Election bannerElection banner
Published:Updated:

ஸ்டெர்லைட்: `ஆக்ஸிஜனை எங்களிடம்தான் தர வேண்டும்; நாங்கள் பிரித்துக் கொடுப்போம்!’ - மத்திய அரசு வாதம் #NowAtVikatan

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

27-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Apr 2021 6 PM

`கொரோனா நேரம்; நவீன மின் மயான இயந்திரங்களை சரி பண்ணுங்க!'

பேச்சிபாறை மின் எரிவாயு தகன மேடை
பேச்சிபாறை மின் எரிவாயு தகன மேடை

`கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் நவீன எரிவாயு மயானத்தில் பழுதடைந்துள்ள இயந்திரங்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

27 Apr 2021 11 AM

``ஆக்ஸிஜனை எங்களுக்குத்தான் தர வேண்டும்!” - மத்திய அரசு

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. விசாரணையின்போது தமிழக அரசு, `ஆக்ஸிஜன் உற்பத்தியைக் காரணமாக வைத்துக்கொண்டு ஆலையில் வேறு எந்தப் பிரிவையும் இயக்கக் கூடாது’ என வாதிட்டது.

தொடர்ந்து மத்திய அரசு, ``ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படவிருக்கும் ஆக்ஸிஜனை எங்களுக்குத்தான் தர வேண்டும். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை தேவைப்படும் மாநிலங்களுக்கு நாங்கள்தான் பிரித்து வழங்குவோம்” என வாதிட்டது. இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர், ``உள்ளூர் மக்களைக் கண்காணிப்பு குழுவில் சேர்க்கக் கூடாது” என்றார்,

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட், ``உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை மத்திய அரசுக்கு ஒதுக்குவதே முறை என ஏற்கெனவே ஓர் உத்தரவு இருக்கிறது. அரசின் கண்காணிப்பின் கீழ் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படலாம். அப்போது ஆலை நிர்வாகமும் இருக்கலாம்” என்றார். தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு, ``ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என்றார்.

27 Apr 2021 11 AM

`மே 2-ம் தேதி வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை!’

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வரும் மே மாதம் 2-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. `தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம்’ என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில், வாக்கு எண்ணிக்கையின்போதும், வெற்றிபெற்ற பின்னரும், கட்சியினரின் கொண்டாட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

27 Apr 2021 10 AM

`இந்தியாவில் சற்றுக் குறைந்த ஒருநாள் பாதிப்பு!’

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்த நிலையில், இன்று அந்த பாதிப்பு சற்று குறைந்து பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,23,144 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. நேற்று இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,52,991-ஆக இருந்தது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,76,36,307 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,771. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,97,894 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,45,56,209-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 28,82,204 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,51,827 பாதிப்பிலிருந்து மீண்டு, வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 14,52,71,186 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

27 Apr 2021 9 AM

`இந்தியா எங்களுக்காக நின்றது, நாங்கள் அவர்களுக்காக நிற்போம்!’ 

இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசினேன். இரு நாட்டிலுமுள்ள கொரோனா பாதிப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அப்போது அமெரிக்கா செய்த உதவிக்காக அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தேன். மருந்துகள், தடுப்பூசிக்கான மூலப்பொருள்கள் சப்ளை செய்வதற்கான பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருந்தது. இந்தியா- அமெரிக்காவின் சுகாதாரம் தொடர்பான உறவால் உலகளாவிய கொரோனா சவாலை எதிர்கொள்ள முடியும்’’ என்றார்.

மோடி
மோடி

இந்த உரையாடல் குறித்துக் கருத்து தெரிவித்த பைடன், ``இன்று, நான் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். அப்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அவசர உதவி மற்றும் வளங்களை வழங்க அமெரிக்கா தனது முழு ஆதரவை உறுதியளித்தது. இந்தியா எங்களுக்காக நின்றது, நாங்கள் அவர்களுக்காக நிற்போம்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு