Published:Updated:

மனச்சிறையில் சில மர்மங்கள் - 3

மனச்சிறையில் சில மர்மங்கள் - 3
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 3

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

மனச்சிறையில் சில மர்மங்கள் - 3

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

Published:Updated:
மனச்சிறையில் சில மர்மங்கள் - 3
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 3

அழகே சுகமா?

‘கபாலி’ பட டிரைலரில் ரஜினி சொல்வாரே, “கன்னத்தில மரு வெச்சிக்கிட்டு”னு... அதுபோன்ற ஒரு பெரிய மரு, முத்துவுக்கும் இருந்தது. ‘‘அதிர்ஷ்ட மச்சம். மத்த பிள்ளைகளுக்கு எல்லாம் திருஷ்டிபட்டுடக் கூடாதுனு அம்மா வெச்சிவிட்டாதான் உண்டு. ஆனா, என் பிள்ளையை பிரம்மாவே மச்சத்தோடவே படைச்சிட்டாரே” என்று அவன் அம்மா அவ்வளவு சந்தோஷப்பட்ட அந்த அம்சம்தான் முத்துவின் வாழ்வையே துவம்சம் செய்துகொண்டிருந்தது.

சிறுவயது முதலே அவனைக் கவனிப்பதற்கு முன் அவனது மருவை கவனித்துவிடுவார்கள் எல்லோரும். ஆனால், அப்போதெல்லாம் அதைப் பற்றி அவன் அதிகம் யோசித்திருக்கவில்லை. ஆனால், பருவ வயதை அடைந்த உடனே அந்த மரு, அவனைப் படுத்தியபாடு இருக்கிறதே… சதா கண்ணாடி முன்னாலேயே நின்று அந்த மருவை அணு அணுவாய் ஆராய்வான். “ஏம்மா... என்னை இப்படி அசிங்கமா பெத்து வெச்சிருக்கே. ரவுடி மாதிரி, இப்படி ஒரு மரு! எல்லாரும் என்னை எப்படிக் கேலி செய்யுறாங்க தெரியுமா... யார் மூஞ்சையும் நேருக்குநேர் பார்க்க முடியுதா?”  என்று அவன் புலம்பாத நாளே இல்லை. 

சரிதான் வயசுக் கோளாறு, இந்த வயசுல அழகைப் பற்றிக் கவலைப்படாதவர் யார், என்று அப்பா அசட்டையாக இருந்தார்.  போகப்போக இந்த மரு சமாசாரம் மாபெரும் பிரச்னையாய் மாறியது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்தான். வீட்டுக்கு விருந்தினர் வந்தால் தனி அறையிலேயே பதுங்கிக் கிடந்தான். வந்தவர்கள் போகும்வரை வெளியிலேயே வரமாட்டான்.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 3

பள்ளிக்கூடம் போவதற்கு அத்தனை அழிசாட்டியம். பாதிநாட்கள் போவதே இல்லை. மற்ற நாட்கள் எல்லாம் லேட்.  வேளா வேலைக்குச் சாப்பிடுவதில்லை. சாப்பிடக் கூப்பிட்டால், “ரொம்ப முக்கியம்” என்று முகத்தைச் சுளித்தான்.  இரவெல்லாம் தூங்காமல் கிடந்தான். என்னடா உனக்குப் பிரச்னை என்றபோது ஓ... என்று ஒரே அழுகை. “எனக்கு வாழவே பிடிக்கலை. என்னையே எனக்குப் பிடிக்கலை, பேசாம நான் செத்துப் போயிடுறேன்” என்று சோகத்தில் கரைந்தான்.

“இப்ப என்ன ஆயிடுச்சுனு இப்படி எல்லாம் பேசுற” என்றாள் அம்மா. முத்து முகத்தைக் கைகளில் பொத்திக்கொண்டு, “என்னையே எனக்குப் பிடிக்கலை. எல்லாரும் என்னைப் பார்த்து சிரிக்கிறாங்க. மருவும் அதுவுமா ரொம்ப கேவலமா இருக்குறேன். இந்த மூஞ்சை வெச்சிக்கிட்டு என்னால வெளியில தலைக்காட்ட முடியலை.”

