மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 70 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...
பிரீமியம் ஸ்டோரி
News
பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

சிவகங்கை பதிலளிக்கவில்லை. அப்போதுதான் சிவகங்கை சமஸ்தானம் ஊமைத்துரைக்கு அடைக்கலமும் ஆதரவும் கொடுத்ததன்மூலம் கம்பெனியின் பகையைச் சம்பாதித்திருந்தது

தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த இடுப்புயர மரப்பெட்டியைப் பிரித்துப் பார்த்தார் கந்தவேல் முதலியார். பெரியகுளம் தாலுகாவின் தாவாக்கள் என மதுரா டிஸ்ட்ரிக்ட் இன்ஜினீயர் சொல்லியிருந்தாலும், அதில் மதுரா டிஸ்ட்ரிக்ட் முழுவதுமிருந்து வந்திருந்த ரயத்துகளின் பெட்டிஷன்கள் இருந்தன. பெட்டியின் அடியில் அழகான நீலநிற வெல்வெட் துணியில் முடிந்து வைக்கப்பட்டிருந்த ஒரு தபால் கட்டு, பார்த்ததும் ஈர்த்தது. ஈர்ப்பின் ஊடாகவே அடிவயிற்றுக்குள் அச்சமும் பரவியது. பெரிய இடத்துத் தாவாவாகத்தான் இருக்குமென்ற யூகம் அவருக்குள் எழுந்ததுதான் காரணம். முன்பு வந்த தலைச்சுற்றல் சாதாரண தேனீக்கொட்டு, இப்போது வருகிற நடுக்கம் மலைப்பாம்பின் தீண்டல் என்று அவர் மனம் தளர்ந்தது.

நீரதிகாரம் - 70 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

வெல்வெட் துணிக் கட்டை எடுத்து, அதன் மேலிருந்த சமஸ்தானத்தின் முத்திரையைப் பார்த்தார். உடம்பு சரியாகத்தான் வினையாற்றியிருக்கிறது என்றுணர்ந்தார். துணி உறையின்மீது ராமநாதபுரம் சமஸ்தானத்தின் முத்திரையிருந்தது. தன் உத்தியோகம் பறிபோவதற்கான சகல காரணிகளும் உருத்திரண்டு அந்தத் தபாலுக்குள் இருப்பதாக எண்ணிய கந்தவேல் மயங்கி விழுந்தார். கூட்டம் கலாபக்களமாக அல்லோகலப்பட்டது. உடன் இருந்தவர்கள் தண்ணீரடித்தவுடன் கண்விழித்த கந்தவேல், குமாஸ்தா முத்துவீரனிடம் சம்சாரிகளைக் கலைந்துபோகச் சொல்லச் சொன்னார். தன்னைக் கைத்தாங்கலாக வீட்டிற்குக் கொண்டுபோய் விடுமாறு கிராம முன்சீப்பிடம் சொன்னார். அவன், அங்கிருந்த லஸ்கரையும் நீர்க்கட்டியையும் அழைத்தான். ஆஜானுபாகுவான கந்தவேல் முதலியார், காற்று வெளியேறிய துருத்திபோல் துவண்டிருந்தார். தன்னுடைய துருத்திக்கு இனி இரண்டு ஊதுகுழல்கள்தான் என்ற உண்மை அவரைச் செயலிழக்கச் செய்தது.

சமஸ்தானத்தின் முத்திரை தாங்கியிருந்த தபால்கள் காலத்தின் விசித்திரம். இலக்கு பிறழ்ந்த ஆயுதங்கள். திசை குழம்பிய பயணம். பேரியாறு எனும் வனதேவதையை வரவேற்கத் தவறிய இருண்மை. தவித்த வாய்க்கு வாய்த்த அமிழ்தத்தை மண்ணில் கொட்டிக் கவிழ்த்த அறியாமை.

நூறாண்டுகளுக்குமுன், காற்றின் ஈரத்திலேயே விளையக்கூடிய கம்பு சோளமெல்லாம்கூட வெள்ளாமையற்று, பசும்புல்லின் நுனி காணமுடியாத வறட்சி சேது நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருந்தபோது, மேல்மலையில் உள்ள ஜீவநதிகளைத் தேடிக் கண்டடைய வீரர்களை அனுப்பியவர் சேது சமஸ்தானத்தின் பிரதானி முத்திருளப்ப பிள்ளை. மேல்மலை முழுக்க நீரோடையும் அருவிகளும் சிற்றோடைகளும் காட்டாறுகளும் இருந்ததைப் பார்த்து வந்து சொன்ன வீரர்களை, அத்தனை நதிகளில் வற்றாத நதியெது என்று கண்டறிந்து வர மீண்டும் அனுப்பினார். நதி பார்த்து வரச்சென்றவர்களுக்கு, சிற்றோடைகளெல்லாம் திரண்டு வருவதும் நதியாகப்பட்டது. காட்டாறும் நதியாகப்பட்டது. ஆறேழு நதிகள் மேல்மலையில் ஜீவநதியாக இருக்கின்றன, ஒன்றிரண்டைக் கிழக்குத் திசைக்குத் திருப்பி, வைகையுடன் சேர்த்துவிட்டால் போதும், புல்லின் பசுமை காணமுடியாத சேது தேசம், காவிரிக் கரையின் செழிப்பில் இருக்கும் தஞ்சை பூமியைப் போலாகும் என்று உபாயம் சொன்னார்கள். ஆறேழு நதிகளா என்று வியந்த பிள்ளை, தானே தன் சேனைகளுடன் கிளம்பி மேல்மலைக்குச் சென்றார். பேரியாறு, பெரிய முல்லையாறு, சின்ன முல்லையாறு, ராஜாகுளம் ஆறு என மலையின் பூர்வகுடிகள் நதிகளறிந்து சொல்லியதில், ஆறேழு நதிகளில் பேரியாறுதான் மேல்மலையின் ராணியாறு என்றறிந்து முத்திருளப்ப பிள்ளை, சேது தேசத்தின் அரசர் முத்துராமலிங்க சேதுபதியிடம் விவரம் சொன்னார்.

சேதுபதியோ சிறைச்சாலைக்கும் அரண்மனையின் அரியணைப் பூசல்களுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தார். நவாபுகளும் பிரிட்டிஷாரும் தேசத்தின் சமஸ்தானங்களைச் சுரண்டுவதில் கூட்டுச் சேர்வதும், பங்கு பிரிப்பதில் சண்டை செய்வதுமாக இரட்டை நிலையில் இருந்த காலமது. புல்லின் பசுமை காண்பதைவிட, புல் முளைக்கும் பூமி தம் வசம் தங்குமா என்ற கவலையுடன் காலம் கடத்தியதில், தேசத்தின் வறட்சியைப் போக்குவதில் கவனம் குவியவில்லை. பிரதானி பேரியாற்றை சேது நாட்டுக்கு அழைத்துவரும் யோசனையைக் கிடப்பில் போட்டார்.

நீரதிகாரம் - 70 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

ஆற்காடு நவாபுகளுடனான கூட்டில் வரிவசூல் செய்வதற்காகவே 1790கள் முதல் பேஷ்குஷ் கலெக்டர்களை நியமித்துக்கொண்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, கட்டபொம்மனைத் தூக்கில் போட்ட கையுடன் தென்தமிழகம் முழுமைக்கும் கலெக்டர்களை நியமித்து, தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டது. திருநெல்வேலிக்கும் ராமநாதபுரத்துக்கும் பேஷ்குஷ் கலெக்டராக இருந்த லூஷிங்டன், முத்துராமலிங்க சேதுபதி சிறையில் இருந்ததால், ராமநாதபுரத்தின் ராணியாகிருந்த மங்களேஸ்வரி நாச்சியாருக்கும் சிவகங்கை ஜமீன்தாருக்கும் ஒரு தாக்கீது அனுப்பினார். உங்களின் பிரதானி பத்தாண்டுகளாய் ராமநாதபுரத்தின் வறட்சியைப் போக்க மேல்மலையிலிருந்து பேரியாறு நதியை வைகையில் சேர்க்க வேண்டுமென்று முயன்றிருக்கிறார். எங்களின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். இந்த யோசனையைக் கம்பெனி ஆராய விரும்புகிறது. உண்மையில் பேரியாறு நதியின் பிறப்பிடம் எது, அந்த நதி எவ்வளவு தூரம் போகிறது, எங்கிருந்து பேரியாறு நதியைத் திருப்பினால் வைகையுடன் இணைத்து ராமநாதபுரம் சிவகங்கை சமஸ்தானங்களுக்குக் கொண்டுவர முடியும் என்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முத்திருளப்ப பிள்ளை சொல்லியிருந்தாலும் இதன் சாத்தியம் குறித்து கம்பெனியின் இன்ஜினீயர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பிறகுதான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். ஆய்வுக்கு ஆகும் செலவினை மூன்றாக்கி, கம்பெனியுடன் சிவகங்கை, ராமநாதபுரம் ஜமீன்தாரிகள் ஏற்க வேண்டுமென்று தாக்கீது அனுப்பினார்.

சிவகங்கை பதிலளிக்கவில்லை. அப்போதுதான் சிவகங்கை சமஸ்தானம் ஊமைத்துரைக்கு அடைக்கலமும் ஆதரவும் கொடுத்ததன்மூலம் கம்பெனியின் பகையைச் சம்பாதித்திருந்தது. எந்த நேரமும் கம்பெனியின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததில் சிவகங்கை, போருக்கான வியூகங்களில் கவனம் குவித்திருந்தது. சிவகங்கையின் அரியணைக்குக் குறிவைத்துக் கொண்டிருந்த தாயாதிப் பகையையும் கையாள வேண்டிய நெருக்கடி.

ராமநாதபுரத்தின் ராணி மங்களேஸ்வரி நாச்சியார், கம்பெனிக்குச் செலுத்த வேண்டிய கிஸ்தியே மூன்று வருஷமாய்ச் செலுத்தப்படாமல் இருக்கிற நிலையில் இவ்வளவு பெரிய தொகையைச் சமஸ்தானத்தால் ஏற்க முடியாதென்று தம் சூழலை விளக்கிப் பதில் அனுப்பிவிட்டார். லூஷிங்டன் அப்படியும் ஓய்ந்துவிடவில்லை. கம்பெனியிடம் பலமுறை கேட்டு, ஆய்வு செய்வதற்குத் தகுதியான ஒரு இன்ஜினீயரை நியமிக்கச் செய்து, ஆய்வு செய்து பேரியாற்றின் ஜன்மஸ்தலம் சிவகிரி என்று ஊர்ஜிதப்படுத்தினார்.

பேரியாறு உற்பத்தியாகுமிடம் தங்களின் டிஸ்ட்ரிக்ட் எல்லைக்குள்தான் இருக்கிறது என்றவுடன் மீண்டும் ராணிக்குக் கடிதம் எழுதினார். நதியைக் கிழக்கு நோக்கித் திருப்பிவிட, வண்ணாத்திப் பாறையருகே உள்ள பெரிய பாறையொன்றை உடைத்தால் போதும், நதி திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குச் செல்லாமல் நம் எல்லைக்குள் வந்துவிடும், இதற்காக 800 ஸ்டார் பகோடா மட்டுமே செலவாகும், சமஸ்தானம் இதன்மூலம் அடையப்போகும் பலன் அதிகமாக இருக்கும். இன்றைய வறண்ட ராமநாதபுரம், தஞ்சையைப் போல் வளமான தேசமாகும். எதிர்காலத் தலைமுறைக்கு நீங்கள் செய்யும் நற்காரியமாகும் என்றெழுதினார். மங்களேஸ்வரி நாச்சியாருக்கோ தன் அரியணைக்குக் குறிவைத்து நடந்த கலகங்களே கவனத்தை எடுத்துக்கொண்டன.

ராமநாதபுரம் சமஸ்தானத்தைத் தனி ஜமீன்தாரியாக்கி, திருநெல்வேலியைத் தனி மாவட்டமாக்கிய பிறகு பேரியாற்றை வைகைக்குக் கொண்டுவரும் முயற்சியை மதுரா கலெக்டர்கள் கையில் எடுத்தார்கள். மதுரையின் முதல் கலெக்டர் ஜார்ஜ் பாரீஷ் முதல், மதுரை பாண்டி என்று மதுரை மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ரௌஸ் பீட்டர் வரை பல கலெக்டர்கள் வைகையில் பேரியாற்றுத் தண்ணீரைச் சேர்த்து ராமநாதபுரத்திற்குக் கொண்டு செல்ல முயன்றார்கள்.

வைகையுடன் பேரியாற்றைச் சேர்த்து, ராமநாதபுரத்திற்குக் கொண்டு சென்றால், வைகையின் ஆயக்கட்டுக்காரர்களிடம்தான் நிலவரி வாங்க முடியும். ஒரு போகம் விளைவிக்க வைகைத் தண்ணீரைப் பயன்படுத்தும் சம்சாரிகளிடம், இன்னொரு போகமும் விளைவிக்கச் சொல்லி, அதற்கு மட்டும் கூடுதலாக நிலவரி வசூலிக்க வேண்டும். எத்தனை ரயத்துகள் இரண்டாவது போகத்தை நம்பி, வரி செலுத்த சம்மதிப்பார்கள் என்று சந்தேகித்தனர் பின்வந்த கலெக்டர்கள். வைகையைப் பயன்படுத்துவோம், ஆனால் வைகையின் ஆயக்கட்டுக்காரர்களுக்குப் பேரியாற்றுத் தண்ணீர் தர வேண்டியதில்லை, ஆற்றுப்பாசனமே இல்லாத மேலூருக்குப் பேரியாற்றைக் கொண்டு சென்றால் பேரியாறு ஆயக்கட்டொன்று உருவாகும், நிலவரியும் புதிதாக, கூடுதலாகவும் வசூலிக்க முடியுமென்ற எண்ணத்தில், பேரியாறு மேலூருக்கென்று தீர்மானிக்கப்பட்டது. தேக்கடியில் இருந்து சுரங்கம் வழியாகக் கொண்டுவர இருக்கிற பேரியாற்றுத் தண்ணீர் கூடலூரில் இருந்து ஏற்கெனவே உள்ள வைரவனாறு, சுருளியாறு, வைகையுடன் சேர்ந்து பேரணைக்கு வரும். பேரணையில் இருந்து வடகரைக் கால்வாய் வழியாக வைகை, சிவகங்கை ராமநாதபுரத்திற்குச் செல்லும். பேரணையில் இருக்கும் அணையில் புதிதாக ஒரு ரெகுலேட்டர் வைத்து, பேரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் மேலூருக்குச் செல்லும். இதுதான் ராயல் இன்ஜினீயர் ஜான் பென்னியின் திட்டம்.

பேரணை வரை பாரம்பரியமாய் வைகையின் நீரைப் பயன்படுத்துபவர்களில் பலர், பேரியாற்றுத் தண்ணீர் தங்களின் சுயாதீனமான ஈஸ்ட்மென்ட் உரிமையைப் பறித்துவிடுமோ என்ற அச்சத்தில் சர்க்காருக்குத் தாக்கீதுகளாக எழுதிக் குவித்தார்கள். குறிப்பாக பேரணைக்குக் கீழே செல்லும் வைகை ஆயக்கட்டுக்காரர்கள், வைகைத் தண்ணீரைப் பேரியாறு எடுத்துச் சென்றுவிடும் என்று பரப்பப்பட்ட வதந்தியினால் பதறினார்கள்.

அந்தப் பதற்றம் கால்குழி நிலம் வைத்திருக்கிற சம்சாரியைவிட, ராம்நாடு சமஸ்தானத்தை அதிகம் பீடித்தது. பேரியாறு நதிநீர் ராமநாதபுரத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்று கனவு கண்ட மண்ணிலிருந்து, பேரியாற்றுத் தண்ணீரைப் பேரணைக்கோ, வைகையிலோ கொண்டு வரக்கூடாதென்று தாக்கீது அனுப்பப்பட்டுள்ளதைக் காலத்தின் விசித்திரம் என்று சொல்வதல்லாமல் வேறெப்படிச் சொல்ல முடியும்? சேது தேசத்தின் புல் முளைத்துப்போன கண்மாய்களெல்லாம் பேரியாற்றுக்காகக் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது. வைகைக்கு வரும் பேரியாற்றுத் தண்ணீர் சிவகங்கைக்கும் ராமநாதபுரத்துக்கும் அவசியம் வந்தாக வேண்டும், எங்கள் வைகை ஆயக்கட்டுக்காரர்களுக்கும் பேரியாற்றுத் தண்ணீர் வேண்டும், பேரியாற்றுத் தண்ணீரைக் கிழக்குத் திசைக்குத் திருப்பலாமென்ற யோசனையை முன்வைத்ததே எங்களின் சேது தேசம்தான் என்று சொல்வதற்குப் பதில், பேரியாற்றுத் தண்ணீரைப் பேரணைக்குக் கொண்டுவருவதால் வைகை நீரைக் கொண்டு செல்லும் வடகரைக் கால்வாய்க்கு பாதிப்பு வரும், பேரியாற்றுடன் சேர்ந்து வைகைத் தண்ணீரும் மேலூருக்குச் செல்லும், எனவே பேரியாற்று நீரை வைகையில் கொண்டு வரக்கூடாதென்று தாக்கீது வந்திருக்கிறது. சமஸ்தானத்து ரயத்துகளின் பெட்டிஷன்களைத் திரட்டி, சமஸ்தானத்தின் முத்திரையிட்டு அனுப்பியிருக்கிறார்கள். போரிட எடுக்கும் வாளை, படை நடத்தும் வீரனை நோக்கித் திருப்புவதைப்போல், காலம் சேது சமஸ்தானத்தின் நோக்கத்தைப் புரட்டிப் போட்டிருந்தது.

தபாலைக் கையிலெடுத்த கந்தவேல், பிரித்த அடையாளமழித்து, பிரிக்கப்படாத தபாலைப் போலாக்கி, மீண்டும் பெட்டியில் வைத்து, வண்டிக்காரனை அழைத்தார். தன் வில்வண்டியில் ஏற்றி, மதுரை கலெக்ட்ரேட்டுக்குக் கொண்டுபோகச் சொன்னார்.

தன்னுடைய கோச் வண்டியையும் தயாராக நிறுத்தச் சொன்னார். தோட்டக்காரன் கொண்டுவந்து தந்த ஒரு கலயம் பதநீரை வாங்கி, ஒரே மூச்சில் குடித்தார்.

வைகையின் தென்கரையில் அமைந்திருக்கும் மதுரைக்கு மேலே இருபது மைல் தூரத்தில் இருக்கும் நீரணைதான் பேரணை. எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கூடலூர் தொடங்கி, பேரணை வரை பேரியாற்று நீரைக் கொண்டு வருவதற்கு ஏற்கெனவே இருந்த நீர்வழியையே பயன்படுத்த பென்னி முடிவெடுத்திருந்தார். கம்பம் பள்ளத்தாக்கு நதிகளின் ஆயக்கட்டுக்காரர்கள் வெறும் பதினான்காயிரம் ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர்கள்தான். புதிதாக கால்வாய் கட்டி, நீரைக் கொண்டு வர ஆகும் செலவைவிட, பதினான்காயிரம் ஏக்கர் நிலத்துக்குப் பேரியாற்றுத் தண்ணீரைக் கொடுப்பது அதிக செலவில்லை என்பதுதான் பென்னியின் கூர்மையான அவதானிப்பு.

பேரணையில் இருந்து வடகரைக் கண்மாய்க்கும், பேரணையில் இருந்து இரண்டரை மைல் தூரத்திலுள்ள சித்தணையில் இருந்து தென்கரைக் கண்மாய்க்கும் கால்வாய்கள் மூலம் வைகையின் நீரெடுத்துச் செல்லப்படுகிறது. வைகையின் நதிக்கரையில் உள்ள கிராமங்கள் இவ்விரு அணையின் கால்வாய்களின்மூலம்தான் பாசனம் பெறுகின்றன. வைகை ஆயக்கட்டு ரயத்துகளுக்கு இருக்கும் ஒரே சந்தேகம், வைகையோடு கலக்கும் பேரியாற்று நீரை, பேரணையிலிருந்து எப்படிச் சரியாகப் பிரித்தெடுத்து, பேரியாறு கால்வாய்மூலம் மேலூருக்குக் கொண்டு செல்வார்கள்? எவ்வளவு தண்ணீர் வைகையில் வருகிறது, எவ்வளவு தண்ணீர் பேரியாற்றில் வருகிறது என்று எப்படி அளப்பது? வருஷநாட்டுப் பகுதியில் இருந்து கடமலைக்குண்டு வழியாக ஓடிவரும் வைகையும், கூடலூர், கம்பம், பாளையம் வழியாக வரப்போகும் பேரியாறும் குன்னூர் அருகில் கோவிலூரில் ஒன்றுசேர்ந்து பேரணை இருக்கும் அணைப்பட்டிக்கு வந்துவிடும். அங்கிருந்து எப்படிப் பேரியாற்றுத் தண்ணீரைத் தனியாகப் பிரித்து மேலூருக்குக் கொண்டு செல்வார்கள்? வைகைத் தண்ணீரையும் மறைமுகமாக எடுப்பதற்காகத்தான் பிரிட்டிஷ் சர்க்கார் சதி செய்கிறது என்று திண்டுக்கல்லின் 24 பாளையங்களைச் சேர்ந்தவர்கள் அவரவர்களின் பண்ணையாள்கள் மூலம் பரப்பிவிட்டிருந்தார்கள். சிவகங்கையும் ராமநாதபுரமும் தம் பங்குக்குப் பேரணையைக் கையில் எடுத்துக்கொண்டன. வைகையின் வடகரையும் தென்கரையும் நீரின்றிப் பாலையாகுமென்று தூண்டினார்கள். நேரடியாக மோதுவதற்கான சூழலுக்காகவும் காரணம் தேடிக்கொண்டிருந்தார்கள்.

சூழ்ச்சி, முத்திரையிடப்பட்ட துணி உறைக்குள் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்குப் பயணப்பட்டது.

கம்பம் – ஊருக்கு மேற்கே உள்ள தாத்தப்பன் குளக்கரை.

நண்பகலின் வெயிலின் சூடும், ஏரிபோல் பரந்திருந்த குளத்தில் தளும்பத் தளும்ப இருந்த நீரின் தண்மையும் சேர்ந்து காற்று தனித்த கொண்டாட்டத்தில் இருந்தது. புழுதியேறிய கால்களுடன் சம்சாரிகள் வயக்காட்டு வேலை முடித்து மரத்தடியில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

“மேல்மலையில் பேரியாறு புராஜெக்ட் நடக்கும் ஸ்தலத்தில் எல்லா அப்காரி, அபினி லைஸென்ஸ் கேட்கிறவர்களுக்கான நிபந்தனைகள் என்னன்னா…” கூடலூரின் தோட்டி தமுக்கடிக்க, முன்சீப் மாட்டுவண்டியின் மேலேறி நின்று சர்க்கார் முத்திரையிடப்பட்டிருந்த தாளை உயர்த்திப் பிடித்துப் படித்தார்.

அரிசி, கேழ்வரகு, சோளம், கம்பு போன்ற தானியங்கள் அளவுக்கு மேல்மலையில் சாராயமும் கள்ளும் அத்தியாவசியமாக இருக்கு. கடந்த இரண்டு சீசன்களில் சர்க்காரே சாராயத்தைக் கொண்டுவந்து விநியோகித்தது. கட்டுமான வேலைகளின் வரவுசெலவுக் கணக்கெழுதும் குமாஸ்தாக்கள் பொறுப்பிலேயே சாராயக் கணக்கும் கொடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்ததில், டெய்லர், அபினி, சாராயம், கள் விற்பனைக்கு காண்ட்ராக்டர்களை விடச் சொல்லிப் பரிந்துரைத்திருந்தார். காண்ட்ராக்டர்கள் அப்காரி லைசென்ஸ் பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன என்று ஏற்கெனவே அறிவிப்பு கொடுத்திருந்தாலும் நேரடியாகப் படித்துக் காட்டினால்தான் புரியுமென்று அப்காரி டிபார்ட்மென்ட் அசிஸ்டென்ட் கமிஷ்னர் கலெக்டரிடம் சொல்லி, கலெக்டர் உத்தரவு கொடுத்திருந்தார்.

“அப்காரி அல்லது அபினி லைசென்ஸை அனுசரித்து, விற்பனை நடத்தும்படியான லைசென்ஸ் கொடுக்கும் சமயத்தில் கலெக்டரவர்களால் குறிக்கப்படும். மது, அபினி, கஞ்சா முதலிய லாகிரி வஸ்துகளின் விற்பனையும் உடைமையும், இந்த லைசென்ஸ் கொடுக்கப்படும் மேல்மலைக்கு மட்டுமே செல்லும்.

விற்கப்படும் அல்லது விற்பனைக்கு வைக்கப்படும் மது, அபினி, கஞ்சா முதலிய லாகிரி வஸ்துகள் நல்ல சரக்காயும் கலப்பில்லாததாயும் இருக்க வேண்டியது.

நீரதிகாரம் - 70 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

அபினி முதலிய லாகிரி வஸ்துகளின் லாகிரி தன்மையை அதிகப்படுத்துகிறதற்காவது வேறெந்த காரியத்திற்காகவாவது எந்த வஸ்துவையும் சேர்க்கக் கூடாது. மீறிச் செய்கிறவர்களின் லைசென்ஸ் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.

மது, அபினி அல்லது கஞ்சா முதலிய லாகிரி வஸ்துகளை 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அல்லது குஷ்டரோகம் அல்லது ஒட்டுவாரொட்டும்படியான வியாதியினால் அவஸ்தைப்படுகிறவர்கள் விற்பனை பண்ணுவது அல்லது கொண்டுபோவது கூடாது.

இராக்காலத்தில் விற்பதும், குடித்துவிட்டுத் தாறுமாறு பண்ணுவதும் சூதாடுவதும் மதுக்கடையின் முன்னால் நடக்கவும் லைசென்ஸ்தாரர்கள் அனுமதிக்கக் கூடாது.

தண்டு இறங்குகிறவர்களுக்கும் மிலிட்டரிக்கும் வைத்தியனுக்கும் மருந்து செய்பவனுக்கும், சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கும் மது, அபினி அல்லது கஞ்சா முதலிய லாகிரி வஸ்துகளை விற்கக் கூடாது.

மேல்மலையில் மதுக்கடையில் மது, அபினி அல்லது கஞ்சா முதலிய லாகிரி வஸ்துகளைப் பணத்திற்குத் தவிர வேறொன்றுக்கும் விற்கக் கூடாது. பணம் தவிர வேறெந்த வஸ்துவையாவது கொடுக்க வந்தால் லைசென்ஸுதாரன் அதிசமீபத்திலுள்ள மாஜிஸ்ட்ரேட்டுக்காவது போலீசு உத்தியோகஸ்தருக்காவது அதைத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டிருக்க வேண்டியது.

லைசென்ஸ்தாரர்கள் ஸால்ட், அப்காரி அண்ட் கஸ்டம்ஸ் இலாகா உத்தியோகஸ்தர்களிடத்தில் பண விஷயமான எவ்வித லாவாதேவியும் வைத்துக்கொள்ளக் கூடாது.

கொடுக்கப்படும் சுதந்திரமானது கள் விற்பனை பண்ணுவதற்கு மாத்திரம் சம்பந்தப்படுகிறது. எந்த மரங்களிலிருந்து கள் இறக்க லைசென்ஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறதோ அப்படிப்பட்ட மரங்களிலிருந்து இறக்கப்பட்ட கள் தவிர வேறெந்தக் கள்ளையும் கடைகளில் வைத்திருக்கவுங் கூடாது, விற்பனைக்காகக் காட்டவுங் கூடாது, விற்கவுங் கூடாது. இந்த லைசென்ஸினால் எந்த மரங்களையாவது இஷ்டப்படி அனுபவித்துக்கொள்ள சுதந்திரம் கிடையாது.

கள் இறக்கும் லைசென்ஸ்களைப் பெற்றுக்கொண்டு கலெக்டரால் நிர்ணயிக்கப்படுகிற நியாயமான காலத்திற்குள் கடை வைத்துக்கொள்ள வேண்டியது.

கள்ளைக் காய்ச்சி சாராயம் இறக்குவது எவ்வளவுங் கூடாது.

மரவரி செலுத்தி, முத்திரை குத்திய மரங்களிலிருந்து உற்பத்தியானதாயிருந்த போதிலும் பதனியைக் கடையில் வைத்திருக்கவுங் கூடாது, விற்கவுங் கூடாது. கடையிலாவது அல்லது அதற்கு வெளியிலாவது எந்தப் பதனியையும் கடைக்காகக் குறிக்கப்பட்ட மரங்களில் இருந்து இறக்கிய கள்ளுடன் சேர்க்கவுங் கூடாது அல்லது சேர்க்கும்படி செய்யவுங் கூடாது.

இப்படிக்கு, ரெவினியூ போட்டார் (செப்பரேட் ரிவினியூ)”

முன்சீப் படித்து முடிக்கும்வரை ஆங்காங்கு நின்று கேட்டுக்கொண்டிருந்தவர்களில் ஆர்வமற்ற சிலர் கலைந்தனர். ‘குடிக்கவே கையில காலணா இல்ல, இதுல கட லைசென்ஸுக்கு எங்க போறது?’ என்று புகையிலையை வாயில் அதக்கினர்.

குளத்தங்கரையை ஒட்டிய தன் அரிசிக் கிடங்கின் வாயிலில் நின்று கேட்டுக்கொண்டிருந்த நயினார் ராவுத்தருக்கு யோசனையாக இருந்தது. புகையிலையோ, வெற்றிலையோ, பதநீரோ, சாராயமோ, கள்ளோ, ஒன்று தேவையாக இருக்கிறதே மனித சரீரத்திற்கு? அதுவும் மேல்மலையில் கூலி வேலைக்குச் செல்வது உயிரைப் பணயம் வைப்பதற்கு ஈடானது. நடுக்கும் குளிரும், கடிக்கும் அட்டைகளும் கொசுக்களும் எப்போதுமே காய்ச்சலடிப்பது போலவே இருக்கும் காலநிலையுமாக, மேல்மலையில் இயல்பாக இருக்க முடியாது.

