
உங்களிடமிருந்து தபால் வந்தவுடனே தீர்மானித்துவிட்டேன், பதிலனுப்பிய கையுடன் புறப்பட்டுவிடவேண்டுமென்று. டெய்லரிடமும் மெக்கன்சியிடமும் பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து ராமய்யங்கார் விடைபெற்றுச் சென்றபிறகு கடந்த ஒருவார காலமாக ஹானிங்டனும் குருவாயியும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
‘எல்லாமே நிர்வாகம் சார்ந்த உறவுகள்தானே?’ என்று சமாதானம் செய்துகொண்டாலும் திவான் மேலிருந்த பிரியத்தினால் இருவருக்குமே மனம் சமநிலையில் இல்லை.
“அய்யங்கார், இரண்டு தேசங்களின் சர்க்கார் உத்தியோகத்தில் நிறைவாய்ப் பணி செய்திருக்கிறீர்கள். சின்னச் சின்ன சங்கடங்களை மனத்தில் கொள்ளாமல், அமைதியாக ஓய்வுக்காலத்தை அனுபவியுங்கள்” என்று ஹானிங்டன் ராமய்யங்காருக்குச் சமாதானம் சொன்னார்.
வழக்கமான விருந்து நிகழ்வுக்கு ஏற்பு தெரிவிக்காத அய்யங்கார், ஹானிங்டனின் அரண்மனையில் மாலைநேர தேநீர் விருந்தொன்றுக்கு வந்துவிட்டு உடனடியாக விடைபெற்றுவிட்டார். விடைபெறும் நேரத்தில் அய்யங்கார் ஹானிங்டனிடம், “என்மேல் எந்தக் களங்கமும் யாராலும் சுமத்த முடியாது. பத்மநாப சுவாமியின் பூரண திருவருள் கிடைக்கப்பெற்றவன் நான். யுவர் எக்ஸலென்ஸி ஒரே ஒரு உபகாரம் செய்ய வேண்டும். பூர்ணிமையை மறைத்த கருமேகம் எதுவென்று எக்ஸலென்ஸிக்குத் தெரிய வந்தவுடன், ஒரு தபால் மூலம் எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். புதிர்க் கணக்கின் சிக்கல் அவிழ்ந்ததென்று என் ஆழ்மனம் அமைதிகொள்ளும். அனந்தபுரத்தின் பத்மநாபரைத் தினம் தரிசிக்க முடியவில்லையென்ற வருத்தமிருந்தாலும், அவரின் நாமமிட்டுள்ள என் பெயரன் என் வருத்தம் தணிப்பான். தம்புராட்டி என்மீது தனயனின் பிரியம் காட்டியுள்ளார். என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள். ஹர் எக்ஸலென்ஸிக்கு என் வணக்கங்கள்” என்று மனமுருகிச் சென்றார்.

ராமய்யங்காருக்குப் பிறகு, கோட்டயம் பேஷ்கார் திவானாக இருந்த தஞ்சாவூர் ராமா ராவ் உடனடியாகச் சமஸ்தானத்தின் திவானாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மெட்ராஸ் கவர்னர் கன்னிமாரா திருவிதாங்கூர்ப் பயணத்தின்போது, ராமா ராவின் அழைப்பின்பேரில் அவரின் பங்களாவிற்கு வருகை தந்திருந்தார். திவானை வெளியேற்றுவது என்று முடிவு செய்துவிட்டுக் காரியங்கள் அடுத்தடுத்து நடந்ததோ என்ற சந்தேகம் நடமாடும் நேரத்தில், ராமா ராவின் பங்களாவிற்கு கவர்னர் சென்று வந்ததும் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட்டது.
ராமய்யங்காரைப் போலின்றி, ராமா ராவ் பிறப்பிலேயே செல்வாக்குமிக்க குடும்பப் பின்னணி கொண்டவர். ராமா ராவின் அம்மா வழித் தாத்தா குண்டோ பண்டிதர் பிரிட்டிஷ் சர்க்காரில் வேலை பார்த்தவர். கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து, தஞ்சாவூரில் செல்வாக்கோடு வாழ்ந்த குண்டோ பண்டிதருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகன்கள் வெங்கட ராவ், ரங்கா ராவ். இருவருமே அடுத்தடுத்து திருவிதாங்கூரின் திவான்களாக இருந்தவர்கள். வெங்கட ராவின் மகன் ரகுநாத ராவ். அவர் இந்தூரின் திவானாக இருந்தவர். ரங்கா ராவின் மகன் மாதவ ராவ். அவர் திருவிதாங்கூர், இந்தூர் இரண்டு சமஸ்தானங்களின் திவானாக இருந்தவர். குண்டோ பண்டிதரின் குடும்ப வாரிசுகளே இருபத்தைந்து வருஷங்களுக்குமேல் திருவிதாங்கூரின் திவான்களாக இருந்திருக்கின்றனர். குண்டோ பண்டிதரின் மகள் வழிப் பெயரனான ராமா ராவ் இப்போது திவானாகப் பதவியேற்றதில் சமஸ்தானம் பரபரப்படைந்திருந்தது.
