கச் சங்கிலி. காதில் கெம்புக் கல் கடுக்கண். பத்மநாபன் சின்னக் கண்ணனைப்போல் அலங்காரத்தில் இருந்தான். அவன் புஜத்திலிருந்த கைவங்கியில் ஆழிச் சங்கு பொறிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு ஓவியமும் எங்கு தொடங்கப்பட வேண்டுமென்பதில் ஓவியர்களின் அபிப்பிராயங்கள் மாறுபடும். ராஜா ரவிவர்மா ஓவியம் வரைய வேண்டியவர்களைப் பார்த்த பிறகே முடிவு செய்வார். ராமய்யங்காரையும் பத்மநாபனையும் தனித்தனியாக வரைய எண்ணிய ரவிவர்மா, அய்யங்காரின் கோரிக்கையில் மனம் மாறினார்.

“இதற்குப் பிறகு உத்தியோகத்திற்கென்று எந்தச் சர்க்கார் பங்களாவிலும் குடியிருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. இனி ஓய்வுதான். என்னுடைய பெயரனுடன் பருத்திக் குன்னு பங்களாவின் அழகு தெரிய, எங்கள் இருவரையும் ஒன்றாக வைத்துச் சித்திரம் எழுதித் தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

இடது தொடையின்மீது அமர்ந்திருந்த பத்மநாபனின் சின்னஞ்சிறு குடுமியிலிருந்து ஓவியம் உயிர்பெறத் தொடங்கியது.

“கோயில் தம்புரான் குடும்பத்திலிருந்துதான் அடுத்த வாரிசு வருமென்று பேச்சிருக்கிறது. உங்கள் மகள்களுக்கும் அந்த வாய்ப்பிருக்கிறதே ரவிவர்மா.”

“அய்யங்கார் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.”

“கோயில் தம்புரான் குடும்பத்திற்கும் கிளிமானூர் குடும்பத்திற்கும்தானே அந்த உரிமை இருக்கிறது. நிச்சயம் நடக்கும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பெருமையை பிரிட்டிஷ் இந்தியா முழுக்கக் கொண்டு செல்கிறீர்கள் ரவிவர்மா.”

கையில் தூரிகையுடன் திரும்பிய ரவிவர்மா, அய்யங்காரிடம் பேசத் தொடங்கினார்.

“உங்கள் மதுரைதானே எனக்கு ஓவியக்கூடம். ஒருமுறை நம் அரண்மனைக்கு வந்த தியோடர் ஜென்சன் என்ற பிரிட்டிஷ் ஓவியர் வரைந்த ஓவியம் பார்த்து, ஓவியராக வேண்டுமென்ற ஆர்வம் வந்தாலும் மதுரைதான் எனக்கு வழி காட்டியது. என் தூரிகையில் நம் புராணங்கள் உயிர்பெறும்போது நான் காலத்தைக் கடந்து செல்வதாக மகிழ்கிறேன் அய்யங்கார். தஞ்சாவூர் அதற்கு வழிகாட்டியது. இப்போது மெட்ராஸ் மியூசியத்தில் சூப்பிரண்டெண்டாக இருக்கும் எட்கர் தர்ஸ்டன்தான் (பின்னாளில் தென்னிந்திய குலங்களும் குடிகளும் நூல் எழுதியவர்) எனக்கு அடையாளத்தைக் கொடுத்தார். என்னுடைய ஓவியங்களைப் பெருந்தொகைக்கு வாங்கி ஊக்கப்படுத்தினார். நம் நண்பர் மாதவ ராவ் பரோடா அரண்மனைக்குப் போகச் சொல்கிறார். வெளியுலகம் போக வேண்டும்.”

“துளசிச் செடி வீட்டுத் தோட்டத்திலேயே வளர்ந்துவிடும். ஆலமரமும் அரசமரமும் வளர வேண்டுமென்றால் வெளியில் போகத்தான் வேண்டும். அவசியம் சென்று வாருங்கள்.”

“ஆமாம் அய்யங்கார்...” என்ற ஓவியர் ரவிவர்மாவின் தைல வண்ணங்களில் ராமய்யங்காரும் பத்மநாபனும் பருத்திக் குன்னு பங்களாவின் நினைவுகளில் நிரந்தரமாகிக் கொண்டிருந்தார்கள்.

- பாயும்