Published:Updated:

மனச்சிறையில் சில மர்மங்கள் - 2

மனச்சிறையில் சில மர்மங்கள் - 2
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 2

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

மனச்சிறையில் சில மர்மங்கள் - 2

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

Published:Updated:
மனச்சிறையில் சில மர்மங்கள் - 2
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 2
மனச்சிறையில் சில மர்மங்கள் - 2

கைக்கிளை காயங்கள்

கீரதனுக்கு தன் மகள் மீது எக்கச்சக்க பாசம். அவ்வளவு பாசத்துக்கும், அவ்வப்போது எட்டிப் பார்க்கும், “என் மகளைப்போல வருமா?” என்ற பெருமைக்கும் பாகி தகுதியானவள்தான்.

அடுத்த வருஷம் அவளுக்கு ஒரு நல்ல வரனைப் பார்த்துக் கட்டிக் கொடுத்துட்டா, வேற எந்தக் கவலையுமே இல்லாம நிம்மதியா ரிடையர்ட் ஆகலாம் என்ற நினைப்பில் இருந்தார் பகீரதன்.

வேலைக்குப் போய் ஆறேழு மாதங்கள் ஆன பிறகு, “பாகி, இப்ப மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாதான் அடுத்த ரெண்டு வருஷத்துக்குள்ள அமையும். நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறது...” என்று அவர் ஆரம்பிக்கும்போதே பாகி பூடகமாகச் சிரித்தாள். வாழ்நாளிலேயே அவள் முதல் முறையாய் இப்படி ஒரு கள்ளச் சிரிப்பு சிரிக்க, பகீரதனுக்கு பக் என்று ஆனது. “எம்மா, நீ மனசுக்குள்ள யாரையாவது நினைச்சிருக்கியா?”

பாகி மீண்டும் ஒரு புன்னகையுடன் வெட்கப்பட்டுத் தலைக்குனிய, பகீரதன் மனதில் ஆயிரம் கவலைகள். முதலில் நம் இனமா... நம் பிரிவா... நம்ம வகையராவா... அதன்பிறகு, நல்லவனா... என் பொண்ணை நல்லா வெச்சிப்பானா... குடும்பம் எப்படியோ... படிப்பு, வருமானம், ஜாதகம்? 
“யாருமா அது?” என்றார் கலவரத்துடன்.

“எங்க டீம் லீடர்.”

“பேர் என்ன?”

“நதீம் முகமது.”

“என்னது முஸ்லிமா!”

“ரொம்ப நல்லவருப்பா. இவ்வளவு நல்ல மனுஷனை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லப்பா. ப்ளீஸ் அப்பா. நீங்க ஒரு தடவை வந்து அவரைச் சந்திச்சீங்கன்னா, உங்களுக்கே புரியும்.”

 “என்னம்மா சொல்ற?  ஊர்ல எல்லாம் என்னைக் காறி துப்பமாட்டாளா? பெரிசா ஐ.ஐ.டி-ல படிச்சு, மெட்ராஸுல வேலை செய்யுறா மகனு பீத்திண்டு இருந்தாரே, இப்ப பார், அவர் பொண்ணு ஒரு முஸ்லிமைக் கட்டிக்கப் போறாளாம்னு என்னைப்பற்றி அசிங்கமா பேசுவாளே!”

“நீங்க இப்படி பேக்வேர்டா இருப்பீங்கனு நானும் நினைக்கவே இல்லை. இனிமே நீங்க ஃபார்வர்டு கம்யூனிட்டினு சொல்லிக்காதீங்க.”

“இந்த வேலையும் வேண்டாம்... ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். பேசாம ஊருக்கு வந்து சேரு.”

அவரை, சட்டையே செய்யாமல் அழுதுகொண்டு இருந்தாள் பாகி. 

ஊருக்கு வந்ததும், மனைவியிடம் தன் கோபத்தை எல்லாம் காட்டினார் பகீரதன், “என்ன பிள்ளைய பெத்து வெச்சிருக்க நீ? முஸ்லிமைத்தான் கட்டிப்பாளாம். வெளியில் தலைக்காட்ட முடியாதபடி பண்ணிடுவாபோல இருக்கே… இவளையா நான் அவ்வளவு ஒசத்தியா தலை மேல வெச்சி கொண்டாடிக்கிட்டு இருந்தேன்.”

ஆனால், மனசு கேட்கவில்லை.  பாகியின் ரூம்மேட் யசோதாவுக்கு போன் செய்து பேசினார். “பாகி எப்படி இருக்கா?”

“கொஞ்ச நாளாவே அவ சரியில்லை அங்கிள். நானே எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்.  நைட் மூணு மணி வரைக்கும் என்னமோ கிறுக்கிக்கிட்டு இருக்குறா. காலையில் பத்து பதினோரு மணிக்கு தானா எந்திரிக்கிறா. ஆஃபீஸுக்கு தினமும் லேட். எங்க
டி.எல் திட்டுறார். இவ பாட்டுக்கு கிறுக்காட்டமா அவரைப் பார்த்துச் சிரிக்கிறா.”

“உனக்கும் அவளுக்கும் ஒரே டி.எல்-லாமா?”

‘‘ஆமா அங்கிள்.”

”உங்க டி.எல் எப்படி?”

“அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன்.”

என்னமோ அவனைப் பற்றி யாரும் நல்ல வார்த்தைகள் சொன்னால் பகீரதனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 2

இந்தப் பிரச்னை குறித்து அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் ஒரு நாள் அந்த போன் கால் வந்தது, “ஹலோ, நான் நதீம் முகமது பேசுறேன்…” என்றதுமே பகீரதனுக்கு தூக்கிவாரிப் போட்டது. அடப்பாவி, இவன் பொண்ணு கேட்கப் போறானோ, என்ன தைரியம்? சட்டென போனை வைத்துவிட்டார்.

மறுபடியும் போன் வந்தது, “மிஸ்டர் பகீரதன்... உங்க பொண்ணு விஷயமா பேசணும்.”

“என்ன பேச வேண்டி இருக்கு?”

“உங்க பொண்ணை நாங்க வேலைல வெச்சிக்க முடியாது. அவங்களுக்கு மனநிலை சரியில்லைனு தோணுது. நீங்க…”

“என்னடா சொன்னே! என் பொண்ணுக்கு மனநிலை சரியில்லையா?’’ வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளைச் சொல்லி அவனை லட்சார்ச்சனை செய்த பிறகே ஓய்ந்தார் பகீரதன்.

அத்தனையும் கேட்டுமுடித்துவிட்டு, “உங்களுக்கு இது ரொம்ப பெரிய ஷாக்கா இருக்கும்னு எனக்குப் புரியுது. நாங்க போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்னு இருக்கோம். அதுக்குள்ள உங்க பொண்ணை வந்து கூட்டிட்டுப் போயிடுங்க” என்றான் அவன் மிக அமைதியாய்.
பகீரதனுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நெஞ்சழுத்தம்? கோபத்தில் அவசர அவசரமாய் கிளம்பி சென்னை வந்தார் பகீரதன். அவருக்காகவே காத்திருந்ததுபோல, அவர் பெயரைக் கேட்டதும், ஹெச்.ஆர் மேனேஜர் அவரைத் தன் தனி அறைக்கு அழைத்துப் போனார்.

“சார், உங்களை கான்டாக்ட் பண்ண நாங்க ரெண்டு வாரமா டிரை பண்றோம். பாகிக்கு மைண்ட் டிஸ்டர்ப்டா இருக்குன்னு நினைக்கிறேன்.”

“என் பொண்ணைப் பத்தி” என்று பகீரதன் கோபமாய்ப் பேசும்போதே, அந்தம்மா ஒரு கோப்பை திறந்து பல பேப்பர்களை அவர் எதிரில் அடுக்கினார், “உங்க மகள் எங்க ஸ்டாப்ஃபை தொல்லை பண்றாங்க. நதீம் முகமது இமெயிலை ஹாக் பண்றாங்க. அவருக்கு கல்யாணமாகி ரெண்டு பசங்க இருக்காங்க. நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னா உன் பசங்களை கொன்னுடுவேனு மிரட்டி வாட்ஸ்அப்ல மெசேஜ் அனுப்பிக்கிட்டு இருக்காங்க.”

பகீரதன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்தார். முஸ்லிம்னு மட்டும்தான்னு நினைச்சேன், அவனுக்குக் கல்யாணம் வேற ஆயிடுச்சாமே!

‘‘நதீமோட மிஸஸ் போனுக்கும் உங்க பொண்ணு இதே மாதிரி மிரட்டல் எல்லாம் அனுப்பிட்டதுனால, அவங்க போலீஸுக்கு போயே தீருவேனு கோபமா இருக்காங்க. சார், நீங்க தயவுசெய்து உங்க பொண்ணைக் கூட்டிட்டுப் போயிடுங்க. அவங்க வேலைக்குச் சேர்ந்ததிலிருந்தே வெரி பேட் ஒர்க் பர்ஃபாமென்ஸ். எதையுமே புரிஞ்சிக்கிறதில்லை. தானா பேசுறாங்க... தானா சிரிக்கிறாங்க. நாங்களும் எங்க ஆபீஸ் சைக்காலஜிஸ்ட்கிட்ட கவுன்சலிங்கெல்லாம் அனுப்பிப் பார்த்துட்டோம். நோ யூஸ். பிரச்னை இப்ப போலீஸ் வரைக்கும் போகுறாப்புல இருக்கு. ஒரு பொண்ணோட லைஃப்னுதான் உங்களை பர்சனலா கூப்பிட்டுச் சொல்றேன்.”

பகீரதனுக்கு பாதி புரியவில்லை. ஆனால், தன் மகள் ஏதோ பிரச்னையில் இருப்பது புரிந்தது. அவளை உடனே தன்னோடு கொண்டு போய்விட வேண்டும் என்று தெரிந்தது. “உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். உங்களைக் கூட்டிட்டுப் போக உங்கப்பா வந்திருக்கார் பாகி” என்று இன்டர்காமில் ஹெச்.ஆர் அழைத்தார். பாகி வந்தாள். அதே சாந்தமான, பவ்யமான பாவனையோடு. பகீரதன் கண்கலங்கி, “அம்மா, பாகி” என்று அழ, உண்மையிலேயே அம்மாவுக்குத்தான் என்னவோ என்று பயந்து, பாகி அப்பாவோடு கிளம்பிவிட்டாள்.

எதற்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டை போய்ப் பார்த்து தெளிவு பெற்றுவிடுவது நல்லது என்று முடிவெடுத்தார் அப்பா.  “எதுக்குப்பா சைக்கியாட்ரிஸ்ட்?” என்று பாகி கேட்டபோது, “அம்மாவுக்காக” என்று சொல்லிவிட்டு, டாக்டரிடம் தனியாகப் பேச வாய்ப்புக் கிடைத்ததுமே, எல்லா விவரங்களையும் சொன்னார் பகீரதன். டாக்டர் பாகியிடம் சில நிமிடங்கள் தனியாகப் பேசினார், பிறகு பகீரதனை தனியே அழைத்து, “உங்க மகளுக்கு பிரச்னை இருக்குறது உண்மைதான்” என்றார்.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 2

“டெலூஷன் ஆஃப் லவ்னு சொல்வோம். 

தி கிளாரம்பாட் சின்ரோம். ஆண்டாள், பெருமாளை லவ் பண்ணது... மீரா, கிருஷ்ணாவை லவ் பண்ணது...உங்க பொண்ணு, அவங்க நதீமை லவ் பண்றது… எல்லாமே காதல்ன்ற ஒரு கருத்துப் பிறழ்வுதான். மனச்சிதைவு நோய்ல இது ஒரு வகை. மருந்து குடுத்தா சரியாயிடும்.”

”மருந்து குடுத்தா காதல் நோய் எப்படி டாக்டர் குணமாகும்?”

”சார், இது நிஜ காதல் இல்லை. வெறும் பிரமை. நமக்கெல்லாம் அது கற்பனைனு தெரியும். ஆனா அவங்க அதை நிஜம்னு ஆணித்தரமா நம்புவாங்க. இந்த மாதிரி வலுவான பொய் நம்பிக்கைகளைத்தான் டெலூஷன்னு சொல்வோம். பொதுவா தன்னை விட அதிக அந்தஸ்துல இருக்குற கவர்ச்சியான ஆள் மேலதான் இந்த டெலூஷன் ஆஃப் லவ் வரும். சில கேஸ்ல இவங்க லவ் பண்ணுறதா நினைக்கிறவருக்கு இவங்களை யாருனே தெரியாது. இவங்களே ஒருதலையாய் காதல்னு கற்பனை பண்ணிக்கிட்டு, மனசு பேதலிச்சிப் போவாங்க. இதெல்லாம் மூளையில டோபமின் மாதிரியான ரசாயனங்கள் அதிகமா சுரக்குறதனால வர பிரமைகள். அதிகப்படியான டோபமின்னை குறைக்கிற மருந்தைத் தொடர்ந்து சாப்பிட்டா, படிப்படியாச் சரியாயிடும்.”

இப்படி எல்லாம் ஒரு நோயா என்ற வியப்போடு மகளுக்கான மருந்துகளை வாங்கிக்கொண்டு, “அதுக்குள்ள அந்தப் பிள்ளையாண்டானை எப்படி எல்லாம் திட்டிட்டோமே, கடவுளே, என்னை மன்னிச்சிடு. என் பிள்ளையக் காப்பாத்து, உனக்கு 100 தேங்காய்….” என்று சேவிக்க ஆரம்பித்தவர், “ச்சு, உனக்கு திருக்கல்யாணம் பண்ணிவெக்குறேன்” என்று பிரார்த்தனையை மாற்றிக்கொண்டார்!

(மர்மம் அறிவோம்)