``தனக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளில் இருந்தும் வெளிவர வேண்டும்'' என இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நிர்மலாதேவி மொட்டை போட்டு வேண்டிக்கொண்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல இருந்த அவர் தனக்கு சாமி வந்ததாகக் கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், அருப்புக்கோட்டைக்குச் சென்ற அவர் அன்று இரவே அங்குள்ள தர்காவிலும் அதேபோல நடந்து கொண்டார். நீண்ட நேரமாகத் தர்காவிலிருந்து வெளியே செல்ல மறுத்தார்.
பின்னர், காவல்துறையினர் அவரை வீட்டில் கொண்டுபோய் சேர்த்தனர். சில நாள்களுக்குப் பின் மதுரை அல்லது திருநெல்வேலியில் உள்ள மனநல மருத்துவரிடம் தன்னை அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டும் எனத் தனக்கு தெரிந்தவரிடம் கூறினார். அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் வழக்கில் ஆஜராவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்துக்கு இன்று வந்தார். அப்போது அவர் மொட்டையடித்திருந்தார். `தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீருவதற்காக சில நாள்களுக்கு முன் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மொட்டை போட்டுக் கொண்டார்' என்று அவரை அறிந்தவர்கள் தெரிவித்தனர்.