Published:Updated:

`17 ஊரணிகளைக் காணோம்; கண்டுபிடித்துக்கொடுங்க!' - கலெக்டர் ஆபீஸில் வி.சி.க பிரமுகர் தர்ணா

இரா.மோகன்
`17 ஊரணிகளைக் காணோம்; கண்டுபிடித்துக்கொடுங்க!' - கலெக்டர் ஆபீஸில் வி.சி.க பிரமுகர் தர்ணா
`17 ஊரணிகளைக் காணோம்; கண்டுபிடித்துக்கொடுங்க!' - கலெக்டர் ஆபீஸில் வி.சி.க பிரமுகர் தர்ணா

பரமக்குடி நகராட்சி பகுதியில் காணாமல்போன 17 ஊரணிகளைக் கண்டுபிடித்து தூர்வாரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர் தனி ஒருவராகத் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா பாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருளன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளரான இவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு கொடுக்க வந்திருந்தபோது தனி நபராக திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தர்ணாவில் ஈடுபட்ட இருளனிடம் பேசியபோது, ``பரமக்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஊரணிகள் எத்தனை என்பது குறித்தும், அவற்றின் தற்போதைய நிலைகள் குறித்தும், ஊரணிகளின் விஸ்தீரணம் மற்றும் அந்த ஊரணிகள் தூர் வாரப்பட்டுள்ளனவா என்பது குறித்த விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தேன். அதற்கு பரமக்குடி நகராட்சியில் முனியாண்டி கோயில் ஊரணி, மடத்து ஊரணி, காட்டு பரமக்குடி ஊரணி என  17 ஊரணிகள் பெயர் பட்டியலை அளித்து உள்ளனர். ஆனால், அந்த ஊரணிகள் அமைந்துள்ள இடங்கள், அவற்றின் தற்போதைய நிலை, இதில் தூர்வாரப்பட்ட ஊரணிகள் போன்ற தகவல்கள் எதுவும் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை என நகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான ஊரணிகளின் நிலை குறித்து அவர்களது அலுவலகத்திலேயே பதிவுகள் இல்லை என்றால் ஊருக்குள் ஊரணிகள் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவேதான் நகராட்சிக்குச் சொந்தமான ஊரணிகளைக் கண்டறிவதுடன், அவை ஆக்கிரமிப்புக்குள்ளாகி உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்த கோரியும் அவ்வாறு ஆக்கிரமிப்புகளால் காணாமல்போன ஊரணிகளைக் கண்டறிந்து மீட்டு எடுக்க கோரியும், அந்த ஊரணிகளைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தூர்வாரக் கோரியும், அதன் மூலம் பரமக்குடி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்கவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன்'' எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட இருளனை அங்கிருந்து வெளியேறச் செய்தனர்.