பென்னி இங்கிலாந்து கிளம்பும்முன், தன்னைச் சந்திக்க வரச்சொல்லித் தபால் அனுப்பியிருந்தார் ஹானிங்டன். தபால் கிடைத்தவுடன், வரும் நாள், நேரம் தெரிவித்து பென்னி பதில் எழுதியிருந்தார். இன்று பென்னி வரவிருக்கிற தகவல் வந்ததிலிருந்து இருவரும் பரபரத்தார்கள். முந்தைய உற்சாகம் எட்டிப் பார்த்தது. பென்னி வந்துவிடும் நேரமென்பதால் குருவாயி, வேலையாள்களை ஏவினாள். பட்லரிடம் அடுத்தடுத்த உத்தரவுகளைக் கொடுத்தபடியிருந்தாள்.
பென்னி, குதிரை வண்டியில் வந்திறங்கினார். சிவப்பு வண்ணத்தில் வெண்ணிற மென்கோடுகள் பாவியிருந்த மேலங்கியும், வெண்ணிறக் கால்சட்டையும் தொப்பியுமாகப் பென்னி இறங்கியபோது அவரின் வயது குறைந்திருந்தது. அர்ப்பணிப்பான வேலை, ஆழ்தியானத்திற்குச் சமம். எண்ணங்களின் ஓர்மை பென்னிக்குப் பொலிவைக் கொடுத்திருந்தது. காத்திருந்த குருவாயி, பிரிட்டிஷ் பெண்மணி போல் பென்னியை அணைத்துக்கொண்டாள். குருவாயியின் விநோத நடவடிக்கை பார்த்து பென்னிக்கு வியப்பு அடங்கவில்லை. இருவருமே தன்மேல் அன்பு கொண்டவர்கள் என்று தெரியும். குருவாயியிடமிருந்து வெளிப்படையாகப் பகிரப்படும் அன்பின் மென்சூட்டை முதன்முறையாக உணர்ந்ததில் கூச்சம் பரவியது.
“பென்னி, உனக்காகக் காலையில் இருந்தே காத்திருக்கிறோம். வா... வா...” பென்னியின் கைபிடித்து அழைத்துச் சென்ற குருவாயியை அதிசயமாகப் பார்த்தார்கள் சென்ட்ரிகளும் வேலையாள்களும்.
பென்னி உள்ளே செல்லும்போதே ஹானிங்டன் அவர் இருக்கைக்கு வந்திருந்தார்.
“வெல்கம் மை பாய்...” ஹானிங்டனின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.
“யுவர் எக்ஸலென்ஸிக்கு என் பணிவான வணக்கம்.”
”ஹர் மெஜஸ்டிக்கு சேவை செய்யப் பணிக்கப்பட்ட ஊழியர்கள்தான் நாமிருவருமே...” ஹானிங்டன் சிரித்தார்.
குருவாயியும் பென்னிக்கு எதிரில் இருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள். பட்லர், தேநீரும் ரொட்டியும் இனிப்புகளும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த தட்டுகளை முன்னால் வைத்தான். குருவாயி இருவருக்கும் தேவையானதை எடுத்துப் பரிமாறினாள்.
“உங்களிடமிருந்து தபால் வந்தவுடனே தீர்மானித்துவிட்டேன், பதிலனுப்பிய கையுடன் புறப்பட்டுவிடவேண்டுமென்று. டெய்லரிடமும் மெக்கன்சியிடமும் பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறேன். சூப்பிரண்டெண்டாக டெய்லருக்குப் பணி உத்தரவு கொடுக்க சீப் செக்ரட்டரிக்கு அஞ்சல் அனுப்பிவிட்டேன். இன்னும் சிலருக்குப் பொறுப்புகள் பிரித்துக் கொடுக்க வேண்டும். பிறகு, இங்கிலாந்து கிளம்ப வேண்டும். மூன்று அல்லது நான்கு மாத காலம். திரும்பி வருவதற்குள் கொஞ்சம் வேலைகள் நடந்திருந்தால் நல்லது.”
“அதெல்லாம் நடக்கும் பென்னி, கவலைப்படாதே. சகல ஏற்பாடும் செய்துவிட்டுக் கிளம்பு. சமஸ்தானத்திலிருந்து எந்த நெருக்கடியும் வந்துவிடாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். தொடக்க விழாவில் கலந்துகொள்ள மிகவும் விருப்பமாய் இருந்தேன். சமஸ்தானத்தில் குழப்பங்களும் சூதுகளும் மலிந்துவிட்டன. தனிக்கவனம் எடுத்து நிலைமையைச் சீராக்க முயன்றுவருகிறேன்.”
“திவான் பதவி விலகியதில் எனக்குப் பெரும் அதிர்ச்சி. கடல் நிரந்தரமாக அலைகொண்டு ஆர்ப்பரித்தாலும் நம் காலைத் தொட்டு உள்ளிழுத்துச் செல்லப்போகும் சிற்றலை பார்த்துத்தானே நாம் பயம் கொள்வோம்? அப்படித்தான் எனக்கும். திவானின் விலக்கம் சமஸ்தானத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கும் என்றாலும், என் கவலை பெரியாறு திட்டம் பற்றியதுதான். சிக்கல்கள் எழுவதற்கு முன்பே ஓரளவுக்குச் சரிசெய்துவிடுபவர். குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் பிரச்சினை தீரும், அணை வேலையை மட்டும் பார்க்கலாம் என்று நினைத்தேன். வேலை ஆரம்பித்த கொஞ்ச நாளுக்குள்ளேயே எத்தனை நெருக்கடிகள்?”
