Published:Updated:

‘கஜா புயல்’ முன்னெச்சரிக்கை - அவசர காலத் தொலைபேசி எண்கள் வெளியிட்ட புதுச்சேரி அரசு

ஜெ.முருகன்
‘கஜா புயல்’ முன்னெச்சரிக்கை - அவசர காலத் தொலைபேசி எண்கள் வெளியிட்ட புதுச்சேரி அரசு
‘கஜா புயல்’ முன்னெச்சரிக்கை - அவசர காலத் தொலைபேசி எண்கள் வெளியிட்ட புதுச்சேரி அரசு

‘கஜா புயல்’ எச்சரிக்கை எதிரொலியாக அவசரக் கால தொலைபேசி எண்களை வெளியிட்டிருக்கிறது புதுச்சேரி அரசு.

வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கஜா புயலாக உருவெடுத்திருக்கிறது. வருகின்ற 14, 15 தேதிகளில் அது கடலூர்-பாம்பன் இடையே கரையைக் கடக்கக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஷாஜகான், “புதுச்சேரியில் `கஜா’ புயலை எதிர்கொள்ளும் விதத்தில் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கின்றன. அவசர காலத்தில் மக்கள் தொடர்புகொள்வதற்காக 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இன்று முதல் வருகின்ற 16-ம் தேதி வரை பேனர்கள் வைப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்றே அகற்ற வேண்டும். குடிநீர், மின்சாரம் போன்றவற்றை பொதுமக்களுக்குத் தடையின்றி வழங்க வேண்டும், ஆபத்தான கட்டடங்களை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறேன். மீனவர்கள் அனைவரும் கரை திரும்பிவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். கடற்கரையோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் பேரிடர் மீட்டுக் குழுவுடன் அதிகாரிகள் தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கஜா புயல் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். உரிய அரசுத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு சரியான தகவல்களைப் பதிவிடுங்கள். தேவையற்ற பதற்றத்தை மக்களுக்குப் பரப்ப வேண்டாம். கஜா புயலைக் கண்டு மக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை” என்று கூறினார்.

பேரிடர் கால கட்டணமில்லா தொலைபேசி எண்கள்:

அவசர கால செயல் மையம்

(வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை) - 1070, 1077

கட்டண தொலைபேசி - 0413 2253407

கடலோரக் காவல் படை - 1554                            

காவல்துறை - 100, 1031

தீயணைப்புத்துறை - 101

ஆம்புலன்ஸ் - 108

மின்துறை   - 1912

போக்குவரத்துத்துறை - 1073