மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புதிய தொடர் - நல்மருந்து 2.0

சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு
பிரீமியம் ஸ்டோரி
News
சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு

நல்வாழ்வு

சித்த மருத்துவத்தில் உள்ள 32 வகையான அக மருந்துகளில் முதல் 20 வகையான மருந்துகளை மருத்துவர் அல்லாதோரே தயார் செய்து உண்டு தங்களது நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியும். 20-ம் நூற்றாண்டின் முதல் பாதி வரை பலரும் தாங்களாகவே மருந்துகளைத் தயாரித்து உண்டு வந்தனர். ஏற்கெனவே ‘பசுமை விகடன்’ இதழில் வெளி வந்த நல்மருந்து தொடரின் கடைசிக் கட்டுரையில், சித்த மருத்துவத்தில் மருந்துகள் அமையப் பெற்றிருக்கும் ஒழுங்கு முறைமை குறித்து விரிவாக எழுதியிருக்கிறேன்.

கூட்டுக்குடும்பமாக வசித்தபோது, வீட்டில் இருக்கும் பாட்டியிடமே குழந்தைகளுக்கு வரும் அத்தனை நோய்களுக்கும் தீர்வு இருந்தது. இந்தப் பாட்டி வைத்தியம் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 3 தலைமுறைகளில் ஒவ்வொரு தலைமுறைக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டதால் பாட்டி வைத்தியம் வழக்கொழிந்து வருகிறது. மூலிகைபற்றிய அறிவும், மருந்துகள் செய்யும் விதமும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு முறையாகக் கிடைக்கவில்லை.

புதிய தொடர் - நல்மருந்து 2.0

கடந்த 50 ஆண்டுகளில் இயற்கையை விட்டுத் தமிழ் சமுதாயம் வெகுதூரம் விலகிவிட்டது. இயற்கையைவிட்டு விலக விலக இயற்கை மருத்துவத்தின்மீது உள்ள நம்பிக்கையும் குறைந்து போய்விட்டது. இதற்கு முதல் காரணம், நமது குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றம்தான். கூட்டுக்குடும்ப முறையிலிருந்து தனிக்குடித்தனத்துக்கு மாறிவிட்டோம். அதனால், முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. அதேபோல ‘குடும்ப மருத்துவர்’ என்றிருந்த நிலை மாறி, ‘சிறப்பு மருத்துவர்’ (Specialist) கலாசாரம் பரவிவிட்டது. ‘நகரத்துக்குச் சென்று அதிக கட்டணம் கொடுத்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். பெரிய மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தித்தான் சிகிச்சை எடுக்க வேண்டும். விலை உயர்ந்த மருந்துகளைச் சாப்பிட்டால்தான் வியாதி குணமாகும்’ என்ற மனநிலையில்தான் அனைவரும் இருக்கிறோம். அதனால்தான், எளிய மருந்துகள் மீதுள்ள நம்பிக்கை போய்விட்டது.

‘ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்டு பல்வேறு அறிவியல் ஆய்வுகள் செய்துதான் நவீன ஆங்கில மருந்துகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஆனால், நாட்டு மருந்துகளுக்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை’ என்றொரு தவறான செய்தியும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. ‘நோய் வராமல் தடுப்பதற்குச் சித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் எண்ணெய்க்குளியல் முதலான நற்பழக்கங்களெல்லாம் மூடத்தனமானவை’ என்றும் பரப்புரை செய்யப்படுகிறது.

இன்றைய இளைய தலைமுறை, எவ்வளவோ விஷயங்களை வலிந்து தேடிச் சென்று படித்துத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறது. ஆனால், உடல்நலத்தைப் பேணக்கூடிய உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மருத்துவமுறைகள் குறித்து அக்கறை காட்டுவதில்லை. சமூகம் சார்ந்து இருந்த மருத்துவ அமைப்பு முறை, இப்போது மருந்து நிறுவனம், மருத்துவமனை ஆகியவற்றையும் மருத்துவரையும் சார்ந்துதான் இருக்கிறது.

‘என்னாச்சி… குழந்தை அழுகுது’ என்ற வார்த்தைகள் இடம்பெறும் விளம்பரம் அனைவருக்கும் நினைவிருக்கும். நான்கு தலைமுறைப் பெண்கள் அவ்விளம்பரத்தில் வந்து, குழந்தைக்கு ஒரு மருந்தைக் கொடுக்கச் சொல்வார்கள். அந்த மருந்து, சாதாரண ஓமம் கலந்த நீர்தான். நமது பாட்டிமார் ‘உரை மருந்து’ என்ற பெயரில் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்ததுதான். ஆனால், அந்த நிறுவனம், உரை மருந்தைப் புறம் தள்ளி, அந்த மருந்தைப் புழக்கத்தில் விட்டுவிட்டது. இதுபோலப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

‘காக்காய் பிடித்துக் காரியம் சாதிக்கிறான்’ என்று சொல்வோம். அதன் அர்த்தம் பலருக்கும் தெரியாது. கணவனோ மனைவியோ ஒருவருக்கொருவர் கால்கள், கைகளைப் பிடித்து அமுக்கிவிட்டுக் காரியம் சாதிப்பதுதான் அது. கால், கை பிடிப்பது என்பது, ‘காக்காய் பிடிப்பது’ என்று மாறிவிட்டது. அப்படி கால், கை பிடித்து விடும் வழக்கம் குறைந்து போனதால், மசாஜ் மையங்களை நோக்கிச் செல்கிறோம்.