“நான் வரச்சொன்னதும் அதற்காகத்தான் பென்னி. தோட்டத்தில் நடந்துகொண்டு பேசலாமா?”
“இனிப்பு கொஞ்சம் சாப்பிட்டுக் கிளம்புங்கள். பென்னிக்காக குசினிக்காரனிடம் சொல்லி, பிரத்யேகமாகத் தயார் செய்யச் சொன்னது.”
“ஹர் எக்ஸலென்ஸியின் உற்சாகம் எனக்குள் நெகிழ்வை உண்டாக்குகிறது.”
“நாங்கள் இருவரும் ஒரு வாரமாக மிகுந்த மனக்கவலையில் இருந்தோம் பென்னி. ராமய்யங்கார் பதவி விலகியதில் எனக்கும் பங்கிருக்கிறது என்ற குற்றவுணர்ச்சி அழுத்துகிறது. உன்னுடைய வருகையைக் கொழுகொம்பாகப் பற்றிக்கொண்டோம்” என்று சொல்லியபடி ஹூக்காவை வாயில் வைத்தபடி, எழுந்து நடக்கத் தொடங்கினார். பென்னியும் குருவாயியும் பின்தொடர்ந்தனர்.
அந்தியை அணைத்துக்கொள்ளும் காதலுடன் மாலைப்பொழுது கீழ்வானில் வேகம் கொண்டிருந்தது. நெருங்கும் மாலைக்குச் சிவந்த அந்தி, காதலனிடம் போக்குக் காட்டும் காதலியின் அணுக்கமும் விலக்கமும் காட்டியது. மேற்கு வானில் மாலைப்பொழுதும் அந்தியும் ஒன்றையொன்று விழுங்கத் துடிக்கும் உன்மத்தத்துடன் தழுவிக் கிடந்ததில், அன்பின் செவ்வண்ணம் நரம்பெனக் கிளைவிரித்தோடியது. கீழ்வானின் லீலைகள் அறிந்த பறவைகள் தம் மரக்கிளைகள் நாடி அடைக்கலம் கொண்டன. பிரபஞ்சத்தின் இயக்கத்தில் வாழ்வதன் பேரின்பத்தை நுகர்ந்துகொண்டிருந்த சின்னஞ்சிறிய உயிர்களுக்கு மத்தியில் மூவரும் தோட்டத்திற்குள் நுழைந்தார்கள்.
“கூலிகளால் தினமொரு பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது யுவர் எக்ஸலென்ஸி. சமஸ்தானத்தின் போலீசு, கூலிகளையே பின்தொடர்ந்துகொண்டிருப்பார்களோ என்னமோ?”
“கார்டமம் சூப்பிரண்டென்ட், பெரியாறு அணைக் கட்டுமானத்திற்கு வருகிற கூலிகளால் திருட்டு அதிகமாகிறது என்று மகாராஜாவிடம் புகார் சொல்லியிருக்கிறார். நாயர் படை கமாண்டென்ட் ‘மிளகு, உப்பு, புகையிலைக் கடத்தலுக்கு பிரிட்டிஷ் பிரஜைகள்தான் உதவுகிறார்கள். மலைமேல் வேலைக்கு வருபவர்கள், கொஞ்சம் கொஞ்சமாகக் கடத்திக்கொண்டுபோய், கம்பம், தேவாரம் ஏஜென்ட்டுகளிடம் விற்பனை செய்கிறார்கள்’ என்கிறார். பாரஸ்ட் ஓவர்சீயரோ ‘சமஸ்தானத்தின் எல்லைக்குள்ளிருந்து விலைகூடிய மரங்களைக் கடத்திச் செல்கிறார்கள்’ என்கிறார். இப்படி ஆளாளுக்குப் புகார் கொடுத்துக்கொண்டிருந்தால் போலீசு கண்காணிக்கத்தானே செய்யும்? இப்போது எத்தனை கூலிகள் அணை கட்டுமிடத்தில் வேலைக்கு இருக்கிறார்கள் பென்னி?”
“ஹெட் வொர்க் நடக்குமிடத்தில் இருநூறு பேர் இருந்தார்கள். இந்தச் சீசன் முடிந்ததும் அனுப்பிவிட்டோம். யாரும் காவலுக்கு இல்லை. அடுத்த சீசனில் ஐந்நூறு, அறுநூறு பேர் மலையில் மட்டும் வேலை செய்ய வேண்டியிருக்கும் யுவர் எக்ஸலென்ஸி.”
“இருநூறு பேர் வேலைக்கு வருகின்றபோதே இத்தனை பிரச்சினை என்றால், அடுத்தடுத்த சீசனில் இரண்டாயிரம் பேர் அணை வேலைக்கு வந்தால் எப்படிச் சமாளிப்பாய்?”
“குமுளியில் திருவிதாங்கூருக்கென்று போலீசு கச்சேரி இருப்பதுபோல், நம்முடைய பிரசிடென்சியும் ஒரு கச்சேரி அமைக்க வேண்டும்.”
“நல்லதுதான். தேக்கடியிலேயே பந்தோபஸ்து ஆரம்பித்துவிடும். பிரச்சினையே தேக்கடியில் இருந்து அணை கட்டுமிடம் இருக்கிற எட்டு மைலுக்குள்தானே நடக்கிறது? மலைமேல் ஏறுகிறவர்கள் ஆங்காங்கே ஏலத்தோட்டத்திற்குள் நுழைந்துவிடுகிறார்களே?”
“ஒரு ஒற்றையடிப் பாதை அமைப்பதற்கு எனக்கு எட்டு மாதமானது. புதர்களையும் முட்களையும் மரங்களையும் வெட்டுவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. உள்ளே நுழைய ஒருத்தரையொருத்தர் முன்னுக்குத் தள்ளுவார்கள். ஏலத்தோட்டத்துக்குப் போவதற்கு மட்டும் எப்படி வழி கண்டுபிடிக்கிறார்களோ?”

“பணம் எல்லாப் பாதையையும் திறக்க வைக்கும் பென்னி.”
பென்னிக்குக் கவலை கூடியது.
“நிரந்தரமான தலைவலிதான்... நான் வரச் சொன்னதன் காரணமும் அதுதான்.”
பென்னி அமைதியாக ஹானிங்டன் முகத்தைப் பார்த்தபடியிருந்தார்.
“திருவிதாங்கூர் சமஸ்தானம் அவர்களின் எல்லைக்குள் பிரிட்டிஷ் பிரஜைகள் வருவதைத் தடுக்க நினைக்கிறது. நாயர் பிரிகேடின் கமாண்டர் என்னைச் சந்தித்தார். கணவாயின் எல்லைகளில் போலீசு கச்சேரிகள் அமைக்கப் போகிறார்களாம். அதனால் நம்முடைய பிரசிடென்சிக்குக் கொடுத்திருக்கிற எட்டாயிரம் ஏக்கர் நிலத்தின் எல்லையைச் சரியாக அளந்து கொடுக்கச் சொல்கிறார்கள். எட்டாயிரம் ஏக்கர் போக மீதமுள்ள இடத்தில் அவர்கள் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்வார்களாம்.”
“அதெப்படி எட்டாயிரம் ஏக்கர் இடத்தின் எல்லையை இப்போது சொல்ல முடியும்? பிளானில் கொடுத்திருப்பதை அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். அடர்ந்த காட்டில் அணை கட்டுகிற இடத்திற்குச் செல்வதற்கே பெரும்பாடு. நீர்தேங்கும் இடத்தை எப்படி, யார் அளந்து கொடுப்பது? குத்தகை ஒப்பந்தத்தில் சொன்னதுபோல், எட்டாயிரம் ஏக்கர் இடத்தையும் அணை வேலைகள் நடக்கும் நூறு ஏக்கரையும் நம் பிரசிடென்சியின் நிர்வாகத்தின்கீழ்தான் வைத்திருக்க வேண்டும். இன்று எல்லை குறித்துக்கொடுங்கள் என்பார்கள். கொடுத்த பிறகு, எங்கள் எல்லை வழியாக அணை கட்டுமிடத்திற்குச் செல்வதற்கு அனுமதியில்லை என்பார்கள். முதலில் இருந்தே நம் பிரசிடென்சி இவ்விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும் யுவர் எக்ஸலென்ஸி.”
“உத்தேசமாகச் சொல்ல முடியாதா?”
“உத்தேசமாகச் சொல்லலாம். நாம் ஓர் எல்லையைக் குறிப்பிட்டால், அவர்கள் அந்த இடத்தையொட்டி போலீசு கச்சேரி அமைத்துக்கொள்வார்கள். காட்டுக்குள் எல்லையைக் குறித்துக்கொடுக்க எதற்கு அவசரம் காட்டுகிறார்கள்?”
“மகாராஜா கடுமை காட்டுகிறார். அதற்குள் ஆப்காரி வருமானம் குறைந்துவிட்டதாம். புகையிலை, மிளகுக் கடத்தல் கூடிவிட்டதாம். சென்ற வருஷத்தைய வரவுசெலவுக் கணக்கை பிரசிடென்சிக்கு அனுப்ப எனக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். 42,000 பற்றாக்குறை. ஆப்காரி வருமானத்தில் 12,000 தான் குறைந்திருக்கிறது. அவர்கள் கணக்குப்படி பார்த்தாலும், கடந்த ஆறேழு மாதத்தில் மட்டும் 12,000 குறைந்திருக்க வாய்ப்பில்லை.”
“பிறகேன் குற்றம் சொல்கிறார்கள் யுவர் எக்ஸலென்ஸி?”
