அதன்படி, பள்ளிகளில் குயர் மாணவர்களுக்கு பால்-பேதமற்ற (Gender-Neutral) கழிவறைகளை அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
மேலும், விண்ணப்பப் படிவங்களில் ஆண்/பெண் பாலினத்துக்குப் பக்கத்திலேயே இன்னொரு வரிசையில், பால்புதுமையினருக்கான பாலினக் குறியீடுகள் இடம்பெறும் என்றும், படிப்படியாக பால்புதுமையினர் பற்றிய தகவல்களை பாடப்புத்தகங்களிலும் சேர்ப்பதன் மூலம் மாணவச் சமுதாயம் விழிப்புணர்வுடன் சமத்துவம் நோக்கிய பாதையில் பயணிக்கும் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
குழந்தைகளைத் தாண்டி ஆசிரியர்களுக்கும் குயர் மக்களை/குழந்தைகளை எப்படி ஆதரவுடன் கையாளவேண்டும், பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு என ஆரம்பத்தில் தடுமாறும் மாணவர்களை எப்படி அணுக வேண்டும் என்ற பயிற்சிகளையும் வழங்க இருப்பதாக தழிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
பால் பேதமற்ற கழிவறைகள், திருநர் சமுதாயத்திற்குப் பாதுகாப்பான ஒரு இடத்தை ஏற்படுத்தித் தரும். இதைப் பள்ளியிலிருந்தே தொடங்கும்போது திருநர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் தடுக்கப்படுவதுடன், அவர்களை மன அழுத்தத்தில் இருந்தும் ஒடுக்குமுறையில் இருந்தும் காக்கும்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அங்கு பால்புதுமையினர் பள்ளியில் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறார்கள், அவர்களை மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுடைய படிப்பு பாதிக்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. அது தவிர, சிறு வயதில் அவர்கள் சந்திக்கும் நிராகரிப்புகள், பெரியவர்கள் ஆகி, பக்குவம் அடைந்த பின்னும் அந்த வலி மறையாமல் அவர்களைத் துன்புறுத்துவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த Gender-Neutral கழிவறைகள் குயர் மாணவர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
நமது அண்டை மாநிலமான கேரளாவில், பால் பேதமற்ற பள்ளிச் சீருடைகளை பள்ளிகள் விருப்பத்தின் பேரில் அமல்படுத்தலாம் என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில், ’கன்வெர்ஷன் தெரபி’ எனப்படும் பாலினத்தையோ அல்லது பாலியல்பையோ மாற்றுவதாகக் கூறி மருத்தவம் பார்ப்பது சட்டப்படி குற்றமாக அறிவிக்கப்பட்டு அதற்கு முழுத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தது.