Published:Updated:

தாகம் தீர்க்குமா ஜல் சக்தி?

தாகம் தீர்க்குமா ஜல் சக்தி?
பிரீமியம் ஸ்டோரி
தாகம் தீர்க்குமா ஜல் சக்தி?

தாகம் தீர்க்குமா ஜல் சக்தி?

தாகம் தீர்க்குமா ஜல் சக்தி?

தாகம் தீர்க்குமா ஜல் சக்தி?

Published:Updated:
தாகம் தீர்க்குமா ஜல் சக்தி?
பிரீமியம் ஸ்டோரி
தாகம் தீர்க்குமா ஜல் சக்தி?

‘‘குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாத்து மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக ‘ஜல் சக்தி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதற்காகத் தனித்துறை ஏற்படுத்தப்படும்’’ - இது தேர்தலின்போது மோடி கொடுத்த வாக்குறுதி. சொன்னபடியே பிரதமர் மோடியின் அமைச்சரவை பொறுப்பேற்றபோது, ‘ஜல் சக்தி’ என்ற தனித்துறையை உருவாக்கி வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார் மோடி. சரி, ‘ஜல் சக்தி’ துறையின் முன்னால் இருக்கும் சவால் என்ன? அதையெல்லாம் சீராக்கி, இந்திய மக்களின் தாகம் தீர்க்குமா, ஜல் சக்தி? பார்ப்போம்!

“குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது மட்டும் ஜல் சக்தியின் பணியல்ல... விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளையும் இந்தத் துறை உறுதிசெய்யும்” என்கிறார், இந்தத் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கஜேந்திர சிங் ஷெகாவத். மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு ஆகிய துறைகளை மறுசீரமைத்து உருவாக்கப்பட்டுள்ளது ஜல் சக்தி. அத்துடன், குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையும் இணைக்கப்பட்டுள்ளன. வரும் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதே ஜல் சக்தியின் பிரதான நோக்கம். நதிகள் இணைப்புத் திட்டங்களை விரைவாக முன்னெடுத்துச் செல்வது, கிராமப்புற நீர் மற்றும் நிலத்தடி நீர் மறுசீரமைப்புக் காகச் சிறப்புக் கவனம் செலுத்துவது ஆகியவை இதன் இன்னபிற நோக்கங்கள்.

தாகம் தீர்க்குமா ஜல் சக்தி?

அதேசமயம், இந்தத் துறையின் முன்னிருக்கும் சவால்களும் கவனிக்கத்தக்கவை. ஏனெனில், தண்ணீரை மனிதர்களால் உற்பத்திசெய்ய இயலாது. இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரை மேலாண்மை செய்வதில் இருக்கிறது நம் திறமை. இந்தியாவைப் பொறுத்தவரை, தண்ணீர்ப் பிரச்னையில் மிக மோசமான சூழல் நிலவிவருகிறது. ‘நிதி ஆயோக்’ அமைப்பு, கடந்த 2018-ம் ஆண்டு மத்திய நீர்வளத் துறை அமைச்சகம், மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரம் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்துடன் இணைந்து, நாடு முழுவதும் இருக்கும் நீர்வளம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் வெளியிடப்பட்ட தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம்.

‘2020-ம் ஆண்டுக்குள் சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற இந்தியாவின் 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும்’ என்பதுதான் அந்த ஆய்வு முடிவுகளின் முக்கியச் சாராம்சம். நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீர் ஆதாரங்களை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டு, வெறும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு இந்த அறிக்கை சொன்ன விஷயங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடியவை.

இந்திய மாநிலங்களின் நீர் மேலாண்மை தொடர்பான தரவுகள் அனைத்தையும் ஒப்பிட்டு, ஆய்வுசெய்து வெளியிடப்பட்ட அறிக்கையில், (Composite Water Management Index) 24 மாநிலங்களின் தரவுகள் தொகுக்கப்பட்டன. காஷ்மீர், மிசோரம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்குப் போதிய தரவுகள் இல்லாததால் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மீதமுள்ள 24 மாநிலங் களில் நீர் ஆதாரங்கள் மறுசீரமைப்பு, நீர் மேலாண்மைக்கான அரசின் கொள்கைகள், நிலத்தடி நீர் மேலாண்மை, குடிநீர் விநியோகம் உட்பட மொத்தம் ஒன்பது அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப் பட்டன. இதில், சிறந்த நீர் மேலாண்மைகொண்ட மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலிடத்தையும் ஜார்க்கண்ட் கடைசி இடத்தையும் பிடித்தன. தமிழகத்துக்கு இந்தப் பட்டியலில் ஏழாவது இடம்.

தாகம் தீர்க்குமா ஜல் சக்தி?

மேலும் அந்த அறிக்கையில், ‘நாட்டில் அறுபது கோடிப் பேர் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். ஆண்டுதோறும் இரண்டு லட்சம் மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி உயிர் இழக்கின்றனர். இதேநிலை தொடர்ந்தால், 2050-ல் இந்தியாவின் ஜி.டி.பி-யில் ஆறு சதவிகிதம் அளவுக்குத் தண்ணீர்ப் பிரச்னையால் பாதிப்பு ஏற்படலாம். இந்திய மக்கள்தொகையில் 40 சதவிகிதம் பேருக்கு 2030-ல் குடிநீர் கிடைக்காது. 2020-ல் தேசத்தின் 21 பெரிய நகரங்களில் நிலத்தடி நீர் முழுவதுமாகக் குறைந்துவிடும். இப்போதும் 75 சதவிகிதக் குடியிருப்புகளுக்குச் சரியான குடிநீர் கிடைக்கவில்லை. 84 சதவிகித கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்பு கிடைக்கவில்லை. நாட்டில் உள்ள தண்ணீரில் 70 சதவிகிதம் மாசுபடுத்தப்பட்டுள்ளது. அதனால், பாதுகாப்பான நீர்கொண்ட நாடுகளின் பட்டியலில், 122 நாடுகளில் இந்தியா 120-வது இடத்தில் உள்ளது’ என்று அதிர்ச்சித் தகவல்களைச் சொன்னது நிதி ஆயோக்கின் அறிக்கை.

சில நாள்களுக்கு முன்பு ஜல் சக்தி துறையின் முதல் கூட்டம் ஜூன் 11-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலும் மேற்கண்ட சவால்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. அதில் நாடு முழுவதுமே மழைநீர் சேமிப்புத் திட்டத்தைக் கட்டாயமாக்குவது, நீர்நிலைகளைப் பராமரிப்பதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரங்களை அதிகரிப்பது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்திய மக்களின் தாகம் தீர்க்குமா, ஜல் சக்தி துறை? பொறுத்திருந்து பார்ப்போம்!

- துரை.நாகராஜ்