மேல்மலைக்குத் தேவையான அரிசியை விநியோகிக்கும் காண்ட்ராக்ட்டை சர்க்கார் ராவுத்தருக்குக் கொடுத்திருந்தது. அரிசியும் குருணையும் தானியங்களும் கழுதைகளின் மேலேற்றி, மேல்மலைக்குக் கொண்டு செல்வதற்காகவே இருபது பேரைப் புதிதாக வேலைக்கு வைத்திருந்தார் ராவுத்தர். கம்பம், கூடலூர் பகுதியிலிருந்த கழுதைகள் மலையேறிப் பழக்கமில்லாததால் மூணாறு பகுதியிலிருந்து கழுதைகளை விலைக்கு வாங்கி, தேக்கடியிலேயே விட்டிருந்தார். கழுதைகளை மேல்மலைக்குச் சுமையேற்றிச் செல்ல, மூணாற்றின் முதுவான்களோடு தன்னுடைய வேலையாள்களையும் சேர்த்துவிட்டிருந்தார்.

மலைமேலேயே இருந்த கழுதைகள் என்றாலும் மேல்மலையின் மூவாயிரம் அடி உயரத்திற்குச் சுமையுடன் ஏறுவதற்குத் தடுமாறின. பாதை தடுமாறி சுமையுடன் வேறு வழிக்குள் சென்றுவிடும் கழுதைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால், ஏற்றிச் சென்ற தானியத்திற்கான விலையை எப்படி நேர்த்தி செய்வதென்று குமாஸ்தாக்கள் விரட்டினார்கள்.

ஒருமுறை இரண்டு மூட்டை அரிசியை ஏற்றிச் சென்ற கழுதையொன்று பாதையிலிருந்து விலகிச் சென்றுவிட்டது. கழுதையைச் சின்னஞ்சிறு பையனிடம் கொடுத்துவிட்டு, போகிற வழியில் ஏலக்காய் பறிக்கச் சென்றுவிட்டான் சிறுவனின் தகப்பன். கழுதை முன்னால் சென்றுகொண்டிருக்கும் என்று நம்பி, பையனும் வழியிலிருக்கிற மரஞ்செடி கொடிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே, தன்னுடன் வந்த கூட்டத்தைத் தவற விட்டுவிட்டான். ஓடை ஒன்றில் நீரள்ளிப் பருகி, முகம் கழுவி நிமிர்ந்த பிறகுதான் தன் கழுதையையும் காணோம், தானும் தனியாக இருக்கிறோம் என்று புரிந்தது. காட்டுக்குள் பாதையைத் தவறவிட்ட கழுதையும் சிறுவனும் திரும்பவே இல்லை.

கழுதையின் எலும்பையும் சிறுவனின் உடலையும் வெவ்வேறு இடங்களிலிருந்து ஒருவாரம் கழித்துத்தான் கண்டுபிடித்தார்கள். கழுதையையும் பையனையும் இழந்திருந்தாலும் காணாமல்போன நெல் மூட்டைக்கு யார் கணக்குச் சொல்வதென்று குமாஸ்தா ஒருவன், சிறுவனின் தந்தையைப் போட்டு அடித்திருக்கிறான்.

அதைக் கேள்விப்பட்ட பிறகு நயினார் ராவுத்தர் மேல்மலைக்குச் சென்றார். கூடலூரிலிருந்து தேக்கடி வழியாகச் சென்ற ஒற்றையடிப் பாதையையும், அணை கட்டுமிடத்தையும் அங்கு கூலியாள்கள் சின்னக் குடிசையில் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்தவர், கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவைத் தேடிப்போய் அடிக்கப் போனார். உடன் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்தார்கள். அசிஸ்டென்ட் இன்ஜினீயர் லோகன் விசாரித்து, இனி கழுதைகளாலோ, மாட்டு வண்டியிலோ எடுத்து வருகையில் மூட்டைகள் சிதறி தானியம் வீணாகப் போனால், வீணாகும் தானியங்களை, என்ன காரணத்தினால் வீணானது என்றே எழுதச் சொல்லி, யாரையும் துன்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தினார். ராவுத்தரிடம் குமாஸ்தாவுக்குள்ள நெருக்கடியையும் எடுத்துச் சொன்னார் லோகன்.

மேல்மலையில் கஞ்சிபோல் சாராயம்தான் முக்கியம் என்று ராவுத்தருக்கு அன்றுதான் புரிந்தது.

அணை கட்டுவதற்குப் பொறியாளர்களும் மேஸ்திரிகளும் உதவியாக இருப்பதைப்போல், மேல்மலைக்கு உணவும் மருந்துபோல் சாராயமும் கொடுக்கத்தான் அல்லா தனக்குப் பணித்திருக்கிறார் என்று நம்பினார் ராவுத்தர்.

நாளைக்கே கலெக்டர் ஆபீஸுக்குச் சென்று அப்காரி காண்ட்ராக்ட் லைசென்ஸுக்கு அப்ளை செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தார் ராவுத்தர்.

ஆங்கூர் பாளையத்தின் மந்தை.

சளசளவென்று நீரோடிய வாய்க்கால் கரையையொட்டிய மருத மரத்தினடியில் உட்கார்ந்திருந்த ஏழெட்டுப் பேரும் எதிரில் இருந்த உருண்டைக் கல்லின்மீது குத்தவைத்து உட்கார்ந்திருந்தவர் சொல்வதைக் கூர்மையாக கவனித்தனர். மத்திம வயதில் இருந்த துறவி நீண்ட அங்கியும் வண்ண முண்டாசும் அணிந்து, கண்களில் கனிவு பொங்கும் தோற்றத்தில் இருந்தார்.

“ஹஜ் யாத்திரைக்குப் போகணும்ன்றது மகம்மதியனா பொறந்த, இசுலாமிய மார்க்கத்த ஏத்துக்கிட்ட எல்லாருக்கும் கனவுதான். ஆனா ஒருவர் மகம்மதிய தீர்க்கதரிசியிடம் வந்து, ‘ஓ தேவதூதனே, எப்படியானாலும் மக்கா யாத்திரை கட்டாயமாய்ச் செய்ய வேணும்’ என்று கேட்டாராம். பிரயாணத்துக்காகவும் வாகனத்துக்காகவும் பிடிக்கிற செலவுகளுக்கும் போதுமான பணம் யார் வைத்திருக்கிறாரோ அவர் கட்டாயமாய் அந்த யாத்திரை செய்யலாம்னு சொன்னாராம் தீர்க்கதரிசி. மொத்தத்துல போதுமான ஆகாரமும் வாகனமும் தேவைன்னு சூசகமாச் சொல்லுறார்.”

“எதுக்கு இதச் சொல்றீங்க?” கூட்டத்திலிருந்த ராவுத்தர் கேட்டார். ராவுத்தரைத் திரும்பிப் பார்த்த துறவி, “தெய்வத்தையே தாங்கள் நம்பியிருப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்கா யாத்திரை செய்வதுதான் வழக்கம். ஆனா மக்கா போய்ச் சேர்ந்த பிறகு, கால்நடையாய்ப் போய்ச் சேர்ந்ததில் தேக ஆரோக்கியமும் குறைஞ்சிருக்கும். திரும்பி கால்நடையாய் வரவும் தெம்பிருக்காது. யாத்திரைக்காரங்க திரும்ப ஊருக்கு வந்து சேர முடியாம வழியில பம்பாயிலும் மத்த சின்னச் சின்ன ஊர்லயும் எறங்கிக் கஷ்டப்படுற சேதியெல்லாம் வருது. இங்கேயிருந்து மலபார் தேசத்து மகம்மதியர்களோடு யாத்திர போன அம்பது பேர் இன்னும் ஒரு வருஷமா திரும்பலையாம். கையில கொஞ்சம் பணமோ, போக்குவரத்துக்கு ஒரு கால்நடையோ சம்பாதிச்சு வச்சிருக்கிறவங்க, தெய்வகாரியமா அடுத்து போறவங்களுக்கு உபகாரமா, யாத்திரா பண்டுன்னு ஒன்னு போட்டு வச்சம்னா, நம்ம பகுதியில இருந்து போறவங்களுக்கு உதவி செய்யலாம். நயினார் ராவுத்தன் இந்த நல்ல காரியத்தைத் தொடங்கி வைக்கணும்.”

நயினார் ராவுத்தன் எழுந்து நின்றார். “மார்க்கத்த நம்பி நடக்கிறவங்களுக்கு உதவறதுக்குத்தான் நான் ஓடி ஓடிச் சம்பாதிக்கிறதே. பேரியாத்து கான்ட்ராக்டு வேலையில பல பேருக்கு உபகாரம் பன்ற அளவுக்கு என்னால முடியுது. இனிமே கம்பம், கூடலூர்ல இருந்து ஹஜ் யாத்திர போறவங்க, திரும்பி வரும் பிரயாணத்துக்காகச் சேர்த்து ரயில் டிக்கட்டு பம்பாயில கப்பல் ஏறுறதுக்கு முன்னாலேயே அவங்க கையில இருக்கிற மாதிரி நான் பாத்துக்கிறேன். ஹஜ் யாத்திரைக்குப் போறவங்க தங்களோட ஊருக்கு க்ஷேமமாய்த் திரும்பி வந்து சேர்றதுக்கு நான் உதவுறேன்.”

“இந்தச் சொல்லுக்குத்தான் நான் நூறு மைல் பிரயாணம் பண்ணி வந்தேன். இப்போ நிம்மதியாப் போச்சு…” என்று துறவி சொன்னார்.

நயினார் ராவுத்தன் புலிவாலைப் பிடித்துவிட்டார் என்பதை, மருத மரத்திலிருந்த சிறகடித்துப் பறந்த பறவைகளின் பதற்றம் சொல்லியது.

- பாயும்