“உனக்கென்னடா குறைச்சல், எவ்வளவு அழகா லட்சணமா இருக்குற” என்று அம்மா, அக்கா, தாத்தா, பாட்டி, ஆபீஸிலிருந்து பாதியிலேயே திரும்பி வந்த அப்பா என யார் சொல்லியும் மனம் ஆறாமல் முத்து அழுதுகொண்டே இருக்க, “கடவுள் படைச்சா எல்லாம் கரெக்டா தான்டா இருக்கும்” என்று சொல்லிப் பார்த்தார்கள். “இதைவிட பெரிய மரு இருக்குறவனெல்லாம் ஜாலியா கான்ஃபிடெண்டா இருக்கான். நீ என்னடா இந்தச் சின்ன விஷயத்தைப் போய் பெரிசு பண்ணிக்கிட்டு இருக்குற” என்றனர். 

“இல்லை, எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி இந்த மருவை எடுத்தாதான்” என்று முத்து அடம்பிடிக்க, அது அநாவசியம், அதிக செலவு என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல், உண்ணாவிரதம், பள்ளிக்குப் போகாமை என்று பல பிளாக் மெயில்களுக்குப் பிறகு, “போய் தொலையட்டும், நிம்மதியா இருந்தாபோதும்” என்று பிளாஸ்டிக் சர்ஜனைப் பார்த்து, அந்த மருவை வெற்றிகரமாக நீக்கினார்கள். ‘அப்பாடா... தொல்லை முடிந்தது’ என்று எல்லோரும் நிம்மதியானார்கள். முத்துவும் அமைதியாக இருந்தான்.

ஆனால், கட்டுப் பிரித்த அன்றே மறுபடியும் ஆரம்பித்துவிட்டான். ‘‘இந்தத் தழும்பை பார்த்தீங்களா. அச்சச்சோ, அப்படியே ரவுடி பயல் மாதிரியே இருக்கேனே.”

“இத்துனூண்டு தழும்பு, கிட்டவந்து உத்துப் பார்த்தாதான் லேசா தெரியுது. இதை ஏண்டா பெரிசுபடுத்துற” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “இவ்வளவு காசை செலவு பண்ணி ஆபரேஷன் பண்ணியும் எனக்குச் சரியாகலையே. என் வாழ்க்கை ஃபுல்லா நான் கஷ்டப்படணும்னு இருக்குபோல. இதுக்கு பேசாம நான் செத்தே போயிடலாம்” என்று மறுபடியும் அவன் வாழ்க்கையின் ஓரத்துக்கே போய்விட, அவன் அம்மாவும் அப்பாவும், பிளாஸ்டிக் சர்ஜனிடம் போய் முறையிட... டாக்டர், “சர்ஜரியோட தழும்பு யூஷுவலா சில மாசங்கள்ல மறைஞ்சுடும். கொஞ்சம் சதைப் போட்டு, வெயிட் ஏறிட்டா தெரியாமலே போயிடும்” என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னார். 

மனச்சிறையில் சில மர்மங்கள் - 3

எந்தச் சமாதானத்தையும் முத்து ஏற்கவில்லை. டி.வி-யில் பார்த்த ஒரு சித்த மருத்துவரையும் போய்க் கேட்டார்கள்.  அவர், பல பொடி டப்பாக்களைக் கொடுத்தார். ‘‘அரசமரத்து பாலைத் தடவி வந்தால் தழும்பு மறைந்துவிடும்’’ என்றார். அரசமரத்தைத் தேடிப் பிடித்து, அதிலிருந்து பாலை இறக்குமதி செய்துதந்தாள் அம்மா. தினமும் அரசம்பால் ஆராதனை செய்து முயன்றான் முத்து. ஒரு மாதம் கழித்தும் மாற்றமே இல்லை என்றதும் மேலும் மனமுடைந்தான்.

அதற்குள் பள்ளிக்கூட ஆசிரியர் பெற்றோரைக் கூப்பிட்டுப் பேசினார். “முத்து வகுப்பைக் கவனிக்கிறதே இல்லை. எப்ப பார்த்தாலும் டல்லாவே இருக்கான். மிட்டர்ம் டெஸ்டுல எல்லா சப்ஜெக்ட்லயுமே ஃபெயில்.”

“அவன் நல்லா படிக்கிற பையன்தான் சார். ஆனா...”

“என்னை கன்வின்ஸ் பண்ண டிரை பண்ணாதீங்கம்மா. உங்களைவிட அதிக நேரம் நாங்கதான் அவனை நேருக்குநேர் கவனிக்கிறோம். அவனுக்கு மனசு சரியில்லைனு நினைக்கிறேன். சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போங்க” என்றார். ‘ஒரு மரு பிரச்னைக்கு எல்லாமா, மென்டல் டாக்டரைப் போய்ப் பார்க்கணும்’ என்று அவன் பெற்றோர் தயங்க, அதற்குள் முத்து மறுபடியும் சாப்பிடாமல், தூங்காமல், படிக்காமல் சூனியம் பிடித்தவனைப்போலத் தன் தழும்பைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருக்க, ஒருவழியாக அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துப்போனார் அப்பா.

டாக்டர், முத்துவின் முழுநீள சோகக் கதையைக் கேட்டுவிட்டு, மிகவும் இலகுவாக, “ஒண்ணுமில்லை, மாத்திரை சாப்பிட்டாச் சரியாயிடும்” என்றார் அவர். இத்தனை நாட்களாய் இவன் படுத்திய பாட்டுக்கு இவ்வளவு சுருக்கமான, குட்டியூண்டு தீர்வா என்று அவன் பெற்றோர் வியந்தார்கள். ஆனால், உண்மையிலேயே அந்தக் குட்டி மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்ததில் முத்து சரியாகத் தூங்கினான்; சாப்பிட்டான்; படித்தான்; புலம்பாமல் தன்னம்பிக்கையோடு பிறரை எதிர்கொள்ளவும் ஆரம்பித்தான்.

அவன் பெற்றோருக்கு ரொம்ப ஆச்சர்யம். இந்த மாத்திரைக்கும் அவன் மரு பிரச்னைக்கும் என்ன சம்பந்தம்?

வெரி சிம்பிள். முத்துவுக்கு இருந்தது Body Dysmorphophobia என்கிற ஒரு வகை பதற்றக் கோளாறு. இந்த நோய் இருப்பவர்களுக்கு, “என் மூக்கு கோணலா இருக்கு, என் பல்லு கலர் மாறி இருக்கு, என் தோளில் ஏதோ தேமல் இருக்கு’’ என்று தங்கள் உடல் அமைப்பைப் பற்றி ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து, சதா சர்வ காலமும் அதைப் பற்றியே யோசித்து, கவலைப்பட்டு, அதை மறுசீர் அமைப்பதைப் பற்றிய கற்பனையிலேயே இருப்பார்கள்.
 
‘‘இந்தக் கர்மம்பிடிச்ச நோயெல்லாம் எப்படி டாக்டர் வந்து தொலைக்கிறது?”

மனச்சிறையில் சில மர்மங்கள் - 3

நம் மூளையின் நரம்புமுனைகளில் செரடோனின் என்கிற ஒரு ஸ்பெஷல் தகவல் தொடர்பு ரசாயனம் இயங்குகிறது. அது நம் மூளையைச் சாந்தப்படுத்தி, சமாதானமாய் வைத்திருக்க உதவுகிறது. இந்த செரடோனின் அளவு குறைந்துபோனால், அநாவசிய கவலை, பயம், சோகம் எல்லாம் ஏற்பட்டுவிடுகிறது.

பதின் பருவத்தில் எல்லாப் பிள்ளைகளுக்குமே கொஞ்சம் கூச்சம், நம்மைப் பிறர் எப்படி மதிப்பிடுவார்களோ என்று அச்சம், தேறுவோமா என்கிற பயம் எல்லாமே வருவது இயல்புதான். ஆனால், இவை எல்லாம் அளவு மீறிப்போய், தன் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளை இந்தக் கலவரம் பாதித்தால், நார்மல் எனும் எல்லைக்கோட்டைத் தாண்டி, அசாதாரணம் என்கிற அபாய அளவைத் தொட்டுவிட்டது என்று அர்த்தம்.

சீக்கிரமே இதைக் கவனித்துத் தகுந்த வைத்தியம் செய்துவிட்டால், பிரச்னை எல்லாம் மாயமாய் மறைந்துவிடும். முத்துவும் மருந்து சாப்பிட்டான், சைக்கோதெரபி செய்துகொண்டான். முழுமையாக குணமாகிவிட்டான்.

(மர்மம் அறிவோம்)