Election bannerElection banner
Published:Updated:

`எங்களுக்கு நீட் வேண்டாம்... தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்!’ - சுகாதாரத்துறை கூட்டத்தில் தமிழக அரசு #NowAtVikatan

தமிழக அரசு
தமிழக அரசு

10-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

10 Apr 2021 3 PM

`தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது!’

நீட்
நீட்

இந்தியாவின் அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளோடு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நீட் தேர்வு உள்ளிட்ட துறை சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு, ``தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டது. மேலும், தமிழகத்தில் ஏற்கெனவே பின்பற்றப்பட்டுவரும் இட ஒதுக்கீடு முறையை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம் எனவும் தெரிவித்திருக்கிறது. மேலும் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தின் நிலைபாட்டை விரைவில் எழுத்துபூர்வமாக சமர்ப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

10 Apr 2021 1 PM

மாணவர் விடுதி கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது!

சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. சென்னையிலுள்ள மாணவர் விடுதி கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக் கவசம் அணிவதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்றார்.

10 Apr 2021 12 PM

கட்டாயப் பணி ஓய்வுக்குப் பரிந்துரை!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தநிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பொறுப்பிலிருந்த ஒன்பது அதிகாரிகளைக் கட்டாயப் பணி ஓய்வில் அனுப்ப தகவல் ஆணையர், தலைமைச் செயலாளருக்குப் பரிந்துரைத்திருக்கிறார்.

10 Apr 2021 10 AM

ஒன்றரை லட்சத்தை நெருங்கிய ஒரு நாள் பாதிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த வாரம் ஒரு நாள் பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்தநிலையில், தற்போது அந்த பாதிப்பு ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,45,384 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,32,05,926-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா

கொரோனா காரணமாக ஒரே நாளில் 794 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த மரணங்களில் எண்ணிக்கை 1,68,436-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 77,567 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 10,46,631 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மேலும், இந்தியாவில் தற்போது வரையில் 9,80,75,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு