மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் பிசினஸ் கதை - 1: 50 வயதில் புதிய பிசினஸ்... ஏழு ஆண்டுகளில் பல கோடி வருமானம்!

ரேவதி முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரேவதி முருகன்

பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதைகளிலும் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்புத் தொடர் இது.

ந்த இதழில், சென்னை `சாஸ்த்ரா அழைப்பிதழ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், ரேவதி முருகன்.

ரேவதியின் பிசினஸ் பயணம் 22 வயதில் தொடங்கியது. உழைப்பை மட்டுமே நம்பியவர், தடைகளைத் தாண்டி சாதித்திருக்கிறார். வெற்றியையும், மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் அன்பையும் அதிகம் சம்பாதித்திருக்கிறார். சவாலான சூழலில், 50 வயதில் புதிய நிறுவனத்தைத் தொடங்கி விரைவாக வெற்றியை வசப்படுத்தியிருக்கிறார். தன் வெற்றிக் கதையைப் பகிர்கிறார், ரேவதி.

முதலீடாக நகைகள்!

``பூர்வீகம், திருநெல்வேலி மாவட்டம் வடுகட்சி மதில் கிராமம். அப்பா ராணுவத்துல பணியாற்றினார். கிராமத்துல அம்மாவுக்கு விவசாய வேலைகளில் உதவியா இருப்பேன். அப்பாவின் பணிமாறுதலால், சென்னைக்குக் குடியேறி, 11-ம் வகுப்புல சேர்ந்தேன். பி.ஏ இரண்டாம் ஆண்டு படிச்சுகிட்டிருக்கும்போதே, கல்யாணம். படிப்பைக் கைவிடலை. எங்க கிராமத்துலயே டிகிரி முடிச்ச முதல் நபர் நான்தான்.

முதல் குழந்தை பிறந்த நேரம். எங்களுடையது மிடில் கிளாஸ் குடும்பம். என் கணவரின் அண்ணன் (சித்தி மகன்) சங்கரலிங்கம் ஐயா, `மேனகா அழைப்பிதழ்’ நிறுவனத்தைத் தொடங்கி ஓராண்டாகியிருந்த நேரம். பிசினஸுக்கு உதவ, நம்பிக்கையான நபரைத் தேடிட்டிருந்தவர், என்னை அணுகினார். என் பிசினஸ் கனவுக்கு இந்தத் தொழில் கைகொடுக்கும்னு நம்பினேன். நிறுவன வளர்ச்சிக்கு என்னுடைய நகைகளை முதலீடாகக் கொடுத்து, `மேனகா அழைப்பிதழ்’ நிறுவனத்துல, 22 வயசுல பார்ட்னரா சேர்ந்தேன்.

அம்மாவின் கோபம்!

இப்போதைய கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு அருகே, அப்போ வெறும் 200 சதுரஅடி கட்டடத்துலதான் நிறுவனம் செயல்பட்டுச்சு. அந்த 1984-ம் ஆண்டு, கடைக்குள் ரெண்டு கஸ்டமர்தான் நிற்க இடம் இருக்கும். அம்மாவின் எதிர்ப்பை மீறி, அப்போ பிரபலமாகாத இந்தத் தொழிலில் சேர்ந்ததால அவங்க ஒரு வருஷம் என்கூட பேசலை. `நம்ம நிறுவனத்தைத் தேடி நிறைய வாடிக்கையாளர்கள் வரணும்; இந்தத் துறை பிரபலமாகணும்’னு சங்கரலிங்கம் ஐயாவும் நானும் கடுமையா உழைச்சோம். பண்டிகை, குடும்ப நிகழ்ச்சின்னு எதுக்கும் விடுமுறை எடுக்கமாட்டேன். விடியற்காலையில நிறுவனத்துக்குப் போனா, இரவு வரை வேலை இருக்கும். அதனால, குடும்பம் மற்றும் குழந்தைகளின் அன்பை ரொம்பவே இழந்தேன்.

என் பிசினஸ் கதை - 1: 50 வயதில் புதிய பிசினஸ்... ஏழு ஆண்டுகளில் பல கோடி வருமானம்!

பார்ட்னரான எனக்குச் சம்பளம் கிடையாது. அப்போ துறைமுகத்தில் வேலை செய்துவந்த என் வீட்டுக்காரருக்கு 2,000 ரூபாய் சம்பளம். பற்றாக்குறையைச் சமாளிக்க, என் நிறுவனத்துல மாதம்தோறும் சில நூறு ரூபாய் வாங்கிப்பேன். ஆடம்பரம் இல்லாமல் குடும்பத்தை நடத்திட்டிருந்தோம். எனக்குச் சேரவேண்டிய லாபப் பணத்தைத் தொடர்ந்து தொழிலில்தான் முதலீடு செய்தேன். அப்போ நிறுவனத்துல ஏசி இல்லை. அடிக்கடி பவர்கட் ஆகும். கஸ்டமர் இருக்கிறப்போ பவர்கட் ஏற்பட்டா, ‘சகுனம் சரியில்லை’னு ஆர்டர் கொடுக்காம போயிடுவாங்க. ஒரு கஸ்டமர் உள்ளே நுழையறப்பவே, ‘இவங்க திரும்பிப்போறவரைக்கும் பவர்கட் ஆகக்கூடாது’ன்னு மனசுக்குள் கடவுளை வேண்டிப்பேன். மெனக்கெட்டு பணம் சேர்த்து, ஏசி மற்றும் ஜெனரேட்டர் வாங்கிய நினைவுகளை மறக்க முடியாது. இப்படி பல நிகழ்ச்சிகளும் நெகிழ்ச்சியான தருணங்களும் உண்டு.

வெற்றிப் பாதை!

ஆர்டர் கொடுக்க வரும்போதும், அழைப்பிதழ்களை வாங்கிட்டு போகும்போதும் ஒவ்வொரு கஸ்டமரின் முகத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இதனாலயே, `நம்ம துறையும் நாமும் வளர்ச்சியடைவோம். சீக்கிரமே வெற்றி கிடைச்சுடும்’னு ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் கடந்தோம். புதுமையான டிசைன்களை தயாரிச்சதுடன், வெளிநாட்டு கஸ்டமர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தோம். ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஆர்டர்கள் வரும். பல ஆர்டர்களில் ஏமாற்றப்பட்டு, நஷ்டத்தைச் சமாளிக்க மெனக்கெட்டு உழைச்சிருக்கோம்.

படிப்படியாக நிறுவனத்தை விரிவு படுத்தினோம். 11 வருஷத்துக்குப் பிறகு, எங்க தொழில் வெற்றிப் பாதைக்குத் திரும்பிச்சு. லாபம் பார்க்க ஆரம்பிச்சோம். தொழிலுக்காக வாங்கிய கடனையெல்லாம் அடைச்சோம். 175 ரூபாய் வாடகை வீட்டில் வசிச்ச நிலையில், சொந்தமா வீடு, காருன்னு வாங்க ஆரம்பிச்சோம். நிறுவனம் பெரிய அளவில் உயர்ந்துச்சு. இதுக்கிடையில, 2000-ம் ஆண்டிலிருந்து டீலர்களை நியமிச்சோம். ஒருகட்டத்துல, அவங்கள்ல பலரும் தனியா செயல்பட ஆரம்பிச்சாங்க. புதிய உற்பத்திக்கூடத்தைப் பெரிசா உருவாக்க அதிகளவில் முதலீடு செய்தோம்.

50 வயதில் தனி பிசினஸ்!

சின்னச்சின்னதா சில பிரச்னைகள் வர, இனி தனிச்சு செயல்படுவதுதான் நல்லதுன்னு முடிவெடுத்தேன். மேனகா அழைப்பிதழ் நிறுவனத்தின் இயக்குநராக 25 ஆண்டுகளுக்கும் மேல் உழைச்சேன். இந்த நிலையில், நீண்டகால அனுபவத்தை மட்டுமே கைவசமா எடுத்துகிட்டு, அந்த நிறுவனத்திலிருந்து 2012-ம் ஆண்டு விலகினேன். அப்போது எனக்குள் இருந்த உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

என் பிசினஸ் கதை - 1: 50 வயதில் புதிய பிசினஸ்... ஏழு ஆண்டுகளில் பல கோடி வருமானம்!

பிறகு, என் நகைகள் மற்றும் சேமிப்புப் பணத்தை முதலீடா போட்டு, வைராக்கியத்துடன் `சாஸ்த்ரா அழைப்பிதழ்’ நிறுவனத்தைத் தொடங்கினேன். அப்போ எனக்கு 50 வயது. ஜீரோ நிலையிலிருந்து புதிய நிறுவனத்தைத் தொடங்கியதால், முந்தைய நிறுவனத்துக்கு உழைச்சதைவிட பல மடங்கு அதிக உழைப்பைக் கொடுத்தேன். ஒரு கஸ்டமர் வாங்கற அழைப் பிதழ்கள், பல நூறு பேருக்குச் சென்றடையுது. இதுவே பெரிய மார்கெட்டிங்தான். நம்ம வேலை பிடிச்சிருந்தா, நிறைய கஸ்டமர்கள் நம்மைத் தேடி வருவாங்க. அப்படித்தான் என் புதிய நிறுவனம் வளர ஆரம்பிச்சது.

டிஜிட்டல் உலகம்!

இந்தத் தொழிலுக்கு கிரியேட்டிவிட்டி திறன் ரொம்ப முக்கியம். புதுப்புது டிசைன்களில் அழைப்பிதழ்களை உருவாக்கிட்டே இருப்போம். இப்போ எங்ககிட்ட பத்தாயிரத் துக்கும் மேற்பட்ட டிசைன்கள்ல, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சாம்பிள் அழைப்பிதழ்கள் இருக்கு. அதனால, தேடிவரும் கஸ்டமர் எங்களைவிட்டு வேறு நிறுவனத்துக்குப் போக வாய்ப்பில்லை. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுன்னு பல இடங்கள்ல இருந்தும் கஸ்டமர்கள் எங்க நிறுவனத்தைத் தேடி வர்றாங்க. வாழ்க்கையில எனக்காக நான் வாழ்ந்த நாள்கள் மிகக் குறைவு. விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து, இப்போவரை தொழிலுக்காகத்தான் அதிக நேரம் செலவிட்டிருக்கேன்.

1984-ல் இருந்த அதே துடிப்புதான் எனக்கு இப்போதும். பிசினஸ் பத்தின சிந்தனைதான் எப்போதும். அதனாலதான், ஏழு ஆண்டுகள்லயே புது நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுபோக முடிஞ்சது. நிறைய தோல்விகளையும் கஷ்டங்களையும் பார்த்திருக்கேன். ஆனா, மனம் தளராமல் உழைச்சதாலதான், இன்னிக்கு வெற்றிப் பெற்றிருக்கேன்.

இது டிஜிட்டல் உலகம். வாட்ஸ்அப் வாயிலாகவே அழைப்பிதழ்களை (e-invite) அனுப்பறது அதிகமாகிடுச்சு. இதில் பிரின்டிங் பிராசஸ் நடக்காவிட்டாலும், டிசைனிங் பணிகளுக்கு அதிக வரவேற்பு இருக்கு. ஆன்லைன் அழைப்பிதழ்கள், பிறந்தநாள் போன்ற சில நிகழ்ச்சிகளுக்குக் கைகொடுக்கலாம். ஆனா, வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நடக்கும் திருமணம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளுக்கு நேரில் சென்று அழைத்தால்தான் பெரும்பாலானோர் திருப்தியடைவாங்க. நிகழ்ச்சிக்கும் வருவாங்க. அதனால் இரு தரப்பிலும் அன்பு நீடிக்கும். அன்பு இருக்கிற வரை அழைப்பிதழ்களுக்கு வரவேற்பும் முக்கியத்துவமும் குறையாது. கஸ்டமர் சர்வீஸ்தான் எங்களின் ஒரே பலம். அதனால்தான் மூணு தலைமுறை கஸ்டமர்களையும் தக்கவெச்சிருக்கோம்!''

என் பிசினஸ் கதை - 1: 50 வயதில் புதிய பிசினஸ்... ஏழு ஆண்டுகளில் பல கோடி வருமானம்!

130 ஊழியர்கள்... பல கோடி டர்ன் ஓவர்!

சென்னையில் தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில், `சாஸ்த்ரா அழைப்பித’ழின் கிளைகள் இயங்குகின்றன. சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை பிரபலங்களும் இவர் நிறுவன கஸ்டமர்கள். ஆஸ்திரேலியாவில் புதிய கிளையை விரைவில் தொடங்கவிருக்கிறார். கனடா, லண்டன், மலேசியா நாடுகளிலும் கிளைகளைத் தொடங்கும் பணிகள் நடக்கின்றன. நேரடியாக 30 ஊழியர்களும், பகுதிநேரமாக நூற்றுக்கும் மேற்பட்டோரும் வேலை செய்கிறார்கள். ரிட்டன் கிஃப்ட்டும் விற்பனை செய்கிறார். ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார், ரேவதி.

என் பிசினஸ் கதை - 1: 50 வயதில் புதிய பிசினஸ்... ஏழு ஆண்டுகளில் பல கோடி வருமானம்!

பிசினஸ் இன்ஸ்பிரேஷன்!

“ஆப்பிள் நிறுவனம் உருவாக முக்கியக் காரணமா இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஒருகட்டத்துல அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். தன் உழைப்பை மட்டுமே நம்பிய ஸ்டீவ், புதிய நிறுவனத்தைத் தொடங்கி உயர்ந்தார். அவரின் நிறுவனத்தை விலைக்கு வாங்கி, தன் நிறுவனத்துடன் இணைத்துக்கொண்டது ஆப்பிள். உழைப்பும் திறமையும் இருந்தா எந்தச் சூழலையும் எளிதில் கடந்து வெற்றி பெறலாம் என்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸின் பிசினஸ் வாழ்க்கை எனக்கு முன்னுதாரணம்!''

என் பிசினஸ் கதை - 1: 50 வயதில் புதிய பிசினஸ்... ஏழு ஆண்டுகளில் பல கோடி வருமானம்!

என் அனுபவத்திலிருந்து....

  • `அடுத்த 10 வருஷத்துல நாம எப்படியிருப்போம்?’ - இந்தக் கேள்வி என் 50-வது வயசுலதான் எனக்குள் ஏற்பட்டுச்சு. இந்தக் கேள்வி 30, 40 வயதுகள்ல ஏற்பட்டிருந்தா, வாழ்க்கையில இன்னும் பல படிகள் முன்னேறியிருப்பேன்!

  • பெரிய ஆர்டர், சின்ன ஆர்டர்னு இல்லாம, எல்லா கஸ்டமருக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் கொடுக்கணும்.

  • பிசினஸ் தொடங்கறது பெரிய விஷய மில்லை. ஆனா, கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும், போட்டியாளர்கள் வளர ஆரம்பிச்சுடுவாங்க. அதனால், புதுசா தொழில் தொடங்கிய உணர்வுடன் ஒவ்வொரு நாளும் உழைக்கணும்!