Published:Updated:

மனச்சிறையில் சில மர்மங்கள் - 7

மனச்சிறையில் சில மர்மங்கள் - 7
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 7

ஊறல் உபாதை!டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

மனச்சிறையில் சில மர்மங்கள் - 7

ஊறல் உபாதை!டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

Published:Updated:
மனச்சிறையில் சில மர்மங்கள் - 7
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 7

பிராமி பாட்டிக்கு 70 வயது. அவரைப் பிடிக்காதவர் அந்த ஏரியாவில் கிடையாது. தனக்குத் தெரிந்தவர், தெரியாதவர் என்று எந்தவிதப் பாகுபாடும் இன்றி, எல்லோரிடமும் மிகப் பாசமாகப் பழகக்கூடியவர்.

யார் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும், முதலில் வந்து ஆஜராகி, ‘‘இப்படிச் செய்... அப்படிச் செய்’’ என்று எல்லோருக்கும் இலவச அறிவுரை கொடுப்பார். ஹாசியமாய்ப் பேசுவார். ‘மூத்த சுமங்கலி’ என்று எல்லோராலும் சுபகாரியத்துக்கு அழைக்கப்படுவார்.

அபிராமி பாட்டியின் கணவருக்கு இடுப்பு எலும்பு முறிந்துபோய், அவர் 10 நாட்கள் ஹாஸ்பிட்டலில் தங்க நேர்ந்தது. அவருக்கு உதவியாகப் பாட்டியும் அங்கேயே தங்கிவிட, ஒரு வழியாகத் தாத்தா குணமாகி வீடு வந்து சேர்ந்தார். ஆனால், பாட்டிக்குத்தான் புதிய பிரச்னை கிளம்பியது.

‘‘தலை சீவியே 10 நாளாச்சு. தலையெல்லாம் ஒரே பேன்’’ என்று தலைவாரி சுத்தம் செய்வதிலேயே நொந்துபோனார் பாட்டி. இப்படித் தலைவாரி பேன் வேட்டை ஆடி முடித்தபிறகாவது பாட்டி வழக்கமான சிரித்த முகத்தோடு பேசுவார் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்க... பாட்டியோ, ‘‘உடம்பெல்லாம் ஒரே அரிப்பு. உடம்பெல்லாம் சின்னச்சின்னதா, கறுப்பு கறுப்பா பூச்சி ஊறுர மாதிரியே இருக்கு’’ என்று அடிக்கடி தன் தோலைச் சொறிய ஆரம்பித்தார்.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 7

‘‘அது ஒண்ணுமில்லை பாட்டி. இத்தனை நாளா தலையச் சொறிஞ்சி, பேனு பேனா எடுத்துப் பார்த்துப் பழகிப் போயிடுச்சில்லை. அதான் எதைப் பார்த்தாலும் உங்களுக்கு பேனு மாதிரியே தெரியுது’’ என்று பேத்திகூட விளக்கம் சொல்லிப் பார்த்தாள்.

‘‘இல்லடி, பேனு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாதா? இது வேற கறுப்புப் பூச்சி.  இப்படி அரிச்சிக்கிட்டே இருக்கே, இந்தப் பூச்சி ஊறுரதைத் தாங்க முடியலையே’’ என்று அபிராமி பாட்டி, ஒரு நாளைக்கு இரண்டுமுறை குளித்தார்.

மஞ்சள், வேப்பிலை எல்லாம் அரைத்துத் தோலில் பத்து போட்டுப் பார்த்தார்.

உசத்தி சோப்பு, பவுடர் எல்லாம் போட்டுப் பார்த்தார்.

ஊகூம்... அரிப்பு அடங்கவே இல்லை.

பாட்டிக்கு இந்தப் பிரச்னையே இரவு பகலாய் பாடாய்ப்படுத்த, தூக்கம் கெட்டுப்போனது.

‘‘டி.வி பார்க்க முடியுதா, சாப்பிட முடியுதா, நிம்மதியா தூங்க முடியுதா? இந்தப் பூச்சி சதா ஊறிகிட்டே இருக்கே?’’ என்று பாட்டி எவ்வளவோ புலம்பினார். யாரும் இதை சீரியஸாகவே எடுத்துக்கொள்ளவே இல்லை.

எல்லோரும் பிஸியாய் அவரவர் வேலையிலேயே மும்முரமாய் இருக்க, பாட்டி, தன் கணவன், மகன், மகள், மருமகள், பேரன் பேத்திகள், வருவோர் போவோர் என்று எல்லோரிடமும் இது பற்றியே புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

அட, வெறுமனே புலம்பினால்கூட பரவாயில்லையே.

‘‘இதோ பாருங்க, இத்தனை பூச்சி ஊறுது’’ என்று ஒரு டப்பாவைத் திறந்துகாட்டினார்.

எல்லோரும் டப்பாவை ஆவலாய்ப் பார்த்தால், டப்பா காலியாக இருந்தது. ‘‘எங்க பாட்டி பூச்சி?’’

‘‘டப்பா நிறையப் பிடிச்சி வெச்சிருக்கேனே, தெரியலையா?’’

எவ்வளவு உற்றுப் பாத்தாலும் டப்பா காலியாகவே தெரிய, ‘‘எங்க பாட்டி என் கண்ணுக்குத் தெரியலையே?’’

‘‘தெரியலையா? இதோ ஓடுது பார். கறுப்பா, குட்டிகுட்டியா இத்தனை ஓடுதே. தெரியுதா?’’

பாட்டிக்கு அந்தப் பூச்சிகள் மிகத் துல்லியமாகத் தெரிந்தன. ஆனால், அவரைத் தவிர வேறு யாருடைய கண்களுக்கும் அந்தப் பூச்சிகள் தெரியவே இல்லை.

‘‘என்ன பாட்டி, எங்க கண்ணுக்குத் தெரியலையே, சும்மா கதைவிடாதீங்க’’ என்று எல்லோருமே பாட்டியைக் கேலி செய்ய பாட்டிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘அப்ப, நான் என்ன சும்மாவா சொல்றேன். எல்லோரும் என்னோட விளையாடுறீங்களா? என் கண்ணுக்குத் தெரியுறது அதெப்படி உங்க கண்ணுக்குத் தெரியாம போகும்?’’ என்று பாட்டி கடும் சினத்துடன் சண்டைக்கே வந்துவிட, சரிதான்... பாட்டிக்கு ஏதோ ஆகிவிட்டது. வயதான காலத்தில் இனி அவரோடு எதற்கு அநாவசிய வாக்குவாதம் என்று எல்லோருமே, ‘‘ஆமாம் பாட்டி... பூச்சி தெரியுது’’ என்று ஒத்து ஊதினார்கள்.

ஆனால், பாட்டி அத்தோடு விட்டால்தானே? ‘‘உடம்பெல்லாம் பூச்சி ஓடுதே. யாராவது என்னைக் கவனிக்கிறீங்களா?’’ என்று சதா இதைப் பற்றியே புலம்பிக்கொண்டே இருந்தார். ‘‘நான் உங்களுக்கு எல்லாம் எவ்வளவு செய்திருப்பேன். எனக்கு உடம்புக்கு முடியலைன்னா, யாராவது ஏதாவது செய்றீங்களா?’’

‘‘நிஜமாவே பூச்சி இருந்தாத்தானே பாட்டி...’’ என்றால் போதும், ‘‘அப்ப நான் என்ன பொய்யா சொல்றேன்?’’ என்று அதற்கும் பாட்டி சண்டைக்கு வந்துவிடுவார்.

‘‘அம்மாதான் இத்தனை நாளா சொல்றாங்களே... நிஜமோ, பொய்யோ, அவங்க திருப்திக்காவது தோல் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய்க் காட்டக் கூடாதா? சதா சொறிஞ்சிக்கிட்டு இருக்குறதைப் பார்க்க சகிக்க முடியலையே’’ என்று பலர் புகார் தெரிவித்ததும்தான், கடைசியாய் ஒருநாள் பாட்டியைத் தோல் டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள்.

ஆனால் தோல் டாக்டரோ, ‘‘சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட காட்டுங்க’’ என்று சொல்லிவிட்டார்.

‘‘பூச்சி ஊறுற பிரச்னைக்குக்கூடவா சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட போவாங்க. இது தோல் பிரச்னைதானே. நீங்களே பார்க்கலாமே?’’