“அவர்களுக்கு வேண்டியது காரணம். வரவு செலவுக் கணக்கை நான் கூர்ந்து படித்துப் பார்த்தேன். உண்மையில் சென்ற ஆண்டு மகாராஜாவின் அரண்மனையில்தான் செலவு அதிகரித்திருக்கிறது. கொல்லம் வருஷம் 1061இல் (ஆங்கில வருஷம் 1886) அரண்மனைச் செலவு 5,84,000 தான். ஆனால் இந்த வருஷம் (1887) 40,000 ரூபாய் செலவு கூடியிருக்கிறது. மகாராஜா விசாகம் திருநாளின் மறைவு, அவரின் இறுதிச் சடங்கு, புதிய மகாராஜாவின் பதவியேற்பு, இதெல்லாம் எதிர்பாராத செலவினங்கள். மகாராஜா கல்கத்தா செல்லப் பயணம் திட்டமிட்டு, பின்பு ரத்து செய்ததற்கே இருபதாயிரம்வரை செலவாகியிருக்கிறது. நம் அரசி பதவியேற்ற ஐம்பதாவது ஆண்டுக் கொண்டாட்டத்திற்குச் செல்லத் திட்டமிட்டு, கடைசி நேரத்தில் சில மனக்குழப்பங்களால் ரத்து செய்துவிட்டார். பிறகு மெட்ராஸ் பிரசிடென்சிக்குச் செல்ல, கொச்சின் அரண்மனைக்குப் போக எனப் பயணங்களுக்கே பெரும் செலவாகியிருக்கிறது. ஆனால் பெரியாறு அணை வேலை தொடங்கியதால்தான் வருவாய் இழப்பு என்றும், எட்டாயிரம் ஏக்கர் நிலத்தின் எல்லைகளை அவசியம் அளந்து கொடுத்தே ஆக வேண்டுமென்றும் மகாராஜா உறுதியாக இருக்கிறாராம்.”
இரவின் பேரமைதிக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கத் தயாரான புள்ளினங்கள், அடிக்குரலில் குரலெழுப்பி அடங்கின. மூவரும் தோட்டத்திலிருந்த நடைபாதையை இரண்டு முறை நடந்து கடந்திருந்தார்கள்.
“சீப் செக்ரட்டரிக்கு நீங்கள் கடிதம் அனுப்பிவிட்டீர்களா யுவர் எக்ஸலென்ஸி?”
“இல்லை பென்னி. எனக்குக் கடிதம் வந்தவுடனே நான் உனக்குக் கடிதம் அனுப்பினேன். உங்கள் சீப் இன்ஜினீயருக்கும் சீப் செக்ரட்டரிக்கும் எந்தக் கடிதம் சென்றாலும் உடனே லண்டனுக்கும் தகவல் அனுப்பிவிடுவார்கள். அவர்களின் கவனத்திற்குச் செல்லும்முன், நாமிருவரும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.”
“சரியாக யோசித்திருக்கிறீர்கள். யுவர் எக்ஸலென்ஸியின் நிர்வாகத்திறன் பெயர் பெற்றதல்லவா? அதனால்தானே சமஸ்தானத்தில் நான்காவது முறையாக ரெசிடென்டாகி, இதுவரை மூன்று எல்லைப் பிரச்சினைகளைத் (கொச்சின்-திருவிதாங்கூர், திருவிதாங்கூர்- கோயம்புத்தூர், மெட்ராஸ் பிரசிடென்சி- செங்கோட்டை) தீர்த்து வைத்திருக்கிறீர்கள். சுற்றிச் சுற்றித் திருவிதாங்கூரின் எல்லைகள் யுவர் எக்ஸலென்ஸிக்கு அத்துப்படி ஆகிவிட்டதே? மேஜிஸ்திரேட்டாக இருந்த அனுபவம் பிரச்சினைகளை எப்படிக் கையாள வேண்டுமென்ற தெளிவைக் கொடுக்கிறது.”
“தெளிவு சில நேரங்களில் குறைந்துவிடுகிறதே பென்னி. நான் சரியான முறையில் ஒரு கடிதத்தைக் கவனித்திருந்தால் திவானுக்கு நெருக்கடி வந்திருக்காது. அவர் பதவியும் விலகியிருக்க மாட்டார்.”
“என்ன சொல்கிறீர்கள்?” குருவாயி முந்திக்கொண்டு கேட்டாள்.
“ஆமாம். என்னுடைய கவனமின்மைதான் திவான் விஷயத்தில் பெரிய தவறு நடக்கக் காரணமாக இருந்தது. ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னர் கன்னிமாரா திருவிதாங்கூர் வந்தபோது திவான் அஞ்சாங்கோவையும் தங்கசேரிப் பயணத்தையும் தவிர்க்கச் சொன்னார். பெரியாறு அணை குத்தகைக்காகத் தங்கசேரியைக் கேட்டிருந்த மகாராஜாவின் கோரிக்கையை ஏற்காமல்தான் நாம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினோம். தங்கசேரி மக்களின் கோரிக்கை நிறைவேறியதில் அவர்கள் மகிழ்ந்து, கவர்னருக்கு நன்றி தெரிவிக்க விரும்புவார்கள், கவர்னரும் மகிழ்ச்சியடைவார் என்று நான் எண்ணினேன். ஏனெனில், இந்தியா ஆபீஸ் செக்ரட்டரியே நேரடியாக இவ்விஷயத்தில் தலையிட்டார். அவர் விருப்பம் நிறைவேறியிருப்பதில் மக்கள் காட்டும் மகிழ்ச்சி அவருக்குச் சென்றடையும் என்று நினைத்தேன். திவானின் கணிப்பைமீறி அங்கு சென்றது தவறென்று பிறகுதான் உணர்ந்தேன். நானும் கவர்னரும் சென்ற பாதையில் வெடிமருந்துப் பை கிடந்ததில் பெரிய அவப்பெயர். கவர்னரின் சகோதரர் பிரிட்டிஷ் இந்தியாவின் முன்னாள் கவர்னர் ஜெனரல் மேயோவுக்கு நேர்ந்தது இவருக்கும் நேர்ந்திருக்கும். எப்படியோ உயிர்பிழைத்துவிட்டோம். திவான் பலியானார்.”
