Published:Updated:

`இனி உங்களால் நடத்த முடியாது!'- பாக். வீரர்களுக்கு விசா மறுப்பால் இந்தியாவுக்கு ஒலிம்பிக் கமிட்டி `செக்'

`இனி உங்களால் நடத்த முடியாது!'- பாக். வீரர்களுக்கு விசா மறுப்பால் இந்தியாவுக்கு ஒலிம்பிக் கமிட்டி `செக்'
`இனி உங்களால் நடத்த முடியாது!'- பாக். வீரர்களுக்கு விசா மறுப்பால் இந்தியாவுக்கு ஒலிம்பிக் கமிட்டி `செக்'

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு வீரர்கள் 2 பேருக்கு இந்திய அரசு விசா மறுத்ததற்கு ஒலிம்பிக் கமிட்டி இந்தியா மீது நடவடிக்கை எடுத்துள்ளது.


புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என மத்திய அரசு கூறியது. இந்தச் சூழலில், டெல்லியில் நடந்து வரும் துப்பாக்கிச் சுடுதல் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் ஜிஎம் பஷிர் மற்றும் கலில் அகமெட் ஆகிய இருவரும் விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனையடுத்து பாகிஸ்தான் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் ( ஐஓசி) இந்தியா மீது புகாரளித்தது.


 

இது தொடர்பாகச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், `பாகிஸ்தான் வீரர்கள்  2020 ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக டெல்லியில் நடைபெறும் தகுதிச்சுற்றில் பங்கேற்க இருந்தனர். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அந்த வீரர்களுக்கு இந்திய அரசால் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், அவர்கள் கலந்துகொள்ளவிருந்த 25 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியை ரத்து செய்ய முடியாது. காரணம் 61 நாடுகளைச் சேர்ந்த 500 தடகள வீர்ர்கள் ஒலிம்பிக் தொடர்பான போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவில் தற்போது உள்ளனர். அவர்களது நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். 

பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் கடைசி வரை பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இதனால் இந்திய ஒலிம்பிக் கமிட்டியுடன் எதிர்காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, ஒலிம்பிக் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவது என அனைத்து விதமான ஆலோசனைகளையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த கோரியிருந்த மனுக்களையும் ரத்து செய்கிறோம். 


 

பாகிஸ்தான் வீரர்கள்மீது இந்தியா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை ஒலிம்பிக் கமிட்டியின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது. நாடுகளுக்கு இடையே நடக்கும் எந்தவித அரசியலும் விளையாட்டுப் போட்டிகளில் பிரதிபலிக்கக் கூடாது. விளையாட்டு வீரர்களைப் பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது. அரசியல் பாகுபாடுகளின்றி அனைத்து நாடுகளின் வீரர்களுக்கும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும். தற்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா அளிக்க இந்தியா மறுப்பு தெரிவித்தது போல் எதிர்காலத்தில் எந்தவொரு சம்பவமும் நடக்காது என்று இந்திய அரசு எழுத்துபூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே, இனி வரும் காலங்களில் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும். இந்தியா உறுதிமொழி அளிக்காதவரை எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் எதுவும் இந்தியாவில் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று சர்வதேச கூட்டமைப்புக்கும் (ஐஎப்) பரிந்துரைத்துள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு அமைப்பு (ஐஎஸ்எஸ்எப்) இந்தியாவின் 2020-ம் ஆண்டு விளையாட்டுப் போட்டிக்கான 16 வகை ஒலிம்பிக் அந்தஸ்துகளையும் ரத்து செய்து, 2 பிரிவுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம், 2026 யூத் ஒலிம்பிக்ஸ், 2030 ஆசிய விளையாட்டுகள், 2032 சம்மர் ஒலிம்பிக்ஸ் உள்ளிட்டவற்றை நடத்த திட்டமிட்டிருந்தது. அனுமதியும் கோரியிருந்தது. ஆனால், ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முடிவால் இந்தியாவில் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.