Published:Updated:

"சமூக வலைதளங்களில் இடம்பெறும் செய்திகளுக்கு உரியத் தொகை கொடுக்க வேண்டும்!"- நியூசிலாந்து அரசு அதிரடி

வலைதளங்கள்
News
வலைதளங்கள்

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற வலைதளங்களில் இடம்பெறும் செய்திகளுக்கு அந்நிறுவனங்கள் உரியத் தொகை கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது நியூசிலாந்து அரசாங்கம்.

Published:Updated:

"சமூக வலைதளங்களில் இடம்பெறும் செய்திகளுக்கு உரியத் தொகை கொடுக்க வேண்டும்!"- நியூசிலாந்து அரசு அதிரடி

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற வலைதளங்களில் இடம்பெறும் செய்திகளுக்கு அந்நிறுவனங்கள் உரியத் தொகை கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது நியூசிலாந்து அரசாங்கம்.

வலைதளங்கள்
News
வலைதளங்கள்

ந்த நவீன யுகத்தில் செய்தித்தாள்கள், இதழ்கள் மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை விட இணையதளங்களில்தான் பெரும்பான்மையான மக்கள் செய்திகளைத் தெரிந்து கொள்கின்றனர். இதன் மூலம் அச்செய்திகளைத் தயாரிக்கும் ஊடக நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வருவாய் என்பது மிகக்குறைவுதான். ஆனால் அச்செய்திகளை வெளியிடும் வலைதளங்கள் மிகப்பெரிய அளவிலான லாபத்தைப் பெறுகின்றன. குறிப்பாக உலகளவில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் தளங்களின் வழியாகச் செய்திகளைப் பெறுகின்றனர்.

தங்களுடைய பயனர்களின் பக்கத்தில் (Feed) என்ன மாதிரியான செய்திகளைக் கொடுக்க வேண்டும், எந்த ஊடகத்தினுடைய செய்தியினை கொடுக்க வேண்டும் என்பதை அந்தந்த வலைதள நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன. அதாவது, ஒரு நபர் என்ன விதமான செய்திகளை விரும்புகிறார் என்பதை 'Artificial Intelligence - Algorithm' மூலம் தெரிந்து கொண்டு அதை மட்டுமே அந்த நபருக்குக் கொடுக்கும். இது தவிர பெரும் செய்தி நிறுவனங்கள் பணம் கொடுத்து தங்களுடைய செய்தியினை அதிக பயனர்களுக்குப் பரப்பவும் செய்யும். இதனால் சிறிய அளவிலான ஊடகங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

சமூக வலைதளங்கள்
சமூக வலைதளங்கள்

நியூசிலாந்தைச் சேர்ந்த செய்தி ஊடகங்களும், வட்டார செய்தித்தாள்களும், பொருளாதார ரீதியில் தங்கள் நிறுவனங்களை நிலை நிறுத்திக் கொள்ளப் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றன. எனவே அந்நிறுவனங்கள் தங்களுடைய வலைப்பக்கங்களில் பதிவேற்றம் செய்யும் செய்திகளுக்கு உரியக் கட்டணத்தை கூகுள் (Alphabet Inc.) மற்றும் ஃபேஸ்புக் (Meta Inc.) நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றவுள்ளது நியூசிலாந்து அரசாங்கம். இதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட 'தொழிலாளர் கட்சி' பெரும் ஆதரவு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அந்நாட்டின் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வில்லி ஜாக்சன், "ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் நடைமுறையில் உள்ள இது போன்ற சட்டங்களைப் பின்பற்றியே இந்தப் புதிய சட்டமானது வரையறுக்கப்பட உள்ளது. மேலும் பிரபல டிஜிட்டல் தளங்களுக்கும் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கும் இடையேயான வணிக ரீதியிலான உறவினை இச்சட்டம் மேம்படுத்தும்" என்று கூறினார்.

கனடா அரசாங்கம், முன்னணி வலைதள நிறுவனங்களிடம் கனடிய செய்தி படைப்பாளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும் அவர்களுடைய Algorithm-ஐ மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும் என்றும் முன்மொழிந்தன. அதற்கு அந்நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

வலைதளங்கள்
வலைதளங்கள்

இது போன்ற ஒரு சட்டத்தை உலகிலேயே முதன் முதலாக அமல்படுத்தியது ஆஸ்திரேலியாதான். இது குறித்து 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC) வெளியிட்ட அறிக்கையில், "செய்தி நிறுவனங்களினுடைய உழைப்பினை இவ்வாறாகப் பயன்படுத்துவது நியாயமற்றது. செய்தி ஊடகங்களுக்கும் வலைதள நிறுவனங்களுக்கும் இடையே வணிக ரீதியில் பேரம் பேசுவதில் ஒரு சமநிலையற்ற சூழல் இருப்பதை உணர முடிகிறது. சமூகத்தில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் செய்தி ஊடகங்கள் பெரும்பங்கு வகிப்பதால் அந்த சமநிலையற்ற சூழலைச் சரி செய்ய வேண்டியது கட்டாயமாகும்" என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தங்களுடைய தேடுபொறியை ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் பிற வலைதளங்களின் இணைப்புகளைப் பகிரும் பயனர்களை Block செய்தது. இச்சம்பவத்திற்குப் பதிலளித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், "அந்நிறுவனங்கள் உலகின் போக்கை மாற்றியமைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உலகை இயக்கிக் கொண்டிருக்கவில்லை. இந்த மாதிரியான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் அமலில் உள்ள சட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகள் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை இதுபோல நிர்ப்பந்தித்திருப்பது உலக நாடுகளைக் கவனிக்கச் செய்துள்ளது.

- ரஞ்சித்