Published:Updated:

மனச்சிறையில் சில மர்மங்கள் - 14

மனச்சிறையில் சில மர்மங்கள் - 14
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 14

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

மனச்சிறையில் சில மர்மங்கள் - 14

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

Published:Updated:
மனச்சிறையில் சில மர்மங்கள் - 14
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 14
மனச்சிறையில் சில மர்மங்கள் - 14

கடந்து போனவள்

சுடிதார் போட்டுக்கிட்டா, பைக்ல ரெண்டு பக்கமும் கால போட்டுக்கிட்டு வசதியா உட்கார்ந்துட்டு வருவேனில்லை?” என்று வசுமதி திருமணமான புதிதில் பலமுறை கேட்டுப் பார்த்து விட்டாள். ஆனால், பூங்குன்றனுக்கு அதில் உடன்பாடில்லை, “அப்படி ஒண்ணும் நீ வசதியா உட்காரணும்னு அவசியமில்லை. அடக்க ஒடுக்கமா தமிழ்ப் பொண்ணா லட்சணமா வந்தாபோதும்” என்று கோபமாய்ச் சொல்லிவிட்டான்.

அப்படி எல்லாம் அவள் விட்டுக்கொடுத்து வாழ்ந்ததன் பலனாய் பிறந்தவன்தான் அருண்மொழி வர்மன். மகனின் கதகதப்பான கமகமக்கும் உடலை கட்டிக்கொண்டால், ‘இதுவே பேரானந்தம்’ என்று மனம் நிறைந்துபோவாள். அவனது ஒவ்வொரு செய்கையையும் ரசித்து ரசித்து போனில் போட்டோ பிடித்துவைத்தாள். அவன் எட்டு மாதங்களிலேயே அவளை, “அம்மா” என்று அழைத்தது அவள் வாழ்நாளில் உச்சகட்ட உவகை.

‘‘சரி சரி கொஞ்சுனது போதும். சீக்கிரம் வந்து தொலை. டாக்டரைப் பார்த்துட்டு உன்னை மறுபடியும் வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுட்டு, நான் வேலைக்குப் போகணும்’’ அன்றைக்கும் சிடுசிடுத்துக்கொண்டே இருந்தான் பூங்குன்றன். குழந்தையை இடது கையால் பிடித்துக்கொண்டு பைக்கில் ஏறி உட்கார்ந்து, கணவனின் தோளைப் வலது கையால் பிடித்துக்கொண்டாள்.

கிளினிக்குக்கு முன்னால் சிக்னலில் திரும்பும்போது, எதிரில் ஒரு மாடு திடீரென்று குறுக்கே வர, பூங்குன்றன், சடன் பிரேக் போட்டான். அதை எதிர்பார்த்திராத வசுமதியின் கையைவிட்டு குழந்தை நழுவி, பறந்துபோய் பாதையில் விழ, வசுமதியும் பூங்குன்றனும் தடுமாறிக் கீழே விழுந்தனர். வசுமதியின் கால் உடையும் சத்தம் அவள் காதுகளுக்கே தெளிவாகக் கேட்டது. அப்போதும், மகனைப் பற்றிய கவலையோடு, கைகளால் இழைந்துக்கொண்டு போய் அருண்மொழி வர்மனைத் தூக்கினாள். குழந்தை இறந்துகிடந்தான். அத்தோடு வசுமதியும் மயக்கமுற்றாள்.

அவள் மீண்டும் சுய நினைவுக்குத் திரும்பியபோது, “கடைசியா ஒரு தடவை அவனைத் தொட்டு பார்த்துடம்மா” என்று அம்மா நீட்டிய மகனின் சடலத்தைத் தொட்டவள், அது சில்லென்று ஐஸ் மாதிரி இருப்பதை உணர்ந்து மீண்டும் மயக்கமானாள்.

சில நாட்களில் உடைந்த அவள் கால்கூட கூடி இருந்தது. ஆனால், மனதளவில் அவள் ரொம்பவே மாறிப் போயிருந்தாள். அதுவரை கணவனைக் கண்டு அஞ்சி, பார்த்துப் பார்த்து அவனுக்குப் பணிவிடை செய்தவள், அதற்கு மேல் அவனைச் சட்டையே செய்வதில்லை. அவள் வீட்டில் சமையலே நடப்பதில்லை. சாப்பிடாமல், சரியாக உடை அணியாமல் அவள் புத்திரசோகத்தில் பேதளித்துக் கிடந்தாள். மகனைப் பறிகொடுத்த துயரிலிருந்து சீக்கிரம் மீண்டுவிட்டான் பூங்குன்றன். “அடுத்த குழந்தை பிறந்தா எல்லாம் சரியாயிடும்” என்று பலரும் ஆறுதல் சொல்ல, இவனும் மனைவியை நெருங்கி, உரிமையாய்த் தொட்டான்.

அடுத்தகணம் காளி அவதாரம் எடுத்தவள்போல, அவனை நொறுக்கி எடுத்துவிட்டாள் வசுமதி. “நீ எல்லாம் ஒரு மனுஷனா? எப்படிடா உனக்கு இந்த நெனப்பெல்லாம் வருது? ஒழுங்கா சுடிதார் போட்டு, ரெண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தா என் பிள்ளை அப்படி விழுந்து செத்திருப்பானா? சடன் பிரேக் போட்டு என் பிள்ளையக் கொன்னுட்டு இப்ப...” வசுமதி பச்சைப் பச்சையாய்ப் பேசி, அழுது ஓய்ந்தாள். ஒரு பெண்ணின் கோபத்துக்கு எத்தனை வீரியம் உண்டு என்று உணர்ந்ததிலிருந்து, மனைவியை நெருங்குவதே இல்லை அவன்.

பூங்குன்றன், வசுமதியிடம் ஏதும் சொல்லாமல், திடுமென ஒரு நாள் அவளை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனான். யாரோ என்னவோ, அலுவலக வேலையாய் வந்திருப்பான்போல என்று எதையும் கவனிக்காமல் தன் உலகிலேயே மூழ்கி இருந்த வசுமதி, திடீரென்று, “பையன் போனது மறக்க முடியலையா?” என்று கேட்ட முகத்தை ஏறிட்டாள்.

என்ன ஆயிற்றோ, வசுமதிக்கு அடக்க முடியாத கண்ணீர். “நான் கடைசியா அவனை தொட்டப்போ, அவன் ஜில்லுனு ஐஸ் மாதிரி இருந்தான். என்னால் அதை எப்படி மறக்க முடியும்? தினமும் கதகதன்னு இருக்கும் அவனோடு அந்தக் குட்டி உடம்பு ஜில்லுனு ஐஸ் மாதிரி...” வசுமதி ரொம்ப நேரத்துக்கு அழுது புலம்பினாள். “பைக்குல குழந்தைய எந்தப் பொம்பளைத் தூக்கிட்டுப் போனாலும் என்னால அதைப் பார்க்க முடியலை. அறிவுகெட்ட முண்டமேனு அவங்க தலையிலே ஓங்கிக் கொட்டணும்போல இருக்கு. அன்னைக்கு மட்டும் நான் ரெண்டு பக்கமும் காலைப் போட்டு உட்கார்ந்திருந்தா என் பையனை நான் அப்படி பறக்க விட்டிருக்க மாட்டேனே?” என்று சொல்லி முடித்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள்.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 14

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர், அவளுக்கு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். “இந்த மாத்திரைகளைச் சாப்பிடும்போது, கர்ப்பம் ஆயிடாம பார்த்துக்கணும்.” வசுமதி விரக்தியாய் தலையசைக்க, பூங்குன்றன், “அவளுக்கு என்ன பிரச்னை?” என்று விசாரித்தான்.

“PTSDனு சொல்வோம், போஸ்ட் டுரமாடிக் ஸ்ட்ரெஸ் டிஸாடர். எதிர்பாராத சம்பவத்துனால மனசொடஞ்சி இன்னும் மீளாம இருக்காங்க. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டா, தூக்கம், பசி, கவனம் எல்லாம் இம்ப்ரூவ் ஆகும். சைக்கோதெரபி பண்ணா இந்த PTSD-லேர்ந்து மீண்டு வந்துடுவாங்க. அடுத்த வாரம் கூட்டிட்டு வாங்க.”

“தெரபியா, எனக்கு எதுக்கு? எதுவும் வேண்டாம்” என்று வசுமதி ஆட்சேபிக்க... டாக்டர், ‘‘மருந்தில்லை... ஊசியில்லை. சும்மா வெறுமனே பேசுவதுதானே, மறுக்கக் கூடாது’’ என்றார். அப்போதுதான் வசுமதி கவனித்தாள், டாக்டர் கர்ப்பமாய் இருப்பதை.

அடுத்த வாரம் என்னவோ, அவளுக்கே டாக்டரை பார்க்கத் தோன்றியது. டாக்டர் அவளை உட்கார வைத்து அவள் கண்முன் விரல்களை அசைத்து, “நடந்ததிலேயே மோசமான சம்பவத்தை நினைத்தால், என்ன உருவம் மனதில் தோன்றுகிறது?” என்று கேட்க, சுரீர் என்று அருண்மொழி வர்மன் காற்றில் பறந்த காட்சி மனதில் பாய, ஓ என்று கத்தி அழ ஆரம்பித்துவிட்டாள் வசுமதி.

இப்படி வாரம் ஒரு முறை அந்த டாக்டரிடம் போய் உட்கார்ந்து அவர் விரல் அசைவுக்கு தன் கண்களை அசைத்து மனதில் அலை அலையாய் பொங்கி வரும் விஷயங்களைப் பற்றிப் பேசுவது வசுமதிக்கு ஏனோ பெரிய ஆறுதலாய் இருந்தது. டாக்டரை நினைத்தால் கொஞ்சம் கவலையாகவும் இருந்தும், “நீங்க இப்படி வாயும் வயிறுமா இருக்கும்போது, நான் வேற இப்படி எல்லாம் அபசகுனமா பேசுனா, உள்ள இருக்குற பாப்பாவுக்கு ஏதாவது ஆயிடாதா டாக்டர்?”

டாக்டர் பதில் ஏதும் சொல்லாமல் நமட்டுச் சிரிப்புடன், “கோ வித் தட்” என்று விரல்களை அசைத்துக்கொண்டே இருக்க, வசுமதியின் மனத்திரையில் குழந்தையின் சிரிப்பும், மென்மையும், தொட்டால் மெத்தென்று பாயும் உஷ்ணமும் வந்து விழ, அன்று தெரபி முடிந்து நாற்காலியைவிட்டு எழுந்து வெளியேற கதவைத் திறந்தவள்... நின்று, திரும்பி டாக்டரைப் பார்த்தாள். “இந்த மருந்தை சாப்பிடும்போது கர்ப்பமாகக் கூடாதுனு சொன்னீங்களே? அதை நிறுத்திடட்டுமா?”

டாக்டர், ‘‘ஷ்யூர், நிறுத்திடுங்க” என்று முறுவலிக்க, அன்று ஆட்டோவில் வீட்டுக்குப் போகும்போது, பூங்குன்றனின் கையை பிடித்துக்கொண்டாள் வசுமதி. பூங்குன்றனுக்கு பேரதிர்ச்சி. பயந்து பயந்து அவன் அவளை நெருங்கி வர, சிரித்த முகத்துடன் அவனை ஊக்குவித்தாள்.

See Also: மனச்சிறையில் சில மர்மங்கள் - 13

அந்த மாதம் வசுமதிக்கு மென்ஸஸ் வரவில்லை என்று கர்ப்பச்சோதனை பட்டையை வாங்கிவர கடைக்குப் போனான் பூங்குன்றன். ‘ஒரு குழந்தை, மனைவியின் கையில்... இன்னொரு குழந்தை’ என்று பைக்கில் வந்து இறங்கிய ஆசாமியைப் பார்த்தான். “பிரதர், ரெண்டு பக்கமும் காலைப் போட்டு உட்கார்ந்தாதான் குழந்தையைப் பத்திரமா பிடிக்க முடியும். இல்லைனா ஆபத்து” என்று எச்சரித்தான் அநிச்சையாக.

“அப்படி எல்லாம் நடக்காதுப்பா” என்று அந்த ஆள் அசட்டையாய் சொல்ல, “எனக்கே நடந்திருக்கு, சொன்னாக் கேளுப்பா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தான். “டெஸ்ட் பாஸிடிவ்வா இருக்கணுமே” என்று பிரார்த்தித்தபடியே.

(மர்மம் அறிவோம்)