“அதென்ன கடிதம் ஹனி?” குருவாயி உரையாடலின் நடுவில், விடுபட்டுப்போன பேச்சின் கண்ணியை நினைவுபடுத்தினாள்.
“ஆலப்புழாக் கழிமுகத்திற்கு வந்திறங்கும் வெடிமருந்து, ஆயுதங்களின் அளவுப்பட்டியலை திவான் எனக்கனுப்புவார். நான் சரிபார்த்துவிட்டு அதற்கு மேலொப்பம் செய்ய வேண்டும். சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு, திவான் அனுப்பிய பட்டியலைப் பார்த்த நான், அதில் ஆலப்புழாக் கழிமுக ஏஜென்டின் கையொப்பமில்லாததைப் பார்த்தேன். ஏஜென்டின் கையொப்பமில்லை, சரி பாருங்கள் என்று திவானுக்கு நேர்முகக் கடிதமொன்றை அனுப்பினேன். நான் செய்த தவறு, திவானின் பரிந்துரையில் என் கையெழுத்திட்டுக் கொடுத்ததுதான். நான் நினைத்தது, ஏஜென்டின் கையெழுத்து கவனக்குறைவாக விடுபட்டிருக்கும். சுட்டிக்காட்டிய பிறகு திவான் கையொப்பமிட்டு, கழிமுகத்திற்கு அனுப்பிவிடுவார், மீண்டும் ரெசிடென்ட் ஆபீஸுக்குக் கடிதம் வர வேண்டாமே என்று நினைத்தேன். கடிதம் திவான் ஆபீஸுக்குச் செல்லவில்லையென்பது பின்னால்தான் எனக்குத் தெரிந்தது. நல்லவேளையாக என்னுடைய ஆபீஸில் திவானுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் இருந்ததால் நான் காப்பாற்றப்பட்டேன். வெடிமருந்துக்குப் பலியாகியிருந்தால் கடித நகல் காப்பாற்றியிருக்காது என்பதும் புரிகிறது.”
“ஆபத்திலும் ஹாஸ்யத்தை விடாதீர்கள்.” குருவாயி மனக்கலக்கத்தில் இருந்தாள்.
“ஹாஸ்யமிருந்தால் ஆபத்திலும் தப்பிக்கலாம், சரிதானே பென்னி?”
“அய்யங்காரை நினைத்தால் எனக்குக் கவலையாக இருக்கிறது.”
“உங்களின் கச்சேரியிலும் சூழ்ச்சி நடக்கிறதென்றால் என்ன பொருள் ஹனி? பிரிட்டிஷ் சர்க்காரின் சீப் செக்ரட்டரிக்கு இணையான உங்களுக்கே இந்த நிலையென்றால், இரண்டு தேசங்களிலும் என்ன பாதுகாப்பு இருக்கிறது? எப்படி நடந்ததென்று கண்டுபிடித்தீர்களா? யார் அந்தக் கயவர்கள்? தூக்கில் தொங்கவிடும் அவகாசம்கூட எடுத்துக்கொள்ளக் கூடாது. எனக்கு மனம் ஆறவில்லை. என்ன துணிவு அந்தச் சூழ்ச்சிக்காரன்களுக்கு?”
“கோபப்படாதே குருவாயி. முடிந்துபோச்சே, இனி என்ன பயம்?”
“உங்கள் மேலும் எனக்குக் கோபம் வருகிறது. உங்கள் நிழல்போல் உலவிக்கொண்டிருக்கிறேன். என்னிடமும் இந்தச் சேதியை நீங்கள் தெரிவிக்கவில்லையே?”
“சூரிய உதயத்திற்கு முன்பும், அஸ்தமனத்திற்குப் பின்பும் நிழல் காணாமல்போய்விடுமே? நிழலற்ற கொஞ்ச நேரம் இருக்கிறதே!”
“ஹனி...”
“சும்மா வேடிக்கைக்காக டியர். கோபம் கொள்ளாதே.”
“யார் காரணமென்று கண்டுபிடித்தீர்களா இல்லையா?”
“சீக்கிரம் கண்டுபிடித்துவிடுவோம்.”
“உடனே கவர்னருக்குக் கடிதம் எழுதுங்கள். பிரிட்டிஷ் ரெசிடென்டின் கச்சேரியிலேயே சூழ்ச்சி நடக்கிறதென்றால்?”