‘‘தோல்ல உண்மையிலேயே பூச்சு ஊறினாதான், அது தோல் பிரச்னை. இவங்களுக்கு நிஜமா தோல்ல எந்தப் பூச்சியும் ஊறலையே…’’

‘‘அப்ப சும்மா பொய் சொல்றாங்களா?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனச்சிறையில் சில மர்மங்கள் - 7

‘‘இல்லை, இது ஒருவிதமான பிரமை. தோல்ல எந்தப் பிரச்னையுமே இல்லை. மனசுலதான் பிராப்ளம். அதனாலதான் சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போகச் சொல்றேன்’’ என்று தோல் டாக்டர் விளக்கம் சொன்னதுதான் தாமதம்... அபிராமி பாட்டிக்கு ஏகத்துக்கு கோபம் வந்தது. ‘‘எனக்கு என்ன பைத்தியமா? என்னை எதுக்கு சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட எல்லாம் அனுப்புறீங்க?’’ எனக் குதித்தார்.

‘‘அப்படி இல்லை பாட்டி. உங்களுக்கு இந்த அரிப்புனால தூக்கமே வரலை இல்லையா? அவங்கதான் தூக்கத்துக்கு எல்லாம் மருந்து எழுதித் தர்ற டாக்டர். நீங்க சும்மா ஒரே ஒரு தடவைப் போய்ப் பார்த்து, தூக்கத்துக்கு மட்டும் மருந்தை வாங்கிட்டு வாங்க. மிச்சத்தை நான் பார்த்துக்குறேன்’’ என்று தோல் டாக்டர் பலவிதமாய் கன்வின்ஸ் செய்ய, பாட்டி ஒரு வழியாக, ‘‘அரிப்பு நின்னாப் போதும்’’ என்று சைக்கியாட்ரிஸ்ட்டை பார்க்கச் சம்மதித்தார்.

சைக்கியாட்ரிஸ்ட்டை பார்க்கப் போன போதும் தன் பூச்சி டப்பா சகிதம்தான் வந்தார் பாட்டி. டாக்டரை பார்த்ததும், டப்பாவைத் திறந்துகாட்டி, ‘‘இதோ பாருங்க... இந்தப் பூச்சிதான்’’ என்று தன் கதையை வழக்கமான சோகத்துடன் ஒப்பித்தார்.

டாக்டரும் மிகவும் சிரத்தையாகக் கதையைக் கேட்டுவிட்டு, டப்பாவில் உண்மையிலேயே பூச்சி இருப்பதுபோல முகத்தை வைத்துக்கொண்டு, ‘‘ஆமாம். கஷ்டமாதான் இருக்கும்’’ என்று எல்லாம் புரிந்தமாதிரி தலையை ஆட்ட, நிஜமாகவே டப்பாவில் பூச்சி இருக்கிறதோ என்று உடன் வந்தவருக்கே சந்தேகம் வந்துவிட்டது.

ஆனால் டாக்டரோ, படு மும்முரமாக, ‘‘இந்தப் பூச்சிதானே, நீங்க கவலைப்படாதீங்க பாட்டி. ஒரு மாத்திரை தர்றேன். அதைச் சாப்பிட்டு பாருங்களேன். பூச்சி போன இடம் தெரியாம காணாமப் போயிடும்’’ என்று மிகவும் நம்பிக்கையாகச் சொன்னார்.

பாட்டிக்கு, ‘‘அப்பாடா... கடைசியில, நான் சொல்றதை சீரியஸாகக் கேட்க ஓர் ஆள் கிடைச்சாங்களே’’ என்ற நிம்மதியே பெரிய சந்தோஷத்தைத் தர, ‘‘உங்களுக்காவது என் கஷ்டம் புரியுதே டாக்டர்’’ என்று பெருமூச்செறிந்தார்.

‘‘டோன்ட் ஒர்ரி பாட்டி. மாத்திரையைச் சாப்பிட்டு, நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, 10 நாள் கழிச்சி வாங்க. அதுக்குள்ள இந்தப் பிரச்னை தீர்ந்திடும்’’ என்று டாக்டர் ராத்திரி, ஒரு வேளைக்கு மட்டும் ஒரு மாத்திரையை எழுதித் தந்தார்.

