குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேவருகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 11,419 இறப்புகள் நிகழ்ந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் மட்டும் 1,026 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவுசெய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்திருக்கிறது.

இதேபோல் கார் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். மேலும், முகம் தெரிந்த அறிமுகமான ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநருடன் பயணம் செய்யும்போது அந்த ஓட்டுநர் மதுபோதையில் இருந்தால், பின்னால் அமர்ந்து இருப்பவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும். ஆனால் சவாரி செல்லும்போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் வாகனச் சட்டம் 185 r/w 188 MV விதிப்படி, இந்த அபராதம் வசூல் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது. எனவே, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் உடன் பயணிப்பவர்கள், மது அருந்தியிருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்கு பதிவுசெய்யப்பட்டு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுவதாக போக்குவரத்துக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.