சிலந்தியின் வலையொன்றில் சிக்கியிருந்த பறவையின் இறகொன்று காற்றின் வேகத்தில் விடுபட்டு மெல்லக் கீழிறங்கியது. இறகின்மீது நீலவண்ண வண்ணத்துப்பூச்சியொன்று வந்தமர்ந்தது. செம்மஞ்சள் நிற இறகும் நீலவண்ண வண்ணத்துப்பூச்சியும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, சற்று முன்பு கீழ்வானத்தில் நடந்த மாலை – அந்தி சேர்க்கையின் சிறு இழையொன்று பிரிந்து பூமிக்கு வந்த மயக்கம் தந்தது.
“ஹர் எக்ஸலென்ஸி சொல்வதுபோல் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாதென்று எனக்கும் தோன்றுகிறது. உங்களின் ரெசிடென்ட் அலுவலகத்திலிருந்து கடிதம் கொண்டு சென்றது யார்? திவான் அலுவலகத்தில் கடிதம் சென்று சேர்ந்ததா? சேர்ந்தது என்றால் அங்கு கடிதத்தை வாங்கியது யார்? சென்று சேரவில்லையென்றால் நடுவில் கடிதம் என்னவானது? இதற்கெல்லாம் பதில் கிடைத்துவிட்டதா யுவர் எக்ஸலென்ஸி?”
“பதில் கிடைத்திருக்கும். முழுமையான விசாரணைக்குப் பிறகு என்னிடம் சொல்வார்கள்.”
“பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறதே?”
“இருக்கலாம். சமீபத்திய சிக்கல்கள் எல்லாம் பெரியாறு அணையைச் சுற்றியே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு அப்படியொரு எண்ணம் வருகிறதா ஹனி?”
“இதுவரை இல்லை. இப்போது தோன்றுகிறது.”
“அடர்ந்த காட்டுக்குள் மனிதர்கள் பயன்படுத்தாத இடத்தைக் கொடுத்ததற்குப் பின்னால் என்ன நெருக்கடி இருக்க முடியும்?”
மூவருமே யோசனையில் ஆழ்ந்தார்கள்.
அரண்மனையின் வளாகம் முழுக்கக் கல்விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. துதிக்கை உயர்த்திய யானை வடிவம் கொண்டிருந்த அரையாள் உயரக் கல்விளக்குகள் ஒன்றுபோல் இருந்தன. குருவாயி தஞ்சாவூரிலிருந்து இதற்கெனச் சிற்பிகளை வரவைத்துத் தோட்டம் முழுக்கக் கல்விளக்குகள் பொருத்தியிருந்தாள். உயர்த்திய யானையின் தும்பிக்கையின் நுனியில் விளக்குப் பொருத்துவது போல் செதுக்கப்பட்டிருந்ததால், தீபமேந்திய யானைகளாய் கல்விளக்குகள் கம்பீரம் காட்டின.
“இங்கிலாந்தில் வாங்க வேண்டிய மெஷின்கள் பட்டியல் அனுப்பிவிட்டாயா பென்னி?”
“இண்டெண்ட் வாங்கி, செக்ரட்டரிக்கும் அனுப்பிட்டேன். வேகமாகச் சென்று திரும்ப வேண்டும். இங்கு வேலைகள் மலையளவு இருக்கின்றன.”
“சரியாகத் திட்டமிட்டுவிட்டுக் கிளம்பு. ஒவ்வொரு பகுதிக்கும் சூப்பிரண்டென்ட் போடு” என்று சொல்லிய ஹானிங்டன், குருவாயியிடம் “பென்னியும் என்னைப்போல்தான் முன்கோபி...” என்றார்.
“பெருமையான தொனி தெரியுதே, இதிலென்ன பெருமிதம்?!” என்று கேட்ட குருவாயி, “உங்களுடன் பென்னியை ஒப்பிடாதீர்கள். பென்னிக்கு அவ்வளவு கோபம் வராது. சரிதானே பென்னி?” என்று கேட்டாள்.
“நாலைந்து நாள் முன்புதான் தேக்கடியில் இங்கிலாந்துக்குப் போவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, என்னைக் கேலி செய்துகொண்டிருந்தார்கள் நண்பர்கள். நார்த் ஆர்க்காட்டில் எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினீயராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் சொன்னேன். அதென்னவோ, போகிற இடங்களில் உயரதிகாரியுடன் மோதுவது எனக்குத் தானாக நடக்கிறது.”
“ஆனால் ரெசிடென்டிடம்?” குருவாயியின் குரலில் கேலி தொக்கியிருந்தது.
“ரெசிடென்ட் எனக்கு நேரடியான அதிகாரியாக இருந்திருந்தால் ஒருவேளை மோதியிருப்போமோ என்னவோ?” பென்னி, பணிவாய்ச் சொன்னார்.
“ராணுவ வீரனான நீ, வலிமையான உன் காலி முன்மண்டையினால் மோதினால், நான் மல்லாக்க விழ வேண்டியதுதான்” என்ற ஹானிங்டனுக்குச் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குருவாயியும் சேர்ந்துகொண்டாள். பென்னி அரைச் சிரிப்புடன் கல்விளக்கொன்றைப் பார்த்தார்.
