Published:Updated:

தண்ணீர்ப் பிரச்னை: சென்னையில் இருமடங்காகும் லாரித் தண்ணீர் விலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தண்ணீர்ப் பிரச்னை: சென்னையில் இருமடங்காகும் லாரித் தண்ணீர் விலை!
தண்ணீர்ப் பிரச்னை: சென்னையில் இருமடங்காகும் லாரித் தண்ணீர் விலை!

சமூகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களுமே சமூக வலைதளங்களில் பிரதிபலிக்காது என்பதற்குத் தண்ணீர்ப் பிரச்னை சமீபத்திய உதாரணம். இன்னும் சில மாதங்களில் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாகவே மக்கள் தண்ணீர்ப் பிரச்னையால் தவித்துவருகிறார்கள். ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டும் வருகிறார்கள். ஆனால், சென்னையில் தண்ணீர் ஒரு பிரச்னையாக எட்டிப்பார்க்கும்போதுதான் அது பேசுபொருளாகிறது. அதுகுறித்தான விவாதங்கள் நடக்கின்றன; ஆங்கில ஊடகங்கள் இந்திய அளவுக்கு அதைக்கொண்டு போகின்றன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகம் முழுக்க ஒரு பிரச்னையால் பாதிக்கப்பட்டாலும் அது தலைநகரமான சென்னையை எப்போது தாக்குகிறது என்பதை வைத்துதான் அதற்குத் தீர்வு கிடைக்குமென நாம் நம்ப வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக மக்கள் வசிக்கிறார்கள். தமிழகத்தின் வர்த்தக மையமாக சென்னைதான் விளங்குகிறது. சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விஸ்தரித்துக்கொண்டே போகிறது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற ஒரு நகரமாகச் சென்னை இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நகரத்தின் மையப்பகுதியில் வசிக்கும் மக்கள், குடிதண்ணீருக்காகப் போராடி வீதிக்கு வருகிறார்கள் எனில், அதை அரசமைப்பு சாதாரணமாகக் கடந்துபோக முடியாது என்பதன் விளைவாகவே முதலமைச்சரின் அவசர ஆலோசனைக் கூட்டத்தைப் பார்க்க இயலும். இப்போதைக்கு சென்னையின் நிலை என்னவாக இருக்கிறது எனப் பார்ப்போமாயின், சென்னையின் அத்தியாவசியத் தேவைக்கு ஒருநாளுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், கிடைப்பது 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே. ஆக, ஒருநாளுக்கு 280 மில்லியன் லிட்டர் தண்ணீர்த் தட்டுப்பாட்டுடன் தற்போது சென்னை இயங்கிக்கொண்டிருக்கிறது. 

தண்ணீர்ப் பிரச்னை: சென்னையில் இருமடங்காகும் லாரித் தண்ணீர் விலை!

இணைப்புக்குழாய் மூலம் வீடுகளுக்குத் தினசரி தண்ணீர் வழங்கப்பட்டிருந்த முறை மாற்றப்பட்டுவிட்டது. 2 அல்லது 3 நாள்களுக்குத் தண்ணீரின் இருப்பைப் பொறுத்து விநியோகிக்கப்படுகிறது. பல இடங்களில் அதுவும் இல்லை. இதனால் மக்கள் வீதிக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பணம் கொடுத்து தனியார் லாரிகளை உள்ளே கொண்டுவருகிறார்கள். ஆரம்பத்தில் முறையான தொகைக்குத் தண்ணீர் கொண்டுவந்தவர்கள் மக்களின் தேவையும் எதிர்பார்ப்பும் அதிகமாகிவிட்டது எனத் தெரிந்ததும் இருமடங்கு விலையை ஏற்றிவிட்டார்கள். விலை குறித்து பேரம் பேசினால் கிடைக்கிற தண்ணீரும் இல்லாமல் போய்விடும் என்கிற அச்சத்தில் அவர்கள் சொல்லும் விலைக்கே ஒப்புக்கொண்டுவிடுகிறார்கள், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள். இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்காகச் சென்னைப் புறநகர்ப் பகுதிகளிலிருந்து தண்ணீர் கணிசமாகக் கொண்டுசெல்லப்படுவதால், அங்கே சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்குப் போதிய குடிநீர் இல்லையெனவும் அவர்கள் புகார் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

வீதியில் வந்து போராடும் அடித்தள மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மாநகராட்சியின் குடிநீர் லாரி தங்கள் தெருவுக்குள் நுழையும் தருணத்துக்காகக் குடங்களை வைத்துக்கொண்டு பலமணி நேரம் மக்கள் காத்திருக்கிறார்கள். அப்படியே தண்ணீர் லாரி வந்தாலும் ஒரு வீட்டுக்கு நான்கு குடங்களில் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இப்படித்தான் அல்லோலப்படுகிறது சென்னை!

தண்ணீர்ப் பிரச்னை: சென்னையில் இருமடங்காகும் லாரித் தண்ணீர் விலை!

சமூகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களுமே சமூக வலைதளங்களில் பிரதிபலிக்காது என்பதற்குத் தண்ணீர்ப் பிரச்னை சமீபத்திய உதாரணம். இன்னும் சில மாதங்களில் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதுபோலத் தெரியவில்லை. தண்ணீர்த் தட்டுப்பாட்டின் தீவிரம் இளைஞர்களுக்குப் புரியும்போதுதான் அவர்கள் இதுகுறித்து உரையாடத் தொடங்குவார்கள். உரையாடலுக்கான களம் என்பதே ஃபேஸ்புக், ட்விட்டர் என மாறிவிட்ட சூழலில் அங்கே உரையாடப்படுமாயின் இதன் முக்கியத்துவம் இன்னும் பலபேரைப் போய்ச்சேரும்.

கூடுதல் லாரிகள் இயக்கவும், புதிதாக ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கவும், விவசாயக் கிணறுகளிலிருந்து கூடுதலாகத் தண்ணீர் எடுத்து விநியோகிக்கவும், கடல்நீரைக் குடிநீராக்கும் முறையைத் துரிதபடுத்தவும் அரசு, மக்களுக்குத் தேவையான முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், நம்முடைய முன்னெடுப்பு என்ன. தண்ணீர்த் தட்டுப்பாட்டில் நாம் நின்றுகொண்டிருக்கும் கையறு நிலை குறித்தான தெளிவான சிந்தனை குறைந்தபட்சம் நம்மிடையே இருக்கிறதா. மழைநீர் உட்பட, தண்ணீரைப் பயன்படுத்தும் விதத்தை முற்றிலும் பரிசீலனை செய்ய வேண்டிய இடத்தில் நாம் நிற்கிறோம்.

`தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்' என லாரியின் பின்னால் எழுதியிருக்கும் வாசகத்தை இனியும் வெறும் வார்த்தையாக வாசித்துக் கடந்துபோக முடியாது. அதன் பொருளை உணர்ந்து செயல்பட வேண்டிய கடைசிக்கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு