Published:Updated:

மனச்சிறையில் சில மர்மங்கள் - 12

மனச்சிறையில் சில மர்மங்கள் - 12
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 12

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

மனச்சிறையில் சில மர்மங்கள் - 12

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

Published:Updated:
மனச்சிறையில் சில மர்மங்கள் - 12
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 12

குறும்புகளின் மன்னன்!

“பிள்ளையா இது, சரியான வாலா இருக்கே” என்றுதான் எல்லா அம்மாக்களும் சிபியை வர்ணிப்பார்கள். சும்மா விளையாட்டுக்கு அல்லது செல்லமாக அப்படிச் சொன்னாலும் பரவாயில்லையே. நிஜமான வெறுப்புடன் பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லாம் இப்படிச் சொல்லும்போது பெற்ற வயிறு பற்றி எரியத்தானே செய்யும்.   

ஆனால், சிபி லேசுபட்டவன் இல்லை. 

வளரவளர அவனைப் பற்றிய குற்றச்சாட்டுகளும் நீண்டுக்கொண்டே போயின.

“ஓர் இடத்துல உட்கார மாட்டேங்கிறான்.  கிளாஸ்ல மத்த பசங்களை எல்லாம் டிஸ்டர்ப் பண்றான். பாடத்தைக் கவனிக்கறதே இல்லை. யார் மேலயும் பயமே இல்லை. கிளாஸ் நடத்தும்போது சத்தமா சினிமாப் பாட்டுப் பாடுறான். கொஞ்சம் கண்டிச்சுவைங்க.”

“உங்க சிபி என் பையனை அடிச்சிட்டான், கிள்ளிட்டான், ரப்பரை எடுத்துட்டான், பேப்பரை கிழிச்சிட்டான்.”

“என்ன பிள்ளை வளர்க்குறீங்க நீங்க?”

மனச்சிறையில் சில மர்மங்கள் - 12

- இப்படி எல்லாம் தினமும் பல பேர் தன் மகனைப் பற்றி குறைசொல்லும்போது, அம்மாவுக்கு மனசு தாங்காது. அழுகையுடன் அவனிடம் மன்றாடிக் கேட்டுப் பார்த்தாயிற்று, “எல்லாரும் உன்னைப் பத்திப் பெருமையாப் பேசணும்னு அம்மா ஆசைப்படுறேன். நீ இப்படிக் கெட்டப்பெயர் வாங்குறியே, அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குத் தெரியுமா?” என்றாள் அம்மா.

ரொம்பவும் அன்பாய் அருகில் வந்து தடவிக்கொடுத்து, “ஸாரிம்மா, இனிமே இப்படிச் செய்யவே மாட்டேன்” என்பான். ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே புதிய பிரச்னையோடு வந்துநிற்பான்.

“அப்பா கூட இருந்தாத்தான் பயம் வரும். பிள்ளை லைஃப்தானே முக்கியம். உங்க வீட்டுக்காரரை வேலைய விட்டுட்டு இந்தியாவுக்கு வரச் சொல்லுங்க. நம்ம ஊர்ல இல்லாத வேலையா?” என்று சிலர் யோசனை சொன்னார்கள்.

கணவரிடம் இதுபற்றிப் பேசினால், அவரோ, “குழந்தை அப்படித்தான் இருப்பான். சின்ன வயசுல நான் செய்யாத குறும்பா? போகப் போகச் சரியாகிடுவான்” என்றார் சிபியின் அப்பா.

அடம், பிடிவாதம், முரட்டுத்தனம், கோபம் வந்தால் அம்மாவையே போட்டுத்தாக்குவது என்று அவன் கொட்டம் அதிகரித்துக் கொண்டேபோக, “இவனை என்னதான் பண்ணுறதுன்னே எனக்குத் தெரியலையே” என்று அம்மா அவஸ்தைப்பட்டாள்.

