நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

புதிய மானிய அறிவிப்புகள்... லாபம் தர வாய்ப்புள்ள துறைகள், பங்குகள்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சரின் தீபாவளிப் பரிசு...

த்திய அரசு சுயசார்பு பாரதம் (ஆத்ம நிர்பார்) என்ற திட்டத்தின்கீழ் 12 புதிய பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங் களை அறிவித்துள்ளது. இவற்றின் மூலம் வேலைவாய்ப்பு, உற்பத்தி மற்றும் கடன் முதலீடுகளை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய திட்டங்களின் மதிப்பு மட்டுமே ரூ.9 லட்சம் கோடி. கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசாங்கம் இதுவரை ரூபாய் 30 லட்சம் கோடியை அதாவது, ஜி.டி.பி-யில் 15 சதவிகிதத்தை ஊக்குவிப்புச் செலவாக செலவழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய மானிய அறிவிப்புகள்... லாபம் தர வாய்ப்புள்ள துறைகள், பங்குகள்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளபடி, கொரோனாவுக்குப் பிறகு, வீழ்ச்சியைச் சந்தித்த இந்தியப் பொருளாதாரம், அதிலிருந்து மீண்டுவருவதற்கான அறிகுறிகளாக எரிவாயு நுகர்வு, ஜி.எஸ்.டி வருவாய், சரக்கு ரயில் சேவைகள் மற்றும் வங்கிக் கடன் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பலன்கள் மற்றும் இதனால் பயன் பெறுவோர் யார் என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்வதற்கு முன் இந்தத் திட்டங்கள் எவற்றின் பின்னணியில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தெளிவு பெற வேண்டியது அவசியம்.

ஜி.டி.பி வளர்ச்சி 24% வீழ்ச்சி...

ரிசர்வ் வங்கி அறிவித்தபடி, இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி கடந்த செப்டம்பர் காலாண்டில் 8.6 சதவிகிமாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்திய ஜி.டி.பி வளர்ச்சி 24% வீழ்ச்சி கண்டிருந்தது. இதன்மூலம் இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதக் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் இருக்கிறது என்பது நிரூபணமானது. இந்தச் சரிவு வரலாற்றில் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்தியப் பொருளாதார நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை வரும் நவம்பர் 27 -ம் தேதி அரசு வெளியிட இருக்கிறது. இந்தியக் குடும்பங்கள் மற்றும் நிறுவனங்கள் சந்தித்துள்ள அழுத்தங்களும் பிரச்னைகளும் பொருளா தாரத்தை வெகுவாகப் பாதித்திருக்கின்றன.

புதிய மானிய அறிவிப்புகள்... லாபம் தர வாய்ப்புள்ள துறைகள், பங்குகள்!

இந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்புகள் குறைந்துள்ள பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கத்தின் காரணமாக வரக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையிலும் திட்டமிடப் பட்டுள்ளது எனலாம். சுயசார்பு பொருளாதாரக் கொள்கையானது தற்போதுள்ள சூழலை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, சர்வதேசப் பொருளாதாரம் மீண்டுவருவதை நம்பி இல்லாமல், நம்முடைய பொருளாதாரத்தை மீட்கவும் ஊக்குவிக்கவும் நாமே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதாகத்தான் தெரிகிறது. அதாவது, சர்வதேச சந்தையை நம்பி இருத்தல் என்பதிலிருந்து தற்காலிகமாக விலகுவது என்பதாகவே இந்தத் திட்டங்களைப் பார்க்க முடிகிறது.

மத்திய அரசு அறிவித்துள்ள 12 அறிவிப்பு களையும் கீழ்க்கண்ட வகையில் பிரிவுகளாகப் பிரித்து அவற்றின் பலன்கள் என்னென்ன என்பதை எளிதாகப் பார்க்கலாம்.

1. வேலைவாய்ப்பு

அரசு சந்திக்கும் மிகப் பெரிய சவாலாக வேலைவாய்ப்பு இருந்து வருகிறது. வேலை வாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதைக் கவனத்தில் கொள்ளும் வகையில் நிதி அமைச்சர் மூன்று துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் விரிவாக்கங்கள் குறித்த திட்டங்களை அறிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

1. கிராமப்புறம்: கிராமங்களில் ரூ.10,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. வேலைவாய்ப்பு: நகரங்களில் 78 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.

3. வாடகை சார் மானியம்: நிறுவனங்களுக்கு புதிய வாடகை சார் மானியம்

இந்தத் திட்டங்கள் ஆரோக்கியமாகவும் இவற்றின் நோக்கம் சிறப்பாகவும் உள்ளன. மக்களின் வருவாய் ஈட்டும் திறனை மேம்படுத்து வதன் மூலமே நுகர்வை ஊக்குவித்து, பொருளா தாரத்தை ஊக்குவிக்க முடியும்.

2. விவசாயம்

இந்த ஆண்டு நல்ல பருவமழை இருப்பதால், வேளாண் துறையை ஊக்குவிக்கத் தேவையான நிதி ஆதாரம் எளிதில் கிடைக்க வழிசெய்யும் வகையில் ரூ.65,000 கோடி உர மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள், உரத்தை மானிய விலையில் பெற முடியும். இதனால் வேளாண் துறை ஊக்குவிக்கப்பட்டு, அதன் உற்பத்தி அதிகரிக்கப்படும். விளைச்சல் பகுதிகள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும், இதன்மூலம் துணை துறைகளான நீர்ப்பாசனம் மற்றும் வேளாண் உபகரணங்கள் துறைகளும் ஊக்குவிக்கப்படும்.

புதிய மானிய அறிவிப்புகள்... லாபம் தர வாய்ப்புள்ள துறைகள், பங்குகள்!

3. உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டம்

இந்த கொரோனா பேரழிவு காலத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது உற்பத்தித்துறை. இந்தத் துறையை மீட்டெடுப்பதற்கு இரண்டு வகையான திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. ஒன்று, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டம். இதன்மூலம் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவின் சந்தையை இந்தியா அடைவதற்கான இலக்கு நிர்ணயித்துள்ளது.

உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் பட்டிய லிடப்பட்டு உள்ளன. இந்தப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வழிசெய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஏ.சி.சி பேட்டரி, எலெக்ட்ரானிக் பொருள்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகள், டெக்ஸ்டைல் தயாரிப்புகள், உணவுப் பொருள்கள், சோலார் சார் பொருள்கள் மற்றும் சிறப்பு இரும்பு தயாரிப்புகள் ஆகியவை பட்டியலிடப் பட்டுள்ளன. இந்தத் திட்டம் மூலம் இந்திய உற்பத்தித் துறை பல துறைகளில் சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கும், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள், உற்பத்தித்திறன்கள் மற்றும் உற்பத்தி அளவுகள், ஏற்றுமதி அதிகரிப்பு, சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைந்த மையமாக இந்தியா உருவாக்குதல் போன்றவற்றைத் திட்டமிட வேண்டும்.

4. அவசரக் கடன் உத்தரவாத திட்டமும்

இந்தத் திட்டம் மூலம் எந்தவித அடமானமும் இல்லாமல் ஆண்டு விற்பனை அடிப்படையில் கூடுதலாகக் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தனிநபர்கள், சிறு குறு நிறுவனங்கள், தொழில் கடன்தாரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை பயனடையும்.

புதிய மானிய அறிவிப்புகள்... லாபம் தர வாய்ப்புள்ள துறைகள், பங்குகள்!

5. உயிரித் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிக்கு ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு பார்மா துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமையும். இதன்மூலம் உள்நாட்டிலேயே தடுப்பு மருந்து தயாரிப்புக்கான வழிவகை ஏற்படலாம். அப்படித் தயாரிக்கப்பட்டால் தடுப்பு மருந்து இறக்குமதி செலவு குறையும்.

6. ரியல் எஸ்டேட்

இந்தக் கொரோனா பேரழிவு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு துறை ரியல் எஸ்டேட். அரசு வழிகாட்டி மதிப்பு மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்பு இடையிலான வித்தியாசம் மேலும் 10% உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி வரையிலான வீட்டு கடன்களுக்கு அரசு வட்டிக்கு வட்டி என்பதில் தள்ளுபடி அறிவித்திருக்கிறது. இந்த நடவடிக்கை நீண்ட காலத்துக்கு ரியல் எஸ்டேட் துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவும்.

7. மற்ற துறைகள்

உள்கட்டமைப்பு, கடன் கிடைக்க வழி செய்வது, பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள், தொழில்துறை உள்கட்டமைப்பு மற்றும் பசுமை ஆற்றல் தொடர்பான அறிவிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிக்கு ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு பார்மா துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமையும்!

கவனிக்க வேண்டிய பங்குகள்...

அரசு அறிவிப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இவற்றால் பயன் அடையக் கூடிய, அதேசமயம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சிறப்பாக உள்ள பங்குகளை முதலீட்டாளர்கள் கவனிக்கலாம். அதன்படி சில பங்குகளைப் பரிந்துரைக்கிறோம். (பார்க்க, மேலே உள்ள அட்டவணை)

எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்...

அரசு அறிவித்துள்ள இந்தத் திட்டங்கள் அவற்றின் நோக்கத்தை வெற்றிகரமாக எட்டுவதற்கு சவாலாக இருப்பவை எவை என்று பார்த்தால், 1. இரண்டாம் கட்ட கொரோனோ வைரஸ் பாதிப்பு, 2. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்வதில் உள்ள சவால்கள், 3. நுகர்வு சார்ந்து ஏற்படும் மாற்றங்கள், 4. ஆட்டோமேஷன் அதாவது, தானியங்கி தொழில்நுட்பம் பெரிய அளவில் உருவாவதற் கான சாத்தியங்களைச் சொல்லலாம்.

திட்டங்கள் சரியான பாதையில் சென்றால்...

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு என்பது நமக்கு நம்முடைய சந்தை சார்ந்தும், நம்முடைய செயல்திறன் சார்ந்தும் மறு மதிப்பீடு செய்துகொள்வதற்கான வாய்ப் பாகவே பார்க்கப்படுகிறது.

நாம் சுகாதாரம் சார்ந்து பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம். இப்போது பொருளாதாரம் சார்ந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதிலிருந்து நிச்சயம் மீண்டு வருவோம். பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியிலும் வலுவாக மீண்டு வருவோம். மத்திய அரசாங்கம் தற்போது அறிவித்துள்ள இந்தத் திட்டங்கள் அவற்றின் இலக்குகளை நோக்கி சரியான பாதையில் சென்று அடையும்பட்சத்தில் இது சாத்தியம் ஆகும் என்பதில் சந்தேகமில்லை!

டிஸ்க்ளெய்மர்

ந்தக் கட்டுரையில் தரப்பட்டுள்ள பங்குகள், பரிந்துரை செய்தவரிடம் இருக்கக்கூடும். கட்டுரையில் தரப்பட்டுள்ள பங்குகளை நன்கு ஆராய்ந்தபின் வாங்குவது குறித்த முடிவை எடுக்க வேண்டும். செபி பதிவு பெற்றுள்ள முதலீட்டு ஆலோசகரிடம் கலந்தாலோசித்து, முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். முதலீட்டு முடிவுகள் முழுக்க முழுக்க முதலீட்டாளர் களையே சாரும்!