புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் நடைபெறுகிறது. அதில் குடியரசுத் தலைவரும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பார்வையாளருமான ராம் நாத் கோவிந்த் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.

ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து கார் மூலமாக பல்கலைக்கழகம் சென்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கின்றார். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு மதியம் 1.30 மணியளவில் காலாப்பட்டு, கோட்டக்குப்பம், ஏழைமாரியம்மன் கோயில், கடற்கரை சாலை வழியாக ஆளுநர் மாளிகை செல்கின்றார். ஜனாதிபதி செல்லும் நேரத்தில், அந்தச் சாலையின் ஓரமாக சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், லாரி உள்ளிட்ட எந்த வாகனத்தையும் நிறுத்தியிருக்கக் கூடாது. மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது காவல்துறை.
அதேபோல குடியசுத் தலைவர் செல்லும்போது அவரைப் பார்த்து கை அசைக்கவோ, அவர் மீது பூ தூவவோ யாரும் முயற்சி செய்யக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கடைகளை திறக்க முடியாத அளவுக்குத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சாலையின் இருபுறமும் உள்ள போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. ஆளுநர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை 3 மணிக்கு அரவிந்தர் ஆசிரமம் செல்லும் குடியரசுத் தலைவர் அங்கு சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டு பின்னர் ஆரோவில் செல்கின்றார்.
ஆரோவிலிலிருந்து 5 மணிக்குப் புறப்படும் அவர் ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநள்ளாறு சென்று சனீஸ்வரன் கோயிலில் வழிபாடு நடத்த இருக்கிறார். 2 நாள்கள் சுற்றுப் பயணமாக புதுச்சேரி வரும் குடியரசுத் தலைவருக்காக 20 நாள்களுக்கு முன்பே கெடுபிடிகளைத் தொடங்கிவிட்டது புதுச்சேரி காவல்துறை.
லாஸ்பேட்டை விமான நிலையம் தொடங்கி, ஆளுநர் மாளிகை செல்லும் வழி என அனைத்து இடங்களிலும் மரக்கட்டைகளைக் கொண்டு தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது, அவர் செல்லும் சாலைகள் இரவோடு இரவாக சீரமைக்கப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து பேசிய வியாபாரிகள், ``முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த மறைந்த அப்துல்கலாம் ஐயாவும் புதுச்சேரிக்கு வந்திருக்காரு. ஆனால், அப்போல்லாம் இப்படி கடையை மூடச் சொல்லல. தடுப்பு வேலியும் கட்டல. ஆனால் இப்போ ரொம்ப கெடுபிடி பண்றாங்க. கடைக்கு முன்னாடியே வேலி கட்டியதோடு கஸ்டமர்ஸ் யாரும் வண்டியை விடக் கூடாதுனு சொல்லிட்டாங்க. அதுக்கு ஏன் நாங்க கடையைத் திறக்கணும்னு நாங்க திறக்கல” என்றனர்.
மேலும், ``இன்னைக்கு ஒருநாள் வியாபாரம் போயிடுச்சி. பாண்டிச்சேரி முழுக்க ரோடு பஞ்சரா கெடக்குது. ஆனால், அவர் வர்ற வழியில மட்டும் ரோடு போட்டிருக்காங்க. அதைப் போடாம அப்படியே விட்டிருந்தாலும் குடியரசுத் தலைவருக்கும் நம்ம மாநிலத்தோட உண்மையான நெலவரம் தெரிஞ்சிருக்கும்” என்கிறார்கள் ஆதங்கத்துடன்.
மேலும், லாஸ்பேட்டை விமானதள சாலையில் இருக்கும் வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் திறக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறது காவல்துறை. அதேபோல அந்தப் பகுதியில் உள்ள கடைகளையும் திறக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் குடியரசுத் தலைவர் கடக்கும் நேரத்தில் சாலைக்கு வரக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.