Published:Updated:

மனச்சிறையில் சில மர்மங்கள் - 1

மனச்சிறையில் சில மர்மங்கள் - 1
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 1

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

மனச்சிறையில் சில மர்மங்கள் - 1

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

Published:Updated:
மனச்சிறையில் சில மர்மங்கள் - 1
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 1
மனச்சிறையில் சில மர்மங்கள் - 1

மீதமிருக்கும் காதல்கள்

கல்பனா ஒரு பக்திமான். முருகன்தான் அவளுடைய இஷ்ட தெய்வம். அந்த ஊரின் பிரபல முருகன் கோயில்களில் இவள் ஒரு முக்கியப் புள்ளி. அவள் வீட்டு பூஜை அறையே ஒரு மினி முருகன் கோயில் மாதிரிதான் இருக்கும். ஆனால், திடீரென்று அவளுடைய 20 வயது மகன் அன்பு, அருள் வந்து சாமி ஆடியதைப் பார்த்து அவளுக்கு பெரும் கவலை ஏற்பட்டது.

அன்பு, ஆ... ஊ... என்று கத்தினான். ஏ... என்று எகிறினான். சில நிமிடங்கள் சிலை மாதிரி இருந்தான். அப்புறம் ஓ... என்று அழுதான். உடனே ஈ... என்று பல்லைக் காட்டி ஓவராய் சிரித்தான். கல்பனாவுக்கு இவனுடைய நடத்தை பயத்தைக் கிளப்பியது.

சத்தம் கேட்டு வந்த அண்டை அயலார் எல்லாம், “இவ பாட்டுக்கு பிள்ளைங்களை கவனிக்காம சாமி சாமினு சுத்திக்கிட்டு இருந்தா. அதான், பையனுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு” என்று கிசுகிசுத்தபோதுதான், திடீரென வீறுகொண்டு, “ஏய்... நான்தான் கதிர்காமன் வந்திருக்கேன்” என்றான் அன்பு.

உடனே எல்லோரும், ‘ஓம் முருகா, அரோகரா, சிவ சிவா’’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு, அன்புக்கு மரியாதை செய்து, சூடம் ஏற்றி, முருகனை மலையேறவைத்தார்கள்.

அதற்குப் பிறகும் அன்பு அமைதியாகவே இருந்தான். தனிமையை விரும்பினான். அவனுடைய அறையை இருட்டாக்கிக் கொண்டான். சாப்பிடாமல் உடல் மெலிந்தான். தூக்கமும் குறைவுதான்போல. ஆனால், கல்பனாவுக்கு எதையும் தெளிவாகக் கவனிக்கக்கூட முடியவில்லை. அவளுக்கும் அவள் கணவனுக்கும் ரொம்ப காலமாகவே உறவு கசந்துவிட்டதால், இவள் ஏற்கெனவே மனமுடைந்துபோய், முருகனே கதி என்று கிடந்தாள். குழந்தைகளின் நலன் கருதி கணவனோடு ஒரே வீட்டில் வாழ்வதை சகித்துக்கொள்ளும் பெண்களின் பேசிக் ஃபார்முலாவை அவளும் கடைப்பிடித்திருந்தாள். ஆனால், இப்போது இத்தனை நாள் கஷ்டப்பட்டதற்கெல்லாம் பலனே இல்லாமல் பையன் இப்படிச் சித்தம் கலங்கி இருப்பதைப் பார்த்தால்…

மனச்சிறையில் சில மர்மங்கள் - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்பனா முடிந்த மட்டும் தன் மகனுக்கு உதவ முயன்றாள். கோயிலில் அன்புக்கான பிரத்யேக பூஜைகள், மிக வலிமை எனக் கருதப்பட்ட சண்டி யாகம், பரிகாரங்கள், க்ஷேத்திராடங்கள் எல்லாமே செய்தும், அன்பு அடிக்கடி ஆள் மாறி, மிருகம் மாதிரியும், முருகன் மாதிரியும், சிலை மாதிரியும் நடந்துகொள்ள, மனமுடைந்துபோய், ஒரு மனநல மருத்துவரை அணுக முடிவுசெய்தாள். ‘‘முருகா என் பையனுக்கு வந்தது சின்னப் பிரச்்னையா இருந்துடச் செய்யப்பா.  எந்தவித மோசமான சேதியும் எனக்கு வந்துடக் கூடாதப்பா, கடம்பா, கார்த்திகேயா”... டாக்டரின் காத்திருப்பு அறையில் இவள் மனதுக்குள் கந்தசஷ்டி கவசம் ஒப்பித்துக் கொண்டிருக்க... உள்ளே அன்பு, டாக்டரிடம் தன் பிரச்னைகளைச் சொல்லிக்கொண்டிருந்தான்.

“அவ்வளவு உயிருக்கு உயிரா லவ் பண்ணேன் டாக்டர். நானும் அவளும் சந்திச்சு, பேசி, சிரிக்காத இடமே எங்க வீட்டுல இல்ல. எங்க ஊர் முழுக்க ஒரு ரெஸ்டாரென்ட், பீச், சினிமா தியேட்டர் பாக்கி இல்லை. அவ்வளவு சுத்தி இருக்கோம்.  அவளோட டைம் ஸ்பென்ட் பண்ணுறதுலயே நான் பரீட்சைக்குக் கூடப் படிக்கல. பரீட்சைக்கு ரெண்டு நாள் முன்னாடி, பார்த்திபனை அவ வீட்டுல கொஞ்சிக்கிட்டு இருக்குறத பார்த்தேன். எப்படி நீ எனக்கு இப்படித் துரோகம் பண்ணலாம்னு சண்டை போட்டேன். அவ ரொம்ப சிம்பிளா, ‘வர வர எனக்கு உன்னைப் பிடிக்கவே இல்லை.  சொன்னா நீ ரொம்ப ஃபீல் பண்ணுவியே, எப்படிச் சொல்றதுனு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்… இட் இஸ் ஓவர் அன்பு’னு போயிட்டா. அன்னிலேர்ந்து எனக்கு வாழவே பிடிக்கல. அவளால பரீட்சைக்கும் நான் பிரிப்பேர் பண்ணல. பரீட்சை எழுதவும் எனக்கு மூடே இல்லை. எங்க பார்த்தாலும் அவ நினைப்பாவே வருது. எனக்கு வாழவே பிடிக்கல’’ தேம்பி அழுதுகொண்டிருந்தான் அன்பு.

அவன் அழுது முடித்தபின் டாக்டர் கேட்டார். ‘‘சப்போஸ் திஸ் இஸ் அ நாவல்... நீதான் நாவலோட ஹீரோ. ஏழாவது சாப்டர்ல ஹீரோவுக்கும் அவனோட கேர்ள் ஃப்ரெண்டுக்கும் பிரேக் அப் ஆயுடுது… அத்தோட அந்தக் கதைய முடிச்சிட்டா நல்லா இருக்குமா?”

‘‘நோ டாக்டர், நான் வாழணும். எங்க அம்மா அப்பா என் மேல உயிரையே வெச்சிருக்காங்க. எங்கம்மா எனக்காகத்தான் என் அப்பாவோட அயோக்கியதனத்தை எல்லாம் பொறுத்துக்கிட்டு அந்த வீட்டுல இருக்காங்க. எங்க அம்மா படுற கஷ்டத்தை எல்லாம் பார்த்து நானே நினைச்சிருக்கேன். என் வைஃப்க்கு நான் ரொம்ப லவ்விங் ஹஸ்பண்டா இருக்கணும்னு. அதுதான் இவகிட்டயும் அவ்வளவு அன்பா இருப்பேன். அவளை நான் மறக்கணும் டாக்டர். அவ ஞாபகங்கள் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. அது மட்டும் இல்லன்னா நான் பாட்டுக்கு இருப்பேன் டாக்டர். Time healsனு சொல்வாங்களே டாக்டர், கால போக்குல இந்தக் கதையோட ஹீரோவும் இதை எல்லாம் கடந்துவந்து வெற்றியாளனாயிடணும். ஆனா, இந்த லவ் மேட்டரை எங்கம்மாகிட்ட சொல்லிடாதீங்க டாக்டர். வாழ்க்கை முழுக்கச் சொல்லிக் காட்டியே கொன்னுடுவாங்க.”
அம்மாவிடம் டாக்டர், “லைட்டா கொஞ்சம் டிப்ரஷன்” என்று மட்டும்தான் சொன்னார்.  மாத்திரைகளை எழுதித் தந்தார்.  மாத்திரைகளைச் சாப்பிட்டு,  நிம்மதியானான்  அன்பு. முருகன் அருள் அத்தோடு ஓய்ந்தது. தூக்கம், பசி, மனநிலை, ஈடுபாடுகள் எல்லாமே நார்மல் ஆயின. இருந்தாலும் அவனால் படிக்க மட்டும் முடியவில்லை.

“புக்கைத் திறந்தாலே அவ நினைப்புதான் வருது டாக்டர். மத்த காதல் ஜோடிகளைப் பார்க்கும்போது அவ்வளவு பொறாமையா இருக்கு. அவளுக்கு ஏன் என்னைப் பிடிக்காம போச்சு? என்னை வேண்டானு சொன்னவளை நான் பழிவாங்கணும்னு தோணுது டாக்டர்.”

காதல் தோல்வி என்பது ரொம்பவும் கொடுமையான ஓர் அனுபவம்தான். அந்தக் கால அரேபியன் மருத்துவத்தில் அதற்கு ‘இஷ்க் பிமாரி’ என்று பெயர். அரேபிய மருத்துவ நூலில் சொல்லப்பட்ட அத்தனை நோய் அறிகுறிகளும் இன்றளவும் பொருந்தும்.

எல்லா உயிரினங்களுக்கும் ‘லைஃப் சைக்கிள்’ என்பது ஒன்றேதான். குட்டியாய்ப் பிறப்போம்... வளர்ந்து குழந்தையாவோம். குழந்தைப் பருவம் விளையாட்டு ரீதியில் வாழ்வைப் புரிந்து கொள்வதற்கான காலம். விளையாட்டும், உணவும்தான் இந்த வயதின் பிரதான வேட்கை. பதின்பருவம் வாழ்க்கையோடு மோதி அனுபவரீதியாக உலகைப் புரிந்துகொள்ளும் காலம்.  துணை தேடலும், இனச்சேர்க்கையும்தான் பதின் பருவத்தின் பிரதான வேட்கை.

காட்டுவாசிகள் இன்றும் பதின்பருவத்தில்தான் திருமணம் செய்கிறார்கள். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கும் முன்புவரை நம் கொள்ளு தாத்தாவும், மிஸஸ் கொள்ளுவும்கூட டீன் ஏஜில் திருமணம் செய்துகொண்டவர்கள்.

ஆனால், நகர்ப்புறங்களில் வாழும் இன்றைய மனிதர்கள் டீன் ஏஜில் திருமணம் செய்வதில்லை. உடலோ, மனதோ, முதிராத இந்த வயதில் திருமணம் என்பது உடல் சுகத்தைத் தந்தாலும், கூடவே கண்ணுக்குத் தெரியாமல் அதனோடு பின்னிப் பிணைந்திருக்கும் குடும்பச் சுமைகளை பதின்பருவ மூளை எப்படிச் சமாளிக்கும்? அந்தக் காலத்திலாவது மருத்துவ வசதிகள் கிடையாது. அதனால் ஜனத்தொகை குறைவு. ஆனால், இன்று ஜனத்தொகை இவ்வளவு அதிகமாய் இருக்கும்போது, பதின்பருவத்திலேயே குட்டிப் போட ஆரம்பித்தால்...

ஆனால், இயற்கைக்குப் பொருளாதாரத்தைப் பற்றி எல்லாம் கவலையே இல்லை. பதின்பருவத்தை அடைந்த உடனே காதல் எனும் மாபெரும் தேடலை அது மனதுக்குள் தூண்டிவிடும். சிலர், அதனைத் தாண்டி தலைப்படுவர். பலர் அதனை செய்து சீரழிவர்.

எல்லாவற்றையும் சொல்லித் தரும் நம் பெற்றோரும், பள்ளிக்கூடமும், எந்தப் பதின்பருவ காதல், காம வேட்கைகளை எப்படிக் கையாள்வது என்கிற முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருவதே இல்லை.

அதனால்தான் ஒவ்வொரு தனி மனிதனும், மனுஷியும் சுயமாகவே காதலில் விழுந்து, அதில் நீந்தி, அதன் சாதக பாதகங்களைத் தாமாகவே கற்று அறிந்துகொள்ள வேண்டிய நிலைமை இருக்கிறது.

ஆனால், இயற்்கையில் காதலின் அவசியம் என்ன தெரியுமா?

காதல், ஜோடி சேர்்தல், இணைந்தே இருத்தல் என்பது எல்லாம், ரொம்பவும் அரிதான வாழ்வியல் யுக்திகள். பெரும்பாலான மிருகங்கள் காதல் செய்வதில்லை. இனச்சேர்க்கை காலத்தில் முகம்கூட பாராமல் மானாவாரியாய்ப் புணர்ந்துவிட்டு, பிரிந்து போய்விடும். பிறகு பெண் மட்டும் குட்டிகளைத் தனியே வளர்க்கும் அல்லது முட்டை இட்டு விட்டு, அடுத்த சீஸனுக்கு ரெடியாகும்.

மிகச் சில ஜீவராசிகள் மட்டுமே காதல், புணர்ச்சி, குட்டி, அதன் பிறகும் பிரிவில்லா இன்பச்சேர்க்கை என்கிற ரீதியில் வாழ்கின்றன. உதாரணத்துக்குப் பறவைகள்... மனிதர்கள்... டால்ஃபின்கள். இந்த மூன்றுமே வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த உயிர்கள். ஆனால், மூன்றும் ஒரே காதல் செய்யும் ஒரே யுக்தியைப் பயன்படுத்துகின்றன. ஏன்?... ஏன் என்றால், இந்த மூன்றின் குட்டி வளர்ப்பும் ரொம்பவே சிரமம். ஒரே ஒரு பெற்றோரால் இந்தக் குட்டிகளைத் தனியாக வளர்த்துவிட முடியாது. இந்தக் குட்டிகள் ரொம்ப காலத்துக்குப் பெற்றோரைச் சார்ந்தே இருக்கும் என்பதால், அதன் ஆயுட்காலத்தின் பெரும் பகுதி பிள்ளை வளர்ப்புக்கே போய்விடும் என்பதால், தாய் தந்தை இரண்டும் சேர்ந்து ஒற்றுமையாய் வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 1

இதை அனுசரித்துதான், இந்தச் சில உயிரினங்களுக்கு மட்டும் காதல் எனும் ரசாயனப் போதையை இவற்றின் மனதில் இயற்கை ஒளித்துவைத்திருக்கிறது. காதல் எனும் போதை இருப்பதால்தான் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்க முயல்கிறார்கள். இவர்கள் சேர்ந்தே இருந்தால்தானே பெற்றோர் கடமையை ஆளுக்குப் பாதி பாதியாய் சுமந்து குட்டிகளைச் சிறப்பாக வளர்க்கலாம்.

இவ்வளவெல்லாம் செய்த இயற்கை, இன்னும் ஒரு சூட்சுமமும் செய்தது. ஒரு குட்டி ப்ளாஷ்பேக். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு குட்டி மனிதக் கூட்டம். மொத்தம் 30 பேர். பதின்பருவத்தினர் ஒரு டஸன். ஒரு 15 வயது பெண்ணும், 17 வயதும் ஆணும் காதலிக்கிறார்கள். வேட்டைக்குப் போன அந்தக் காதலன் செத்துவிட்டான்.  இப்போது அவன் காதலி என்ன செய்தால்...அவளுக்கும், அவளுக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கும், அவள் கூட்டத்துக்கும் நன்மை?

(1) இறந்துபோன காதலனை நினைத்து நினைத்து ஏங்கி உருகி இவளும் செத்துவிடலாம். (2) அவன் நினைவாகவே திருமணமே செய்துகொள்ளாமல் துறவி ஆகிவிடலாம். (3) கொஞ்ச நாள் அழுது புலம்பிவிட்டு, பிறகு தெளிந்து மீண்டும் காதல் கொண்டு மீண்டும் வெற்றிகரமாய் குழந்தை பெற்று வளர்க்கலாம்.

இந்த மூன்றில் கடைசி யுக்தி மட்டுமே இயற்கைக்குப் பொருத்தமானது. ஏனென்றால், இயற்கையில் உயிரினங்களின் தலையாயப் பணி மேலும் பல உயிர்களை உருவாக்குவதுதான்.

அதனால்தான் ஒரு காதல் பலிக்காவிட்டால், மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த காதலில் விழும் தன்மை மனிதர்களுக்கு உண்டு. அதனால்தான் மனிதக் கலவி முறையை serial monogamy என்போம். அதனால் ஒரு காதல் தோற்றுப் போனால், அத்தோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. மனம், ஆறி... தேறி மீண்டும் காதல்கொள்ளும். அதுவரை தாக்குப்பிடித்தால் மட்டுமே போதும்.

ஒரு சராசரி மனிதர் தன் வாழ்நாளில், கிட்டத்தட்ட ஆறு முதல் 10 முறை காதல் கொள்கிறார். அதனால், முதல் காதலோடு வாழ்க்கை முடிந்துவிடாது. ஒரு குட்டி pause-க்கு அப்புறம், சூப்பராய் பயணம் தொடரத்தான் செய்யும்.

அன்பு, இதை அறிந்தபோது நம்பிக்கை பெற்றான். Whatever happens, life goes on என்று உறுதியானான். ‘இஷ்க் பிமாரி’ விலகியது.

(மர்மம் அறிவோம்)