Published:Updated:

`26 ஆண்டுகள்; இழப்பீடு வழங்கவில்லை; 10 அரசுப் பேருந்துகள் ஜப்தி!’- அதிரடி காட்டிய வேலூர் நீதிமன்றம்

வேலூரில், போக்குவரத்துப் பணிமனை அமைக்கக் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு 26 ஆண்டுகளாக உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், 10 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள்
ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள்

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பணிமனை அமைப்பதற்காக 1993-ல் கிரிஜம்மாள் (74) என்பவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கான உரிய இழப்பீட்டுத் தொகையை போக்குவரத்துக் கழகம் வழங்கவில்லை.

நீதிமன்ற உத்தரவு நகல்
நீதிமன்ற உத்தரவு நகல்

பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் கிரிஜம்மாள், வேலூர் நில ஆர்ஜித நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த நீதிமன்றம், நிலத்தின் மதிப்புக்கேற்ப அசல் வட்டியுடன் சேர்த்து கிரிஜம்மாளுக்கு 1 கோடியே 75 லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட்டது.

இந்தத் தொகையை வழங்காமல் போக்குவரத்துக் கழகம் காலம் கடத்தியது. தீர்ப்பை மதிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட விழுப்புரம் போக்குவரத்துக்குக் கழக நிர்வாகத்தைக் கண்டித்த நீதிபதி பக்தவச்சலு, இழப்பீட்டுத் தொகைக்கு நிகராக 30 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

ஜப்தி உத்தரவைப் பேருந்தில் ஒட்டிய நீதிமன்ற ஊழியர்கள்
ஜப்தி உத்தரவைப் பேருந்தில் ஒட்டிய நீதிமன்ற ஊழியர்கள்

அதன்படி, கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு ஒரு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். அதைத்தொடர்ந்து, மேலும் 10 பேருந்துகளை ஜப்தி செய்வதற்காக இன்று மதியம் வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அங்கு பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்த 10 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்தனர்.

பேருந்துகளுக்குள் அமர்ந்திருந்த வெளியூர் செல்லும் பயணிகள் ஜப்தி விவரத்தை அறியாமல் நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர். ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் பார்த்து, `பஸ் எப்போது புறப்படும்; ஏன் எதைக்கேட்டாலும் வாய்த் திறக்காமல் அமைதியாக இருக்கீங்க!’ என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.

ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள்
ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள்

அங்கு வந்த பத்திரிகையாளர்களிடம் விவரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகே பேருந்துகளை விட்டு கீழே இறங்கி வேறு பேருந்துகளை தேடிச் சென்றனர். ஜப்தி செய்யப்பட்ட 10 பேருந்துகளும் நீதிமன்ற வளாகத்தில் கொண்டுசென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தால், பயணிகள் கடும் அவதிக்குள்ளானதோடு பேருந்து நிலையமே பரபரப்பாக காணப்பட்டது.