காற்றில் குளிர்ச்சி கூடியிருந்தது. குளிரை அதிகரிக்காத, அனுபவிக்கத் தகுந்த குளிர்ச்சி.
“நானும் வேலூரில் வேலை பார்த்திருக்கிறேன் தெரியுமா? சரி, ஆர்க்காட்டில் எதற்கு யாரிடம் மோதினாய்?”
“என் மோதல் கதைகளெல்லாம் நான் அபிசீனியப் போருக்குச் சென்று, போரிட்டுப் பெற்ற பதக்கங்களைவிட அதிக புகழ் வாங்கித் தந்துவிடும் போலிருக்கிறதே?”
“இருக்கட்டும், முதலில் கதையைச் சொல்.”
“நார்த் ஆர்க்காட்டில் ஆக்டிங் சூப்பிரண்டென்டிங் இன்ஜினீயராக இருந்தபோது ஒரு ஓவர்சீயரைப் பணிநீக்கம் செய்தேன். பணிநீக்கம் செய்தவருக்குப் பதிலாக நான் புதிதாக ஒரு ஓவர்சீயரை நியமித்துவிட்டேன்...” முன்பு நண்பர்களிடம் சொன்ன கதையைத் தொடங்கினார் பென்னி.
“நான் பணிநீக்கம் செய்ததும் பணி நியமனம் செய்ததும் செல்லாது என்று முனிசிபல் சேர்மன் எனக்குக் கடிதம் எழுதியதோடு, சீப் செக்ரட்டரிக்கும் கடிதம் அனுப்பிவிட்டார். சீப் செக்ரட்டரி இரண்டு பேரிடமும் விளக்கம் கேட்டிருந்தார். பிறகு அவர், முன்பு பதவி நீக்கிய ஓவர்சீயரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டுமென்றும், புதிதாக நியமித்தவரை விடுவிக்க வேண்டுமென்றும் எனக்கு எழுதியிருந்தார். புதிதாக நியமிக்கப்பட்டவர் என்னுடைய ஆபீஸில் வேலை செய்பவரின் உறவினர் என்பதால்தான் நான் அவரை நியமித்தேன் என்ற குற்றச்சாட்டும் அதில் இருந்தது.”
“முதலில் இருந்த ஓவர்சீயரை ஏன் பதவி நீக்கம் செய்தீர்கள்?”
“இதைத்தான் உயரதிகாரியாக இருக்கும் யாரும் கேட்பார்கள். சீப் செக்ரட்டரி என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்கவே இல்லை. நான் புதிதாக நியமித்த நபரைப் பணிநீக்கம் செய்யச் சொல்லி, கடிதம் மட்டும் அனுப்பினார். கூடவே, சூப்பிரண்டென்டிங் இன்ஜினீயர் போன்ற பொறுப்பான பதவிகளில் இருப்பதற்கு எனக்குப் பொறுமையும் தகுதியும் குறைவோ என்று அவர் சந்தேகிப்பதாகவும் எழுதியிருந்தார்.”
“அந்த முனிசிபல் சேர்மன் உன்னைப் பார்த்துப் பேசியிருக்கலாம். அல்லது உன்னை வரச்சொல்லி ஓவர்சீயரின் தவறென்ன என்று கேட்டிருக்கலாம். சரி, நீயென்ன பதில் எழுதினாய்?”
“நீங்கள் சொல்வதைத்தான் சீப் செக்ரட்டரிக்கு எழுதினேன். `நானும் சேர்மனும் பேசி சுமுகமான முடிவுக்கு வந்திருப்போம். அதற்குள் தலையிட்டு நீங்கள் அதிகம் அறிவுறுத்திவிட்டீர்கள். ஆக்டிங் சூப்பிரண்டெண்டிங்காகப் பொறுப்பேற்பது ஒரு நன்றியில்லாத வேலை என்பதை நான் நன்கறிவேன். இப்போதே அந்தப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். நான் நியமித்தவரின் நியமனம் செல்லாது என்று மட்டும் எழுதிவிட்டீர்கள். சீப் செக்ரட்டரியாக இருக்கும் நீங்கள், சூப்பிரண்டென்டிங் இன்ஜினீயராகப் பொறுப்பிலிருக்கும் என்னிடம் குற்றம் சாட்டப்பட்ட ஓவர்சீயரை நான் விசாரித்தேனா, ஏன் பதவிநீக்கம் செய்தேன் என்றே கடைசிவரை கேட்கவில்லை. உயர்பதவிகளில் இருக்கும் தகுதி எங்கு குறைகிறது என்று தெரிகிறது. நானாவது ஆக்டிங் பொறுப்பில் இருந்தேன்’ என்று அவருக்குப் பதில் எழுதினேன். அவர் சத்தமில்லாமல், வெறுமனே ‘பதிவு செய்யப்பட்டது’ என்று எழுதிக் கோப்பை மூடிவிட்டார்.”
“சபாஷ்...” ஹானிங்டன் சத்தமாய்ச் சிரித்தார்.
குருவாயி இரவு உணவுக்காக மேசையை ஒழுங்கு செய்ய உத்தரவிட்டாள்.
- பாயும்