உயிராக பூமிக்கு வந்த மனிதன், சடலமாக மண்ணுக்குத் திரும்புகிறான். இந்தச் சடலங்களை மண்ணில் புதைத்தோ, எரித்தோ அவர்களுக்கு மரியாதை செய்கிறோம். சடலம் மண்ணில் சிதைந்து, காற்றில் கலந்து மறைந்து போகும். அதை உரமாக்கினால் என்ன… கேட்பதற்குச் சற்று விசித்திரமாக இருந்தாலும், மனித உடல்களை உரமாக்க நியூயார்க் நகரம் அதிகாரபூர்வ ஒப்புதல் வழங்கி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் இந்தச் செயல்முறையை முதன்முறையாக வாஷிங்டன் சட்டபூர்வமாக்கியது. அதனைத் தொடர்ந்து கொலராடோ, வெர்மான்ட், கலிஃபோர்னியா போன்றவை இதனைப் பின்பற்றத் தொடங்கின. இப்போது நியூயார்க்கிலும் பின்பற்ற அதிகாரபூர்வ ஒப்புதலை அம்மாநிலத்தின் கவர்னர் கேத்தி ஹோச்சுல் சனிக்கிழமையன்று வழங்கி உள்ளார்.
அதன்படி, சடலத்தை மரக்கட்டைகள், குதிரை மசால் தாவரம், வைக்கோல் புல் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களைப் போட்டு மூடிய பாத்திரத்தில் வைத்து விடுவர். நுண்ணுயிரிகளின் செயல்பாட்டால் அந்த உடல் படிப்படியாகச் சிதையும். ஒரு மாதத்திற்குப் பிறகு, மட்கிப்போன சிதைவில் இருந்து எந்தவொரு தொற்றுநோயும் பரவாமல் இருக்க வெப்பமூட்டும் செயல்முறை மேற்கொள்ளப்படும்.

அதன்பின், அந்த மண் இறந்தவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படும். அதை வாங்கிச் செல்பவர்கள் அவர்களின் நினைவாகப் பூக்கள், காய்கறிகள், மரங்கள் போன்றவற்றை நட்டு அதில் வளர்த்துக் கொள்ளலாம்.
சடலங்களை உரமாக மாற்றும் ரீகம்போஸ் (Recompose) என்ற அமெரிக்க நிறுவனம் இச்செயல்முறையைக் குறித்துக் கூறுகையில், ``புதைப்பது அல்லது எரிப்பது போன்றவற்றை ஒப்பிடுகையில், இதில் ஒரு டன் கார்பனை சேமிக்க முடியும். ஏனெனில் காலநிலை மாற்றத்துக்கு கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு ஒரு முக்கிய காரணம்.

அதோடு நாட்டின் தகனம் மற்றும் இறுதிச் சடங்கிற்காகும் 7,848 அமெரிக்க டாலர்களை விட (6,48,228 ரூபாய்), உடலை உரமாக்க 7000 அமெரிக்க டாலர்கள் (5,72,748 ரூபாய்) வரை மட்டுமே செலவாகும்’’ எனக் கூறியுள்ளது.
`மக்கள்தொகை பெருக்கத்தினால் சடலங்களைப் புதைக்க இடம் போதாத சமயத்தில், இது ஒரு சிறந்த யோசனை' என்று சிலர் கூறினாலும், கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் `மனித உடல்கள் ஒரு வீட்டின் குப்பையைப் போல நடத்தப்படக்கூடாது' என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சடலங்களை உரமாக்குவது குறித்து உங்களின் கருத்தென்ன?