45 வயதுடைய கூலித்தொழிலாளியின் வயதை 120 என்று ஆதார் அட்டையில் மாற்றிக்கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை உசிலம்பட்டியை அடுத்த பெரிய செம்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (45). கடந்த ஆண்டு ஆதார் அடையாள அட்டை எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கே ஆதார் அடையாள அட்டையும் வந்துள்ளது. அவரது புகைப்படத்தையும் பெயரையும் உறுதி செய்துகொண்ட மகாலிங்கம் ஆதார் அட்டையை மிகவும் பத்திரமாக வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில் வீடு கட்ட வேண்டும் என லோன் வாங்க முயற்சி செய்துள்ளார். அதிகாரிகள் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துவரச் சொல்லி அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து அவர் ஆதார் அட்டையை எடுத்துச் சென்றபோது அதில் அவரது பிறந்த நாள் 6.11.1900 என இருந்ததால் 120 வயதுடைய நபருக்கு லோன் தரமாட்டோம் எனத் திருப்பி அனுப்பியுள்ளனர். 45 வயதுடைய தனக்கு 120 வயது என்று குறிப்பிட்டுள்ளதை நினைத்து அதிர்ந்துள்ளார்.

இந்நிலையில் மகாலிங்கத்திடம் பேசினோம். "நான் போன வருடமே ஆதார் கார்டு எடுத்துவிட்டேன். என் போட்டோவும் பெயரும் இருக்கே என்று பத்திரமாக வைத்துக்கொண்டேன். சரியாகப் படிக்காதால் தேதி, வருஷம் மாறிய கோளாறு எனக்குத் தெரியவில்லை. கடந்த மாதம் லோன் வாங்குவதற்கு பாஸ் புக் ஓப்பன் பண்ணப் போகும்போதுதான் அங்கிருந்த அதிகாரிகள் என்னிடம் இதுபோல விவகாரம் உள்ளதைக் கூறினர். அதைத் தொடர்ந்து தாசில்தார் ஆபீஸுக்குச் சென்று 4 முறைக்கு மேல் கேட்டேன். ஆனால், அவர்கள் என் போன் நம்பரை வாங்கிக்கொண்டு இதுவரை கூப்பிடவில்லை" என்று தெரிவித்தார்.