பிரீமியம் ஸ்டோரி

மீண்டும் ஒரு மெகா திட்டத்தை அறிவித்திருக்கிறார் நமது பிரதமர் நரேந்திர மோடி. ரூ.100 லட்சம் கோடி செலவில் நம் நாட்டில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்பதே அவர் செய்திருக்கும் அறிவிப்பு. ‘கதி சக்தி’ (Gati Shakti) எனப் பெரியரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அடித்தளம் அமைத்துத் தருவதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது உள்கட்டமைப்பு வசதிகள்தான். அதற்கு நாமும் முக்கியத்துவம் தந்தால்தான் அதிவேக வளர்ச்சி காணமுடியும் என்பதை மத்திய அரசாங்கம் புரிந்துகொண்டிருப்பது மகிழ்ச்சியே!

ஆனால், பிரதமரின் இந்த அறிவிப்பைக் கேட்டபின் பல கேள்விகள் எழுகின்றன. ரூ.102 லட்சம் கோடி மதிப்பில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருவதாக 2019-ம் ஆண்டு டிசம்பரில் அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல் படுத்த ரூ.100 லட்சம் கோடி செலவழிக்கப்படும் எனக் கடந்த 2020 டிசம்பரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். இப்போது ரூ.100 லட்சம் கோடிக்கு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பிரதமர். இந்த மூன்று திட்டங் களும் ஒன்றா, ஒன்றுதான் எனில், ஏன் மூன்று முறை அறிவிக்கிறார்கள், வெவ்வேறானவை எனில், உள்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.300 லட்சம் கோடியை செலவழிக்கும் அளவுக்கு நம்மிடம் நிதி வசதி உள்ளதா?

தவிர, பிற நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துகிற மாதிரி நம் நாட்டில் ஏற்படுத்த முடியுமா என்பதை ஆராய வேண்டும். உதாரணமாக, நிலத்துக்கு அடியில் எரிவாயுக் குழாய்களைக் கொண்டு செல்ல சில மாநிலங்கள் அனுமதிக்கின்றன; சில மாநிலங்கள் எதிர்க்கின்றன. விவசாயிகளும் இதை எதிர்க்கின்றனர். பல்வேறு பிரச்னைகளுக்காக விவசாயிகள் ஏற்கெனவே போராடிவரும் நிலையில், இதுபோன்ற பிரச்னைகளை மத்திய அரசாங்கம் எப்படித் தீர்க்கப்போகிறது? மேலும், இப்போதுள்ள நிலையில், நகர்ப்புறங்களை யொட்டிய பகுதியிலேயே இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். இதை எல்லாம் முதலில் சரிசெய்யாமல், மெகா திட்டங்களை அறிவித்து என்ன பயன்?

இருபது ஆண்டுகளுக்கு முன், பாரதப் பிரதமராக இருந்த வாஜ்பாய் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தை சத்தமில்லாமல் உருவாக்கி சாதனை புரிந்தார். இன்று நாம் அடைந்த வளர்ச்சிக்கு அவர் அமைத்துத் தந்த சாலை வசதி முக்கியமானது. அவரைப் போல சாதனை செய்ய முயல்வதை விட்டுவிட்டு, மீண்டும் மீண்டும் புதிய திட்டங்களை அறிவிப்பது ஏன்? மக்கள் எழுப்பும் இந்தக் கேள்விக்கு மத்திய அரசாங்கம் நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு