சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

நியூஸ் காக்டெயில்

நியூஸ் காக்டெயில்
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் காக்டெயில்

காந்தி சொன்னது போல கிராமங்கள் மட்டுமல்ல, இதுபோன்ற கிராமத் தலைவர்களும்தான் இந்தியாவின் ஆன்மாக்கள்!

நியூஸ் காக்டெயில்

பாராளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் பஞ்சாயத்து போர்டுக்கு உண்டு என்பார்கள். சில தலைவர்கள், அந்த அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் பஞ்சாயத்தை முன்மாதிரியாக மாற்றுவார்கள். அப்படி ஒரு பஞ்சாயத்துத் தலைவர்தான் ஆறுமுகம். சேலம் மாவட்டம் வீராணம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஜருகுமலை அடிவாரத்திலிருந்து வெளியேறும் மழை நீர் வீராணம் ஏரிக்கு வந்தால் பயன் தரும். மாறாக அது சாக்கடைக் கால்வாயில் சேர்வதால் வீணாகிக்கொண்டிருந்தது. ஒரு பைப் மூலம் திசை திருப்பி இதை ஏரியில் சேர்க்க மாவட்ட நிர்வாகத்திடம் நிதி கேட்டிருந்தார் ஆறுமுகம். அது கிடைக்காததால் சொந்தச் செலவில் பைப் மற்றும் மோட்டார் போட்டுத் தண்ணீரை ஏரிக்கு வரவைத்துவிட்டார். காந்தி ஜயந்தி அன்று இதைத் தொடங்கியது கூடுதல் சிறப்பு. காந்தி சொன்னது போல கிராமங்கள் மட்டுமல்ல, இதுபோன்ற கிராமத் தலைவர்களும்தான் இந்தியாவின் ஆன்மாக்கள்!

நியூஸ் காக்டெயில்

‘ஒரே ஒரு குருக்கள் வர்றார் வழி விடுங்கோ’ என்பதாக, தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு இந்த முறை தேர்வான ஒரே அ.தி.மு.க நபர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார்தான். எப்படியாவது அவருக்கு அமைச்சர் பதவி வாங்கிவிட வேண்டுமென எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஒருவேளை, பெயரை மாற்றினால் கிடைக்கலாம் என யாரோ அட்வைஸ் தந்திருக்கிறார்கள் போல. உடனே தன் பெயரை மாற்றிக்கொண்டுவிட்டார் ஒரே எம்.பி. இனிமேல் அவர் பெயருக்குப் பின்னால் இருக்கும் குமாருக்கு வேலையில்லை. இனி அவர், ப.ரவீந்திரநாத் மட்டுமே. குமாரன் என்றால் மகன் என்றொரு அர்த்தம் உண்டு. மகன் என்றால் வாரிசு. ஒருவேளை அதனால் இருக்குமோ எனப் புது அர்த்தம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர். அமைச்சர் பதவி கிடைக்கணும்னா தீயா வேலை செய்யணும் குமாரு, ஸாரி, நாத்!

நியூஸ் காக்டெயில்

மிழகம்மீது பா.ஜ.க நீண்ட நாள்களாகச் சிறப்புக் கவனம் செலுத்திவருகிறது. ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் புதிய நிர்வாகிகள் பட்டியல் அப்படியில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலைவருக்குக்கூட அதில் இடம் கிடைக்கவில்லை. பா.ஜ.க-வில் தேசியச் செயலாளராக இருந்த ஹெச்.ராஜாவின் பெயரும் இல்லை. கட்சியின் விதிமுறை அதற்குக் காரணம் எனச் சொல்கிறார்கள். ஆனால், ராஜாவுக்கு அடுத்து என்ன என்ற கேள்விதான் இப்போ பா.ஜ.க வட்டாரத்தில் ஹாட் டாபிக். ராஜாவிற்கு இதைவிட உயரிய பதவியும் கிடைக்கும் சாத்தியமில்லை எனக் கிசுகிசுக்கிறது அரசியல் வட்டாரம். போன தலைமுறையிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் பக்கம் நிற்கும் ஹெச்.ராஜாவின் குடும்பத்துக்கு இது பின்னடைவா அல்லது தமிழிசை போல ஏதேனும் மாநிலத்துக்கு அவரை கவர்னராக மாற்றும் மறைமுக சிக்ஸரா என்பது இன்னும் தெரியவில்லை. இப்போதைக்குத் தமிழகம், பா.ஜ.க-வின் ஸ்பெஷல் கவனத்தில் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தாமரை மலராது என அவர்களே முடிவு செய்துவிட்டார்களோ?

நியூஸ் காக்டெயில்

ரசியல்வாதிகள் தொடங்கி மீம் கிரியேட்டர் வரை ‘ச்சோ ச்வீட்’ என்றால் துரைமுருகன்தான். தலைமுறை தாண்டி நிலைத்து நிற்கும் நையாண்டி கிங் அவர். பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது “உங்கள் கூட்டணியில் யார் யார் இருப்பார்கள்” என்ற கேள்விக்குப் பதில் அளித்தார். அப்போது அதெல்லாம் கடைசி நேரத்தில்கூட மாறும் என்ற பொருளில் அவர் சொன்னதில் கூட்டணிக் கட்சியினரை ஒருமையில் சொல்லிவிட்டதாகச் சர்ச்சை எழுந்தது. அதற்கு விளக்கம் அளித்து அறிக்கை விட்ட துரைமுருகன், “மாஸ்க் போட்டுட்டுப் பேசியதால அப்படிக் கேட்டிருக்கலாம். நான் யாரையும் ஒருமையில் சொல்லவில்லை” என விளக்கம் தந்திருக்கிறார். மாஸ்க் கொரோனாவிடமிருந்து மட்டுமல்ல; பல சர்ச்சைகளிலிருந்தும் காப்பாற்றும் போலிருக்கிறது!

நியூஸ் காக்டெயில்

டிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என அவரது பாடலைப் பாடி அஞ்சலி செலுத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். அட உங்களுக்குள் இப்படியொரு திறமையா? எனப் ஆச்சர்யப்பட வைத்தவர் திடீரென சிங்கர் மோடில் இருந்து ஸ்ட்ரிக்ட் ஆக மாறி, அ.தி.மு.க அமைச்சர்களுக்குக் கறார் செய்தி சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் பற்றிய திண்டுக்கல் சீனிவாசன் கருத்தைக் குறிப்பிட்டு, “அவருக்குக் கட்சியின் விதிகள் தெரியும். அதன்படி தகுந்த முறையில் பேச வேண்டும்” எனச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரே மற்றொரு பேட்டியில் “சசிகலா அ.தி.மு.க-வுக்குத் தேவையில்லாத சப்ஜெக்ட்” எனக் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லாப் பக்கமும் அணை கட்டுறாரே!

நியூஸ் காக்டெயில்

டந்த வாரம், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மொபைல் கடைத் திறப்பு விழாவிற்கு வந்திருந்தார் நிக்கி கல்ராணி. விழாவை முடித்துவிட்டுக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தவரிடம், யாரோ ஒரு நபர், "பழனி முருகனை சந்தித்துவிட்டுப் போங்கள்..." எனக் கூற, யானைப்பாதையில் மலை ஏறிவிட்டார். 10 நிமிடங்கள் மனமுருக முருகனை வேண்டிக்கொண்டாராம் நிக்கி. தொடர்ந்து படிப்பாதை வழியாக மலை இறங்கியிருக்கிறார். நிக்கியின் சகோதரி சஞ்சனா கல்ராணி சமீபத்தில் போதை தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடத்தைப் போக்க பழனி முருகனை தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் எனக் கூறியதன் அடிப்படையில், சுவாமி தரிசனம் செய்தார் நிக்கி என்கின்றனர். தீருமா சங்கடங்கள்?

- எம்.கணேஷ்.

நியூஸ் காக்டெயில்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லோர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் எனச் சொல்லி வென்றவர்கள் இருக்கிறார்கள். அரசு மக்களுக்குப் பணம் தருவதை மத்தியிலும் மாநிலத்திலும் நாம் பார்த்திருப்போம். ஆனால், மக்கள் எல்லோரும் சேர்ந்து பணம் போட்டு அரசின் மானத்தைக் காப்பாற்றிய சம்பவம் செங்கல்பட்டில் நடந்திருக்கிறது. சென்னையிலிருந்து திருச்சி சென்ற அரசு வாகனம் ஒன்றுக்கு செங்கல்பட்டு டோல்கேட்டில் கட்டணம் கேட்டிருக்கிறார்கள். ‘அரசுப் பேருந்துக்கு ஏன் கட்டணம்? கட்ட முடியாது’ என ஓட்டுநர் மறுத்திருக்கிறார். கட்டாமல் போக முடியாதென வண்டியை ஓரங்கட்டி விட்டார்கள் சுங்கச் சாவடி அதிகாரிகள். நீண்ட நேரம் ஆனதால் பயணிகள் பிரச்னையை அறிந்து ஆளுக்குப் பத்து ரூபாய் போட்டு கட்டணத்தைக் கட்டுமாறு ஓட்டுநரிடம் தந்திருக்கிறார்கள். பணம் கட்டிய பின்னரே வண்டி திருச்சியை நோக்கி நகர்ந்திருக்கிறது. இது உங்கள் சொத்து!

நியூஸ் காக்டெயில்

மிழகத்தின் போஸ்டர் தலைநகரம் மதுரைதான். அரசியல் தாண்டி, சினிமா ஹீரோக்களின் ரசிகர்கள் செய்யும் தடாலடிகள் கூடுதல் சுவாரஸ்யம். சில நாள்களுக்கு முன்புதான் விஜய் ரசிகர்கள் அவரை எம்.ஜி.ஆர் கெட்டப்பில் ஒட்டிய போஸ்டர் சர்ச்சை ஆனது. அதற்கு முன் அஜித் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு ‘இது தமிழ்நாடு அல்ல; தல நாடு’ எனப் பற்ற வைத்தார்கள். இப்போது சூர்யா ரசிகர்கள் டர்ன். “வாடிவாசல் நாயகனே” என ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில் அவரும் அரசியலுக்கு வர வேண்டுமென ரசிகர்கள் விருப்பத்தைத் தெரிவிக்க, சர்ச்சை எழுந்திருக்கிறது. கல்விப் பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுக்கும் சூர்யா அரசியலுக்கு வருவாரா என்று அவ்வப்போது விவாதம் நடப்பதுண்டு. இந்த போஸ்டர் இனி அந்த விவாதம் மதுரை டீக்கடைகளிலும் நடக்க உதவியிருக்கிறது. காப்பானா, மாற்றானா?