நேபாளத்தின் இல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேம் பிரசாத் ஆச்சார்யா (37). தொழிலதிபரான இவர், நேற்று பிற்பகல் நேபாளத்தின் புதிய பிரதமர் புஷ்ப கமல் தஹால் தன்னுடைய குதிரைப்படையுடன் நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, திடீரென தன்னுடைய உடலில் டீசல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே அங்கிருந்தவர்கள் அவருடைய உடலில் பரவிய தீயை அணைத்தனர். அதைத் தொடர்ந்து, 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பிரேம் பிரசாத் ஆச்சார்யா பல ஆண்டுகளாக அவர் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்னைகள் குறித்தும், மனவேதனை குறித்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருக்கிறார். அண்மையில்கூட, தனக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணம் குறித்து பதிவிட்டிருந்தார். அதில், ``என் சூழ்நிலை எப்போதும் எனக்குச் சாதகமாக இருந்ததில்லை. அதனால் எனக்கு தற்கொலை எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. பலமுறை அதற்கு முயன்று, தோல்வியடைந்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார் பிரேம் பிரசாத் ஆச்சார்யா.
இந்த நிலையில்தான், அவர் நாடாளுமன்றத்தின் முன்பு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த பிரேம் பிரசாத் ஆச்சார்யா, சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.