கட்டுரைகள்
Published:Updated:

நியூஸ் காக்டெயில்

சூரி,  விஷ்ணு விஷால்
பிரீமியம் ஸ்டோரி
News
சூரி, விஷ்ணு விஷால்

சூரியும் விஷ்ணு விஷாலும் காமெடிப் படங்களுக்கு நல்ல கூட்டணி. ஆனால், நிஜத்தில் இப்போது இருவரும் ஹீரோ-வில்லன்.

குஷ்பு மீண்டும் கட்சி மாறியிருக்கிறார். தி.மு.க-வில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய குஷ்பூ, நான்கே ஆண்டுகளில் காங்கிரஸ் பக்கம் சாய்ந்தார்.
நியூஸ் காக்டெயில்

“என் பிறந்த வீட்டுக்கு வந்ததைப் போல உணர்கிறேன்” என்று சொன்னவருக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி தந்தது காங்கிரஸ். ஆனால், தமிழக காங்கிரஸார் அவரைக் கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தத்தில் இருந்த குஷ்பூ இப்போது பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் சேர்ந்தவருக்கு விரைவில் ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. பெண்கள் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள் எனச் சில நாள்கள் முன்புவரை பா.ஜ.க அரசை விமர்சித்து வந்த குஷ்பூ, இப்போதுதான் மோடி எப்படிப்பட்ட தலைவர் என்ற புரிதல் வந்ததாகச் சொல்லியிருக்கிறார். யார் தலைவர் என்றே தெளிவில்லாமல் காங்கிரஸ் குழம்புவதாக குஷ்பூ சொல்ல, அவர் போவதால் காங்கிரஸுக்கு எந்த இழப்புமில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சொல்ல, ஆரம்பமே சூடு பிடித்திருக்கிறது.

நியூஸ் காக்டெயில்

மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் தென்னிந்தியாவின் இயற்கைக்கொடைகள். கணக்கற்ற அழகையும் அதிசயங்களையும் கொண்ட இந்த மலைத்தொடர்களின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்வு. குறிப்பிட்ட கால இடைவெளியில் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் மேற்குத் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலையை நோக்கிப் படையெடுக்கும். இதற்கான காரணங்களை அறிய நடத்தப்படும் ஆய்வுகள் எல்லாம் ஆரம்பக்கட்டத்திலே இருக்கின்றன. இருந்தாலும், பொதுவாக நம்பப்படும் கூற்று, பருவமழைதான். இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை கேரளாவிலிருந்தே தொடங்கும். அங்கு மழை தொடங்கும் சமிக்ஞைகள் தெரிந்தவுடன் குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பட்டாம்பூச்சிகள் கூட்டமாக கிழக்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி நகர்கின்றன. இதைக் கண்காணிக்க பட்டர்ப்ளை மைக்ரேசன் ஆப் இந்தியா என்ற அமைப்பு இருக்கிறது. இவர்கள் ஓரிடத்திலிருந்து பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கியதும் வாட்ஸப் குழு மூலம் அடுத்த பகுதிக்குத் தெரியப்படுத்துகிறார்கள். பட்டாம்பூச்சிகளின் தடம் பெரும்பாலும் மாறுவதில்லை என்பதால் அந்தப் பயணத்தை முழுவதுமாக டிராக் செய்கிறார்கள். எல்லாப் பட்டாம்பூச்சிகளும் இப்படி இடம்பெயர்வதில்லை. இப்படி இடம்பெயரும் பட்டாம்பூச்சிகளை மைக்ரன்ட் பட்டர்ப்ளை என்கிறார்கள். எல்லா ஆண்டும் இது நடந்தாலும் 10 ஆன்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்திருக்கின்றன. லாக்டௌன் எபெக்ட் போல!

நியூஸ் காக்டெயில்

சூரியும் விஷ்ணு விஷாலும் காமெடிப் படங்களுக்கு நல்ல கூட்டணி. ஆனால், நிஜத்தில் இப்போது இருவரும் ஹீரோ-வில்லன். ஆனால் யார் வில்லன் யார் ஹீரோ என்றுதான் இன்னமும் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி ஒருவரிடமிருந்து நிலம் வாங்க முடிவு செய்து, அந்த நபர் விஷ்ணு விஷால் தந்தைக்குத் தெரிந்தவர் என்பதால் அந்த நபரைப் பற்றி அவர்களிடம் விசாரித்திருக்கிறார் சூரி. "தெரிந்தவர்தான்; ஆனால் நிலம் வாங்குவது உங்க பாடு. செக் பண்ணிக்கோங்க" என விஷ்ணுவின் தந்தை தரப்பில் சொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். நிலமும் விற்பனை ஆகிவிட்டது. ஆனால், அதன் பின்னர் தான் வில்லங்கமே. நடிகர் சூரிக்கு தான் "ஏமாற்றப்பட்டுவிட்டோமோ... விலை அதிகம் தந்து விட்டோமோ" என்ற சந்தேகம் வர விஷ்ணுவின் தந்தையிடம் அந்தப் பணத்தைத் திரும்பப்பெற்றுத்தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால், இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விஷ்ணுவின் தந்தை பதில் அளித்திருக்கிறார். சூரி இப்போது விஷ்ணுவின் தந்தைமீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்கிறது சூரி தரப்பு. வழக்கைச் சந்தித்து தன் தந்தை மீது எந்தக் குற்றமில்லை என நிரூபிப்பேன் என்கிறார் விஷ்ணு விஷால்!

நியூஸ் காக்டெயில்

ரசாங்கம் வெளியிடும் கணக்கு வழக்குகளில் குளறுபடிகள் இருப்பது ஒன்றும் தமிழகத்திற்குப் புதிதல்ல. அந்த வகையில், திருப்பூர்த் தொகுதியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ குணசேகரன் திறந்துவைத்த தண்ணீர்த்தொட்டிதான் இப்போது செய்தியாகியிருக்கிறது. 2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டிமீது அந்தத் திட்ட மதிப்பீடு ரூ.7.7 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டிருந்த புகைப்படம் வெளியானதும் வைரல் ஆனது. ‘நீங்க நினைக்குற மாதிரி இல்லைங்க’ என அவசரஅவசரமாக வீடியோ வெளியிட்டு தன்னிலை விளக்கம் அளித்தார் குணசேகரன். திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட 50-வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் முதல் வீதியில் ஏற்கெனவே உள்ள கைப்பம்பினை அகற்றி மின்மோட்டார் பொருத்தி, ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் மற்றும் முத்து விநாயகர் கோயில் வீதிகளில் தண்ணீர் வசதி செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. எம்.எல்.ஏ வெளியிட்ட வீடியோவில், “அதிகாரிகளிடம் விசாரித்தேன், இந்த மொத்தத் திட்டத்துக்கான செலவையே அதில் குறிப்பிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தனர்” என்று சொல்லியிருப்பதோடு, செலவுக் கணக்கையும் வெளியிட்டுள்ளார். வெறும் இட்லிக்கே ஒன்றரைக் கோடி பில் எழுதிய வரலாறு உண்டல்லவா... அதான் பயந்துட்டோம்.

நியூஸ் காக்டெயில்

திருச்செந்தூர்த் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன். வயது 67. ஆனால் இருபது வயது இளைஞர்போல, வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை சகிதம் சுழன்று சுழன்று இவர் சிலம்பம் ஆடும் வீடியோதான் இப்போது திருச்செந்தூர் வாசிகளின் பேவரிட். தொகுதி மக்களின் வீட்டு விசேஷங்கள் முதல், திறப்பு விழாக்கள் வரை அன்புக்கு அடிமையாகி ஆல் டைம் ப்ரெசென்ட் சொல்லும் எம்.எல்.ஏ சமீபத்தில், அவர் செம ஸ்டைலாக கம்பு சுத்தி விளையாடும் வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில் ‘அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ’ என பிஜிஎம் சேர்த்து வேறு தூள் கிளப்புகிறார்கள் அவரின் அபிமானிகள். தேர்தல் நெருங்குகிறது, இனி 234 தொகுதிகளிலும் சுத்துவார்கள்.

நியூஸ் காக்டெயில்

சென்னையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள காதர் நவாஸ் கான் சாலையில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் விநோதமான ஒரு கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சம்பவத்தன்று, திடீரென நூறுக்கும் மேற்பட்ட நபர்கள் கடைக்குள் நுழைந்திருக்கிறார்கள். கடை ஊழியர்களை மிரட்டித் தள்ளிவிட்டு, வாடிக்கையாளர்களை வெளியேற்றி, சிசிடிவி கேமிராக்களை உடைத்துவிட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களைக் குட்டி யானை வைத்துக் கடத்தியிருக்கிறார்கள். அதற்குள் தகவல் அறிந்து போலீசார் வர, பலர் தப்பித்துவிட்டார்கள். பிடிபட்ட சுமார் இருபது பேரில் பாதிப் பேர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்திருக்கிறது. தப்பித்துச் சென்றவர்கள் போலீசாரிடம் ஆதாரம் எதுவும் சிக்கக் கூடாதென புத்திசாலித்தனமாக யோசித்து சிசிடிவி பதிவுகள் ரெகார்டு செய்யும் கருவியைத் திருட நினைத்திருக்கிறார்கள். ஆனால், சிசிடிவி டி.வி.ஆரை (காட்சிகள் சேமிக்கப்படும் கருவி) எடுத்துச்செல்வதற்கு பதிலாக கம்ப்யூட்டரில் உள்ள சி.பி.யுவைத் திருடிச் சென்றிருப்பதுதான் அந்த புத்திசாலித்தனத்திற்கான ட்விஸ்ட். கூட்டமா சேர்ந்து திருடுறதுக்குப் பேர்தான் ‘புதிய இந்தியா’வா காவி பாய்ஸ்?

நியூஸ் காக்டெயில்

புகை, மதுபோல இணையமும் போதைதான். முதல் இரண்டிற்காவது சமூகக் கட்டுப்பாடுகள் நிறைய உண்டு. ஆனால் இணைய போதைக்கு அந்த வானமே எல்லை. இதில் டிக்டாக் செயலிக்கு முதல் ரேங்க். குற்ற நிகழ்வுகள் தொடங்கி, சாமானியர்களின் புகழ் வரை டிக்டாக் அள்ள அள்ள செய்தி கொடுத்தது. இந்த டிக்டாக் பிரபலங்களில் மறக்க முடியாதவர் ஜி.பி.முத்து. குறிப்பிட்ட சமூகத்தைக் கிண்டல் செய்து, வீடியோ வெளியிட்டதாக போலீஸ் விசாரணை வரை சென்று திரும்பியது முதல் டிக்டாக் தடை நீக்கக் கோரி பிரதமர் மோடிக்குக் கோரிக்கை வைத்தது வரை அதகளம் செய்திருக்கிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் கரை ஒதுங்கியவர் தற்கொலை முயற்சி செய்து இப்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். போலீசார் விசாரித்து வரும் நிலையில், வழக்கம்போல வயிற்று வலி, குடும்பத் தகராறு என சமூக வலைதளங்களில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நலம் பெறுங்கள் முத்து!