பாட்டி திருப்தியுடன் மருந்தை உபயோகிக்க சம்மதிக்க, தினமும் தொடர்ந்து அந்த மருந்தைச் சாப்பிட்டதில், பூச்சி தொல்லைவிட்டது. சில நாட்களிலேயே, ஊறுவது குறைந்து, ஒரே வாரத்தில் பூச்சிகள் முற்றிலுமாக காணாமலேயே போயின. அட பாட்டியின் உடம்பில் ஊறிய பூச்சிகள் மட்டும்தான் காணாமல் போயின என்று பார்த்தால், பெரிய ஆச்சர்யமாக, அதுவரை அவர் டப்பாவில் அடைபட்டிருந்த பூச்சிகள்கூட மாயமாய் மறைந்துவிட்டிருந்தன. அதைப் பார்த்ததும் பாட்டிக்கு ஏக சந்தோஷம்.

மறுமுறை சைக்கியாட்ரிஸ்ட்டை போய்ப் பார்த்தபோது, டப்பாவைத் திறந்துகாட்டினார். ‘‘பூச்சி எல்லாம் போச்சுப் பாருங்க.’’ டாக்டர் ரொம்ப சீரியஸாய் டப்பாவை எட்டிப் பார்த்தார். ‘‘ஆமாம் பாட்டி’’ என்று ஆமோதித்துவிட்டு, மீண்டும் மருந்தை எழுதிச் சீட்டை நீட்டினார். ‘‘சரி... மருந்து டோஸ் கம்மி பண்ணி இருக்கேன். விடாமச் சாப்பிடுங்க. பூச்சி திரும்ப வந்திடக் கூடாதில்லை.’’

‘‘அதான் அரிப்பு போயிடுச்சே. இனிமே எதுக்கு மருந்து?’’ என்று பாட்டி ஆட்சேபித்தார்.

‘‘மருந்தை நிறுத்தினா, பூச்சி திரும்ப வந்துடுமே’’ என்றார் டாக்டர்.

‘‘நிஜமாவா? அப்படினா சரி’’ என்று பாட்டி மருந்தை வாங்கிக்கொண்டு போய்விட, அவர் மகனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ‘‘அதெப்படி டாக்டர், எங்க கண்ணுக்குத் தெரியாத பூச்சி அவங்க கண்ணுக்கு மட்டும் தெரியுது.  உங்க மருந்தைச் சாப்பிட்டதால எப்படி அதை நிறுத்த முடிஞ்சது?’’

‘‘அவங்க மூளையோட நடுப்பகுதியில் டோபமின் ரசாயனம் அதிகமா சுரக்குறதுனால தான் அவங்க உடம்பெல்லாம் அரிக்குது. இதனாலேயே அவங்களுக்குப் பூச்சி கண்ணுல தெரிய ஆரம்பிச்சிடுது. இந்த டோபமின்னை குறைக்கிற மாத்திரையைச் சாப்பிட்டா ஆட்டோமேட்டிக்கா இந்த அரிப்பு நின்னுப் போயிடுது. அதனால பூச்சின்ற சென்சேஷனும் சரியாயிடுது.’’

“அப்ப, இந்த அரிப்பு, பூச்சு எல்லாமே வெறும் ஒரு ரசாயனத்தினால வந்த வினைதானா?’’ ‘‘மத்தவங்களுக்கு வேற வேற காரணங்கள் இருக்கலாம். ஆனா பாட்டி மாதிரி வயசானவங்க மூளையில இப்படி ஒரு ரசாயன மாற்றம் ஏற்படுறதனாலதான் தன்மேல பூச்சி ஊறுறதா அவங்க நம்புறாங்க. இதை, ‘எக்பாம் சின்ரோம்’னு சொல்வோம். வயசானவங்களுக்கு மட்டுமே வர்ற ஒரு விதமான சைக்கியாட்ரிக் பிராப்ளம். பட் டோன்ட் ஒர்ரி, இந்த மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக்கிட்டா இந்தப் பிரச்னை இனிமே வரவே வராது.’’

‘‘என்னமோ டாக்டர், மறுபடியும் பூச்சி டப்பாவைக் கையில் எடுக்காம இருந்தா சரி’’ என்று சிரித்தார் மகன்.

(மர்மம் அறிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism