Published:Updated:

`இலவச மார்பக அறுவைசிகிச்சை' அறிவிப்பு! - தமிழக அரசுக்கு எதிராக உரக்க ஒலிக்கும் கண்டனக் குரல்கள்!

`இலவச மார்பக அறுவைசிகிச்சை' அறிவிப்பு! - தமிழக அரசுக்கு எதிராக உரக்க ஒலிக்கும் கண்டனக் குரல்கள்!
`இலவச மார்பக அறுவைசிகிச்சை' அறிவிப்பு! - தமிழக அரசுக்கு எதிராக உரக்க ஒலிக்கும் கண்டனக் குரல்கள்!

`பெண்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் முக்கியமா? இல்லை அழகுக்கான சிகிச்சைகள் முக்கியமா? உடலமைப்பை வைத்து அழகைத் தீர்மானிப்பதை அரசே ஊக்குவிப்பது மிகவும் தவறான போக்கு. இப்போது என்ன தேவையோ, அதில் மட்டும் கவனம் செலுத்தி, அதைச் செய்தாலே போதும். இதெல்லாம் தேவையில்லாத ஓர் அறிவிப்பு" தமிழ்நாடு சுகாதாரத்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்புக்கு வந்த எதிர்வினை அது என்ன அறிவிப்பு?

கடந்த மாதம் 7-ம் தேதி, தமிழகத்திலேயே முதன்முறையாக கை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சைத் துறையைச் (Department of Plastic Surgery) சேர்ந்த மருத்துவர்கள். மூளைச் சாவடைந்த சென்னை மணலியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் கைகளை, மின் விபத்தால் தன் இரு கைகளையும் இழந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்குப் பொருத்தினார்கள். இதற்காக, ஸ்டான்லி மருத்துவமனையில் விழா ஒன்றும் நடைபெற்றது.

அந்த விழாவில் ஸ்டான்லி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சைத் துறையில் புதிதாகச் செயல்படவிருக்கும் உயர் சிறப்பு வெளிநோயாளிகள் பிரிவு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. திங்கள் முதல் வெள்ளி வரை இந்தப் பிரிவு செயல்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னைக்குச் சிகிச்சையளிக்கப்படும். அதன்படி மார்பகச் சீரமைப்பு மற்றும் அழகியல் பிரச்னைக்கு திங்கள்கிழமையும், உதடு மற்றும் அன்னப்பிளவுக்கு செவ்வாய்க்கிழமையும், நீண்ட நாள் காயங்களுக்கு புதன்கிழமையும், கை மாற்று அறுவைசிகிச்சை மற்றும் கை தானத்துக்கான பதிவுக்கு வியாழக்கிழமையும், கை நரம்பு சிகிச்சைக்கு வெள்ளிக்கிழமையும் இந்தப் பிரிவு செயல்படவிருக்கிறது' என்று அறிவிக்கப்பட்டது.

இதுவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு மட்டும் செய்யப்பட்டுவந்தது இலவச மார்பக அறுவைசிகிச்சை. `இனி இந்தச் சிகிச்சையை தங்கள் அழகை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களும் செய்துகொள்ளலாம்... இலவசமாக' என்று அறிவித்திருக்கிறது இந்தத் துறை. உலகிலேயே மார்பக மாற்று அறுவைசிகிச்சையை இலவசமாகச் செய்ய முன்வந்திருப்பது தமிழக அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்துப் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்... `வெளியில் சென்று இதுபோன்ற சிகிச்சைகளைச் செய்துகொள்வதால் பல ஆபத்துகள் நிகழ்கின்றன. பணமும் அதிகமாகச் செலவாகிறது. அதனால், பல பேர் கடனாளிகளாகவும் ஆகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த அறிவிப்பு. தமிழக அரசு இதற்கான நிதியை வழங்கும். இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் கொண்டுவரப்படும்" என்றார்.

ஸ்டான்லி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சைத் துறை தலைமைப் பேராசிரியர் ரமாதேவி `இது போன்ற சிகிச்சைகள் பெண்களுக்கு உளவியல்ரீதியாக நம்பிக்கையளிக்கும்'' என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், இந்த அறிவிப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், மருத்துவர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

"மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அறுவைசிகிச்சை செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது. மருத்துவரீதியாக இதுபோன்ற அறுவைசிகிச்சைகள் தேவையான ஒன்றுதான். ஆனால், அழகுக்காகவும் இதைச் செய்துகொள்ளலாம் என்பது தவறான போக்கு. பல முக்கியமான அறுவைசிகிச்சைகளைச் செய்துகொள்ள முடியாமல் மக்கள் அவதிப்படும் வேளையில் இது அவசியம்தானா?அழகுணர்ச்சியை ஊக்குவிக்கும்விதமாக அரசாங்கம் செயல்படுவது மிகவும் தவறு. அழகு என்று சில விஷயங்களை அரசே வரையறை செய்துகொண்டு, அதற்காகப் பணம் செலவழிப்பது சரியல்ல. அழகுக்காகச் செய்யப்படும் இந்தச் சிகிச்சைகள், அவர்களுக்கு உளவியல்ரீதியாக நம்பிக்கை தரும் என்று சொல்கிறார்கள். அப்படி யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு கவுன்சலிங்தான் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களின் சிந்தனையை மேலும் பாழாக்கக் கூடாது.