மருத்துவத்துறையிலிருந்த மனிதாபிமான அணுகுமுறை, வணிகமயமாக மாறிவிட்டது. அதேபோலத்தான், பாரம்பர்யமாக நாம் கடைப்பிடித்து வந்த வேளாண் முறை நஞ்சு வேளாண்மையாக மாற்றப்பட்டுவிட்டது.

தற்போது மீண்டும் இயற்கையைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அதேபோல, மருத்துவ உலகிலும் ஒரு மாபெரும் மாற்றம் தேவைப்படுகிறது. நமது நல்வாழ்வுக்குச் சில மூலிகைச் செடிகளும் சில கடைச்சரக்கு பொருள்களுமே (சுக்கு முதலானவை) போதுமானவை. அவற்றைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவை எளிதில் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக வயலில் ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு எந்தப் பச்சிலை கொண்டு வைத்தியம் செய்வது என்று தெரிந்திருப்பதோடு, அந்தப் பச்சிலையும் வயலிலேயே இருந்துவிட்டால், அவரைக் காப்பாற்றுவது சுலபமாகிவிடும்.

அதனால், ஒவ்வொரு வீட்டிலும் சில மூலிகைச் செடிகள் இருக்க வேண்டியது அவசியம். ஊர்ப் பொதுவிலோ தகுதியான நபரின் தோட்டத்திலோ மூலிகைச் செடிகள் வளர்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்னர் சிற்றூர்களில் உள்ள பலசரக்குக் கடைகளில்கூட, அனைத்து மருந்துச் சரக்குகளும் கிடைத்தன. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. அதே சமயத்தில், சில இயற்கை அங்காடிகள், மருந்துச் சரக்குகளை விற்பனை செய்து வருவது ஆறுதலான விஷயம். கடந்த 10 ஆண்டுகளில் ‘நிலவேம்புக் குடிநீர்’ அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது 30 ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட்டங்களில் ‘விஷக்குடிநீர்’ என்ற பெயரில், புழக்கத்திலிருந்ததுதான். அதற்குத் தேவையான பொருள்களைக் கடைகளில் வாங்கி வீட்டிலேயே தயாரித்துக் குடித்து வந்தனர். அது வழக்கொழிந்து போய் மீண்டும் ஊடகங்கள்மூலம் வெளி வந்திருக்கிறது. ஆனாலும், ‘நிலவேம்புக் குடிநீர் குடிக்க வேண்டும்’ என்றுதான் பரப்புரை செய்யப்பட்டதே ஒழிய… ‘நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சைவேர், கோரைக்கிழங்கு, சந்தனச்சிறாய், பேய்ப்புடல், பற்படாகம், சுக்கு, மிளகு உள்ளிட்ட ஒன்பது சரக்குகளையும் வகைக்கு 100 கிராம் எடுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துக் காய்ச்சுவதுதான் நிலவேம்புக் குடிநீர்’ என்று சொல்லித்தரப்படவில்லை. தற்போது சித்த மருத்துவமும் வணிக மயமாகி வருவது, வேதனைக்குரியது.

தற்போதைய சூழ்நிலையில், மூலிகைகள் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதேபோல, மூலிகைகளின் பலன்கள் குறித்துப் பரப்பப்படும் மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களைச் சரிபார்க்க வேண்டியதும் அவசியம். அறிவியல்பூர்வமான உறுதியான மருத்துவப் பலன்களைப் பரப்புவதுதான் இன்றைய தேவை. இப்பணியைப் பசுமை விகடன் சரியாகச் செய்யும் என உறுதியாக நம்புகிறேன். தொடர்ந்து பல பச்சிலை மூலிகைகள் மற்றும் கடைச்சரக்குகள் குறித்தும் எழுத இருக்கிறேன். திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் அமைந்துள்ள எமது உலகத்தமிழ் மருத்துவக்கழகப் பயிற்சி மையத்தில் பயிற்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து பயணிப்போம்.

-வளரும்

தொடர்புக்கு: மைக்கேல் செயராசு, செல்போன்: 98421 66097.

மைக்கேல் செயராசு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தவர். 1990-ம் ஆண்டில் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மூலிகைகள் குறித்துக் கிராம மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். தற்போது பொதிகை மலை அடிவாரமான பாபநாசம் கிராமத்தில் வசித்து வருகிறார். இக்கிராமத்தில், ‘பொழில்’ என்ற அழகிய சோலையை அமைத்து... அதில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்விகமாகக் கொண்ட அரியவகை மூலிகைகளை வளர்த்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

புதிய தொடர் - நல்மருந்து 2.0

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ‘உலகத் தமிழ் மருத்துவக்கழகம்’ என்ற அமைப்பை நிறுவி... சித்த மருத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் இக்கருத்தரங்குகளின் மூலம் அதிகப் பயன் பெற்றுள்ளனர். பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். பாபநாசத்தில் ‘அவிழ்தம் சித்தமருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.