மதுரை: 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நிலைப்பாடு என்ன?! - ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் அழகிரி #NowAtVikatan

03-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
ஆலோசனைக் கூட்டம் நடத்தும் அழகிரி!
மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனை நடத்துகிறார் மு.க.அழகிரி. புதிய கட்சி தொடங்கலாமா என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அழகிரி வீட்டிலிருந்து விழா நடைபெறும் இடம் வரை வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கருணாநிதி, மு.க.அழகிரி, துரை தயாநிதியின் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. பாண்டி கோயில் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது.
இன்றைய ஆலோசனைக்குப் பிறகு தனது அரசியல் நிலைப்பாட்டை அழகிரி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் பிறந்தநாளில் அறிவிப்பு வெளியாகும் என்ற கருத்தும் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகிறது!
கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு அனுமதி!
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுவிட்டபோதிலும், கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அதே நேரத்தில், கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்றுவந்தன.

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஜெனரல், ``சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் தடுப்பூசிகளுக்கு அவசரகாலச் சூழ்நிலையில் அனுமதி வழங்கப்படுகின்றன. பல்வேறுகட்ட சோதனைகளுக்குப் பிறகு கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார். இந்த இரண்டு மருந்துகளையும் 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸில் பராமரிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.