பெண்களுக்கு அவசியமான தேவைகள் பல இருக்கின்றன. உதாரணமாக, புற்றுநோய்களைக் கண்டறிவதற்கான மையங்களை அதிகமாக ஏற்படுத்தலாம். மரபியல்ரீதியான பல நோய்களுக்குச் சிலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள்... அதற்கான மையங்களை ஏற்படுத்தலாம். மகப்பேறு சிகிச்சைகளுக்காக மருத்துவர்களை அதிகப்படுத்தலாம். குழந்தையின்மைப் பிரச்னைக்குச் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் ஏராளமான பணத்தைச் செலவழிக்கிறார்கள் பலர். அதற்கான வசதிகளை நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் மேம்படுத்தலாம். அதை விட்டுவிட்டு மார்பகத்தை வைத்துத்தான் ஒரு பெண்ணின் அழகை தீர்மானிப்பது என்கிற கலாசாரத்தை அரசே ஊக்குவிப்பது மிகவும் வருந்தத்தக்கது" என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.

இது குறித்து பொதுநல மருத்துவர் புகழேந்தி

``பெண்களுக்கு முன்பெல்லாம், கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புதான் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது மார்பகப் புற்றுநோய் பெருகிவருகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை முதலில் கண்டறிய வேண்டும். நோய் வராமல் தடுப்பதற்கான முயற்சிகளைத்தான் ஓர் அரசாங்கம் எடுக்க வேண்டுமே தவிர, வந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்கக் கூடாது.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், மாநகரங்களிலிருக்கும் மக்களுக்கு எளிதாகக் கிடைத்துவிடும். சிறு நகரங்களில்,

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அடிப்படை மருத்துவ வசதிகளுக்கே பல கிராமங்கள் அல்லாடும்போது, இது போன்ற சிகிச்சைகளுக்கான வாய்ப்புகள் அங்கே கிடைக்குமா என்றே தெரியவில்லை" என்றார்.

ஸ்டான்லி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சைத் துறை தலைமைப் பேராசிரியர் ரமாதேவியிடம் இது குறித்துப் பேசினோம்... ``பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் பெண்களுக்கு ஒட்டுறுப்புச் சிகிச்சைகள் பற்றி அதிகமாகத் தெரிவதில்லை. உடலில் ஏதாவது பாதிப்பு இருந்தால், வாழ்நாள் முழுக்க அப்படியே வாழ்ந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த உயர் சிகிச்சைப் பிரிவு. இந்தப் பிரிவு வாரத்தில் ஐந்து நாள்கள் செயல்படவிருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த மார்பக அறுவை சிகிச்சை.

மார்பகத்தை அழகுபடுத்துவதற்காக இந்த சிகிச்சை செய்யப்படுவதில்லை. பெரிய மார்பகங்கள் இருப்பதாலேயே, தோல் பாதிப்பு, தோள்பட்டைவலி, கைவலி போன்ற பாதிப்புகள் பல பெண்களுக்கு ஏற்படுகின்றன. அதிகச் செலவு செய்து அறுவைசிகிச்சை செய்துகொள்ள முடியாமல் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த இலவச அறுவைசிகிச்சைகள்.

இந்தச் சிகிச்சைகளில் மார்பகங்களைப் பெருக்குதல் (Breast augmentation), மார்பங்களைக் குறைத்தல் (Breast reduction), மார்பக மறுசீரமைப்பு (Breast reconstruction) ஆகியவை இருக்கின்றன. ஆனால், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மார்பகம் நீக்கப்பட்ட பெண்கள் கடைசிவரை அந்த நிலையிலேயே இருந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு மார்பக மறுசீரமைப்புச் சிகிச்சை குறித்துத் தெரிவதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு இந்தச் சிறப்பு கிளினிக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மார்பு தொடர்பான பிரச்னைகளுக்கு இங்கே சிகிச்சை பெறலாம். இப்போது, ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும் மார்பகம் தொடர்பான இலவச அறுவைசிகிச்சைகள் செய்யப்படுகின்றன" என்றார் ரமாதேவி.