Published:Updated:

மனச்சிறையில் சில மர்மங்கள் - 5

மனச்சிறையில் சில மர்மங்கள் - 5
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 5

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

மனச்சிறையில் சில மர்மங்கள் - 5

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

Published:Updated:
மனச்சிறையில் சில மர்மங்கள் - 5
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 5
மனச்சிறையில் சில மர்மங்கள் - 5

பொங்கி வரும் தீஞ்சுவையே!

பெரிய பணக்காரன் ஆக வேண்டும், எல்லோரும் தன்னை அண்ணாந்து பார்த்து, ‘ஆஹா எவ்வளவு பெரிய ஆள்’ என்று பாராட்டி, பொறாமைப்பட வேண்டும் என்பதுதான் சிறுவனாக இருந்தபோதிலிருந்து லோகுவுக்கு ஒரு பெரிய கனவாக இருந்தது. ஆனால், அவனுக்குப் படிப்பு ஏறவேயில்லை. 

படிப்பு வரவில்லை என்றால் என்ன, படிக்காதவர்கள் ஜெயிக்கவில்லையா? படிக்காமல் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களை நினைத்துத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டான் லோகு. எப்படியாவது ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்று ஆசையில் இருந்தான். இப்படியான வேட்கையில் அவன் சந்தித்த பெண்தான் ஃபிலாரென்ஸ் மேரி. அவள் ஒரு பணக்காரரின் செல்லமகள். படிப்பு, வீடு, சர்ச் தவிர வேறு வெளி உலகமே தெரியாத அவளுக்கு லோகுவின் கேலிப் பேச்சும், சாகச மனப்பான்மையும், சிரித்த முகமும், சில்மிஷங்களும் ரொம்பவே பிடித்துப் போய்விட, செம்புலம் சேர்ந்த நீர்த்துளிபோல இருவரும் கலந்தனர்.

‘‘அஞ்சு மாசமா பீரியட்டே வரலை டாக்டர்’’ என்று டாக்டரிடம்  சொன்னார் மேரியின் அம்மா தெல்மா. அப்போதுதான் மேரிக்குத் தெரியும், இப்படி எல்லாம் அன்பு செய்தால் வயிற்றில் குழந்தை உருவாகும் என்று.

‘‘முளைச்சி மூணு இலைகூட விடலை, இப்படி வந்து நிக்கிறியே, யாருடீ அவன்?’’ என அம்மா உடைந்துபோய் அழுதாள். லோகுவை அழைத்துப் பேசினார் அப்பா.  தீவிர கத்தோலிக்க நம்பிக்கை கொண்ட அவருக்கு கருக்கலைப்புச் செய்ய மனமில்லை. வேறு வழியில்லாமல், 16 வயது ஃபிலாரென்ஸ் மேரிக்கும், 20 வயதான லோகுவுக்கும் வேளாங்கண்ணியில் திருமணம் நடந்தது.  அடுத்த சில மாதங்களிலேயே ஊட்டியில் அவர்களுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அப்போதுதான் குடும்பப் பாரம் என்றால் என்ன என்பதே லோகுவுக்குப் புரிய ஆரம்பித்தது. காதல் செய்ய அவனுக்கு காசே தேவைபட்டி ருக்கவில்லை.  ஆனால், குடும்பம் நடத்த, குழந்தைக்குத் தடுப்பூசி போட, பால் பவுடர் வாங்க, எனச் செலவுகள் தீராதத் தலைவலியாய் அமைய, இவ்வளவு சீக்கிரம் ஏன்தான் கல்யாணம் பண்ணித் தொலைச்சேனோ என்று ஒவ்வொரு நாளும் நொந்துபோனான்.

அம்மாவிடம் செலவுக்குப் பணம் கேட்டால், ‘‘உங்க அப்பன் புத்திதானே உனக்கும் வரும். இந்த வயசுல நீ கல்யாணம் பண்ணிக்கலைன்னு யார் அழுதா? என்கிட்ட வந்து காசு கேக்குற வேலையே வெச்சிக்காதே’’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

மேரியின் அப்பாவைக் கேட்டால் காசு கொடுப்பார், ஆனால், ‘‘இதுக்கெல்லாம் துப்பில்லை, குழந்தை மட்டும் பெத்துக்கத் தெரியுதா?’’ என்று நறுக்கென்று ஏதாவது பேசுவார். அதை நினைத்து நினைத்து லோகு வாரக்கணக்கில் வாடிப் போவான். இந்தக் கொடுமையிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை.

இந்த அனுபவம் மேரிக்கு முதிர்ச்சியைக் கொடுத்தது. ‘‘படிச்சி ஒரு நல்ல வேலைக்குப் போகலாமே மாமா” என்றாள். அவளுடைய அன்புக்கு இணங்கி அதையும் முயன்றான் லோகு. ஆனால், படிப்பு வந்தால்தானே? எங்கேயாவது வேலைக்குப் போகலாம் என்றால், ஆரம்பநிலை ஊழியனாகவே சேர்த்துக்கொண்டார்கள். மிகச் சொற்ப சம்பளம் மட்டுமே தந்தார்கள். நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்தான். தோல்வி. சினிமாவில் நடிக்க முயன்றான். படுதோல்வி. பூ வியாபாரம் செய்தான் மரண தோல்வி.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 5

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனசு நிறைய கவலையில் அவன் வாழ்க்கையை வெறுத்திருந்தபோதுதான், அவனுடைய புதிய நண்பன், ‘‘விடுடா மச்சான், இந்தா... இதைப் பிடி’’ என்றான்.  அவன் கொடுத்த பொருள், ‘இரண்டு வளி’ யிலேயே இன்பமாய் இருந்தது. மெல்லிசைகூட மின்சாரம் மாதிரி சுரீர் என்று ஏறியது. மேரியின் சமையல்கூட அமிர்தம் மாதிரி இருந்தது.  அவனுக்குள் அவன் இறைவன் ஆனது மாதிரியே இருந்தது.

மேரியின் பரிசுத்தமான உலகில் போதைகளைப் பற்றிய தகவல் எதுவுமே இல்லை என்பதால், லோகு சந்தோஷமாய் இருப்பதைப் பார்த்து நம்பிக்கை கொண்டாள். ‘‘பிசினஸ் நல்லா போகுதா, இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க’’ என்றாள் சிரிப்போடு.

‘‘எல்லாமே நல்லாத்தான் போகுது. இனி நல்லாவே போகும். உனக்கு என்ன வேணும்னு கேளு கண்மணி, மாமா நான் உடனே வாங்கித் தர்றேன்’’ என்று லோகு மமதையில் சிரிக்க, ‘‘அவ்வளவு பணமா... எப்படி?’’ என்றாள் மேரி.

‘‘கண்ணா, நான் கடவுளாயிட்டேன். சிவன் தெரியுமா சிவன்?’’ என்று லோகு ஒரு காலைத் தூக்கி அபிநயம் பிடித்தான். திடீரென்று குழந்தையைக் காலடியில் போட்டு டான்ஸ் ஆடுவதைப்போல போஸ் கொடுக்கவும் பயந்தேபோனாள். ‘‘என்ன ஆச்சு உங்களுக்கு?’’ என்று பாய்ந்துவந்து பிள்ளையைத் தூக்கிக்கொண்டாள்.

கிளுக்கென்று சிரித்தான் லோகு, ‘‘சிவன்னா உனக்குப் பிடிக்காதில்லை, ஏசு ஆகட்டுமா. வா... நான் உனக்குப் பாவமன்னிப்புத் தர்றேன்’’ என்று அவளை முரட்டுத்தனமாய் பிடித்து இழுக்க, சத்தம் கேட்டு அவள் அம்மா வந்தார்.  ‘‘மேரி என்னாச்சும்மா?’’

‘‘உன் பொண்ணு பிரெக்னென்ட் ஆயிட்டா. போடி, நீயும் உன்…’’ என்று லோகு கெட்ட வார்த்தைகள் பேச ஆரம்பிக்க, அவன் சுயபுத்தியில் இல்லை என்று உணர்ந்த தெல்மா, மகளையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வெளியேறி கதவை மூடினாள். ‘‘குடிச்சிருக்கானா?’’

‘‘தெரியலம்மா.”

மகளின் ஆற்றாமையை நினைத்துத் தலையில் அடித்துக்கொண்டு, ‘‘மாதாவே, என் மகளை நீதான் காப்பாத்தணும்.’’

லோகுவின் போக்கு ரொம்பவே மாறிப்போனது.  சரியாகத் தூங்குவதில்லை, சாப்பிடுவதில்லை. சதா, தன்னுடைய அதிசய ஆற்றல்களைப் பற்றியும், தன்னுடைய ஆடம்பரத் திட்டங்களைப் பற்றியுமே பேசினான்.  ‘‘அதெல்லாம் எப்படி முடியும்?’’ என்றால் பாடுவதும், ஆடுவதும் எனக் கோலாகலமாய் இருந்தான்.

‘‘உங்களுக்கு என்ன ஆச்சு, குடிச்சிருக்கீங்களா?’’ என்று மேரி அழுதாள்.

‘‘குடிக்கலைடீ, சுவாசிக்கிறேன். மூலிகை டீ, உனக்கென்ன தெரியும்?” என்றெல்லாம் அவன் பிதற்ற, பங்குத் தந்தையைக் கூப்பிட்டு என்ன என்று பார்க்கச் சொன்னார் மேரியின் அப்பா.

பாஸ்டர் பார்த்துவிட்டு, ‘‘கஞ்சா அடிச்சிட்டு உளறுகிறான். டாக்டர்கிட்ட காமிங்க’’ என்றார்.

லோகு டாக்டரிடம் வருவதாகவே இல்லை. ‘‘சினிமா எடுக்குறாங்களாம்.  உங்களைத்தான் கதாநாயகனாய்ப் போடப் போறாங்களாம்’’ என்றெல்லாம் சொல்லி, அவனை நைசாக டாக்டரிடம் அழைத்துப் போனார்கள். லோகுவும் ஹீரோ மாதிரி உடையணிந்து மிகுந்த ஸ்டைலாய் டாக்டரைப் போய்ப் பார்த்தான், ‘‘யாரு டாக்டர் டைரக்டர்? மணிரத்னமா... ஷங்கரா?’’ என்றான்.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 5

‘‘நான் ரெண்டு பேருகிட்டயும் பேசிட்டுச் சொல்றேன்.  ஆனா ஹீரோ இப்படி ஒல்லியா இருந்தா எப்படி. இந்த மாத்திரைங்களச் சாப்பிட்டுட்டு கொஞ்சம் உடம்பை ஏத்திக்கிட்டு வாங்க ஹீரோ’’ என்று தன் கையாலேயே மாத்திரைகளைப் பிரித்து அவனிடம் நீட்ட, ‘‘எத்தனை கிலோ ஏத்தணும்?’’ என்றபடி மாத்திரைகளை விழுங்கினான் லோகு.

அவனை, மேரி அழைத்துக்கொண்டு போனதும் அவள் அப்பா, ‘‘என்ன டாக்டர் பிராப்ளம்.  ரெண்டு வாரமா இவன் படுத்துறபாடு, தாங்க முடியல.  யார் யார்கிட்டயோ லட்சக்கணக்குல பணத்தைக் கடன் வாங்கி இருக்கான். எப்படிச் செலவு பண்ணான்னே தெரியலை.’’

‘‘கஞ்சா யூஸ் பண்ணதுனால மனசு சிதைஞ்சு போயிருக்கு. ‘டெலூஷன் ஆ கிராண்டியர்’னு சொல்வோம். தன்னைப் பற்றிய ஓவர் கான்ஃபிடென்ஸ்... அதிசய ஆற்றல் இருக்குறதா நம்புறது. கஞ்சா மாதிரியான போதைப் பொருட்கள் பயன்படுத்தும்போது அது மூளையில் டோபமின் எனும் நுன் ரசாயனத்தின் அளவை அதிகரித்து விடுகிறது.  டோபமின் அளவு மீறுவதால், பிரமைகள், தன்னைப் பற்றிய மிகையான பிரதாபங்கள், சந்தோஷம்தரும் விஷயங்களில் அதிகமான ஈடுபாடு, யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், கற்பனையிலேயே கோட்டை கட்டிக்கொண்டிருக்கும் தன்மை எல்லாமே ஏற்படுகிறது. மனம் அதிக எழுச்சியில் இருப்பதால் தூக்கம் தேவையில்லை, சாப்பாடே தேவையில்லை என்று உடல் தேவைகளைப் புறக்கணித்து இன்பத் தேடலிலேயே நாட்டம் அதிகரிக்கும். ஆனால் மருந்துகள், இந்த டோபமின் அளவைப் படிப்படியாக எதிர்த்து, குறைத்துக்கொண்டே வரும். போகப்போக இந்தப் பிரமைகள் எல்லாம் மறைந்து, இயல்புநிலை திரும்பும்’’ என்றார் டாக்டர்.

இதே நேரத்தில், வெளியே டாக்ஸிகாரரிடம் விவாதம் செய்துகொண்டிருந்தான் லோகு. 

‘‘என் வயசுல நான் எத்தனை கஞ்சாக் கிராக்குங்களைப் பார்த்திருப்பேன்’’ என்று சிரித்தார் டாக்ஸிகாரர்.

(மர்மம் அறிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism