Published:Updated:

டெல்லியில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்... கண்டுகொள்ளாத தமிழக அரசு!

டெல்லியில் தவிக்கும் தமிழர்கள்
டெல்லியில் தவிக்கும் தமிழர்கள்

தென் அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்து சேர்ந்த 20 தமிழர்களை தமிழகம் அழைத்துவரத் தமிழக அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தென் அமெரிக்க நாடுகளான சிலி மற்றும் அர்ஜென்டினாவில் இந்தியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா சூழல் காரணமாக வேலையிழப்பு மற்றும் பணிச்சூழல் நிலையின்மை காரணமாக பலர் இந்தியா திரும்பி வர, இந்தியத் தூதரகத்துக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்ட படி, பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மற்றும் உணவகங்களில் பணிபுரிந்தோர் என 50 இந்தியர்களை, இந்தியா அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அர்ஜெண்டினா அரசு செய்தது.

டெல்லியில் தமிழர்கள்
டெல்லியில் தமிழர்கள்

அதன்படி அர்ஜென்டினா அரசு ``LATAM" என்ற சிறப்பு விமானத்தில் இந்தியர்களை டெல்லி அனுப்பி வைத்தது.

50 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர். இதில் ஆறு மாத கர்ப்பிணி உட்பட 20 நபர்கள் தமிழகத்தைச் சேர்த்தவர்கள். சிலியிலிருந்து இந்தியா கிளம்பும்போது, இவர்கள் தமிழகம் திரும்ப வழிவகை செய்யப்படும் என்று இந்தியத் தூதரகம் உறுதி அளித்திருந்தது. அதுமட்டுமல்லாது, இந்தியா வந்ததும் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தப்படல் வேண்டும் என்றும் அதற்கான செலவை அவர்களே ஏற்கவேண்டும் என்றும் கையொப்பம் வாங்கியிருந்தார்கள்.

தமிழர்கள்
தமிழர்கள்

ஆனால், இந்தியா வந்ததுமே இந்த 20 தமிழர்கள் தமிழகம் திரும்ப எவ்வித ஏற்பாடும் செய்யப்படவில்லை. நிலைமை சரியானதும் இவர்களாகவே தமிழகம் செல்லவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. டெல்லியைப் பொறுத்தவரைத் தனியார் விடுதிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள்தான் பெருமளவில் தனிமைப்படுத்தும் மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒருநாள் வாடகை 1,850 முதல் 4,800 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து டெல்லியில் சிக்கியுள்ள தமிழர் முனீஸ்வரன், ``நான் சிலி-யில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக உள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கு சிக்கித்தவித்தோம். அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் முயற்சியால் நாங்கள் டெல்லி அழைத்துவரப்பட்டோம். 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குத் தனியார் விடுதிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் மட்டுமே செயல்படுகிறது. எங்களுக்கு எந்தச் சாதாரண விடுதிகளும் கிடைக்காததால் எங்கள் தகுதிக்கு மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களில் (ITC Welcomes, JW Marriott, Le Merridian etc.,) தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுளோம். தங்கும் 14 நாள்களுக்குமான தொகையை மொத்தமாக முன்கூட்டியே செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். அதோடு, 13 நாள்களுக்குப் பிறகு கொரோனா பரிசோதனை செய்ய 4,500 ரூபாய் செலுத்தவும் கூறினார்கள்.

முனீஸ்வரன்
முனீஸ்வரன்

ஏற்கெனவே கடந்த இரண்டு மாதங்களாக எந்த வருமானமும் இல்லாது தவித்து வந்த நாங்கள் விமானத்துக்கு ஒரு லட்சம் வரை செலவு செய்தோம். இந்த ஹோட்டல்களுக்குப் பணம் கட்ட முடியாமல், எங்களில் பலரும் கடன்வாங்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டோம். ஹோட்டல்களுக்குப் பணம் செலுத்தும் வரை அதிகாலை 2.30 மணி முதல் காலை 6 மணி வரை ஓட்டலின் (ITC Welcome, Dwarka) வாசலிலேயே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்களுடன் பயணம் செய்த உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பயணிகளை அந்தந்த மாநில அரசுகள் அவர்கள் மாநிலத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். எங்களையும் தமிழகம் அழைத்துச்செல்ல முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம். இதுவரை எந்தப் பதிலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. டெல்லியில் உள்ள தமிழக இல்லத்திலிருந்து கடந்த சனிக்கிழமை எங்களை அழைத்தார்கள். உங்களை விலை குறைந்த விடுதிகளுக்கு மாற்ற ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினார்கள். ஆனால் நான்கு நாள்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணும் எங்களுடன் உள்ளார். எங்கள் அனைவரையும் தமிழக அரசு இங்கிருந்து மீட்டு தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறினார்.

தமிழக அரசு, பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்து பட்டியல் வெளியிட்டிருந்தது. அவர்களில் பலரையும் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து தொடர்பு கொண்டோம். ஆனால் எந்த அழைப்புமே ஏற்கப்படவில்லை. மூன்று நாள்களாக, பல எண்களிலிருந்தும், பலமுறை அழைத்தும் யாருமே அழைப்பை ஏற்காதது இந்த மீட்புக் குழு வெறும் கண்துடைப்பு வேலையா என்ற ஐயத்தை உருவாக்குகிறது.

List of Nodal officers
List of Nodal officers

வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பும் தமிழர்களை அவர்கள் வந்திறங்கும் மாநிலங்களிலிருந்து தமிழகம் அழைத்துவர எந்த வழிகாட்டுதல்களும் இதுவரை உருவாக்கப்படவில்லை என்றே அரசு அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த அதிகாரிகள் குழு செயல்பட்டு வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்களைத் தமிழகம் அழைத்துவர ஏற்பாடு நடக்குமா என்பது அரசுக்கே வெளிச்சம்.

அடுத்த கட்டுரைக்கு