
எங்கம்மா ஒவ்வொரு நாளும் பொழுது சாய்ஞ்சா மீனாட்சி கோயில் இருக்கிற திசையைப் பார்த்துக் கும்பிட்டு, வீட்டுக்குள்ள வந்து வெளக்குப் பொருத்துமாம்
சுழித்தோடும் நீரில் பிம்பம் பார்த்துக்கொண்டிருந்த எஸ்தரின் அருகில் பார்வதியும் பேயத்தேவனும் வந்து நின்றார்கள். நீரில் பிரதிபலித்த அவர்களின் பிம்பம் பார்த்து, திடுக்கிட்டு எழுந்த எஸ்தரின் கைகளைப் பார்வதி பிடித்துக்கொண்டாள்.
“ஏன் பதறுற?”
“பதறாம நடுக்காட்ல எப்படி இருக்க முடியும்?” என்று பேயத்தேவன் பார்வதிக்குப் பதிலளித்தான்.
“எதிர்பாராம சின்னச் சத்தம் கேட்டாலும் திடுக்குனுதான் ஆயிடுது. மாத்திக்கணும்.”
“தனியா என்ன செய்யிறே எஸ்தர்?”
“தேங்காத்தண்ணி மாதிரி ஓடுறத பாத்தவுடனே ஆசையா இருந்துச்சு. அதான் சும்மா கொஞ்ச நேரம் கால நனச்சிக்கிட்டு உக்காந்துட்டேன்.”
“சரி உக்காரு...” என்று சொல்லி, எஸ்தர் அருகில் உட்கார்ந்தாள் பார்வதி. இருவருக்கும் பக்கத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டு பேயத்தேவன் உட்கார்ந்தான்.
“கண்ணு கலங்கியிருக்கு?” எஸ்தரின் மோவாயை நிமிர்த்திப் பிடித்துக் கண்களைப் பார்த்தபடி கேட்டாள் பார்வதி.
“சும்மா, தூசு விழுந்திருக்கும்னு நெனைக்கிறேன்” - அவசரமாகக் கண்களைத் துடைத்துவிட்டுக்கொண்டாள் எஸ்தர். முக்காட்டை அவசரமாகச் சரி செய்தாள்.
“சரி, இன்னும் நீ எங்கள வேத்தாளாத்தான் நெனைக்கிறே. சொல்ல வேணாம்... நான் கெளம்புறேன்” என்ற பார்வதியைக் கைப்பிடித்து நிறுத்தினாள் எஸ்தர்.
“புதுசா என்ன சொல்லப்போறேன்?”
“சின்ன வயசுல பட்ட கஷ்டமெல்லாம் முடிஞ்சிடுச்சி. அதையே நெனைச்சி புழுங்கிகிட்டு இருந்தா இருக்கிற காலத்துல எப்டி வாழறது? மறக்கப் பாரு எஸ்தர்...”
“பார்வதி, எனக்கொரு உதவி செய்றயா?”
“சொல்லு...”

“என்னைய மீனாட்சின்னு கூப்பிடுறீயா? அக்காள் என்ன அப்படித்தான் கூப்பிடும்.”
பேயத்தேவனும் பார்வதியும் எஸ்தரை வியப்பாய்ப் பார்த்தார்கள்.
“எங்கம்மா ஒவ்வொரு நாளும் பொழுது சாய்ஞ்சா மீனாட்சி கோயில் இருக்கிற திசையைப் பார்த்துக் கும்பிட்டு, வீட்டுக்குள்ள வந்து வெளக்குப் பொருத்துமாம். என்னவோ காலச்சக்கரம் வயித்துக்குக் கஞ்சி இல்லாம, இழுத்துக்கிட்டுப் போயிடுச்சி. மீனாட்சியையும் எஸ்தராக்கி விட்டுடுச்சி. ஆனா, எஸ்தர்னு என்னை மத்தவங்க கூப்பிடறப்பல்லாம் எங்கம்மா ஒவ்வொரு அடியா என்னை விட்டுப் பின்னாடி போற மாதிரியே பதற்றமா இருக்கு. ஒனக்குத் தெரியுமா? அக்காள்கிட்ட என் பேர் என்னன்னு நான் சொன்னதே இல்ல. ஆனா அக்கா என்ன அலங்கரிச்சு, கால்ல சலங்கை கட்டிவிட்டு, என் முகத்தைக் கண்ணேறு கழிச்சுப் போடும்போது, `என் பச்சைக்கிளியே, மீனாட்சி, பேரழகியே ஆடுடி கொழந்தை’ன்னுதான் சொல்லும். என் அம்மாவுக்கும் அக்காளுக்கும் மீனாட்சியா இருந்த நான், என் மனசுக்குள்ளயும் மீனாட்சியாத்தான் இருக்கேன்.”
“ஏன், நீ இப்போ மீனாட்சின்னு மாத்திக்க முடியாதா?”
எஸ்தர் அமைதியாக இருந்தாள்.
“இந்த உடம்பு உசுரோட இருக்குன்னா அதுக்கு நான் எஸ்தரானதுதான் காரணம். என் கையைப் பிடிச்சு அழைச்சிட்டுப்போன பாதிரியின் கை, உண்மையில் கிறிஸ்துவின் கைதான் பார்வதி.”
“இதென்ன, நீ எந்தப் பக்கமும் நிக்கமாட்டன்றயே?” பேயத்தேவன் முடிப்பதற்குள், “சிநேகிதக்காரங்களுக்குள்ள நானும் வந்து கலந்துக்கலாமா?” என்று வாய்க்குள் சந்தமொன்றை முணுமுணுத்தபடி அந்தோணி வந்தான்.
“பிள்ளைவாள், வாங்கோ...”
“என் தோப்பனார் சவரிமுத்து நீ என்னைப் பிள்ளைவாள்னு கூப்பிடறத கேட்டா, ஒன்னு உன்னைக் கொல்லுவார். இல்லை, அவர் நாண்டுக்கிடுவார்.”
“அவ்ளோ ஆசாரமா அவரு?”
“ஆமாம். நா மூணாவது தலைமுறையாச்சே கிறிஸாத்துக்குப் போய். என் தாத்தா காலத்துலயே தின்னவேலி மாகாணத்துல இருந்த பிரச்சாரகர் ஒருத்தர் தேவனோட கிருபையைக் காட்டியிருக்கிறார். தாத்தா தீவிர கிறிஸ்தவராயிட்டார்.”
“கிருபைன்னா?”
“என்ன நாட்டாம, பெரிய தலைக்கட்டு நீ, கிருபைன்னா என்னான்னு கேக்குற?”
“எப்பா, என்னா கிருபைன்னு கேட்டேன்?”
“அதுவா... ஊரே இருபது, இருபத்தஞ்சு பிள்ளைன்னு பெத்துப் போட, எங்க தாத்தாவுக்கும் ஆத்தாளுக்கும் ஒத்தப் பிள்ள பொறக்கலையாம். கோயில் கொளம் ஒன்னு பாக்கியில்லையாம். ஒத்தப் பிள்ளைய பெத்துப்போடத் துப்பில்லன்னு என் தாத்தாவையும் ஆத்தாளையும் அய்யா தாத்தா திட்ட, முழக்கயிறு எடுத்துக்கிட்டு சாவடிக்குப் போனாராம் தாத்தா. உசுர விட்டுடணும்னு போன இடத்துல காவி அங்கி, பாதக்குறடு, குல்லா, வேஷ்டி, யோசவல்லவெட்டு (கழுத்தில் போடும் துண்டு) எல்லாம் போட்டு ஒரு கையில ஜெபமாலை, ஒரு கையில வேத புஸ்தகத்தோட இருந்த யேசு சபையோட பாதிரி ஒருத்தர் அங்க வந்தாராம். கைப்பிடிக்க முடியாதாம், அவ்ளோ பெரிய குடுமிபோட்டு, பாக்க நம்ம ஊருக சாமியார் மாதிரியே இருந்தாராம். கிறிசாத்துப் பாதிரியார்னு சொல்ல முடியாதாம். தாத்தாவோட நிலையைப் பார்த்து, ‘கடவுள் குழந்தையில்லாதவங்களுக்கும் குழந்தையில்லாமலேயே வயது போனவங்களுக்கும் குழந்தை பாக்கியம் கொடுத்த கதை’யெல்லாம் எடுத்துச் சொல்லி, எல்லாருக்கும் எல்லாமாக வேணும்னு வேதத்தை எடுத்துச் சொன்னாராம். தாத்தா குருமார்கூட சேர்ந்து சிக்ஷை எடுத்துக்கிட்டு, கிறிஸ்து சாமிய தெய்வமா ஏத்துக்கிட்டாராம். அப்புறம் ஆத்தாளுக்கும் அவருக்கும் 12 புள்ளைங்க பொறந்திருக்கு. என் அப்பா பன்னண்டாவது. என் அப்பாவுக்கு நான் பதினொன்னாவது... நல்லாருக்கா?” சொல்லிவிட்டு அந்தோணி சத்தமிட்டுச் சிரித்தான்.
“பெருமாள் கோயில்ல சொல்ற புராணம் மாதிரியே இருக்கு...”
“ஆனா எனக்கு எந்தச் சாமின்னாலும் ஏற்பு இல்ல. வேதபுஸ்தகம் குடுத்தாலும் படிக்க மாட்டேன். ஆனா என் ஆத்தாளைக் கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போவேன். அது மட்டும் புடிக்கும்.”
“ஆத்தா ஏசு சாமிய கும்புடாதா?”
