சமூகம்
Published:Updated:

மோசடி நிதி நிறுவனங்கள்... இனி ஏமாற்ற முடியாது!

வந்துவிட்டது புதிய சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
வந்துவிட்டது புதிய சட்டம்

வந்துவிட்டது புதிய சட்டம்

கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி, சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை முதலீடு செய்து ஏமாறுவது மக்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒரு மோசடி நிறுவனம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்பட்டு உஷாராகும்போது, வேறு பெயரில் இன்னொரு மோசடி நிறுவனம் முளைத்து விடுகிறது. இவர்களைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் ஏதுவான சட்டமும் இங்கு இல்லாமலிருந்தது. இதன் காரணமாகவே, பயமின்றி கிடைத்தவரை லாபம் எனச் சுருட்டுவதற்கு, புற்றீசல்போல மோசடி நிறுவனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

அவர்களைத் தடுக்கும், தண்டிக்கும் நோக்கத்துடன் வலுவான சட்டப் பிரிவுகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளது, ‘முறைப்படுத்தப்படாத டெபாசிட்டுகள் தடைச் சட்டம் 2019’. இதில் `டெபாசிட்டுகள் என்றால் என்ன என்பதை, தெளிவாக வரையறுத்தது வெகுசிறப்பு’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். தங்க நகைச் சேமிப்புத் திட்டங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் டெபாசிட்டுகளை, நகைக்கான முன்பணம் என்று கணக்குக் காட்டுவதுண்டு. ஆனால், இனி அவ்வாறு செய்ய முடியாது. அவையும் டெபாசிட் கணக்கில்தான் வரும்.

மோசடி நிதி நிறுவனங்கள்... இனி ஏமாற்ற முடியாது!

இந்த முறைப்படுத்தப்படாத டெபாசிட்டுகள் தடைச் சட்டம் 2019, கடந்த பிப்ரவரி மாதத்தில் மோடி தலைமையிலான முதல் ஆட்சிக்காலத்தின் இறுதியில் அவசர சட்டமாகக் கொண்டுவரப் பட்டது. ஆனால், அப்போது பொதுத்தேர்தல் வந்ததால் அதை நிரந்தர சட்டமாக்க முடியவில்லை. எனவே, இப்போது இரு அவைகளின் ஒப்புதலுடன், முறைப்படுத்தப்படாத டெபாசிட்கள் தடைச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தை அமலாக்கத்துடன், ஏற்கெனவே இருக்கும்

ஆர்.பி.ஐ சட்டம், செபி சட்டம் மற்றும் பல மாநில கூட்டுறவு சங்கங்களின் சட்டம் ஆகியவற்றிலும் சில திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளனர்.

மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து புகார் எழும் போது, அவற்றின்மீது நடவடிக்கை எடுப்பதற்கு எந்தவிதமான காலக்கெடுவும் இருந்ததில்லை. பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் ஆண்டுக்கணக்கில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ஆனால், தற்போது அமல்படுத்தப் பட்டுள்ள சட்டத்தின்படி, மோசடிப் புகார் உறுதியானதும், 180 நாள்களுக்குள் மோசடி நிறுவனத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, அதை விற்று வரும் தொகையை வாடிக்கையாளர் களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும்.

இதற்காக மூன்றடுக்கு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1. முதலில் முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத நிதி நிறுவனங்களின் முழுத் தகவல்களும் திரட்டுவதற்கென தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.

2. அந்த அமைப்பால் திரட்டப்பட்ட தகவல்களை ஆய்வுசெய்து, அவற்றில் சந்தேகத்துக்குரிய நிறுவனங்களின் தகவல்கள் மேல்நிலையில் இருக்கும் சிறப்பு அதிகார அமைப்புக்குத் தெரியப்படுத்தப்படும். அதன் சிறப்பு அதிகாரி, மாநிலச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளவராக இருப்பார். நிதி நிறுவனங்கள் குறித்த புகார்களையும் இவரிடம் அளிக்கலாம்.

3. புகார்களில் குறிப்பிட்டுள்ளபடி மோசடி நடந்திருந்தால், இந்த வழக்குகளை விசாரிப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்படும்.

நிதி நிறுவனங்களைக் கண்காணிக்க, ஆர்.பி.ஐ., செபி உள்ளிட்ட ஒன்பது அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. இவை ஒருங்கிணைப் பின்றி தனித்தனித் தீவுகளைப்போல செயல் படுகின்றன. இந்தத் தகவல் தொடர்பின்மை குளறுபடியின் மூலம், மோசடி நிதி நிறுவனங்கள் தப்புவது வழக்கமாக இருந்தது.

மோசடி நிதி நிறுவனங்கள்... இனி ஏமாற்ற முடியாது!

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின் படி, இந்த ஒன்பது கண்காணிப்பு அமைப்புகளுக்கும் பொதுவாக ஒரு ஆன்லைன் போர்ட்டல் கொண்டுவரப்படும். எந்த நிதி நிறுவனம் தொடங்கப்பட்டாலும், இந்த போர்ட்டலில் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம். அப்படிப் பதிவுசெய்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டால் அதுகுறித்த தகவல், அனைத்து கண்காணிப்பு அமைப்புகளுக்கும் செல்லும். இதன் மூலம், மோசடி குற்றச் சாட்டுக்குள்ளானவர், மீண்டும் அதேபோன்ற மோசடியில் ஈடுபடுவது தடுக்கப்படும்.

இந்தச் சட்டத்தின்படி, முறைப்படுத்தப் படாத நிதி நிறுவனங்கள் இயங்குவதும், டெபாசிட்டுகள் பெறுவதும் தடை செய்யப்படும். அத்தகைய நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் மூன்று முதல் பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள், டெபாசிட்டு களுக்கு வட்டியைத் திருப்பியளிப்பதில் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்களுக்கு மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட டெபாசிட்டுகளைப் போல் இரு மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

இதுபோன்ற மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்களுக்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும். எந்த ஒரு தனிநபரும், தெரிந்தே மோசடியில் ஈடுபடுவது, வாடிக்கையாளர்களை ஏமாற்றி ஏதாவது நிதி மோசடித் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்ப்பது போன்ற தவறுகளைச் செய்தால், அவர்களும் இந்தச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவர். மோசடி நிதி நிறுவனங்களின் விளம்பரங்களை பத்திரிகைகள் வெளியிட்டால், அதே பத்திரிகை, அதே அளவு விளம்பரத்தின் மூலம், `அது மோசடி நிறுவனம்’ என்ற செய்தியை விளம்பரமாக வெளியிட வேண்டும்.

இதுபோன்ற கடுமையான சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த நிதி நிறுவனத்திலும் முதலீடு செய்யும் முன்னர் அந்த நிறுவனம் முறையாகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எந்த வடிவத்தில் திட்டத்தை அறிவித்தாலும் அந்தத் திட்டம் இந்தச் சட்டத்தின்கீழ் வந்துவிடும்.

இந்தச் சட்டம் குறித்து பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம். ‘‘பல்வேறு வகை நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் ஒன்பது கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடைப்பட்ட இடைவெளியை நிரப்பக்கூடிய ஒரு சட்டமாகத்தான் இதைப் பார்க்கிறேன். மோசடி நிறுவனத்தின் சொத்துகளைக் கைப்பற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதற்கு 180 நாள் காலக்கெடு வைத்திருப்பது நல்ல விஷயம். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க இது உதவும். மோசடி குறித்து விசாரிக்க, சிறப்பு அதிகாரி மற்றும் வழக்கு தொடுக்க சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றை கொண்டுவருவதால், இந்த வழக்குகளில் தீர்ப்பு வருவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும். இவை அனைத்துமே ஒரு தொடக்கம்தான்.

எந்த நிதி நிறுவனத்திலும் டெபாசிட் செய்யும் முன், குறிப்பிட்ட கண்காணிப்பு அமைப்பின்கீழ் அது பதிவுசெய்யப் பட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டிய பொறுப்பு முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது. பதிவுசெய்யப்படாத நிறுவனங்களைப் புறக்கணிப்பதில், தீர்மானமாக இருக்க வேண்டும். முதலீட்டாளர்களின் விழிப்பு உணர்வே இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வாக இருக்கும்’’ என்றார்.

``இந்தச் சட்டத்தால் முறைப்படுத்தப் படாத நிதி நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுப்பது எந்த அளவுக்கு சாத்தியம்?’’ என்று வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டோம்.

மோசடி நிதி நிறுவனங்கள்... இனி ஏமாற்ற முடியாது!

‘‘இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம், டெபாசிட்டுகள் என்றால் என்ன என்பதை வரையறுப்பது. ஏனென்றால், இந்த வரையறை தெளிவாக இல்லாததால், இதிலிருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு, டெபாசிட்டுகள் என்றில்லாமல் வெவ்வேறு வடிவங்களில் மக்களிடமிருந்து பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். இதைக் கருத்தில்கொண்டு, ‘டெபாசிட்டுகள் என்றால், கடன் அல்லது வேறு எந்த வடிவத்திலோ குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பணமாகவோ அல்லது சொத்துகளாகவோ வேறு பொருளாகவோ திருப்பித் தரப்படும் என்ற வாக்குறுதியுடன் முன்கூட்டியே பெறப்படும் பணம்’ என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரையறையால், எந்த வடிவத்தில் திட்டத்தை அறிவித்தாலும் அந்தத் திட்டம் இந்தச் சட்டத்தின்கீழ் வந்துவிடும். எனவே, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டு டெபாசிட்டுகளைப் பெறும் அனைவரும், இந்தச் சட்டத்தின்கீழ் வந்துவிடுவார்கள். இதுவரை இவர்களை யெல்லாம் சட்டத்தின்கீழ் கொண்டுவருவதில் நிறைய குழப்பங்கள் இருந்தன.

இனி, பொதுமக்களிடமிருந்து எந்த வடிவில் டெபாசிட் வாங்குவதாக இருந்தாலும், இந்தச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியிடம் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தவர்கள் மட்டுமே, மக்களிடமிருந்து பணம்பெற முடியும். பதிவுசெய்யாமல் பணம் பெறுவோரை உடனடியாகத் தண்டிக்க முடியும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இந்தச் சட்டத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும், புகார் அளிக்கும்பட்சத்தில் டெபாசிட் வசூலித்தவர்களின் சொத்தை பறிமுதல் செய்யவும் முடியும். இதன்மூலம் தற்போது தமிழகத்தில் இயங்கிவரும் மோசடி நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது’’ என்றார்.

மோசடி நிறுவனங்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் இந்தச் சட்டத்தைப்ப் பாராட்டி வரவேற்போம்!