எப்படியாவது அவனைத் திருத்தி, படிப்பில் தேற வைத்துவிடலாம் என்று அவன் அம்மா எவ்வளவோ போராடினாள். ஆனால், அவனை ஹோம் ஒர்க் செய்ய வைப்பதற்குள் உயிர் போய் திரும்பும். ஒரு நிமிடம்கூடப் பாடத்தில் முழுதாய் கவனம் செலுத்தமாட்டான். ஒரு வரி எழுதுவதற்குள், “பசிக்குது, சாப்பிட ஏதாவது தாங்க” என்பான். 

“இப்பத்தானேடா சாப்பிட்ட!” என்று அம்மா கேட்டால், “அது சாதம். எனக்குப் பிடிக்கலை. சாக்லேட் வாங்கித் தந்தாத்தான் படிப்பேன்” என்று அடம்பிடிப்பான்.

“சாக்லேட் வாங்கித் தந்தா ஹோம் ஒர்க்கை முடிச்சிடுவியா?”

மனச்சிறையில் சில மர்மங்கள் - 12

“ஓ!”

சாக்லேட் தருவாள். சாப்பிடுவான். கொஞ்ச நேரம் ஹோம் ஒர்க்செய்வதுபோல, குனிவான். ஆனால் பாதியிலேயே நிமிர்ந்து, “எனக்கு ஒண்ணுக்கு வருது” என்று சட்டென்று ஓடிவிடுவான். 

கிளைமாக்ஸாய் பள்ளித் தலைமை ஆசிரியை அம்மாவைக் கூப்பிட்டுச் சொல்லியேவிட்டார். “கிளாஸ் ஒர்க்கை எல்லாம் சரியா கம்ப்ளீட் பண்ணுறதில்லை. ஹோம் ஒர்க்கை நீங்க எழுதித் தர்றீங்க. இவனுக்குப் படிப்பில ஆர்வமே இல்லை. எப்பப் பார்த்தாலும் மத்த பசங்களை டிஸ்டர்ப் பண்றான். எவ்வளவு திட்டினாலும், பனிஷ்மென்ட் கொடுத்தாலும், பயப்படுறதே இல்லை. எதிர்த்துப் பேசுறான்.  தமாஷ் பண்றான். யார் மேலயும் பயமே இல்லை. இவனால மத்த பசங்களும் கெட்டுப் போறாங்க. உங்க பையனை இந்த ஸ்கூல்ல வெச்சிக்க முடியாது” என்று சொன்னதுதான் தாமதம். அம்மா கண்ணில் இருந்து கங்கைபோல கண்ணீர் பொத்துக்கொண்டு பாய, பிரின்சிபால் இரக்கப்பட்டு, “ஒண்ணு செய்யலாம், உங்க பையனை ஒரு சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போங்க. அவங்க பார்த்துச் சரி செய்துட்டா, திரும்பவும் சேர்த்துக்குறேன்.  இல்லைனா முடியாது” என்றார் திட்டவட்டமாய்.

எப்படியோ, மகனைக் காப்பாற்ற இன்னும் ஒரு வழி பாக்கி இருக்கிறதே என்ற சந்தோஷத்தில் அம்மா அவசர அவசரமாக மகனை இழுத்துக்கொண்டு மனநல மருத்துவரிடம் போனார்.

சாதாரணமாகக் குழந்தைகள், மருத்துவர் என்றதுமே அஞ்சுவார்கள். சிபியாவது பயப்படுவதாவது. அவன் பாட்டுக்கு ஜாலியாய் டாக்டரின் அறைக்குள் போனான். அம்மாவும் டாக்டரும் பேசிக்கொண்டிருக்க, அவன் அறையை நோட்டம்விட்டான். இரண்டு நிமிடம், மரியாதை நிமித்தமாய் உட்கார்ந்து பார்த்தான். அப்புறம் இருப்புக்கொள்ளாமல் எழுந்து அறையைச் சுற்றி நடக்க ஆரம்பித்தான்.

அம்மா உடனே, “டாக்டர் முன்னாடி, என்ன இது மரியாதை இல்லாமல், உட்கார்” என்று அதட்டினார். டாக்டரோ, “அவன் விருப்பப்படி விடுங்கள்” என்றுவிட, சிபி, அறையைச் சுற்றி நடந்துவந்து, அங்கிருந்த ஒவ்வொரு பொருளாக எடுத்து விளையாட ஆரம்பித்தான். 

“சரி, நாங்க ரெண்டுபேரும் பேசிக்கிறோம், நீங்க கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க” என்று அம்மாவை வெளியே அனுப்பினார் டாக்டர். 

சற்றுநேரம் கழித்து சிபி வெளியே ஓடிவந்து, “அம்மா, டாக்டர் உன்னைக் கூப்பிடுறாங்க. உள்ளே போ” என்று ஊருக்கே கேட்கும்படி உரக்கக் கூறினான். 

“உங்க பையனுக்கு ADHD இருக்கு. கவனக்குறைவு -அட்டென்ஷன் டெஃபிசிட்னு இதைச் சொல்வாங்க. அதனால்தான் அவனால தொடர்ந்து ஒரே விஷயத்துல கவனம் செலுத்த முடியறதில்லை. அத்தோட ரொம்ப ஹைபர் ஆக்டிவ்வா இருக்கான். துறுதுறுன்னு, அடக்க முடியாத அளவுக்கு இருக்கான். வேண்டுமென்றே அவன் இப்படிச் செய்யலை. சில குழந்தைகளுக்கு முன்மூளை செயல்பாட்டுல இப்படி ஒரு கோளாறு ஏற்படும்.”

மனச்சிறையில் சில மர்மங்கள் - 12

“இதனால் அவன் உயிருக்கு ஏதாவது?”

“சேசே... இதனால் உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை. ஆனா, இப்படிக் கவனம் இல்லாம இருக்குறதினால அவனுக்குப் பல விஷயங்களைக் கத்துக்க முடியாமப் போயிடும். இவ்வளவு ஹைபர் ஆக்டிவ்வா இருந்தான்னா, உங்களுக்கும் கஷ்டம், மத்தவங்களுக்கும் சிரமம்.”

“இதுக்கு என்னதான் டாக்டர் செய்யுறது?”

“இதுக்கெல்லாம் மருந்து இருக்கு. தினமும் கொடுத்தீங்கன்னா, அவனோட பிரச்னை சரியாயிடும். மத்த குழந்தைகள் மாதிரி கவனம் செலுத்தி, கட்டுப்பாடோட இருக்க ஆரம்பிச்சிடுவான்.”

இத்தனை வருஷப் பிரச்னைக்கு ஒரே ஒரு சின்ன மாத்திரைதான் தீர்வா? அம்மாவால் நம்பவே முடியவில்லை. டாக்டர் சொன்னது போலவே மருந்தை சிபிக்குக் கொடுத்து வந்தாள் அம்மா.

ஆச்சர்யம்னா ஆச்சர்யம். சாப்பிட, தூங்க, குளிக்க, கிளம்ப என்று அவன் அதுவரை படுத்தியதெல்லாம் மாறி சமர்த்தாகச் செயல்படத் தொடங்கினான் சிபி.  டீச்சர், “பரவாயில்லை இப்ப எல்லாம் கிளாஸைக் கவனிக்கிறான்.  போர்டுல எழுதிப் போடுறதை எல்லாம் சரியா எழுதிக்கிறான்” என்று பாராட்டினார். 

மற்ற பிள்ளைகளின் தாய்மார்களும், “சிபி ரொம்ப குட் பாய் ஆயிட்டானே. இப்ப எல்லாம் முன்னே மாதிரி குறும்பே பண்ணுறதில்லை” என்று சந்தோஷப்பட, அதைக் கேட்ட சிபிக்கு பெருமை. அவன் அம்மாவுக்குப் பேரானந்தம்.

(மர்மம் அறிவோம்)