“அதுக்கும் ஞானஸ்நானம் செஞ்சு பேர்கூட சவரியம்மான்னு மாத்துனாங்க. ஆனா அது வேதக்கோயிலுக்குப் போமாட்டேன்னு சொல்லிடுச்சு. மீனாட்சின்னாதான் உசுரு அதுக்கு. இல்லைன்னா எங்கூர்ல ஆத்தோரத்துல இருக்கிற அனுமார் கோயிலுக்குப் போவும்.”
தன் ஆத்தாளுக்கு மீனாட்சியென்றால் உயிர் என்று அந்தோணி சொல்லியதைக் கேட்டதும், எஸ்தர் ஆர்வமாய் அந்தோணியைப் பார்த்தாள். அவனும், “ஒன்ன மாதிரிதான்...” என்று எஸ்தரைப் பார்த்துச் சொன்னான்.
“ஜோடி சேர்ந்து கூத்தடிக்கிறீங்களா? ஆளாளுக்கு ஒரு எடத்தைப் புடிச்சிக்கிட்டு ரசாபாசம் பண்றீங்க?” மண்குன்றின் மேலேறி நின்று காடே அதிரும்படி கத்தினான் கங்காணி நமச்சிவாயம்.
நமச்சிவாயம் கம்பம் கூடலூர் பகுதிகளிலிருந்து கூலிக்கு வேலையாள்களை வெளியூர் வேலைக்கு அழைத்துச் சென்று வருவான். இருபது நாள், முப்பது நாள் அல்லது மாதக்கணக்கில் என்றாலும் நடக்க வைத்து, கூட்டிக்கொண்டுபோய் திரும்பக் கூட்டி வருவான். போகிற இடத்தில் ஒரு நாளுக்கு என்ன கூலி, எத்தனை நாள் வேலை செய்திருக்கிறார்கள் என எதுபற்றியும் வேலைக்கு வரும் ஆள்கள் கேட்கக் கூடாது. கேட்கவும் மாட்டார்கள். கேட்டால் கேட்கிற இடத்திலேயே கேட்ட ஆளைக் கையில் இருக்கும் கம்பு உடையும்வரை அடித்து நொறுக்கிவிட்டு, கால் ஓயும்வரை மிதித்துத் துவைத்துப் போட்டுவிட்டுக் கிளம்புவான். பேச்சுச் சத்தமே இருக்காது வழியில்.
மதுரையில் வைகை ஆற்றில் குறுக்குப் பாலம் கட்டும் வேலைக்கு, பாளையம், கம்பம், அல்லிநகரம் பகுதிகளிலிருந்து இருநூறு, முந்நூறு பேரை வேலைக்குக் கூட்டிப்போனது நமச்சிவாயம்தான். வெள்ளைக்கார துரைகளிடம் பேசுமளவிற்கு இவனுக்கு இங்கிலீஷ் தெரியும். இவனிடம் பேசுமளவிற்கு அவர்களுக்குத் தமிழ் தெரியும். எப்படித்தான் பேசுவார்கள் என்று சந்தேகம் வேண்டாம். அந்தந்த நேரத்தில் எந்த மொழியில் சாதுர்யமாக விஷயத்தைச் சொல்ல வருகிறதோ அதில் பேசிக்கொள்வார்கள்.
பெரியாறு அணை வேலைக்கு ஆளெடுக்கிறார்கள் என்று ஊர் ஊருக்குத் தமுக்கடிக்கும்போதும் நமச்சிவாயம் ஆர்வம் காட்டவில்லை. கலெக்ட்ரேட் குமாஸ்தாக்களும், ஓவர்சீயர்களும் டிஸ்ட்ரிக்ட் இன்ஜினீயரும் நேரடியாக இதில் தலையிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்ததால், தனக்கு அங்கு தோதுப்படாது என்று தயங்கினான். ஆனால் ‘கூலி அதிகமாச்சே? ஒரு தலைக்கு ஒரு நாளைக்கு ஓரணா கிடைச்சாக்கூட அம்பது பேர் கூட்டிப் போனால் ஒரே நாளுக்கு மூன்று ரூபாய்க்குமேல் கிடைக்குமே’ என்ற ஆசை நமச்சிவாயத்திற்கு நெருப்பாய்க் கனன்றது.

கனலும் நெருப்பைத் தூண்டிவிட்டதுபோல், ‘இரண்டாவது சீசனில், கூலிகளை யாராவது ஒரு மேஸ்திரியோ, கங்காணியோ கூட்டி வர வேண்டும். தனித்தனியாக வந்தால் யார் இன்னாரென்று தெரியாததுடன், ஓடிப்போனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கொத்தனாருடனும் கங்காணிகளுடனும் வருபவர்களை மட்டுமே மேல்மலைக்கு அனுப்புவோம்” என்று ரத்தினம் பிள்ளை சொல்லியிருந்தார். நமச்சிவாயத்திற்கு அடித்தது யோகம். எண்பது ஆள்களை ஒரே வாரத்தில் தோது செய்து மலைக்குக் கூட்டி வந்துவிட்டான். மேல்மலையில் ஆள்களைத் தக்க வைப்பதே பெரும்பாடு என்பதால் அரட்டல் மிரட்டல் இல்லாமல் வேலை வாங்கச் சொல்லி பென்னி பலமுறை சொல்லியிருந்தார். நமச்சிவாயம், பென்னி இங்கிலாந்து கிளம்பிய பிறகு வந்தவன். அவன் ஆள்களிடம் காட்டுக்கத்தல் போட்டுக் கொண்டிருந்தான்.
“யாருய்யா அது என்னையப் பாத்து அதிகாரம் பண்றது?” பேயத்தேவன் வேகமாக எழுந்தான்.
“அவன் வம்பு வழக்குக்கு அலையறவன். நீ போகாதே, உக்கார்” பார்வதி எழுந்து நின்று பேயத்தேவனை அமைதிப் படுத்தினாள்.
“அங்க மரத்த வெட்டிப் போட்டுக்கிட்டு இருக்காங்க. ஆளுக்கொரு குட்டிய கூட்டிக்கிட்டு மறைவா வந்துட்டீங்களா?”
“அசிங்கமா பேசுனா, பேசுன நாக்கு இருக்காது, பாக்குறியா?” என்று பேயத்தேவனும் அந்தோணியும் இடுப்பில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு கங்காணியை நோக்கி ஓடினார்கள். எஸ்தரும் பார்வதியும் பயத்தில் அலறியடித்துக்கொண்டு பின்னால் ஓடிவந்தார்கள்.
“நீ யாருடா எங்கள கேள்வி கேக்க வந்துட்ட?” என்று பேயத்தேவன் பாய்ந்தான். உயரமான பாறைக் குன்றின்மேல் நின்றிருந்த நமச்சிவாயத்தின்மேல் அடிவிழும் முன், அவன் கீழே உருண்டான். பாறையின் பின்னாலிருந்து முங்கிலித் தேவன் நீண்ட கம்பை ஊன்றிப் பாறையின் மேலேறினான்.
“அரிவாள உள்ள வை அப்பு. இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் நீ ஏன் பதறுற?” என்ற முங்கிலித் தேவனை, உருண்டு சென்ற நமச்சிவாயம் நிமிர்ந்து பார்த்தான். கருப்பசாமி போல் விண்ணுக்கும் மண்ணுக்கும் விசுவரூபமாய் நின்றார் முங்கிலி.
“நாங்க என்ன உன் கூலிங்களா? இனிமே எங்க நாட்டாம கண்ணுலயே நீ தெம்படக் கூடாது. தெம்பட்டா உன் வயித்துக்குள்ள குடலு இருக்காது...” கம்பை உயர்த்திய முங்கிலியைப் பார்த்து பயந்த நமச்சிவாயம், வேட்டியில் ஒட்டியிருந்த சகதியைப் பொருட்படுத்தாது, தவழ்ந்து, ஐந்தாறு அடி தூரம்போய், பிறகு எழுந்து ஓடினான்.
நமச்சிவாயம் ஓடுவதைப் பார்த்த பிறகுதான் எஸ்தருக்கும் பார்வதிக்கும் மூச்சு சீரானது. ஆனாலும் வீட்டுக்குள் கருநாகம் புகுந்துவிட்டதுபோல் பார்வதிக்குள் பயம் எழுந்தது.
வலக்கரையோரம் இருக்கும் பாறைகள் உயரம் கூடி, உடைப்பதற்குக் கடினமாக இருந்தன. பாறைகளை உடைப்பதற்காக மதுரையிலிருந்து ஒட்டர்களை வரவைத்திருந்தார்கள். கல்லுடைப்பதில் தேர்ந்தவர்களான அவர்கள் வந்தவுடன் வேலை சுறுசுறுப்பானது. கூர்மையான சின்னஞ்சிறு உளிகளும், உளிகளின்மேல் விசை செலுத்தக்கூடிய கோடரிகளுமாகப் பாறைகளை அனாயாசமாக உடைத்துப் போட்டார்கள் ஒட்டர்கள்.
நாயக்கர்களின் காலம்தொட்டு கோட்டை, கொத்தளங்கள் கட்டுவதற்காக ஒட்டர் தேசம் என்றழைக்கப்படும் கலிங்க தேசத்திலிருந்து மதுரையில் பேரளவில் குடியேறிய ஒட்டர்கள் உடல் உழைப்புக்கு அஞ்சாதவர்கள். ஒட்டர்கள் நூறு பேர் எண்ணிக்கையில் ஒரு கங்காணி அழைத்து வந்திருந்தான். ஒட்டர்கள் எங்கு வேலைக்கு வந்தாலும் குடும்பத்துடன்தான் வருவார்கள். மதுரையின் கரிசல் மண்ணின் நிறத்துக்கு அந்நியமாய் செக்கச் சிவந்த நிறத்துப் பேரழகிகள் அப்பெண்கள். வெயில் பார்த்துப் பதறியோடிப் போய் பதுங்கிக்கொள்ளும் ஐரோப்பியப் பெண்களுக்கு மத்தியில், வெயிலில் காயக் காய, தாமரையைப்போல் சிவந்த நிறம் கொள்வார்கள், வெயில் பூக்கள்போல்.
நதிக்கரையோரம் இருக்கும் பாறைகளின்மேல் வண்டல் நிறைய இருப்பதில்லை. பருவங்களில் வரும் அதிக வெள்ளத்தில் மணல் அடித்துச் செல்லப்படும். மேலே உள்ள பொரும்புகளையும் வலுவற்ற மேற்பாறைகளையும் உடைத்தெடுப்பதுதான் கடினமான வேலை. நதி செல்லும் இருநூறு அடி அகலத்தையும் சேர்த்து, ஏறக்குறைய 1,300 அடி நீளத்திற்காவது, பாறைப் பொரும்புகளையும் மென்பாறைகளையும் அகற்ற வேண்டும். வெறுமனே உடைத்தெடுக்க வேண்டுமென்றால் நாட்டு வெடி வைத்து, பாறைகள் எப்படிச் சிதறினாலும் பரவாயில்லையென்று வேகமாக உடைத்துப் போட்டுவிடுவார்கள். கொஞ்சம் உறுதியான பாறைகளை ஓரளவுக்கு ஒழுங்கான வடிவத்தில் உடைத்தெடுக்க வேண்டும். கட்டுமானப் பணிகளுக்குத் தனியாகக் கற்களை மலைமேலே கொண்டுவர முடியாது. மணலும் கல்லும் இங்கிருப்பவைதான் என்று மெக்கன்சி சொல்லியிருந்தார். மரங்களின் கிளைகளைக் கழித்துவிட்டு, பெரிய பெரிய உத்திரங்களாகச் சேமிப்பதுபோல், அளவான கற்களையெடுத்து ஆங்காங்கு குமித்து வைக்க வேண்டும். அதனால் பெரிய வெடிகளை வைக்காமல், பாறைகளில் விரிசல் வரும் அளவிற்குக் கொஞ்சமாக மருந்து வைத்துவிட்டு, வெடித்த பிறகு உளியினால் ஓரளவுக்குச் சம அளவிலான கற்களாக உடைத்தெடுத்தார்கள்.
பாறைகளை அப்புறப்படுத்துவதை, கரிசக்காட்டில் மல்லிகைப்பூ கொய்வதுபோல் ரசனையோடு செய்தார்கள் ஒட்டர்கள்.
விரிந்த தலையுடன் நிற்கும் நாகத்தின் படம்போல் உள்ளடங்கியிருந்த பாறையின் முடவொன்றில் அடைக்கலமாகியிருந்தார் மொக்கை மாயன். ‘வெடி வைக்கப் போகிறோம் சிய்யான், கொஞ்சம் தள்ளியிருந்துக்கங்க’ என்று கங்காணி எச்சரித்ததில் முடிந்து வைத்திருந்த சுருட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு மறைவிடமாக இந்தப் பாறைமுடவில் வந்து உட்கார்ந்தார். சுருட்டு வாசனை வந்தாலே எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினீயர் டெய்லர் வந்துவிடுவார். அவருக்கும் பங்கு கொடுக்க வேண்டுமே என்று இப்போதெல்லாம் பயமில்லை. ரத்தினம் பிள்ளையைப் பிடித்து, எப்படியோ துறையூர்ச் சுருட்டை வரவைத்து விடுகிறார். எங்காவது பாறையின் பின்னாலிருந்தோ, குன்றின் மேலிருந்தோ, மரத்துக்குப் பின்புறமிருந்தோ நூல்போல் புகை போகிறது என்றால் சந்தேகமில்லாமல் டெய்லர் அங்கு சுருட்டுப் புகைத்துக்கொண்டிருப்பார். அவர் வாங்கி வைத்திருக்கும் சுருட்டில் ஒன்றிரண்டு மாயனுக்கும் கொடுப்பார்.
பாறைமுடவில் உட்கார்ந்த மாயன் வானம் கறுத்து, மழை இறங்குவதைப் பார்த்தார்.
இருட்டுகிறதே என்று ஆள்கள் சுதாரிப்பதற்குள் நிமிஷத்தில் வந்து கொட்டித் தீர்க்கும். மரத்தை வெட்டுபவன், மழை வருகிறதே என்று வெட்டிக்கொண்டிருக்கும் கிளையைக் கீழே இழுப்பதற்குள், வெள்ளம் அவனின் கணுக்காலை நனைத்துப்போகும். மழைதான் அடித்துப்பெய்கிறதே என்று குடிசைக்குள் சென்று முடங்கிப் படுத்தால், இவ்வளவு நேரம் அடித்துப் பெய்த வானமா என்று கேட்பதுபோல் வெயில் பளீரிடும். காட்டின் முகம் இதுதான்.
இரண்டு மணிக்கே கறுத்த வானம் பேய்மழை பெய்தது. காட்டிற்கு வந்த பிறகுதான் மழைத்தாரைகள் இரும்புக் கம்பிகளைப்போல் உறுதியாகத் தரையிறங்குவதைப் பார்க்கிறார். மழைத் தூறலென்றால் நூல் மாதிரி இருக்குமென்பது அவர் அனுபவம். திருவிழாத் தேர் இழுக்கும் வடம்போல் பருத்த மழைத்தாரைகளை மேல்மலையில்தான் பார்க்கிறார்.
பாறைகளை உடைத்துக் கொண்டிருந்த வர்களும் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தவர்களும் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தார்கள். சொத் சொத்தென்று மழைநீர் பூமியில் விழுந்துகொண்டிருந்தது. நூறு நூறு கருமேகங்களின் ஆழிநீரைக் குடித்தாலும் தாகமடங்கா காட்டுப்புற்கள், வானம் பார்த்தே தாகித்து நின்றன. மூழ்கடிக்கும் வெள்ளம் சென்றாலும், மூச்சுத் திணறாத புற்களுடனான சரசத்திற்காகவே கருக்கொள்கின்றனவோ மேகங்கள் என்பதுபோல் எந்நேரமும் அழைப்பு விடுத்தன.
மலைமேல் குறிப்பிட்ட வேலை நேரம் கிடையாது. மழையின்றி வானம் தெளிவாக இருந்தால் உடனே வேலையைத் தொடங்க வேண்டும். மழை பெய்தாலோ, பெரிய காற்றடித்தாலோ இருக்கும் இடத்திலேயே பத்திரமாக இருந்துகொள்ள வேண்டும். வேலையாள்கள் யாரும் தனியாக எங்கும் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு மட்டுமே.
மழை ஓய்வதற்காக ஆங்காங்கே ஒதுங்கிக்கொண்டார்கள். சின்னக் காற்றுக்கூட இல்லாமல் மழை கொட்டியது. செம்மண் நிறத்தில் மழை வெள்ளம் புரண்டது. வெட்டிய மரத்திலிருந்து கழித்துப்போட்டிருந்த கிளைகளும் மரத்துண்டுகளும் வெள்ளத்தில் மிதந்து சென்றன.
நதியின் இடக்கரையோரம் வேலை செய்துகொண்டிருந்த மாயனுக்கு, குடிக்கவும் நீரின்றித் தவித்த நாள்கள் நினைவுக்கு வந்தன. பச்சைக் குழந்தையாக இருந்த பேயத்தேவனைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராய் நடந்து கடந்த ராத்திரிகள் சிவப்பு வண்ணத்தில் மனசுக்குள் தோன்றி, இந்தக் கணமும் அச்சமூட்டின. ஊரே செம்புழுதியில் போர்த்தி வைக்கப்பட்டிருந்ததால், அந்த நாள்களை எப்போது நினைத்தாலும் செஞ்சிவப்பாய்த்தான் காட்சிகள் கண்ணுக்குள் ஓடுகின்றன.
‘ஒறவு, பங்காளிக, மாமன் மச்சானுகன்னு ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்த ஒறவுகளவிட்டு என் அப்பன், ஆத்தா மண்ணாப்போன ஊர விட்டு இந்தத் தண்ணிதானே என்னையும் எம்புள்ளையையும் வெளியேத்திவிட்டுச்சி? என் ஊருக்கு என்ன பொருத்தமான பேரு. மானூத்து. தேங்காய்த் தண்ணி மாதிரி தண்ணி தெளிவா இனிப்பா இருக்கும்னு அய்யாவும் அப்பாவும் சொல்லுவாங்க. என்ன காலக்கெடுதியோ? ஊத்தும் வத்திப்போச்சு. மழையும் பிடிவாதமா மூணு வருஷம் தலைகாட்டுவனான்னு இருந்துக்கிடுச்சி. ஒவ்வொருத்தரும் கிழிஞ்ச பாயும் ஒடைஞ்ச சோத்துப்பானையுமா ஊர் ஊருக்குக் கிளம்பிப் போனாங்க. ராஜா மாதிரி ஊருக்கே சோறு போடுற சம்சாரி, ஒருபோகம் வெளையலைன்னாலே, அவனே கஞ்சிக்கில்லாம கெடப்பான். தொடர்ச்சியா மூணு வருஷம் வெளையலைன்னா? ஊர் எந்தச் சம்சாரியையும் கூப்பிட்டு வச்சி கஞ்சி ஊத்தாது.’
மாயனுக்குக் கண்ணீர் தாடையில் வழிந்தோடியது.
`மண்டபத்துல போய், சிலோனுக்கும் பர்மாவுக்கும் போக எத்தினி நாள் எத்தனை வசவுகள வாங்கிக்கிட்டு காத்துக்கிடந்தது ஜனங்க. கப்பல்ல ஏறிட்டாப் போதும், போய் எறங்குறப்ப கோடீஸ்வரனாயிடலாம்னு குருட்டாம்போக்குல நெனச்சிக்கிட்டு, வெள்ளக்கார சிப்பாய்ங்ககிட்ட என்னா அடி உதை வாங்கிக்கிடுச்சிங்க? கள்ள நாட்டுமேல வெள்ளக்கார தொரைங்களே வெறியாத்தான் இருந்தாங்க. கள்ளனப் பாத்தாலே ருசுவாக்காத ஒரு குத்தத்தைச் சொல்லி, அடி உதைதான். கூழு, கஞ்சி இல்லைன்னாலும் மானம் மருவாதைக்குக் கொறைவு வந்துடக்கூடாதுன்னு மீசையை முறுக்கிட்டுத் திரியுற பயலுக இந்த வெத்துப் பயலுக. தோணித் துறையிலும் கண்டமேனிக்கு அடிவாங்கி முதுகு வீங்கிப்போனவக, இந்தப் பாழாப்போன கள்ளனுங்கதான். சூதுவாது தெரியாத முரட்டுப் பயலுக...’
முங்கிலித் தேவனை நினைத்தார். திருட்டுத் தோணி ஏறி, கடல் கடந்த தேசம் போய் பொழைச்சிக்கலாம்னு போனவன், வெறுங்கையோட வந்த கதையை என்னத்தச் சொல்ல?
`நான் ஒத்தப் பிள்ளையைப் பெத்து வச்சிருக்கப்போ, அவென் அஞ்சு பிள்ளையைப் பெத்து வச்சிருந்தான். ஒவ்வொன்னும் முரட்டுக் காளைக மாதிரி கொழுக்கு மழுக்குன்னு இருந்துச்சிங்க. எவென் கண்ணுபட்டுதோ, கள்ளத்தோணில குடும்பத்தையே கூட்டிக்கிட்டு பர்மாவுக்குப் போனவன், ஒத்தையில திரும்பி வந்தான். பொண்டாட்டி பிள்ளைக எல்லாம் தோணில போம்போதே வயித்தால போயி சுருண்டு போயிடுச்சுங்க. தோணியில இருந்த தொர, காலரா சீக்கு வந்திருச்சு, ஒருத்தரையும் விடாதே, தூக்கிக் கடல்ல வீசுங்கன்னு சிப்பாய்ங்களுக்கு உத்தரவு போட்டானாம். கல்நெஞ்சக்காரன். உசுரு போனது கொஞ்சம் ஜனம்னா, உசுர கையில பிடிச்சு வச்சிருந்தது பேர் பாதிக்கு மேலயாம். முங்கிலியோட மூத்ததும், மூத்ததுக்கு இளையதும், அவென் பொஞ்சாதியும் வயித்தப் பிடிச்சிக்கிட்டு சுருண்டு கெடந்திருக்காங்க. செத்தவங்கள கடல்ல வீசிக்கிட்டு வந்த சிப்பாய்க, உசுரோட இருந்த இவங்களையும் தூக்கிக் கடல்ல வீச வந்திருக்காங்க. முங்கிலி சிப்பாய்களோட காலப் பிடிச்சிக்கிட்டுக் கதறியிருக்கான். மூணு சிப்பாய்ங்க ஒன்னு சேர்ந்து முங்கிலியத் தூக்கிக் கடல்ல வீசியிருக்காங்க. மலை மாதிரி இருந்த அவன அசைக்கிறதுன்னா சும்மாவா? பயபுள்ள இப்ப துரும்பா எளச்சிட்டான். அவனத் தூக்கிப் போட்டுட்டு, புள்ளைகளையும் பொஞ்சாதியையும் தூக்கி வீசியிருக்காங்க. மவனுக்குக் கொல நடுங்கிப்போச்சாம். ஐயோ ஐயோன்னு ஒரு புள்ளையப் புடிக்க நீந்துனா இன்னொரு புள்ளை முங்கிட்டு எப்பா எப்பான்னு கத்துனானாம். அவனைத் தூக்க நீந்துனா பொஞ்சாதியோ என்ன விட்டுடுங்க, புள்ளைங்கள காப்பாத்துங்கன்னு அவ கத்த, மூணு பேர்கிட்டயும் போக முடியாம மாறி மாறி நீந்துனானாம். சின்னப் புள்ளைய அப்ப வந்த ஒரு அலை ஒரு கவளம் மாதிரி சுருட்டி வாயில போட்டவுடனே, மூத்தவன் அலறியிருக்கான். பெத்தவ பித்துப் புடிச்சி, நீந்துறத விட்டுட்டா. அவளையும் பேரலை ஒன்னு உள்ள இழுத்துக்கிடுச்சாம். மிஞ்சின மூத்தவன ஒத்தக் கையில புடிச்சிக்கிட்டு, மயங்கினவன இரக்கம் காட்டிய அலை ஒன்னு ஒரு கரையில கொண்டு போட்டிருக்கு. முழிச்சிப் பாத்தவன் கையில புள்ள இல்லாம, மூளையும் தெளியாம அங்க இங்கன்னு பித்துப் பிடிச்சு அலைஞ்சிருக்கான். ஒரு வருஷத்துக்கிட்ட சுத்திக்கிட்டு இருந்தவன, ஊர் செட்டிமாரு ஒருத்தரு பார்த்துட்டுத்தான் கூடலூருக்குக் கூட்டியாந்து விட்டாரு. எத்தனை வீட்டை வெறும் மண்செவராக்கிடுச்சி இந்தத் தண்ணீ?
நெனைச்சா கொட்டு கொட்டுன்னு கொட்டுற தண்ணீ, அங்க வா வான்னு வருந்திக் கூப்ட்டாலும் வரலையே? ஊருக ஒவ்வொன்னும் இத்தன தினுசா இருக்கா? மாயனுக்குத் தனியா உட்கார்ந்துவிட்டாலே யோசனை மானூத்துக்கு ஓடிப்போயிரும். இருபது வருசமாச்சு, ஊரவிட்டு வந்து. ஆனா ஊருன்னு நெனச்சா இன்னும் மானூத்துத்தானே நெனப்புல இருக்கு? வீடுன்னா அப்பன் ஆத்தா பொண்டாட்டிகூட இருந்த அந்தக் குடிசைதான் கண்முன்னாடி நிக்குது. மக்க மனுசாள்னு நெனச்சா, அந்த ஊர்ல இருக்க பத்துத் தலைக்கட்டுத்தானே நெனப்புல நிக்குது?’
மொக்கை மாயன் மழையை அச்சத்துடன் பார்த்தார். `ஒரு மனுஷ ஜென்மத்துக்கு என்ன வேணும், எந்த மண்ணுல தொப்புள் கொடிய அறுத்துக்கிட்டு விழுந்துச்சோ, அதே மண்ணுல மக்கணும்ன்றதுதானே ஒரே கனவா இருக்கும்? எனக்கோ, முங்கிலிக்கோ நடக்காமப் போயிடுச்சி.’ செம்பழுப்பு நிறத்தில் பாய்ந்தோடிய பேரியாற்றின் வெள்ளத்தில் மாயனின் கண்ணீரும் துக்கத்தின் கரிப்புடன் கலந்தோடியது.
மழை யாரோ அதட்டியதுபோல் சட்டென்று நின்றது. வடகயிற்றுத் தடிமனுக்குக் கொட்டித் தீர்த்த மழை நீரின் வெள்ளமும் மலைப்பாம்புகளைப்போல் எங்கோ ஓடி மறைந்தன. விட்ட வேலைகளைத் தொடர்ந்தார்கள் வேலையாள்கள்.
மாயன் புகைத்துக்கொண்டிருந்த சுருட்டு தீர்ந்திருந்தது. அடுத்தச் சுருட்டு எப்போது கிடைக்குமோ என்ற ஏக்கத்துடன் எழுந்து நின்றார். முட்டி மடக்கி உட்கார்ந்திருந்ததில் கால்கள் சட்டென்று இயல்புக்கு வரவில்லை. ``கழுத வயசாயிடுச்சே, பொறவு இழுத்துக்காதா?’’ என்று முணுமுணுத்தபடி, கை கால்களை உதறினார். இடுப்பிலிருந்து நழுவிய வேஷ்டியைச் சரிசெய்துகொண்டு வேலை நடக்குமிடம் நோக்கி நடக்கத் தொடங்கினார்.
மொக்கை மாயன் நடந்து வருவதைப் பார்த்த பெண் ஒருத்தி, ‘வர வேண்டாம்’ என்பதுபோல் கையசைத்தாள். தன் பின்னால் வரும் யாருக்கோ சைகை காட்டுகிறாளோ என்று மாயன் திரும்பிப் பார்த்தார்.
பின்னால் யாருமில்லையென்றவுடன் என்ன சொல்ல வருகிறாள் என்று மீண்டும் கவனிக்கத் திரும்பியவருக்குக் காதைச் செவிடாக்கும் சத்தம் கேட்டது. முதலில் புகை எழும்ப, பின் பாறைச் சில்லுகள் வெடித்துச் சிதறின. மாயன் தன் கண்முன்னால் உடைக்கப்பட்ட பெரும் பாறையின் சில்லுகள் மேலெழுந்து செல்வதைப் பார்த்தார்.
தூரத்தில் பெருங்கூச்சல் போட்டார்கள். மாயனுக்கு அவர்களின் சத்தம் கேட்கவில்லை.
- பாயும்