கர்நாடகா மாநிலம், ஷிவமோக்கா (Shivamogga) மாவட்டத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. மகப்பேறு வார்டு அருகே பிறந்த குழந்தையின் உடலை நாய் ஒன்று வாயில் கவ்விக்கொண்டு இழுத்துச் சென்றது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் இதைப் பார்த்து நாயை துரத்திச் சென்றனர். சிறிது நேரத்துக்குப் பிறகே நாயிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதை உறுதிசெய்திருக்கின்றனர். நாய் கடித்ததால்தான் குழந்தை இறந்ததா என்று பிரேத பரிசோதனைக்குப் பிறகு தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
குழந்தையின் பெற்றோரின் அடையாளம் தெரியவில்லை. காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் அனுப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து ஷிவமோக்கா மாவட்ட மருத்துவ அதிகாரி ராஜேஷ் சுரகிஹள்ளி, "இறந்த குழந்தை அரசு மருத்துவமனையில் பிறக்கவோ அல்லது அனுமதிக்கப்படவோ இல்லை. அரசு மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் பிறந்தன. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்," என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், குழந்தையின் பெற்றோர் குறித்து தெரிந்துகொள்ள கர்ப்பிணிப் பெண்களின் பதிவேடுகளை அருகிலுள்ள அனைத்து தனியார், அரசு மருத்துவமனைகளில் அதிகாரிகள் சோதனை செய்யத் தொடங்கியிருக்கின்றனர். ஷிவமோக்கா நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்திருப்பது குறித்து ஆய்வுசெய்ய நகராட்சி அதிகாரிகள் முயன்றுவருகின்றனர்.