Published:Updated:

புதிய வேலைமுறையை ஊக்குவிக்க வேண்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேஷன், அண்மையில் சர்வே ஒன்றை செய்து வெளியிட்டிருக்கிறது. இந்த சர்வேயில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த 1,210 நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் 95% நிறுவனங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் (working from home) நடைமுறையையே தாங்கள் பின்பற்றப்போவதாகத் தெரிவித்திருப்பது ஆச்சர்யம் தரும் மாற்றம் என்றே சொல்லலாம்.

உலகெங்கிலும் மனித சமூகத்துக்கு சொல்ல முடியாத பல கஷ்டங்களைத் தந்த கொரோனா பெருந்தொற்றுதான், மனிதர்கள் ஏற்கெனவே செய்துவந்த பல செயல்களை வேறுவிதமாக எப்படிச் செய்யலாம் என்று யோசிக்க வைத்திருக்கிறது. வேலைக்காக ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குப் போய் இருப்பது, வீட்டிலிருந்து கஷ்டப்பட்டு அலுவலகம் போய் வேலை பார்த்துவிட்டு, மீண்டும் கஷ்டப்பட்டு வீடு திரும்புவது... ‘இவையெல்லாம் தேவைதானா... கம்ப்யூட்டரின் உதவியுடன் அந்த வேலைகளை வீட்டில் இருந்தே செய்யலாமே’ என்கிற முடிவை எடுக்கத் தேவையான நிர்ப்பந்தத்தை கொரோனாதான் ஏற்படுத்தியிருக்கிறது.

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை எல்லாத் தொழில் நிறுவனங்களும் பின்பற்றிவிட முடியாது. குறிப்பாக, உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு இது சரிப்பட்டு வராது. என்றாலும், இந்தப் புதிய நடைமுறையை எந்தெந்த நிறுவனங்களுக்குப் பொருந்தி வருமோ, அந்த நிறுவனங்கள் எல்லாம் அதை அமல்படுத்துவது சிறந்த முடிவாகவே இருக்கும்.

இந்த நடைமுறையை அமல்படுத்தும்போது தொழில் நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்கும் மட்டுமல்ல, அரசாங்கத்துக்கும் பல நன்மைகள் கிடைக்கும். ஒரு சில நகரங்களில் அதீத வளர்ச்சி, மற்ற நகரங்களில் வளர்ச்சியின்மை என்பதில் தொடங்கி, இன்றைக்கு சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் பெட்ரோல் விலை வரை பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த நடைமுறையின்மூலம் எளிதாகத் தீர்வு காண முடியும்.

இந்தப் புதிய நடைமுறையை ஊக்குவிக்கிற மாதிரி, மத்திய, மாநில அரசாங்கங்களும் பல நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். பெரும்நகரங்களைத் தவிர, சிறு நகரங்களில் மின்சாரம் எப்போது வேண்டுமானாலும் துண்டிக்கப்படலாம் என்கிற நிலையே இருக்கிறது. இதை மாற்றி தடை இல்லா மின்சேவை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும். இன்டர்நெட் இணைப்பும் எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நல்ல பள்ளி, கல்லூரிகள் சில நகரங்களில் மட்டுமே இருக்கும் என்கிற நிலையை மாற்றி, அனைத்து ஊர்களிலும் நல்ல கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். புதிய வேலைமுறையை அமல்படுத்தும் நிறுவனங்களும் ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளையும் சலுகைகளையும் செய்து தர வேண்டும்.

நீண்டகாலத்தில் பரவலான பொருளாதார வளர்ச்சியால் அனைத்துப் பிரிவினருக்கும் நன்மை ஏற்படுத்தும் இந்தப் புதிய வேலைமுறை பற்றி மத்திய, மாநில அரசாங்கங்கள் தங்கள் கொள்கை முடிவை கூடிய சீக்கிரத்தில் அறிவிப்பது அவசியத்திலும் அவசியம்!

- ஆசிரியர்